கூட்டுழைப்பின் விளைச்சல்
1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக் கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கை யும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரி யாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப் படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.
பெரியார் காங்கிரசில் பணியாற்றிய கால கட்டம் நெடு கிலும் தொய்வின்றி வலியுறுத்தி வந்த வகுப்புரிமை கோரிக்கை கள் சூழ்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்ததன் உச்சமாய் 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கட்சி விதிகளுக்கு இணங்க உரிய எண்ணிக்கை உறுப்பினர்களுக் கும் மேலதிகமாய் ஒப்புதல் பெற்று முன் வைத்த வகுப்புரிமைத் தீர்மானம் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால் தன் நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.
சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர் இறுதி நாட்களில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் தலைவராக இந்தி எதிர்ப்புக்காய் சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார் தேர்ந்தெடுக்கப் பட்டார். முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமை யான காலகட்டம் 1925 முதல் 1938 வரையிலான காலமாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிட வேண்டுமென பெரியார் திராவிடர் கழகம் விரும்பியது. 2001 ஜுன் மாதத்தில் புதிய அமைப்பாகத் தோன்றிய ‘தந்தை பெரியார் திராவிடர்கழகம்’ (தற்போது ‘பெரியார் திராவிடர் கழகம்’) 2003 ஆம் ஆண்டு நவம்பரில் ‘குடி அரசு 1925’ என்ற முதல் தொகுதியை வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டின் இரு நிகழ்வுகளில் 1926 ஆண்டின் தொகுப்புகளை இரண்டு தொகுதி களாக வெளியிட்டது.
2006 ஆம் ஆண்டில் பெரியாரின் நினைவு நாளாம் டிசம்பர் 24 இல் 1927 ஆம் ஆண்டின் இரண்டு தொகுப்புகளை வெளியிட எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில்தான் சீரங்கத்தில் திராவிடர் கழகத்தால் நிறுவப்பட்ட பெரியாரின் சிலையை இந்து மத வெறியர்கள் சிதைத்த சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் நிகழ்த்திய எதிர்வினைகளுக்காக 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் தளைப்படுத்தப்பட்டதும் குறிப்பாக, ஏழு தோழர்கள் மீது விசாரணை இன்றி ஓராண்டு சிறைவைக்க அதிகாரமளிக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்தப்பட்டதுமான நிகழ்வுகள் வெளியீட்டு முயற்சியைத் தள்ளிப்போடச் செய்து விட்டன.
ஒருவாறு வழக்குகளை வென்று தோழர்கள் விடுதலையான பின்னர் 1938 ஆம் ஆண்டு வரையிலான ‘குடி அரசு’ தொகுப்பு களை ஒரே முறையில் வெளியிட்டுவிடலாமே என்ற சிந்தனை பல்வேறு தரப்புகளிலிருந்து கிளம்பி, இறுதியில் அவ்வாறே வெளியிட்டுவிடலாம் என்று தீர்மானித்தோம்.
1983, 1984 ஆண்டுகளில் தொகுத்து எழுதியவற்றை படி எடுத்து வைத்திருந்த பெரியார் மையத்தின் முன்னணி உறுப்பினர் களான தஞ்சை வழக்குரைஞர் பாண்டியன், திருச்சி சமுத்திர ராசன், இலால்குடி நாகராசன் ஆகியோர் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்களிடமிருந்த தொகுப்புகளை கையளித்த மையே இத்தொகுப்புப் பணியின் தொடக்கமாயிற்று. இம் முயற்சி கள் தொடர்ந்த போது, இடையில் தான் திரட்டி வைத்திருந்த குடி அரசு இதழ்களின் தொகுப்புகளையும் கூடுதல் தரவுகளாய்ப் பயன்படுத்தி இந்தத் தொகுப்புப் பணியை மேலும் சிறப்பாக வெளிக்கொணர துணை நிற்பதாக வாக்களித்து இணைந் தார் தஞ்சை தோழர் இரத்தினகிரி. நாமும் ஆர்வமிக்க பல பெரியா ரியல் பற்றாளர்களும் இப்பணிக்காக மூன்றரை இலட்சம் ரூபாயை தோழர் இரத்தினகிரி அவர்களிடம் தந்தோம். அதன் பின்னர் அவர், தான் திரட்டிய குடி அரசு இதழ்களைப் பயன்படுத் துவதற்காகவும் தனது கடந்த கால உழைப்பு, செலவினங்களுக் காகவும் அய்ந்து இலட்ச ரூபாய் கேட்டதற்கு நாமும் இணங்கி னோம். பின்னர் கேட்புத் தொகை பல மடங்குகள் உயர்ந்தது. அதன் பொருந்தாமையையும் இயலாமையையும் எடுத்துக் கூறினோம். நாங்கள் அளித்த தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு ஒளி அச்சு செய்திருந்த 1931, 1933 – 1938 ஆகிய ஏழு ஆண்டுகளுக்கான குறுந்தகடுகளை எங்களிடம் கொடுக்காமல் இழுத்தடித்தபடியே இருந்தார்.
