காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர்
ஓர் பிராமணர் காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அக்ராசனம் வகிக்க வேண்டு மென்று சில பிராமணர்களும், சில பிராமணப் பத்திரிக்கைகளும் அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட மற்றவர்களும் எவ்வளவோ சூழ்ச்சிகளும், தந்திரங்களும் ஒழுங்கீனமான முறைகளும் செய்தும் கடைசியாக ஓர் பிராமணரல்லாதாரே மகாநாட்டுக்கு அக்ராசனம் வகிக்கத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் போனதைப்பற்றி பிராமணரல்லாதார் இரண்டொருவர் தவிர மற்ற எல்லாரும் ஏகமனதாய் சந்தோஷப்படுவார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அத்துடன் இதற்கு விரோதமாயிருந்த சிலர் வருத்தப்ப டுவார்களென்பதைப் பற்றியும் நாம் சொல்லத் தேவையில்லை. தமிழ் நாட்டிலுள்ள மொத்தம் 13 ஜில்லாக்களில் 10 ஜில்லாக்களே வோட் செய்திருப்பதாய்த் தெரியவருகிறது. இவற்றில் ஸ்ரீமான். வி.சக்கரைச் செட்டியாரை சென்னையும், ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையை திருச்சியும் தெரிந்தெடுத்தது. பாக்கி 8 ஜில்லாக்களில் ஸ்ரீமான் முதலியாருக்கு 4 ஜில்லாக்களும், ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு 4 ஜில்லாக்களும் வோட் செய்திருப்பதாகத் தெரியவருகிறது. ஸ்ரீமான் அய்யங்காருக்கு வோட் செய்த நாலு ஜில்லாக்களில் கும்பகோணமும் சேலமும் சேர்ந்துதான் நாலு ஜில்லாக்களானதாகத் தெரியவருகிறது. கிரமப்படி இந்த இரண்டு ஜில்லாக்கள் வோட்டையும் செல்லுபடியாக எடுத்துக்கொண்டது கொஞ்சமும் ஒழுங் காகாது. ஏனெனில், சேலம் ஜில்லா வோட்டானது அக்ராசனத் தேர்தலுக்காக ஏற்பட்ட மீட்டிங்கு சட்டப்படி செய்யப்பட்டதல்ல வென்றும், நிர்வாக சபை மெம்பர்களுக்கு நோட்டீ° கொடுக்காமல் யாரோ இரண்டுபேர் சேர்ந்து தந்தி கொடுத்துவிட்டதாக ஓர் நிர்வாக சபை மெம்பர் ஆnக்ஷபித்திருந்தார். இதற்கு சேலம் ஜில்லா காங்கிர° கமிட்டியார் எவ்வித ஒழுங்கான பதிலும் கூறவே யில்லை. இதைப்பற்றி நமக்குக் கவலையில்லை என்று விட்டுவிட்டாலும், அவர்களுடைய தேர்ந்தெடுப்பில் குறிப்பாக ஓர் பெயர் இல்லாமல் பல பெயர்கள் சிபார்° செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. அப்படியிருக்க அதை செல்லுபடியுள்ளதாகக் கருதி அதிலும் ஸ்ரீமான். ஏ.ரெங்கசாமி ஐயங்காரவர்களுக்கு அதைச் சேர்த்துக்கொண்டது எப்படி ஒழுங்காகுமோ தெரியவில்லை. அல்லாமல், கும்பகோணத்தில் ஜில்லா காங்கிர° கமிட்டியே கிடையாது. ஜில்லா காங்கிர° கமிட்டி அக்ராசனராயிருந்த கனவானை ஒருவர் கண்டு மாகாணக் கமிட்டிக்குத் தலைவர் தேர்தல் செய்தாகி விட்டதாவென்று கேட்டபோது, இங்கு ஜில்லா காங்கிர° கமிட்டியே கிடையா தென்றும், ஆதலால் தெரிந்தெடுக்க முடியாதென்றும் சொல்லி விட்டார். அல்லாமல், காஞ்சீபுரம் மகாநாட்டு உபசரணைக் கமிட்டியார் தெரிவித்திருந்த காலாவதியாகிய அக்டோபர் மாதம் 20-ந் தேதி வரையிலும் கும்பகோணம் “ஜில்லா காங்கிர° கமிட்டியிலிருந்து” யாருடைய