குடி அரசு : ஒரு பார்வை
முதலில். . . . . .
1925 – 1938 காலகட்டம் வரை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சு களையும் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்து தொகுத்திடும் பணியில் பின்பற்றிய நெறிமுறைகளை விளக்கிட விரும்புகிறோம்.
பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுவதில் அல்லது அப்படியே வெளியிடுவதில் முழுமையான கவனமும் கவலையும் செலுத்தினோம்.
பெரியாரின் எழுத்துகள் குறித்து திருநெல்வேலியில் 28.11.1927 இல் நடைபெற்ற மாவட்ட சுயமரியாதை சங்க மாநாட்டில், மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழறிஞர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் பேசியதையும் அதற்கு பெரியார் தந்த பதிலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
“ குடி அரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்கட்க்குத் தெரியும். அதில் மக்கள் மனதை கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்? அவர் உள்ளக்கிடக்கிலுள்ளதை அப்படியே எடுத்துச் சொல்லுவது, அதுவும் மிகச்சாதாரண தமிழிலேயே தான் இருக்கிறது. நாயக்கர் படிப்பில் பட்ட தாரி அல்ல. எத்தகைய கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூக மும் திகைக்கத்தக்க வன்மையுடைய பத்திரிகையை இவர் கொடுத்தது நமது பூர்வ புண்ணியமேயாகும்.” ( குடி அரசு 04.12.1927, ப. 6 )
என்று டி.கே.சிதம்பரநாத முதலியார் குறிப்பிட்டதற்கு பெரியார் இவ்வாறு பதிலளித்தார்.
“ குடி அரசைப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின வல்லினம் போன்ற பல இலக்கணப் பிழைகளும், மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக்கணம் கற்கப் போவதில்லை.” ( குடி அரசு 04.12.1927, ப. 6 )
பெரியாரின் மொழிநடை பற்றி அவரது வாழ்க்கை வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பிட்டு நூலாக எழுதிய தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
“இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கும். சொற் பிழைகள் நிறைந்திருக்கும். ஒரு வாக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. ‘ கிணர்’ ‘வயிர்’ ‘சுவற்றில்’ ‘ஆக்ஷி’ ‘சூக்ஷி’ ‘ஆருதல்’ ‘ பொருமை’ போன்ற பிழை கள் தாராளமாகக் காணப்படும். சாதாரணமாகப் பேசுந் தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கே யிருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம் அய்ந்து முழம் நீண்டிருக்கும். இவ் வளவு பிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரை தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்ல முடியாது.” ( ‘தமிழர் தலைவர்’ .ப. 169 )
என்று குறிப்பிடுகிறார்.
இப்படி மொழி இலக்கணங்களுக்கு அப்பால், அவற்றினுள் முடங்கிக் கொள்ளாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்டுக்கிடந்த தமிழினத்தை விடுதலை செய்யும் எதிர்நீச்சல் தொண்டுக்கே முன்னுரிமை தந்த அந்த சமூகப் புரட்சியாளரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் உள்ளது உள்ளபடியே வெளிக்கொணர வேண்டும் என்ற கவலையோடு இத் தொகுப் புப் பணிகள் நடந்தன. எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வேண்டுமானால் பெரியார் சில வேளை ஒரே பத்தியில்
அனுகூலம் – அநுகூலம்
அன்னியர் – அந்நியர்
தகரார் – தகறாரு
நீச்சல் – நீச்சம்
சோம்பேறி – சோம்பேரி
கட்சி – கக்ஷி
கேட்கிறோம் – கேள்க்கிறோம் – கேழ்க்கிறோம்
சூழ்ச்சி – சூட்சி – சூக்ஷி
கடைசி – கடசி
தவிற – தவிர
நாணயம் – நாணையம்
ஒரு புறம் – ஒரு புரம்
பழைய – பழய
பறித்து – பரித்து
எவரும் – யெவரும்
முஸ்லீம் – முஸ்லிம்
தேசீய – தேசிய
முத்தையா – முத்தய்யா – முத்தய்ய
வரதராஜுலு – வரதராஜலு
கல்யாணசுந்தர முதலியார் – கலியாணசுந்திர முதலியார்
ரெங்கசாமி – ரங்கசாமி
ஜெயவேலு – ஜயவேலு
பந்தலு – பந்துலு
ஜெயகர் – ஜயகர்
என்று பலபட எழுதியுள்ளார். அவற்றை ‘ குடி அரசு’ இதழ்களில் உள்ள வாறே கொடுத்திருக்கின்றோம்.