2008 ஜுலை இறுதிவரை இந்த இழுத்தடிப்பு தொடர்ந்தது. இனி அவரிடமிருந்து குறுந்தகடுகள் கிடைக்கவே கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட நிலையில்தான் ஏற்கனவே ஈடுபட்டு நிறுத்தி வைத்திருந்த குடி அரசு இதழ்களை திரட்டும் பணியில் தொகுப்புக்குழு முழுவீச்சில் இறங்கியது. இந்த முயற்சிக்கு உதவிட முன்வந்த நல்ல உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
முதலில், திராவிடர் இயக்க மூத்த எழுத்தாளர் ஏ.எஸ்.வேணு அவர்களின் நூல்களை பொறுப்புடன் பராமரித்துவரும் காஞ்சிபுரம் திரு. கே.பி.திருஞான சம்பந்தம் அவர்களை அணுகி 1936, 1938 ஆகஸ்ட் – டிசம்பர் முடிய உள்ள குடி அரசு மற்றும் பகுத்தறிவு இதழ்களைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து மதுரை யாதவர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பாதுகாத்து வைத்திருந்த 1936 இன் பிற்பாதி, 1937 முழுதும், 1938 முதல் ஏழு மாத கால குடி அரசு இதழ்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைத் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் வழி காட்டுதலில் யாதவர் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றும் பேராசிரியர் மோகன் அவர்களின் கனிவு மிகுந்த ஒத்துழைப்பால் படி எடுத்துப் பெற்றோம்.
புகழ்பெற்ற பட்டிமன்ற உரையாளர் மதுரை பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தான் போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த 1928, 1931, 1932, 1933 ஆகிய ஆண்டுகளுக்கான குடி அரசு இதழ்களைக் கொடுத்து அருளினார். அதன்பின் “நாடார் குல மித்திரன்” எனும் சுயமரியாதை இயக்க ஆதரவு ஏட்டினை நடத்தி வந்த மதுரை சூ.அ.முத்து நாடார் அவர்கள் திரட்டி வைத்திருந்த 1934, 1935, 1939, 1940 ஆண்டுகளுக்கான குடி அரசு இதழ்களை அவரது மகன் திரு. முத்துமுருகன் அவர்களின் மகள் மு. அல்லிராணி, மருமகன் சக்தி வடிவேல் ஆகியோர் கொடுத்து உதவினர். அதோடு நாடார்குல மித்திரன் ஏடு வெளியான பத்து ஆண்டுகளுக்கான இதழ்களை குறுந்தகடுகளாக்கியும் அளித்தார். அது மட்டுமின்றி கிடைத்தற்கரிய அறுபதுக்கும் அதிகமான பழைய சுயமரியாதை இயக்க வெளியீடுகளை தானே படி எடுத் தும் கொடுத்தார்.
கழகத்தின் கோவை வடக்கு மாவட்டத் தலைவராக நெடுங் காலம் பணியாற்றியவரும் ஓய்வு பெற்ற நூலகருமான தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் 1927, 1929, 1930 ஆகிய மூன்றாண்டுகளுக்கான குடி அரசு இதழ்களைத் தந்தார்.
முழுவீச்சில் தொகுப்புப் பணிகளும், அச்சுப்பணிகளும், முன் வெளியீட்டுத் திட்டப்பணிகளும் நடந்து வந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியா ரின் அனைத்து நூல்களும் தங்களது அறிவுசார் சொத்து எனவும், யாரும் வெளியிடலாகாது எனவும் அறிக்கை வெளியிட்டார்.
