20 நாள் பரப்புரைப் பயணம் புதுவையில் நிறைவடைந்தது செப்.11 இல் கிராமம் கிராமமாக பரப்புரை தொடங்குகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி – தீண் டாமை – பார்ப்பனியம் – பன்னாட்டு பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக 20 மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் 20 நாட்கள் தொடர்ந்து நடத்திய முதல் கட்டப் பரப்புரை இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் இரண்டாமாண்டு தொடக்க நாளான ஆகஸ்டு 12 இல் புதுவையில் நிறைவு செய்தது.

இரண்டாம் கட்டமாக மாவட்டங்களை மய்யமாக்கி கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கும் அடுத்தக்கட்ட பரப்புரை இயக்கத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுவை நிறைவு விழாவில்  அறிவித்தார். புதுவை ஜீவா சதுக்கத்தில் பரப்புரைப் பயண நிறைவு விழா நிகழ்வுகள் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கின.

தோழர்கள் உரைகளைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயண நிறைவையொட்டி கழக சார்பில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந் தார். தீர்மானங்கள் விவரம்:

ஜாதி அமைப்பு முறை ஒழிவதற்கு ஒரே ஜாதிக்குள் நடக்கும் அகமண திருமணங்கள் குறைந்து ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும். இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையால் கல்வி, அரசுப் பதவிகளைப் பெற்று முன்னேறிவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண், ஆண் இருபிரிவினரும் மதம் ஜாதிகளைக் கடந்து காதல் மணம்புரிய முன் வருகிறார்கள். இந்த சமுதாய மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத ஜாதியவாதிகளும்- ஜாதிச் சங்கங்களும்- ஜாதிப் பஞ்சாயத்துகள் வழியாக அவர்களை மிரட்டி, கட்டாயப்படுத்திப் பிரிக்கிறார்கள், “கௌரவக் கொலை” என்ற பெயரில் கொலை செய்யப்படுகிறார்கள். சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை ஜாதியம் தனது கரங்களில் எடுத்துக்கொண்டு ஜாதி வெறிப் பார்ப்பனியத்தை சமூகத்தின் சட்டமாகத் திணிப்பதை எதிர்த்து முறியடிக்க, ஜாதி எதிர்ப்பில் கவலையும் அக்கறையும் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

ஒவ்வொரு ஜாதிப் பிரிவிலும் அனைவருமே ஜாதி அமைப்பின் ஆதரவாளர்கள் அல்ல. ஜாதியை எதிர்க்கக்கூடிய முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு இயக்கங்களில் செயல்படுபவர்களாகவும், ஆதர வாளர்களாகவும், அமைப்புகளைச் சாராமல் ஜாதி எதிர்ப்பைக் கொள்கைகளாக ஏற்றுக் கொண்ட வர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய முற்போக்கு சக்திகள் தங்களது ஜாதியத் தலைவர் களின் அணி திரட்டலுக்கும், ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தடுக்கும் அச்சுறுத்தலுக்கும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து கண்டனக் குரலை எழுப்பிட முன்வரவேண்டும். ஜாதி வெறிப் பார்ப்பனியம் தலைதூக்கிட முயலும் சமூகச் சூழலில் சுயஜாதி மறுப்புக் கலகக்குரலின் அவசியத்தை திராவிடர் விடுதலைக் கழகம் சுட்டிக்காட்டுகிறது.

சமூகக் கல்வி ரீதியாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளின் நோக்கம்- ஜாதிகளற்ற சமத்துவ சமுதாயம் படைப்பதற்கே தவிர, ஜாதியத்துக்கு உயிரூட்ட அல்ல என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகும். மக்கள் மன்றத்தில் ஜாதி தீண்டாமைக்கு எதிராக இயக்கங்கள் தீவிரப்படுத்தப்படவேண்டிய அதேவேளையில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை திராவிடர் விடுதலைக் கழகம் முன்வைக்கிறது.

அ)         ஜாதி மதங்களைக் கடந்து திருமணம் செய்ய விரும்பும் இணையர்களின் உரிமையில் தலையிட்டு, மிரட்டி பிரிக்க முயற்சிக்கும் ஜாதிப் பஞ்சா யத்துகளை நடத்துவோரையும், அந்தப் பஞ்சாயத்துகளில் பங்கேற்போரையும் கடுமையாகத் தண்டிக்க – மத்திய சட்ட வாரியம் ஏற்கெனவே பரிந்துரைத்து அதற்கான சட்ட முன்வரைவையும் தயாரித்துள்ளது. தமிழக அரசு அந்த சட்ட முன்வரைவின் அடிப்படை யில் உடனடியாகத் தனிச்சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்து கிறோம்.

ஆ)        திருமணப்பதிவு அலுவலகங்களில் வெவ்வேறு மதத்தினருக்கிடையே நடக்கும் திருமணங் களைப் பதிவு செய்யும் சிறப்பு திருமணப் பதிவுச் சட்டத்தில் ஒருமாத முன்அறிவிப்பு வேண்டுமென்ற பிரிவு உள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி காதல் இணையர்களை அச்சுறுத்திப் பிரித்துவைக்கும் வாய்ப்புகள் இருப்பதால் இந்தக் கால அவகாசத்தை நீக்கி ஏனைய திருமணங்களைப் போலவே உடனடியாகப் பதிவதற்கு சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளை வற்புறுத்துகிறோம்.

