ஸ்ரீமான் ஆதிநாராயணன் செட்டியாரின் கூற்று

 

மாயவரம் தாலூகா ராஜீய மகாநாட்டில் அக்கிராசனம் வகிக்க நேர்ந்து ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியார் தமிழ்நாடு காங்கிர° கமிட்டி யின் நிலைமையயைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்.  அதாவது:- “மாகாண காங்கிர° கமிட்டியுடன் நில்லாமல் ஜில்லா, தாலூகா கமிட்டிகளும் மிக்க துரதிர்ஷ்டமான நிலையில் இருக்கின்றன.  இப்பொழு துள்ள தமிழ்நாடு காங்கிர° கமிட்டியின் நிர்வாகத்தைக்  கவனித்தால் இதைவிடக் கேவலமாக இனி நடத்த முடியாது.  முக்கிய நிர்வாக உத்தி யோக°தர்கள் ஜாதிக் கொள்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஒருவர் (ஸ்ரீமான். பி. வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக்கொண்டு) பகிரங்க மாகவே மிகவும் பிற்போக்கான (ஜ°டி° கட்சியில்) கோஷ்டியில் தாம் சேரத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.  ஆனால், பிராமணர்களை எதிர்த்துப் போராடுவதற்காகவே சேர்வதாக பத்திரமாகக் கூறுகிறார்.  ஏனெனில் பிராமணர்களை எதிர்த்துப் போராடுவது காங்கிர° கொள்கைகளில் ஒரு பாகம் போலும்! மற்றொருவர் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை மனதில் வைத்துக்கொண்டு) °தல°தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியாரை தேர்ந்தெடுக்கக்கூடாதென்று விளம்பரப்படுத்துகிறார்.  வகுப்பு வாரி ஓட்டர்கள் பகுதி ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லுகிறார்.  காங்கிர° நிதியெல்லாம் செலவழிந்து விட்டது.  கொஞ்சம் நஞ்சம் உள்ளதும் யோக் கியதையற்ற தாலூகா காரியதரிசிகளுக்காகச் செலவழிக்கப்பட்டு வருகிறது.  அவர்களோ உருப்படியான வேலை ஒன்றும் செய்யாததுடன், தமக்குப் பணம் கொடுப்பவருக்கு (அதாவது ஸ்ரீமான். பி. வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக் கொண்டு) எதிரான அபிப்பிராயம் கொண்டவர்களை அடித்தும் பயமுறுத்தியும் வருகிறார்.  மிகவும் குறைவாகவுள்ள காங்கிர° பணத்தை நிர்வாகிகளுக்கு (ஸ்ரீமான்கள், பி. வரதராஜலு நாயுடுவையும், ஈ.வெ. இராம சாமி நாயக்கரவர்களையும் மனதில் நினைத்து) வேண்டியவர்களா யுள்ள சிலர் சாப்பிட்டு வருகிறார்கள். நாட்டிற்காகச் சிறைசென்ற அநேக வாலிபர்கள் தங்களுக்கு ஏதாவது உபயோகமுள்ள வேலை கொடுக்கும்படி விண்ணப்பங் கள் போட்டும் அதை இவர்கள் கவனிக்கவில்லை.”

 

இதற்கு சமாதானம் கமிட்டி நிர்வாகம்

இவற்றில் நிர்வாகத்தைப்பற்றிச் சொல்லியிருக்கும் வார்த்தை களுக்கு டாக்டர் பி.வரதராஜலு நாயுடு தலைவர் என்ற முறையில் தகுந்த சமாதானம் சொல்லப்போகிறார்களானாலும், நாம் சில வார்த்தைகள் சொல்ல விரும்பின் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியாரும் ஓர் அங்கத்தினர்தான் என்பதையும் தமிழ்நாடு காங்கிர° கமிட்டியின் நடவடிக்கைகள் முழுவதும் ஒவ்வொரு மாதத்திய நிர்வாகக் கூட்டங்களிலும் செட்டியாரவர்களால் ஆமோதிக்கப்பட்டதே யல்லாமல் செட்டியாரவர்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாகவாவது கமிட்டியின் ஆமோதிப்பில்லா மலாவது ஒரு காரியமும் நடத்தப்படவில்லை என்பதைப் பொதுஜனங்கள் அறியவேண்டும்.  பணம் செலவுசெய்யும் விஷயத்தில் இதற்குமுன் இருந்த காங்கிர° நிர்வாகக் கமிட்டிகள் எந்த முறையைக் கையாடி வந்ததோ அந்த முறையை அனுசரித் தும், ஸ்ரீமான் செட்டியாரின் இஷ்டங்களை அனுசரித்துமே செய்யப்பட்டு வந்திருக்கிறது.  சில விஷயங்களை உத்தேசித்து ஸ்ரீமான் செட்டியாரவர்கள் வசமும் அவர்கள் சிபாருசுப்படியும் தாராளமாகப் பணம் கொடுக்கப்பட்டுத் தான் வந்திருக்கிறது.  ஏதோ ஒரு விஷயத்தில் இவரிடம் கொடுத்திருந்த பணத்தை அவசர நிமித்தம் திருப்பிவாங்க வேண்டி ஏற்பட்டதினால் செட்டியாரவர்களுக்கு கமிட்டியின் பணச்செலவு விஷயத்தில் வருத்தம் ஏற்பட்டு விட்டதுபோலும்!.