இவ்வறிக்கைக்குப் பின்னரே கழகத்தின் வெளியீட்டு முயற்சிகளை அறிந்த ஆத்தூர் திரு.மவுலானா சாகிப்ஜி அவர் களும் சென்னை திரு.ஞாலன் சுப்பிரமணியம் அவர்களும் அவர்க ளாகவே தொடர்புகொண்டு தங்களிடமிருந்த குடி அரசு இதழ் களையும் சில தொடக்ககால சுயமரியாதை இயக்க நூற் தொகுப்பு களையும் மனமுவந்து அனுப்பிவைத்தார்கள்.
நாகை சிறுதும்பூர் தென்னவன் அவர்களின் புதல்வரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான வெற்றிச் செல்வன் தனது தந்தையாரின் நூல் சேமிப்புகளிலிருந்து நமக்கு அனுப்ப குடி அரசு இதழ்களைத் தேடி எடுத்த போது அவை சிதைந்தும் நொறுங்கியுமே கிடந்தன. பெரியார் இயக்கத்தின் வரலாற்றுப் பதிவான குடி அரசை உண்மையான பல பெரியார் தொண்டர்கள் காலம் காலமாக பாதுகாப்பதில் காட்டிய உறுதி யும் ஆர்வமும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. என்றென்றும் பயன்படும் நிரந்தரப் பதிவான இவைகள் அச்சேற்றப்படாமல் இவ் அவலத்துக்கு உள்ளாகி விட்டனவே என்ற உணர்வு இந்தப் பணிகளைச் செய்து முடிப்பதற்கு எங்களை மேலும் உந்தித் தள்ளியது. ஒரு கட்டுரையை முழுமையாகப் பெற மூன்று நான்கு இதழ்களோடு ஒப்பிட்டே இறுதியாக்க வேண்டியிருந்தது. இதழ்கள் கிழிந்தும் சில இடங்களில் சிதைந்தும் எழுத்துகள் மறைந்துமே இருந்தன. எண்பது ஆண்டுகள் கடந்த நிலையில் வேறு எப்படித்தான் அவை இருக்க முடியும்? விடுபட்ட பல கண்ணிகளை முழுமையாக்குவதில் தொடக்க முயற்சியிலிருந்து உதவிக்கரம் நீட்டியவை ரோஜா முத்தையா ஆய்வு நூலகமும் மறைமலை அடிகள் நூலகமுமே ஆகும்.
தங்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பாத ( திராவிடர் கழகத் தொடர்புடன் இருப்பதால் ) சில பேருள்ளங்கள் புரட்சி, குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளின் படிகளைத் தந்து உதவியதும் நன்றியுடன் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் தேடிப்போய் படி எடுத்து வந்து உதவிய தோழர்கள் சென்னை தபசி.குமரன், மதுரை முருகேசன், செம்பட்டி இராசா, வின்சென்ட், நக்கீரன் செய்தியாளர் சிவ சுப்பிரமணியன், தஞ்சை பசு.கவுதமன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது.
தஞ்சை நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் பி.விருத்தாசலனார், முதல்வர் முனைவர் கு.திருமாறன், தஞ்சை பெ.மருதவாணன், குப்பு.வீரமணி, முனைவர்க.நெடுஞ்செழியன், முனைவர் இரா. சக்குபாய், முனைவர் கு.மா.இராமாத்தாள், கோவை திரு. நடராசன், பொள்ளாச்சி மா.உமாபதி, புலவர்.வீர. பிராட்லா, பொறிஞர் முத்து.மணிவண்ணன், முனைவர் வி.பாரி, முனைவர் வி.தமிழ்ச்செல்வன், பொறிஞர் வி.விடுதலைவேந்தன் ஆகியோர் குடி அரசு தொகுதிகள் வெளிவர வேண்டும் என்ற பெரும் வேட்கையோடு இப்பணிகளில் காட்டிய ஆர்வமும் கொடுத்த ஒத்துழைப்பும் தொகுப்புக் குழுவுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தஞ்சை நாட்டார் திருவருள் கல்லூரியில் இப் பணி யில் ஈடுபட்ட திருவாளர்கள் வெ.வரதராசன், நா.அருண்குமார், முனைவர் மு.இளமுருகன், முனைவர் வி.தமிழகன், முனைவர் நா.பெரியசாமி, கோபி ஆனந்த. கவுதமன், மயிலாடுதுறை இர. இரசீத்கான் போன்றோரும் நாட்டார் கல்லூரி மாணவர்களும் ஆற்றிய அரும்பணிகள் நன்றிக்கு உரியன.