ஆண்டு , மாதம், தேதி ஆகியவற்றைக் குறிக்க முறையே ´, µ, ¦² என்ற குறியீடுகளும் ‘மேற்படி’ என்பதைக் குறிக்க ³ என்ற குறியீடும் ரூபாய், அணா, பைசா எனும் அன்றைய நாணயமுறைக் கணக்குகளையும் அப்படியே கொடுத்திருக்கின்றோம்.
பெரியார் முதல் முதலாக எழுத்துச் சீர்திருத்தத்தை குடி அரசில் அறிமுகப்படுத்த எண்ணினாலும் அறிமுகப்படுத்தியது 06.01.1935 பகுத்தறிவு வார இதழில்தான். இதற்கான அறிவிப்பு 30.12.1934 பகுத்தறிவு இதழில் ( துணைத் தலையங்கம் ) வெளிவந்திருக்கிறது.
….“இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப்போகும் ‘குடி அரசு’ பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்”…..
( பகுத்தறிவு 30.12.1934, ப.12)
எழுத்துச் சீர்திருத்தத்தை, நின்றுபோய் மீண்டும் வெளிவந்த குடி அரசில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டாலும் 05.01.1935 சனிக்கிழமை வரை அஞ்சலகத்தின் ஆணை கிடைக்காததால் 06.01.1935 இதழ் பகுத்தறிவு என்ற பெயரிலேயே வெளிவருகிறது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். 1935 க்குப் பிறகுதான் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்தினார் என்றாலும் இத்தொகுப்பு முழுமையிலும் சீர்திருத்த எழுத்து முறையே தவிர்க்க முடியாமல் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. பழைய எழுத்துவடிவங்களைப் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். ஆனாலும் பழைய எழுத்து முறையை பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 30.12.1934 பகுத்தறிவு இதழில் வெளிவந்த துணைத் தலையங்கம், 06.01.1935 பகுத்தறிவு இதழில் வெளிவந்த அறிக்கை, இவற்றை மட்டும் இளந் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பழைய எழுத்து வடிவத்திலேயே கொடுத்துள்ளோம்.
பெரியார் பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள் ளார். இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கருப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும். எனவே அப்பெயரில் வெளிவந்த கட்டுரைகளை தொகுப்பில் சேர்த்துள்ளோம். இதைத்தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினா லென்ன, ஒரு நிருபர், நமது அரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன் என்ற புனைப் பெயர்களில் வெளிவந்த கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பட்டவை என் பதை உறுதிப்படுத்த முடியவில்லையானாலும் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பில் இணைத்துள்ளோம். அதே போன்று சில இதழ்களில் பல காரணங்களால் பிறரும் தலையங்கம் எழுதியுள்ளனர். அவ்வாறான குடி அரசு தலையங்கங்கள் ஈ.வெ.கி., சா.கு., ளு.சு., மா.வா., சா.மா., யம்.வீ என்ற பெயர்க்குறிப்புகளோடு வெளிவந்துள்ளன. இவற்றை வேறு சிந்தனையாளர் கள் எழுதியிருந்தாலும் அக்காலகட்ட நிகழ்வுகளை அறியத் தரும் நோக் கோடு அவையும் இத்தொகுப்பில் அப்பெயர்க் குறிப்புகளுடனேயே இணைத்துள்ளோம். 13.12.1931 அய்ரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதல் 11.11.1932 ஈரோடு வந்த சேர்ந்த நாள் வரையிலான காலத்தில் குடி அரசில் எழுதப்பட்டுள்ள தலையங்கங்களும், துணைத் தலையங்கங்களும் தொகுப் பில் இடம்பெற்றுள்ளன.
