சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள் என்ற குற்றச் சாட்டில் தோழர்கள் அருண்குமார், பி.கிருஷ்ணன், பி.அம்பிகாபதி ஆகியோர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர்.
சனியன்று விடியற்காலை 2 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை தோழர்கள் மீது போடப்பட்ட பிரிவுகளின் கீழ் (கொலை முயற்சி தவிர) வழக்கு தொடரப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தினசாமி பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திங்கள் கிழமை கழகத் தலைவர் கொளத்தூர் மணியைச் சிறையில் சந்தித்துப் பேசினர்.
பெரியார் முழக்கம் 07112013 இதழ்