தஞ்சை தோழர் இரத்தினகிரி உருவாக்கிய இடர்ப்பாடு களால் தஞ்சையிலிருந்து விடுவித்துக்கொண்டு மீண்டும் மேட்டூரி லிருந்து பணிகளைத் தொடர வேண்டியதாயிற்று. மேட்டூர் அணை தாய்த்தமிழ்ப் பள்ளியில் முதற்கட்ட மெய்ப்பு பார்க்கும் பணிகள் 2008 மே மாதத்தில் தொடங்கின. சுமார் ஒருமாத காலம் இப்பணி தொடர்ந்தது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தொகுப்புக் குழுவுக்குத் தலைமை ஏற்று முழுவீச்சில் செயல்பட்டார். பிழை திருத்தல், ஒப்பிட்டு சரிபார்த்தல் என்று மே மாதம் அவர் தொடங்கிய பணி இதழ் தயாரித்து முடியும் காலம் வரை தொடர்ந்தது. ஒளி அச்சு செய்யும் பணியில் தோழர்கள் சு.சம்பத் குமார், நந்தகுமார், ஆரோக்கியசாமி, ஜோசப், பார்த் தீபன் ஆகியோர் கடுமையாக உழைத்தனர். மெய்ப்புப் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கழகத் தோழர்கள் மே.கா.கிட்டு, இரா.முத்துக்குமார், இலக்கம்பட்டி அ.குமார், மே.கா.காந்தி, சா. ஜஸ்டின்ராசு, கொளத்தூர் ஆசிரியர் செ.செல்வேந்திரன், பெ.ஆசைத்தம்பி, பொறியாளர் சி. கோவிந்தராசு, மாணவத் தோழர்கள் பா.அறிவுச்செல்வன், மா.பிரபாகரன் ஆகியோர் முழுநேரமும் தொடர்ந்து பணியாற்றினர். இடையில் மெய்ப்புப் பணியில் உதவிட புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் கே.தேவ ராசு, கோபி நேதா. ஆசைத்தம்பி ஆகியோர் சில நாள்கள் மேட்டூர் பள்ளியிலேயே தங்கி வசதிக்குறைவுகளையும் பொருட்படுத்தாது மனநிறைவோடு பங்களிப்பை வழங்கினர்.
தொகுப்புப்பணியின் ஒருங்கிணைப்பாளராக தோழர் ப.தமிழ்க்குரிசில் செலுத்திய உழைப்பும் சிந்தனையும் அளப்பரிய தாகும். கண்டிப்பு நிறைந்த ஆசிரியராக அவர் வழி நடத்தினார். கடமையாற்றிய கழகத்தினர் ஏதேனும் ஒருநாள் விடுப்போ அல்லது சில மணி நேர தாமத வருகைக்கோ பள்ளி மாணவர் களைப்போல் தயங்கித் தயங்கி அவரிடம் அனுமதி கேட்பதும் அவரோ கோரிக்கையில் பாதியை அதுவும் தயக்கத்துடன் அனு மதித்ததை யெல்லாம் இப்போது நினைத்தால்கூட நகைப்பை ஏற்படுத்தக் கூடியவை. மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் விடு முறை காலம் முழுதும் தொடர்ந்த இப்பணிகள் பள்ளி திறப் பிற்குப் பிறகு கொளத்தூர் பெரியார் படிப்பகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
ஒளி அச்சுப் பணிகளை மீண்டும் புதிதாக மேற்கொள்ள வேண்டி இருந்ததால் அந்தப் பணிகள் சேலம், கோவை நகர் களிலும் நடந்தன. 1931, 1933 ஆண்டுகளுக்கான ஒளி அச்சுப் பணிகளை சேலத்தில் தோழர்கள் அடல் வரைகலை சரவணன், இரவி, கண்ணன் ஆகியோர் செய்து முடித்தனர். கொளத்தூருக் கும் சேலத்துக்கும் இடையே நடந்த இப்பணிகளின் இணைப்பாள ராக அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக படிகளை வாங்கித் தந்து இரண்டாம் திருத்தம், மூன்றாம் திருத்தம் என்று பணி முடியும்வரை சலிப்பின்றி செயல்பட்டவர் சேலம் நகர கழகத்தின் செயலாளர் தோழர் இரா.டேவிட் ஆவார்.
