தலையங்கம் கோயிலில் முடங்கும் ‘கல் முதலாளி’களின் தங்கம்!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிகட்டுவதற்கு கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன் வைப்பதற்கே பலரும் அஞ்சுகிறார்கள்.

பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணக்கார ‘கல் முதலாளி’களின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தில் கை வைத்தால் பார்ப்பன ஆதிக்கத்தில் கை வைத்ததாகவே பார்ப்பனர்கள் மிரட்டுகிறார்கள்.

பெட்ரோலியப் பொருட்களுக்கும் தங்கத்துக்கும் இறக்குமதி செய்ய பெருமளவில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் டாலர் பற்றாக்குறையை சமாளிக்க கோயில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை முன் வைக்கப்படுகிறது.

முடங்கிக் கிடக்கும் தங்க நகைகளை ரிசர்வ் வங்கி வாங்கி, தங்கக் கட்டிகளாக உருக்கி, இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த யோசனை.

உலகிலேயே அதிகமான தங்கக் கட்டிகளை வைத்துள்ள நாடு அமெரிக்கா. இரண்டாவது இந்தியா. அமெரிக்காவின் தங்கம் அரசுக் காப்பகத்தில் அரசு சொத்தாக உள்ளது. அதனால்தான் டாலர் தங்கமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் அரசு ரிசர்வ் வங்கியில் சிறிதளவு தங்கம் உள்ளது. அதிகமாக வீடுகளில் நகைகளாகவும் இன்னும் அதிகமாக கோயில்களில் கடவுளின் ஆபரணங்களாகவும் சொத்துகளாகவும் உள்ளன.

இப்படி கோயில்களில் முடங்கிக் கிடப்பது பல்லாயிரம் டன்கள்.

திருப்பதி ஏழுமலையான், தில்லை நடராசன் கோயில்களில் கூரையே தங்கத்தில் வேயப்பட்டுள்ளது. உலகிலேயே பணக்காரக் கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 1000 டன் தங்க நகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இந்த ஆண்டு இறக்குமதியாக இருக்கும் தங்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகம்.

இந்தியா முழுதும் உள்ள கோயில்களில் 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் வரை தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்திலுள்ள ஷீரடி சாய்பாபா, மும்பை சித்தி வினாயகர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்கள் ஏராளமான தங்கத்தைக் குவித்து வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் தொழில் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு கதவை திறந்துவிட்ட இந்திய பார்ப்பன ஆட்சிகள் அவர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி சலுகைகளை வழங்குகிறது. வெளிநாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் பணமும் பல லட்சம் கோடி. இந்த சுரண்டல்களை எல்லாம் நியாயப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ததில் பார்ப்பன அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களோடு கை கோர்க்கும் அரசுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

இப்போது இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள டாலர் மதிப்பிலான இடைவெளி) 9,420 கோடி அமெரிக்க டாலர் (5,65,200 கோடி ரூபாய்) இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகம்.

இந்தியாவின் அன்னியச் செலாவணி (அதாவது அமெரிக்க டாலர்) கையிருப்பு ரூ.29,000 கோடி டாலர் பெட்ரோலியப் பொருள்கள், தங்கம் இறக்குமதிக்கு டாலர்களிலேயே தர வேண்டும். இதற்கிடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பித் தர வேண்டிய வெளிநாட்டுக் கடன் மட்டும் 17,200 கோடி டாலர். இதைத் திருப்பி தந்துவிட்டால் கையிருப்பு 2500 கோடி டாலர் மட்டும்தான் இருக்கும். (வெளிநாட்டுக் கடன்களில் 44 சதவீதம் வாங்கியிருப்பது டாட்டா, அம்பானி நிறுவனங்களே. இந்தப் பணக்கார தனியார் நிறுவனங்கள் வாங்கியிருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் இந்தியாதான் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 6 ஆண்டுகளில் 30 மடங்கு உயர்ந்துள்ளது. 2012 மார்ச் நிலவரப்படி மொத்த வெளிநாட்டுக் கடன் 43,43,400 கோடி ரூபாய். ரூபாய் மதிப்பு சரிவடைய இதுவும் ஒரு காரணம்)

இவ்வளவு சுரண்டல் கொள்ளைகளையும் நியாயப்படுத்திக் கொண்டு நாட்டை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக ஏமாற்றியதில் பார்ப்பன ஆளும் வர்க்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

இப்போது மக்களைக் காப்பாற்ற தங்கள் ஆதிக்க பீடமான கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்றால் கைவைக்க விட மாட்டோம் என்று அலறுகிறார்கள்.

“கோயில் தங்கத்தில் கை வைப்பது தேச விரோதம்; அனுமதிக்க முடியாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்” என்கிறார், பார்ப்பன சுப்ரமணியசாமி.

“ரூபாய் மதிப்பு சரிந்து வருவதைச் சரிகட்ட கோயில் நகைகளை எடுக்க அனுமதிக்க மாட்டோம்; விற்க முயற்சித்தால் போராட்டம் நடத்துவோம்” – என்கிறார், விசுவ பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அதே கும்பல் தான் ‘கல்முதலாளி’களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தில் கை வைக்க அனுமதியோம் என்று கொக்கரிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் திராவிடர் விடுதலைக் கழகம் நாட்டின் பொருளாதார மீட்புக்கு முடங்கிக் கிடக்கும் கோயில் நகைகளைப் பயன்படுத்து! என்ற முழக்கத்தை முன் வைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும்; அவர்களுக்கான வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டும், அத்துடன் கோயிலில் முடங்கிக் கிடக்கும் கல் முதலாளிகளின் பல்லாயிரம் டன் நகைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற முழக் கத்தை முன் வைத்து மாவட்ட தலைநகரங்களில் செப்.13-இல் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தலைமை செயற்குழு முடிவெடுத்துள்ளது.

தயாராவீர், தோழர்களே!

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...