பெயரும் ஒழுங்காகவோ தப்பாகவோ அக்ராசனாதிபதி °தானத்துக்கு அனுப்பிக்கப்படவேயில்லை. இந்த நிலைமையில் கும்பகோணம் வோட் செல்லுபடியென்றும், அதை ஸ்ரீமான் ரெங்கசாமி அய்யங்காருக்குச் சேர்த்து கணக்குப் பார்க்கப் பட்டிருப்பதாயிருந்தால், இவ்விதத் தேர்தல்களை ஜனப்பிரதிநிதித்வ தேர்தலென்றும் ஒழுங்கான தேர்தல்களென்றும் எப்படி பொது ஜனங்கள் நினைக்கக் கூடும்? தாயைக் கொன்றவனுக்கும் ஊரில் பாதிப்பேர் சேருவார்களென்ற பழமொழிபோல் சுய நன்மையின் பொருட்டு ஒத்துழை யாமையை ஒழித்துத் தேசத்தைப் பாழாக்கினவர்களுக்கும், சர்க்காருக்கு அடிமையாகி தேசத்தைக் காட்டிக் கொடுத்து தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதித்தவர்களுக்கும், மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு தினப்படி சாராயம் முதலிய மதுபானம் விற்கிறவர்களுக்கும், முன்னணியிலிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கும் 4 வோட்; தேச நன்மையின் பொருட்டு ஒத்துழையா மையின் காரணமாய் தன்னையே தியாகப்படுத்திக் கொண்டு ஏழைகளின் பொருட்டும், தொழிலாளர்களின் பொருட்டும் தனது சுயநலத்தை மறந்து லக்ஷக்கணக்காய் சம்பாதிக்கக்கூடிய உத்தியோகங்களையும், தொழிலையும் விடுத்து தேசமே முக்கியமானதெனக் கருதி, தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் மனப்பூர்வமாய் அர்ப்பணஞ் செய்த உண்மை தியாகிகளிலொரு வரான ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்கும் நான்கு வோட் என்று சொல்வோமானால், தேசத்தில் ஒழுக்கம், உண்மை, பகுத்தறிவு இருக்கின்றதென்று எப்படிச் சொல்லக்கூடும்? எப்படியோ, ஸ்ரீமான் முதலியார் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டாரென்று சொல்வதால், இனி இதைப் பற்றிக் கிளற வேண்டிய அவசியமில்லை.
காஞ்சீபுரம் மகாநாடானது ஒரு விதத்தில் மிகவும் முக்கியமான மகாநா டென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் சென்ற வருடம் நடைபெற்ற திருவண்ணாமலை மகாநாடானது பிராமணரல்லாதாருடைய நிலைமை இன்னதென உணர்வதற்கு அநுகூலமாயிருந்த போதிலும், காஞ்சீபுரம் மகாநாட்டில் பிராமணரல்லாதாருடைய கடமை இன்னதென நிர்ணயஞ்செய்ய வேண்டியதாயிருக்கும். ஆதலால் மகாநாட்டுக்கு பிராமணரல்லாத காங்கிர° வாதிகள் யாவரும் விஜயம் செய்வது அவசியமாய் இருப்பதோடு மனசாக்ஷி முதலிய எந்தக் காரணங்களாலாவது காங்கிரஸில் மெம்பர்களல்லாதிருந்து தேச முன்னேற்றத்திலும், பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத்திலும், கவலையுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் விஜயம் செய்யவேண்டியது அவசியமாயிருக்கின்ற படியால் அந்தப்படி விஜயம் செய்வதற்கு, அக்ராசனர் கக்ஷி வேற்றுமையின்றி ஸ்ரீமதி பெசண்டமையார் உள்பட யாவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்ப வேண்டுமாயும் அதில் எல்லாக் கக்ஷியாரிடமும் தாம் அன்பாய், சமரசமாய் நடந்துகொள்வதாகவும் எழுதி அனுப்பவேண்டு மாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.11.1925