1934, 1935, 1936, 1937, 1938 ஆண்டுகளுக்கான ஒளி அச்சுப் பணிகளை கோவை ‘அய்ரீஸ் கிராபிக்ஸ்’ நிறுவன உரிமையாளர் தோழர் இராசாராம் – சீதா இணையர் மேற்கொண்டனர். தோழர் இராசாராம் பெரியாரியலாளர், பெரியார் மையத்தில் செயல்பட் டவர். கோவை விடியல் பதிப்பக உரிமையாளர் தோழர் சிவா இந்தப் பணிக்காக தமது அலுவலகத்தையே தந்து உதவினார். தோழர்கள் கொளத்தூர் மணி, ப.தமிழ்க்குரிசில், இரா.முத்துக் குமார், கோவை சட்டக் கல்லூரி கழக மாணவத் தோழர்கள் பன்னீர்செல்வம், சேகர் ஆகியோர் இரவும் பகலுமாக மெய்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோழர்களுக்கான உணவை தங்கள் இல்லத்தில் தயாரித்துக்கொண்டு வந்து தோழர் களுக்கு வழங்கிய விடியல் விஜயா அவர்களின் துணைவர் தோழர் தண்டபாணியை மறக்கமுடியாது. இணையர்களின் ஆதரவும் அன்பும் பணிச் சுமைகளால் எழுந்த சோர்வுகளைக் களைந்து உற்சாகத்தை தந்தபோது அதிர்ச்சியான ஒரு செய்தி வந்து சேர்ந்தது. முதல் நாள் இரவு 12 மணிவரை எங்களுடன் இருந்து உணவு பரிமாறி இல்லம் திரும்பிய தோழர் தண்டபாணி விடியற்காலை மாரடைப்பால் முடிவெய்திய அதிர்ச்சி செய்தி எங்களைக் கலங்கச்செய்து விட்டது. முதல் நாள் எங்களிடம் அவர்பெற்ற விடை நிரந்தர விடையாகு மென்று நாங்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை.
கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில்தான் கணினியாக்கம் மற்றும் தொகுப்புப் பணிகள் முழுமையாக நடந்தன. கீழ்த்தளத் திலும் முதல் தளத்திலும் பணிகள் எப்போதும் சுறுசுறுப்பாக நடந்துகொண்டே இருக்கும். காலை பத்து மணிக்குத் தொடங்கும் பணிகள் மறுநாள் அதிகாலை 2 மணி வரை நீடிக்கும். அதையும் தாண்டி 4 மணி வரை நீடித்த நாட்களும் உண்டு. சுமார் மூன்று மாத காலம் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்தன. தோழர்கள் கொளத்தூர் மணி, ப.தமிழ்க்குரிசில், இரா.முத்துக்குமார், மே.கா.கிட்டு, கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி, சா.ஜஸ்டின்ராஜ், மே.கா.காந்தி, ஆசிரியர் செ.செல்வேந்திரன், காவலாண்டியூர் ஈ. கனிகாச்செல்வன், மேச்சேரி ஆசிரியர் ரமேசு, இளம்பிள்ளை கோகுலக் கண்ணன், காவலாண்டியூர் கண்ணன், த.விசுவநாதன் ஆகியோர் முழுமையாகப் பணியாற்றினர். தோழர் சூலூர் வீரமணி, தோழியர்கள் சீமா, கலைச்செல்வி, மாதவி ஆகியோரும் அவ்வப் போது வந்து பணியாற்றிச் சென்றனர். பள்ளி, கல்லூரி மாணவர் கள் பலரும் ஆர்வத்துடன் உதவிட முன்வந்தனர். தஞ்சை தோழர் பசு.கவுதமன் தொகுப்புப் பணிக்கு பல்வேறு வழிகளில் உதவிய தோடு அன்றாடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு செய லூக்கியாய் கடமையாற்றினார்.