தலையங்கம், கட்டுரைகள் இவைகளை முழுமையாகப் புரிந்து கொள் வதற்கு உதவியாக இயன்றவரையில் அடிக்குறிப்புகளைத் தந்துள்ளோம். உதாரணமாக, ஒரு மாநாட்டுத் தீர்மானம் பற்றி தலையங்கம் தீட்டும் போது அத்தீர்மானம் முழுமையாக அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வெளிவந்த குடி அரசு இதழின் தேதியுடன் அந்த சொற்பொழிவை நிகழ்த்திய ஊர், தேதி முதலிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. இது தவிர குடி அரசில் இதழ் ஆசிரியரின் கருத்துக்கள் பத்திராதிபர் குறிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக் குறிப்பைப் புரிந்து கொள்வதற்கு உதவிடும் தகவல்களும் சேர்த்துத் தரப் பட்டுள்ளன. சான்றாக ஸ்ரீமான் வீரய்யன் கொண்டுவந்த லோக்கல் போர்டு சட்ட திருத்த மசோதா பற்றி பத்திராதிபர் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. குறிப்பைப் புரிந்துகொள்வதற்கு உதவிட அந்த சட்ட திருத்த மசோதாவின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
குடி அரசில் இந்தியச் சிந்தனையாளர்கள், மேலைநாட்டு அறிஞர்கள் ஆகியோரின் கட்டுரைகளும் இயக்கங்களின் அறிக்கைகளும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்புக்கு முகவுரையாகவும் பத்திராதிபர் குறிப்புகளாகவும் எழுதியுள்ள குறிப்புகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரண்டு முக்கிய மொழிபெயர்ப்புக்களைக் குறிப் பிட்டாக வேண்டும்.
ஒன்று, 1931 இல் வெளிவந்துள்ள “ சமதர்ம அறிக்கை” ( ஊடிஅஅரnளைவ ஆயnகைநளவடி) 04.10.1931 குடி அரசில் தொடங்கி 01.11.1931 முடிய 5 இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’யின் முதல்பாகம் தொடர்ந்து வெளிவந்துள்ளது. அறிக் கையின் மொழிபெயர்ப்பு முகவுரையாக,
“ …..சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில் வெளியான ஒரு அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிப்படுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம்……..” ( குடி அரசு – 04.10.1931 )
என்று பெரியார் குறிப்பிடுகிறார்.
மற்றொன்று, பேரறிஞர் அம்பேத்கரின் 1936 இல் லாகூர் ஜாட்- பட் – தோடக் மண்டலத்தார் ( ஜாதி ஒழிப்புச் சங்கத்தார் ) ஆண்டு மாநாட்டு தலைமையுரை ( மாநாடு நடக்காததால் அவரது உரை நூலாக அச்சிட்டு வெளி யிடப்பட்டது.) ‘ஜாதி யொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் மொழி பெயர்க் கப்பட்டு வெளிவந்துள்ளது. ( குடி அரசு – 19.07.1936 )
‘சமதர்ம அறிக்கை,’ ‘ஜாதி யொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடி அரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொகுக்கப்பட்ட எழுத்து, பேச்சுகளை தலையங்கம், துணைத் தலையங்கம், கட்டுரை, சொற்பொழிவு, உரையாடல், மதிப்புரை, பயணக் கடிதங்கள், பெட்டிச்செய்தி, செய்திவிளக்கம், செய்திக் குறிப்பு, இரங்கல் செய்தி, இரங்கலுரை, அறிவிப்பு, பத்திராதிபர் குறிப்பு, செய்தி விமர்சனம் என்று வகைப்படுத்தி குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.
‘குடி அரசு’ இதழில் மட்டுமல்லாது ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ இதழ்களில் வெளிவந்த பெரியாரின் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒரே காலத்தில் ‘விடுதலை’ நாளேடும் ‘குடி அரசு’ம் வெளிவந்த போது குடி அரசில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள விடுதலை தலையங்கங்களும் தேவை கருதி சேர்க்கப்பட்டுள்ளன. குடி அரசு வெளியிட்ட தலைப்புகளில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. தலைப்பின்றி வெளி வந்த பெரியார் சொற்பொழி வுகளுக்கு மட்டும் அதன் பொருள் குறித்த தலைப்புகள் தரப்பட்டுள்ளன.
கிடைத்த இதழ்கள் கிழிந்து அரித்த நிலையில்தான் இருந்தன. சிலவற் றில் கட்டுரையின் வரிகள் மறைந்துபோய்விட்டன. இதை நிரப்புவதற்கு முழுமையான பக்கங்கள் கிடைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டும் கிடைக்கவில்லை. எனவே விடுபட்ட வரிகளைக் குறிக்க ……………………….. என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
கட்டுரையில் இடம்பெற்றுள்ள சொற்கள் காலத்தால் பழைமை யானவை. தற்காலத்தில் புழக்கத்தில் இல்லாதவை. எனவே அவற்றின் பொருள் புரிவதற்கு அருஞ்சொல் பொருள் விளக்கம் ஒவ்வொரு தொகுதி யின் இறுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.