பழைய வருத்தம்

அல்லாமல் செட்டியாரவர்களுக்கு சில வருடங்களாகவே, அதாவது 1922ல் காங்கிர° தொண்டர்கள் தலைவர்கள் கும்பல் கும்பலாய் சிறைசென்று கொண்டிருந்த காலத்தில் செட்டியார் அனுசரித்து வந்த முறையினால் இவர்கள்பேரில் காங்கிரஸில் ஈடுபட்டிருந்த அனேகருக்கு அதிருப்தி ஏற்பட்டு சிலருக்குள் அபிப்பிராய பேதங்களும் ஏற்பட்டன.  அதன் பலனாகவே ஸ்ரீமான்களான பி. வரதராஜலு நாயுடும், சி. ராஜகோபா லாச்சாரியாரும், ஈ.வெ. இராமசாமி நாயக்கரும் மற்றும் சிலரும் செட்டியாரின் அதிருப்திக்கு ஆளானார்கள்.  சாதாரண வாழ்க்கையில் உள்ளதுபோலவே ராஜீய வாழ்க்கையிலும் மேற்கண்ட மூவரிடமும் அதிருப்தி உள்ளவர்கள் செட்டியாரைத் துணைக் கருவியாகக் கொண்டு காங்கிர° நிர்வாக சபையை சென்ற இரண்டு மூன்று வருஷங்களாகத் தாக்கி வந்திருக்கிறார்கள்.  அது வுமல்லாமல் ஒருவரைத் தாக்குவதற்காகவோ சுயநலத்திற்காகவோ சமயத் திற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு கட்சியிலேயோ, ஒவ்வொரு வகுப்பா ருடனேயோ ஒவ்வொரு தனி கனவான்களோடேயோ சேர்ந்து கொண்டு அவர்களுக்கு திருப்தி உண்டாக்க மற்றவர்களையும் மற்ற °தாபனங் களையும் தாக்கி வருவது அனுபவத்தில் கண்டு வந்திருக்கிறோம்.  இக் குணங்களெல்லாம் விதிவிலக்கில்லாமல் ராஜீயவாழ்வில் பிரவேசித்ததின் பலனாய்த்தான் ராஜீய வாழ்வே அன்னியர் பார்த்து சிரிக்கும்படியான நிலைமைக்கு வந்துவிட்டது.  ஸ்ரீமான் செட்டியாரவர்கள் மனதில் வைத்துக் கொண்டு ஜாடைபேசும் இரு கனவான்களும் செட்டியாரின் தேச பக்திக்கும் தியாகத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எவ்விதத்திலும் பின்வாங்கியவர்கள் அல்லவென்பதை தமிழ்நாடு  நன்றாய் அறிந்திருக்கும்.  இதை செட்டியாருக்கு ஞாபகப்படுத்திவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருகிறோம்..

