வினாக்கள்… விடைகள்…

உ.பி.யில் பழங்கால கோட்டையின் கீழ், 1000 டன் தங்கம் புதைத்திருப்பதாக தனது கனவில் கிடைத்த செய்தியை ஒரு சாமியார் மத்திய அமைச்சரிடம் கூற, உடனே தொல்பொருள் துறை புதையலைத் தேடி தோண்டி வருகிறது. – செய்தி

நல்ல சேதி. ஆனாலும், அமைச்சரிடம் சாமியார் நேரில் வந்து சொன்னாரா? அல்லது சாமியார் சொல்வதுபோல் அமைச்சர் கனவு கண்டாரா என்பதை உறுதி கொள்ளுங்கள்.

வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும். – கான்பூரில் மோடி

அப்படி எல்லாம் செய்யாதீங்க. அப்புறம் எவராவது கனவு கண்டு பூமிக்கடியில் வாக்குகள் புதைந்து கிடக்கிறது என்றால், அதிகாரிகள் குழிதோண்ட ஆரம்பித்து விடுவார்கள்.

கான்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடை வா°துப்படி சோதிடர்கள் ஆலோசனை பெற்று அமைக்கப்பட்டது. – செய்தி

ஒலி பெருக்கி, மின் விளக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வா°து உண்டா?

அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மட்டுமே ஒரிசா நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். பிர்லா நிறுவனம் தனக்கு வேண்டும் என்று கேட்டதால் பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்டது. இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது? – பிரதமர் அலுவலகம் விளக்கம்

ஒரு மீறலும் கிடையாது. அரசுக்கான சுரங்கத்தை அரசு நிறுவனத்துக்கே ஒதுக்கிக் கொண்டால், அவர்களே எடுத்துக் கொண் டார்கள் என்ற வீண் பழி வந்துவிடாதா? புரிஞ்சுக்காம பேசக் கூடாது!

ராமேசுவரம் கோயிலுக்குள் பன்றி ஒன்று நுழைந்துவிட்டதால் பூஜைகள், அபிஷே கங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டன. இதை கெட்ட சகுனமாகக் கருதி, ஹோமம் வளர்க்கப்பட்டது.  – செய்தி

தீபாவளி நெருங்கும்போது, மகாவிஷ்ணு மீண்டும் பன்றி அவதாரம் எடுத்து வந்திருப்பார் போல!

ராமர் பாலத்தை உடைக்க நினைக்கும் கட்சி களுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.   – சுப்ரமணியசாமி பேட்டி

அதிலேயே உறுதியா நிக்காதீங்க. ராமன் பாலத்தை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை!

மேட்டூரில் வீரப்பன் 9 ஆம் ஆண்டு நினைவு நாள். உளவுப் பிரிவினர் கண்காணிப்பு.  – செய்தி

நினைவு நாளில் வீரப்பன் ‘ஆவி’ ஏதேனும் சுற்றுகிறதா என்று கண்காணிக்கிறார்கள் போலிருக்கிறது! நமக்கேன் வம்பு!

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.அய். வழக்குப் பதிவு செய்துள்ள தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.   – செய்தி

செய்தி தவறாக இருக்கும் போலிருக்கே? நியாயமாக ப. சிதம்பரம் தானே தொழிலதிபர் வீட்டுக்குப் போயிருக்க  வேண்டும்!

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...