கணினியாக்கப் பணிகளை அதுவரை திருச்சியில் தனது இல்லத்திலிருந்தே செய்து வந்த தோழர் தாமரைக்கண்ணன் நிரந்தரவாசம் புரிய கொளத்தூர் வந்து சேர்ந்தார். மின்சாரம் இல் லாத வேளையில் பணிகள் தடைபடக் கூடாது என்பதற்காக மின்னாக்கி ( ஜெனரேட்டர்) எப்போதும் தயார் நிலையில் இருந் தது. இதற்கான பொறுப்பை ஓவியர் மூர்த்தி, கராத்தே குமார் இரு வரும் ஏற்றனர். இறுதிக் கட்டப்பணி நெருங்கிய போது கழகத் தோழர்களே தங்களது சொந்தக் கணினிகளைக் கொண்டு வந்த னர். நான்கு கணினிகளில் இரவும் பகலும் வேலைகள் நடந்தன. கணினியாக்கத்தில் தோழர் தாமரைக்கண்ணனுக்கு உதவியாக சென்னை தபசி. குமரன், திருப்பூர் இராவணன், மேட்டூர் வானவில் சம்பத், கொளத்தூர் சூர்யா அச்சக உரிமையாளர் சுப்பு, காவ லாண்டியூர் சசி, கபிலன் ஸ்டுடியோ விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
படிப்பகத்தில் இருபது தோழர்கள் எப்போதும் முழு நேரமும் பணியில் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உணவகங்கள் வழியாக உணவு ஏற்பாடு செய்வது கூடுதல் நிதிச்சுமையுமாகுமே என்று கவலையோடு சிந்தித்த தோழர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கழகக் குடும்பம் உணவு வழங்குவதென முடிவு செய்தனர். கழகத் தோழர்கள் மாவட்டச்செயலாளர் டைகர் பாலன், ப.சூரியக்குமார், அருள்சுந்தரம், பெரியசாமி, நகரச் செயலாளர் பெ.இளஞ்செழியன், காவலாண்டியூர் ஈசுவரன், ஆகியோர் இந்த ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றனர். கழகக் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் வகை வகையாக உணவு தயாரித்து, தலைவியும், தலைவனும், குழந்தைகளுமாய் வந்து அன்புடன் பரிமாறிய தோழமையும் பாசமும் பெரியார் குடும்பங் களின் நல்லுறவையும் பாசப்பிணைப்பையும் உறுதியாக்கி நெகிழச் செய்தன. தொலைதூரக் கிராமங்களில் இருந்து கழகக் குடும்பத்தினர் உணவு தயாரித்து பாத்திரங்களில் நிரப்பி பேருந்து களிலும் வாகனங்களிலும் கொண்டுவந்து பரி மாறிய நாள்களின் எண்ணிக்கை அதிகமாகும். கழகத் தோழர் இராமமூர்த்தி தனது ஆயுள்காப்பீட்டு முகவர் பணிகளுக்கிடையே நேரம் தவறாது உரிய நேரத்தில் உணவும் தேநீரும் வழங் கினார்.
தொடக்ககால செலவுகளுக்காக தேவைப்பட்ட பெருந் தொகையை வழங்கி உதவிய மேட்டூர் தொழிலதிபர் சி. இரத்தின சாமி, தோழர்கள் கொளத்தூர் இரா.நல்லதம்பி, கும்பகோணம் சிற்பி இராசன், மேச்சேரி கோ. தமிழரசன் ஆகியோரின் பேருள் ளத்துக்கு நெஞ்சார நன்றிகூறி மகிழ்கிறோம்.
இத்திட்டத்திற்கு நிதிதிரட்டும் வழியாக நாம் முன் வெளி யீட்டுத் திட்டத்தை அறிவித்தபோது அதை ஆர்வத்துடன் வர வேற்று முன்பணம் அனுப்பி பதிவு செய்துகொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் வெளியீட்டுநிதியாக ஒரு இலட்சம் ரூபாய்களை வழங்கிய தஞ்சை மாவட்டக்கழகம், ஐம்பதினாயிரம் ரூபாய்களை மேட்டூர் ஆர்.எஸ் கிளைக்கழகத்துக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இதன்வழியாகக் கிடைத்த நிதிதான் இத் தொகுப்புகள் வெளிவருவதை சாத்தியமாக்கியது. முன் பதிவிற்கான விளம்பரங்களை தோழமையுடன் வெளியிட்ட தமிழின உணர்வுள்ள இதழ்களுக்கும் இணையத்தளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
எந்த சிறு தவறும் வரலாற்றுப் பிழையும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் முழுக்கவனம் செலுத்தி இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வரியிலும் கூர்மையான பார் வையைக் குவித்து பல மாதங்கள் இரவு பகலாக உழைத்து தொகுப் புக்கு உருக்கொடுத்த பெருமை தோழர் ப.தமிழ்க்குரிசிலைச் சாரும். இந்த அரும்பணி வழியாக குடி அரசின் முழுமையான வரலாற்றுப் புலமையாளராக அவர் உயர்ந்து நிற்கிறார்.