ஜ°டி° கட்சியில் சேருவது

அதாவது ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு பிராமணர்களை எதிர்ப்ப தற்காக ஜ°டி° கட்சியில் சேர்வேனென்பது; இவ்விஷயத்தில் கொஞ்சமும்  குற்றமிருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை. என்றைக்கிருந்தபோதிலும் ஜ°டி° கட்சியாரும் ராஜீய வாழ்விலிருக்கும் பிராமணரல்லாதாரும் தான் ஒன்றுசேர்ந்து சகோதரபாவமாய், சமத்துவமாய் வாழ முடியுமேயல்லாமல் பிராமணர்களோடு சமத்துவமாய் வாழ முடியாது.  நாம் அவர்களோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டாலும், பிராமணர்களின் கொள்கை நம்மை எக்காலத்திலும் சமத்துவமாய் ஏற்றுக் கொள்ளாததாய் இருக்கிறது. அவர்களது தர்மமோ தாங்கள் உயர்பிறப்பென்றும் (பிராமணர்கள் ஒழிந்த) மற்றவர் தாழ்ந்த பிறப்பு என்றும் அடிமைகளென்றும் தாசி மக்களென்றும் மிலேச்சர்களென்றும் தொட்டால், பார்த்தால், தெருவில் நடந்தால், அருகில் வந்தால் பாவம் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது.  இந்நிலையில் இவ்விதக் கொள்கைகளை எதிர்க்காமலோ இவ்வித கொள்கைகளற்ற சகோதரர்கள் ஒன்று கூடாமலோ இருப்பார்களென்று ஸ்ரீமான் செட்டியாரவர்கள் எப்படி நினைத்தார்களோ வென்பது நமக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.  ஒருக்கால் தம்மையும் பிராமணராக நினைத்துக் கொண்டாரோ என்னவோ! அல்லது தன்னை பிராமணர்கள் சமமாய் நடத்துவார்களென்று நினைத்தாரோ!! தெரியவில்லை.

சுயராஜ்யக் கட்சி

நிற்க, “°தல °தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக்கட்சியாரைப் பகிஷ்கரிக்குமாறு பிரசாரம் செய்கிறார்” என்று பேசியிருக்கிறார்.  இது ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையேதான் மனதில் வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார் என்பதில் வாசகர்கள் சந்தேகப்படமாட்டார்கள்.  சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் ஒருவர் தேர்தலில் நிற்பதனால் அது காரணமாய் அவரைத் தெரிந்தெடுக்கக்கூடாதென்று ஸ்ரீமான் நாயக்கர் எந்தக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் எழுதி இருக்கிறார்? இதைச் செட்டி யார் மெய்ப்பிக்க முடியுமா?

காங்கிர° தீர்மானம்

அன்றியும் சுயராஜ்யக்கட்சியாரோ அல்லது காங்கிர°காரரோ காங்கிர ஸின் சார்பாய் °தல °தாபனங்களுக்கு நிற்கலாமென்றாவது காங்கிர° காரர்கள் இவர்களுக்காகப் பிரசாரம் செய்து ஓட்டு சம்பாதித்துக் கொடுக்கலா மென்றாவது, காங்கிரஸின் கட்டளை இருக்கிறது என்று இவர் மெய்ப்பிக்க முடியுமா?

செட்டியார் சட்டசபைக்குப் போனது

ஒத்துழையாமைத் தீர்மானமும் சட்டசபை பகிஷ்காரமும் அமுலில் இருக்கும் காலத்தில் காந்தி ஆணைப்படி ஆதிநாராயணஞ் செட்டியாரவர் களுக்கு ஓட்டுச் செய்யுங்களென்று விளம்பரம் செய்து கொண்டு தாம் ஓட்டுப் பெற்றாரே அது போல் நாம் செய்யவில்லையென்று வருத்தப்படுகிறாரா?

தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியின் முறை

சுயராஜ்யக்கட்சியில் இன்னாரைத்தான் சேர்த்துக்கொள்வதென்றும், இன்னென்ன யோக்கியதையுடையவர்கள்தான் சேரலாமென்றும், ஒழுங்குமுறை இல்லாமல் °தல °தாபனங்களுக்குப் போக விரும்புகிறவர் களையெல்லாம் சேர்த்துக் கொண்டு வேடத்திற்குக் கூட கதர் கட்டா விட்டாலும் நவம்பர் முதல் கட்டுவதாய் ஒப்புக்கொண்டால் சரியென்றும், நூல் சந்தாவில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதற்குண்டான பணத்தைக் கொடுப்பதாய் ஒப்புக்கொண்டால் போதுமென்றும், தீண்டாமை ஒழிப்பதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லா விட்டாலும், பிராமணர் ஒழிந்த மற்றெல்லோ ரையுமே தீண்டாதவராக பாவிப்பவராக இருந்தாலும் கையெழுத்து மாத்திரம் போட்டால் போதும் என்றும், இவ்வாறாகச் சொல்லி அவர்களோடு வியா பாரம் பேசி அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காங்கிரஸின் பெய ராலும், மகாத்மாவின் பெயராலும், தியாக மூர்த்திகள் பெயராலும் இவர் களுக்கு ஓட்டுக் கொடுக்கும்படி செய்து யோக்கி யர்களையும், உண்மை யானவர்களையும் நிர்வாகத்தைத் திறமையாக நடத்தக் கூடியவர்களையும் சாதாரண ராஜீய அபிப்பிராயபேதம் காரணமாக இழிவாய்ப் பேசியும் அவர் களுக்கு விரோதமாய் அவர்கள் எதிரிகள் நலத்திற்காக உபயோகப்படுத்தி தக்கோர்களைத் தடுத்து தகாதவர்களை ஏற்பதுமான முறைக்கு காங்கிரசை உபயோகப்படுத்திக்கொள்ள எந்த மனிதன்தான் சம்மதிக்க முடியும்?

