மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்
22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார்.
தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு விழா நிறைவடைந்தது. முன்னதாக கோட்டமங்கலம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில வெளியீட்டுச் செயலர் ந. தமிழ்ச்செல்வி, பாலப்பம்பட்டி சமத்துவபுரத்தி லுள்ள பெரியார் சிலைக்கு பெரியார் பிஞ்சு கவின்மலரும் மாலை அணிவித்தனர். தெருமுனைப் பிரச்சாரங்களில் சு. துரைசாமி, விஜயராகவன், இரா. மோகன், கோவை புறநகர் மாவட்டத் துணைத் தலைவர் ந.வே. நிர்மல்குமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டத் துணைத் தலைவர் அங்கமுத்து, மாவட்டச் செயலர் ஈழவேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
தோழர் சு. துரைசாமி, தனது உரையில் “கோவிலில் அப்பாவி பக்தர்களால் அளிக்கப்பட்ட தங்கங்கள் எவ்வாறு பார்ப்பனர்களால் முடக்கப்பட்டுள்ளது என்றும், அத்தங்கத்தை எடுத்து அரசு பொருளாதார நெருக்கடி தீர பயன்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். தோழர் விஜயராகவன், தமது உரையில், “இந்தியாவை காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஆண்டாலும், உண்மையில் ஆள்வது பார்ப்பன அதிகாரிகள் தாம் என்றும், அவர்களின் தவறான பொருளாதார வழிகாட்டுதல்களின்பேரால்தான் அரசுகள் நம்மைச் சுரண்டுகின்றன” என்றும் குறிப்பிட்டார். உடுமலை பேருந்து நிலையத்தில் காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியிலும், இந்து முன்னணியினர் முன்னிலையிலும் இரா. மோகன், இந்துமதவாத சக்திகளை ஒரு பிடி பிடித்தார். அவர் தனது உரையில், “10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விநாயகன் சதுர்த்தியன்று வீட்டளவில் சிறிய களிமண்ணாலான சிலையை வைத்து வழிபட்டு கிணற்றில் போட்டும், கொழுக்கட்டை சுட்டும் கொண்டாடினர். ஆனால், இப்போதோ ஆர்.எஸ் .எஸ் ., பி.ஜே.பி., சிவசேனா, பஜ்ரங்தள், அனுமன்சேனா போன்ற இந்து மதவாத அமைப்புகளும் கட்சிகளும் பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை உண்டு பண்ணவே இன்று விநாயகனைத் தெருவில் கொண்டு வந்து வைத்து மசூதிகளின் வழியாக ஊர்வலங்களை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன. கடைசிப் பூணூல் உள்ள வரை திராவிடர் விடுதலைக் கழகம் அதனைத் தடுக்கும்” என்றும் சூளுரைத்தார். பொது மக்களும் வியாபாரிகளும் அவரின் உரையை வியப்பாகக் கேட்டனர். இறுதியாக மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் க. காந்தி நன்றி கூறினார்.
விழாவிற்கு கொடிக்கம்பம் நடுவதற்காக மணல், சிமெண்ட், ஜல்லி ஆகியவற்றை உடுமலை தோழர் பொறியாளர் ஆ.பொன்ராசு வழங்கினார். கணியூரில் வேங்கை செல்வன், சரவணன், ராஜசேகர், தம்பி பிரபா, கார்த்தி ஆகியோர் மதிய உணவாக மாட்டுக் கறி பிரியாணியை சிறப்பாகச் செய்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை இரவு பகல் பாராமல் தோழர்கள் அய்யப்பன், ப. குணசேகரன், க. காந்தி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். பெரியார் பிஞ்சு தேனிலா எப்போதும் வீட்டில் ஓய்வு நேரங்களில் கழகக் கொடியை வரைந்து வண்ணம் தீட்டிக் கொண்டே இருப்பார். அதனால் அவரை ஊக்குவிக்கும் வகையில் உடுமலை குட்டைத் திடலில் தேனிலாவை வைத்து கழகத்தின் கொடியேற்றப்பட்டது. விழாவிற்கு திருப்பூர் மாநகரச் செயலர் ஜீவா நகர் குமார், மாவட்ட அமைப்பாளர் செந்தில், மூர்த்தி, மணிகண்டன், வடிவேல், செல்வகுமார், ஆறுமுகம், நாராயண மூர்த்தி, தேவராஜன், தமிழ்நாடு மாணவர் கழகம் ம.தி.அம்பேத்கர் உள்பட குழந்தைகள், பெண்கள் என சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.
செய்தி : மலரினியன்
பெரியார் முழக்கம் 10102013 இதழ்