மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு
வசதி வாய்ப்புப் படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற ‘உயிர்வலி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசினார்.
மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவு ‘உயிர்வலி’ (சக்கியடிக்கும் சத்தம்) ஆவணப்பட வெளியீட்டு விழா மன்னார்குடி தமிழ் இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண அரங்கத்தில் தமிழின உணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் இரயில் பா°கர் வெளியிட, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக் கொண்டார்.
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்குதண்டனை கைதியாக சிறையில் வாடும் பேரறிவாளனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘உயிர்வலி’ ஆவணப்படம் குறித்து பொங்கு தமிழ் இயக்க செயலாளர் மருத்துவர் பாரதிச் செல்வன், தமிழக தலித் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மன்னை ஜே.ஆர்.எ°., வடுவூர் தமிழின உணர்வாளர்கள் மன்றத் தலைவர் வ.சீ.ராமச்சந்திரன், மாணவர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் துரை அருள்ராஜன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ரெ.புகழேந்திரன், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி நகர செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் மணி கணேசன், வெள்ளை மனம் மன்றத் தலைவர் ஜி. முரளி, தலித் மக்கள் முன்னேற்ற கழகப் பொருளாளர் ஆறு சுதாகர், நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் தீனமுத்துச்செழியன் ஆகியோர் உரையாற்றினர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இரண்டு பேட்டரிகள் வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும். வசதி படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அப்பாவி பொது மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறினார். முன்னதாக மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு விழாவை ஒருங்கிணைத்தார். வழக்கறிஞர் செ.செந்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 26122013