இதைப்பற்றி நாயக்கர் ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கிறார்

ஸ்ரீமான் நாயக்கரவர்கள் °தல °தாபனங்களை காங்கிர° கைப்பற்று வது பற்றி 1922-ம் வருடத்திலிருந்தே ஆட்சேபித்து வந்திருக்கிறார்.  அப்படி இருக்க மேற்சொன்ன கொள்கையையுடைய சுயராஜ்யக்கட்சியார் °தல °தாபனங்களைக் கைப்பற்ற மற்றவர்கள் ஒருப்படுவாரென்று எப்படி எதிர் பார்க்கிறார்களோ தெரியவில்லை.

வகுப்புவாரி ஓட்டர்கள் தொகுதி

இதைப்பற்றியும் ஸ்ரீமான் செட்டியாரவர்கள் நாயக்கரை உத்தேசித்து ஜாடை பேசி இருக்கிறார்.  1919 வருடத்தில் சில தேசீய பிராமணரல்லாதார் என்போர் நடத்திவந்த சென்னை மாகாணச்சங்கம் என்று சொல்லப்பட்ட ஒரு பிரதிநிதித்துவசபையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தப்பட் டிருக்கிறது.  ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்களும், ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் இதை ஆதரித்து வந்திருக்கிறார் களென்றே எண்ணுகிறேன்.

மெ°டன் தீர்ப்பு

ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியாரவர்களும் பிராமணரல்லாதா ருக்கு இத்தனை °தானங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதற்காக மெ°டன் துரையவர்களிடம் சென்ற பிராமணரல்லாத பிரதிநிதிகளில் தாமும் ஒருவர்தானென்பதை மறந்து விட்டார் போலும்.

தேசீய பிராமணரல்லாதார் தீர்மானம்

அன்றி சென்றவாரம் தஞ்சையில் நடந்த தேசீய பிராமணரல்லாதார் மகாநாட்டில் தானும் பிரசன்னமாய் இருந்தே “தேசீய முன்னேற்றத்தை அடைய தேசீய ஒற்றுமையும் வகுப்பு வித்தியாசமின்மையும் மிகவும் அவசியமென்றும், இம்மாதிரி ஒற்றுமைக்கு உத்தியோகங்கள் முதலியது எல்லா  வகுப்பாரும் அவரவர்கள் வகுப்புக்கேற்றவாறு சமமாக அடையும்படியான மார்க்கங்களைத் தேடி வகுப்பு வித்தியாசங்களில்லாமல் சமத்துவத்தை ஏற்படுத்துவது அவசிய மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்.  ஆனால் பிராமணப் பத்திரிக்கைகள் இதை யாரும் தெரிந்து கொள்ளாதபடி பிரசுரித்து விட்டது.

இதன் முடிவு

இப்படியெல்லாம் இருக்க சில பிராமணர்களின் புன்சிரிப்பும் முக° துதியும் பெறுவதர்க்காக ஏதேதோ பேசி இருக்கிறார்.  சர்க்காருக்கு நல்ல பிள்ளையாய் நடந்து ஏமாற்றமடைந்த ஸ்ரீமான் ஒ. தணிகாசலம் செட்டியார் தஞ்சை ஜ°டி° கட்சி மகாநாட்டில் அழுதது போல் நமது ஆதிநாராயணஞ் செட்டியாரவர்களும் இப்பொழுது பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக நடக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுவதின் பலனாய் இருவரும் ஏமாற்றமடைந்து பின்னர் ஒரு காலத்தில் அழுவாரே என்ற பரிதாபத்தோடு இதை முடிக்கிறோம்.

குடி அரசு – கட்டுரை – 30.08.1925

You may also like...