இ) ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரின் வாரிசுகளுக்கு ஜாதியற்றோர் பட்டியல் ஒன்றை உருவாக்கிக் கல்வி வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடுகளை வழங்க முன்வர வேண்டு மென்று வலியுறுத்துகிறோம். ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீட்டின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து அதற்கு இணையாக ஜாதிமறுப்பு மணம் புரிந்த ஜாதியற்றோருக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

ஈ) காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் நிலைக்கு மேலான நியமனங்களில் அந்தந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கை கொண்ட ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்களை நியமிக்கக்கூடாது என்பதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சார்ந்தோரை நியமிப்பது வழியாக ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வை உருவாக்க வேண்டுமென்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளை வலியுறுத்துகிறோம்.

உ)         தீண்டாமைக் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியாளர்கள்-மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களையும் இடைநீக்கம் செய்து, வழக்குப் பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வை வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் நகலை அனைத்து மாநிலத் தலைமைச் செய லாளர்களுக்கும், காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் வழியாக அனைத்து நீதிபதி களுக்கும் உச்ச நீதிமன்றம் அனுப்பிவைத்து தீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக் கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இத் தீர்ப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில்- கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரைத் தண்டிக்கக் கோரி முதன்முதலாக ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளது, இதை உயர்நீதிமன்ற மும் விசாரணைக்கு ஏற்றுள்ளது. உச்சநீதி மன்றத்தின் இத்தீர்ப்பைக் கண்டிப்பாகச் செயல்படுத்தி கடமை தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

பாராட்டு

பெரியார் சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணத்தில் சூலை 24, 2013-ல் மயிலாடுதுறையில் தொடங்கி கழகம் தொடங்கிய நாளான ஆகஸ்டு 12, புதுச்சேரி வரை 20 நாட்களாக பல்வேறு இன்னல்களைப் புறந்தள்ளி மக்களைச் சந்தித்த சுயமரியாதை சமதர்மக் கொள்கைகளைப் பரப்பிட ஆர்வத்துடன் பங்காற்றிய தோழர்களின் அர்ப்பணிப்பை திராவிடர் விடுதலைக் கழகம் பெருமையோடு பதிவு செய்கிறது. பயணத்தின் வழியாக கிடைத்த கள அனுபவங் களையும் உணர்வுகளையும் செழுமைப்படுத்தி கொள்கைப் பயணத்தை மேலும் தீவிரமாக்கிட திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியேற்கிறது. பயணத்தில் பல்வேறு உதவிகளை, பங்களிப்பை வழங்கிய அனைத்துத் தோழமை அமைப்புகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் நன்றி தெரிவிக்கின்றது.

இருபது மாவட்டங்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 20 நாட்கள் நடத்திய இந்தப் பரப்புரைகளைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக மாவட்டங் களை மையமாகக்கொண்டு கிராமம் கிராமமாக மக்களைச் சந்திக்கும் பரப்புரைப் பயணங்களை நடத்திட திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பார்ப்பனியத்தின் ஜாதி, தீண்டாமையை எதிர்த்தும் அதற்குக் கருத்தியலை வழங்கி வரும் பார்ப்பனியம் மற்றும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் ஜாதிச் சங்கங்களின் ஜாதிவெறிப்போக்கையும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டிவரும் உலகமயப் பன்னாட்டு சுரண்டல் கொள்ளைகளையும் விளக்கி மக்களை அணி திரட்ட திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-வரையில் பயணம் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதேபோன்று பரப்புரை இயக்கம் நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. சமுதாய விடுதலைக்காக திராவிடர் விடுதலைக் கழகம் மேற்கொள்ளும் இந்த செயல்திட்டங்களுக்கு ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழர்கள் ஆதரவு வழங்கிட முன்வரவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறது.                                                                      ட

 

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு நினைவுப் பரிசு

பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க நாளான ஆக.12 ஆம் தேதி புதுச்சேரி ஜீவா சதுக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்றன. சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்  தோழர்களின் பறை – வீதி நாடகம் – மக்களின் பேராதரவைப் பெற்றன. தொடர்ந்து நகர கழகத் தலைவர் சார்லஸ் தலைமையில் நகர செயலாளர் விஜயன் வரவேற்புரையாற்ற தோழர்கள் தீனதயாளன் (பெரியார் சிந்தனையாளர்), கோகுல் காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்), மூர்த்தி (அம்பேத்கர் மக்கள் படை), லோகு அய்யப்பன் (புதுச்சேரி மாநில கழகத் தலைவர்), பால். பிரபாகரன் (கழக பரப்புரை செயலாளர்), விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். தோழர் கொளத்தூர் மணி (தலைவர்) நிறைவுரையாற்றினார். பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அன்பு எழிலன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 15082013 இதழ்

You may also like...