ஈரோட்டில் நாடக வரி
கடந்த இரண்டு நாட்களிலும் ஈரோடு அதிகார வர்க்க உலகில் ஒரே பரபரப்பு. எல்லாம் ஓட்டமும் நடையுந்தான் ! மேலதிகாரி முதல் அடியிலுள்ள தோட்டி வரையிலும் வெயிலென்று பாராமலும், வியர்வை ஒழுகுவதைக் கவனியாமலும், ஓடித் திரிந்த வண்ணமாகவே இருந்தனர். ஈரோட்டில் இடிதான் விழுந்துவிட்டதோ? பெரும் புயல்காற்று கொடுமைகள் பல இழைத்ததோ? என்ன விபத்து நிகழ்ந்ததோ? என்று நேயர்கள் ஐயுற வேண்டும். நமது அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்தோர் இங்ஙனம் நினையார். ஒரு நாடகக் கூட்டத்தார் எமது அதிகார தெய்வங்களை இவ்வளவு ஆட்டமும் ஆட்டிவைத்துவிட்டனர் ! நாடக புருஷர்கள் யாரென்று எண்ணு கிறீர்கள்? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்களே! இவ்வூர் நாடக சாலை யில் நேற்றிரவு ‘புத்ரோத்ம ராமன்’ என்ற நாடகம் நடத்தினார்கள். மாப் பிள்ளைகளைப்போல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். மயிலாப்பூரில் நிருவப்பட்டிருக்கும் ‘இராமகிருஷ்ண மாணவர்’ இல்லத்திற்குப் பொருள் சேர்க்கவே இந்நாடகம் நடைபெற்றதாம் ! அநுமதிச்சீட்டு (டிக்கட்) ஒன்றின் ‘விலை’ ரூபா பத்துதான் !!
ஒரு நாடகக் கூட்டத்தாருக்குப் பொருள் சேர்க்கும் ‘ஏஜெண்டு’களாக அதிகாரிகள் விளங்கின காட்சியை ஈரோட்டில் கண்டோம். சென்னை செக்ரெ டேரியட் ஊழியர்களே, நாடக புருஷர்களாக வருவார்களாயின் ஸ்தல அதி காரிகள் அவர்களுக்கென அநுமதிச்சீட்டு விற்றுக்கொடுக்கும் ‘ஏஜண்டு’ களாக இருப்பதில் குற்றமென்ன? இவர்களின் ஆதரவு இன்றேல் 600 அநுமதிச் சீட்டுகளுக்கு ரூபா 6000 சம்பதிப்பதெப்படி? நாடகக் கூட்டத்தார் சாதாரண மக்களா? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்கள் அன்றோ? இவர்கள் இட்ட பணியை ஸ்தல அதிகாரிகள் எவ்வாறு மறுப்பது? மறுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? அதிகாரிகளின் அடி வருடி வாழும் மணியக்காரர்களும், கர்ணங்களுமான கிராமதிகாரிகள் மலிந்து கிடக்கும் போது மேலதிகாரிகளுக்கு என்ன குறை? என்ன கவலை? தத்தம் கிராமங்களில் வாழும் குடிமக்களில் தனவந்தர்களைப் பிடித்து அவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக ‘மடியைப்பிடித்து மாங்காயைப் போட்டு மயிரைப்பிடித்து பணம் வாங்குவதற்கொப்ப’ சீட்டு ஒன்றுக்கு பத்துரூபா பகற்கொள்ளையடித்த செய்தியை அதிகாரிகள் அறிவரோ? அதிகாரிகள் விரும்பினால் நாடகத்திற்கும் ‘வரி’ விதிக்கலாம் போலும்!
மேலதிகாரிகளின் வெறுப்புக்கும், சீற்றத்திற்கும் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்ற அச்சத்தால், தம்மிடம் கொடுக்கப்பட்ட சீட்டுகளை பெற்றுக் கொள்வோர் இலாமையினால் கைப்பணம் இழந்த மணியக்காரர்களும் கர்ணங்களும் எத்தனை பேரோ? நாடக ‘வரி’க்காக வைத்துக்கொள்ளும்படி கூறித் தங்கள் சம்பளப்பட்டியில் கையெழுத்துமட்டும் பொறித்துவிட்டு வெறுங்கையினராய் வீட்டுக்குத் திரும்பின கிராமதிகாரிகள் எத்தனை பேரோ? மேலதிகாரிகளில் எத்தனை பேர் பணம் கொடுத்து நாடகம் பார்த்தனர் என்று அறிய எமக்கு ஆவல் உண்டு.
ஈரோடு அதிகார வர்க்கப் பேய் எமது நகரசபையையும் விட்ட பாடில்லை. நகரசபையின் கீழ்த்தர சிப்பந்திகள் ஸ்தல அதிகாரிகளின் தலைக் கடையில்தான். ஊரிலுள்ள நாற்காலிகளும், விசுப் பலகைகளும் இந்நகர சபைச் சிப்பந்திகளின் தலைமேல்தான்! நகரசபையில் சுகாதார உத்தி யோகஸ்தர்களும் உளரோ என்ற ஐயம் எமக்கு அடிக்கடி நிகழ்வதுண்டு. இந்த ஐயத்தை நீக்கிய ³ நாடகக்கூட்டத்தாருக்கு எமது பெரும் வந்தனம். ஊருக்கு வந்த விருந்தினர்களுக்காவது சுகாதார வசதிகள் செய்து கொடுத் தமைக்கு மகிழ்ச்சியடைகிறோம்.
புத்திர உத்தமனான ஸ்ரீ ராமபிரானின் புண்ணிய சரிதையால் இவ்வூர் அதிகாரிகள் கற்றுக்கொண்ட படிப்பினை அதிகார பலத்தாலும், செருக்காலும் குடிமக்களை வருத்தி நாடக ‘வரி’யும் வசூலிக்கவேண்டுமென்பதுதான் போலும் !
குடி அரசு – துணைத் தலையங்கம் – 31.05.1925