அதே போல் பல மாதங்கள் நாளொன்றுக்குக் குறைந்தது பதினைந்து மணி நேரம் அமர்ந்து பணியாற்றி உடலுக்கும் கண் களுக்கும் அயர்ச்சிதரும் பணியை அயராது செய்து கணினிக்கு அருகில் படுத்துறங்கி, உறக்கம் கலைந்தவுடன் மீண்டும் பணி தொடங்கி இத்தொகுப்பு உருப்பெற முழு உழைப்பை நல்கிய தோழர் தாமரைக்கண்ணனின் பங்களிப்பு மகத்தானது.
இத்தொகுப்புப் பணிகள் நடந்த காலம் முழுவதும் நிதி திரட்டல் முதற் கொண்டு அனைத்து நிலைகளிலும் உரிய ஆலோ சனைகளை வழங்கி, பணியாற்றிய தோழர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து உற்சாகமூட்டி, தொகுதிகளுக்கு இறுதிவடிவம் கொடுத்த கழகப் பொதுச்செயலாளர் விடுதலை. க. இராசேந்திரன் அவர்களின் பணி மிக முக்கியமானது.
‘குடி அரசு’ தொகுப்பை கொண்டு வர வேண்டுமென்று கழகம் முடிவு செய்த நாளில் தொடங்கி தொகுப்பு வெளிவரும் வரை இதையே முதன்மையான முதற்பணியாக்கிக்கொண்டு, தொகுப்புக்கான நிதி திரட்டல், குடி அரசு ஏடுகளைத் தேடி சேகரித்தல், மெய்ப்புப் பார்த்தல், கணினியாக்கம், அச்சாக்கம், பணிகளை ஒருங்கிணைத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மாதங்கள் பலவாய் நள்ளிரவு வரை பங்காற்றியதோடு, பணிமுடித்த அதிகாலைப் பொழுதிலும் பங்காற்றிய தோழர்களை தனது வாகனத்தில் கொண்டு போய் வீடு சேர்க்கும் வாகன ஓட்டியாய் செயல்பட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் வரலாற்றில் புகழ் சேர்த்த கடமையைச் செய்து முடித்த பெருமை தலைவர் தோழர் கொளத்தூர் மணியையே சாரும்.
எத்தனையோ தோழர்களின் உழைப்பு, ஊக்கம், ஆதரவு சக்தியோடு உருவாகி இருப்பதுதான் இந்த குடி அரசு தொகுப்பு. இதில் பங்களிப்பை வழங்கிய அத்தனை தோழர்களும் சமுதாயக் கடமை ஒன்றை ஆற்றிய மன நிறைவைப் பெற்றுள்ளார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். இதில் எவரும் எவருக்கும் நன்றி கூறும் கடப்பாடுகள் ஏதும் இல்லை. இது கூட்டுழைப்பின் விளைச்சல். நன்றி பாராது தொண்டாற்றிய வரலாற்று நாயகனின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு அந்தப் புரட்சியாளரின் தொண்டால் தலைநிமிர்ந்த தமிழர்கள் நன்றியுடன் மேற்கொண்ட ஒரு முயற்சி.
இத் தொகுப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும் பெரியாரியல் சிந்தனையாளர்களின் கருத்துகளைப் பரிசீலிக்கவும், மறுபதிப்புகளில் சரியானவற்றை ஏற்று திருத்திக் கொள்ளவும் தயாராகவே இருக்கிறோம்.
தமிழர் சமுதாயத்தின் முன் இத்தொகுப்புகளை மிகுந்த பூரிப்புடன் சமர்ப்பிக்கிறோம்.