தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்
உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம்.
தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டேன் என்று இப்போது அதிகாரி ஒப்புதல் தந்துள்ளார்.
“என்னிடம் எதற்காக பேட்டரி வாங்கச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னார். ஆனால், நான் அதைப் பதிவு செய்யவில்லை. அப்போது புலனாய்வுப் பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், குறிப்பிட்ட இந்த வாக்குமூலத்தை மட்டும் நான் பதிவு செய்யவில்லை. சரியாகச் சொன்னால், சட்டப்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஒருவரிகூட விடாமல் அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் நடைமுறையில் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை” என்று கூறியிருக்கிறார் அந்த அதிகாரி.
தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில், அதிகாரிகள் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்வதில்லை என்று சொல்கிறார்கள். ஆக, எத்தகைய கொடூர சட்டத்தின் கீழ் ஒரு மிகப் பெரிய தலைவரின் கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது இதற்காக இந்த அரசு தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும். “தேசத் தந்தை” காந்தியின் கொலை வழக்கேகூட ரகசியமாகவோ இது போன்ற ஆள் தூக்கி சட்டங்களின் கீழோ விசாரிக்கப்படவில்லை.
1991 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி சிவராசன், ஈழத்தில் பொட்டு அம்மானிடம் ஒயர்லெஸ் கருவி வழியாக பேசியபோது இந்த சதித் திட்டம் தனக்கும், சுபா, தணுவுக்கும் மட்டுமே தெரியும் என்று கூறுவது வழக்கின் சாட்சி ஆவணமாக ஏற்கப்பட்டது. பேரறிவாளன் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததோ மே 7 ஆம் தேதிக்கு முன்! ஆக, ராஜிவ் கொலை செய்யப்படும் சதித் திட்டம் பற்றி ஏதும் பேரறிவாளனுக்கு தெரியாது. எனவே அவர் வாங்கித் தந்த பேட்டரி, ராஜிவ் கொலைக்கு பயன்படுத்தப்படப் போகிறது என்பதும் தெரியாது. எனவே கொலைச் சதியில் பேரறிவாளனை தொடர்புபடுத்தவே முடியாது. இந்த கருத்துகள் தமிழ் நாட்டில் மரணதண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் எத்தனையோ மேடைகளில் முன்வைக்கப்பட்டு வந்ததுதான்.
பேரறிவாளன் சிறையிலிருந்து குடியரசுத் தலைவருக்கு எழுதிய மடலில் இந்தக் கருத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். மே 7 ஆம் தேதிக்கு முன்பு வரை ராஜிவ் கொலை பற்றிய சதித் திட்டம் மூவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்ற ஆவண சாட்சியத்தை நீதிமன்றம் நளினிக்கும், ரவிச்சந்திரனுக்கும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் போன்றோருக்கும் பயன்படுத்தி அவர்களை தூக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு மட்டும் எதிராகப் பயன்படுத்தியது ஏன் என்று அவர் எழுப்பிய கேள்வி அப்படியே நீடிக்கிறது. அதே கருத்தைத்தான் இப்போது தியாகராசன், அய்.பி.எஸ்.சும், வேறு அழுத்தமான மொழியில் கூறியிருக்கிறார்.
உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது என்பதோ, குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் என்பதோ, வழக்கின் இறுதிப் புள்ளியாகிட முடியாது. தண்டனை விதிக்கப்பட்டப் பிறகு, இந்த 22 ஆண்டுகால ஓட்டத்தில் தீர்ப்புகளைத் தாண்டிய செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ‘தடா சட்டம் நீக்கப்பட்டது அதற்குப் பிறகுதான். கருணை மனுக்கள் மீதும் உச்சநீதிமன்றம் தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் குறுக்கிடும் உரிமைகளை கையில் எடுத்ததும் அதற்குப் பிறகுதான். இறையாண்மையுள்ள தமிழக சட்டமன்றம், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் அதற்குப் பிறகுதான். ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்பதற்கு நீதிமன்றம் வகுத்துத் தந்த நெறிமுறைகளை நீதிமன்றமே மீறியது கண்டறியப்பட்டதும் அதற்குப் பிறகுதான். ‘பல்நோக்கு கண்காணிப்பு ஒழுங்குமுறை ஆணையம்’ (எம்டி.எம்.ஏ.) என்ற அமைப்பின் விசாரணைக்கு இந்த வழக்கு கொண்டு வரப்பட்டிருப்பதும் இதற்குப் பிறகுதான். தண்டனை உறுதியாக்கப்பட்டப் பிறகு, தொடரும் இந்த நிகழ்வுகளை இந்த வழக்கிலிருந்து துண்டித்துவிட முடியாது.
மேலை நாடுகள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டப் பிறகு அதை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அமைப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. தீர்ப்பளித்த நீதிபதிகளிடமே மறுபரிசீலனைக்கு மனு செய்யவும் அவர்கள் நிராகரிப்பதுமான சடங்குகளே ‘சடங்கு ரீதியாக’ பின்பற்றப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இல்லாத வேறு அமர்வின் முன் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்ற கருத்தும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும்.
தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், இப்போது தூக்குத் தண்டனைக்கு எதிராக இந்த ஆவணப் படத்தில் உறுதியாக குரல் கொடுத்திருக்கிறார்.
23 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது ஒரு குற்றத்துக்கு வழங்கும் இரண்டு தண்டனையாகிவிடும். அதற்கு இந்தியாவில் இடமில்லை என்று கூறுவதோடு, இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
தவறாகப் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்; முறையற்ற விசாரணை; ஒரு சார்பாக சான்று ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டது என்று பல்வேறு ‘வடுக்களை’ சுமந்து நிற்கிறது
இந்த வழக்கு! பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும், நளினியையும் விடுதலை செய்வதே இதற்கான நீதி!
மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள இந்த ஆவணப்படம், மரணதண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் காட்டியிருக்கிறது. அந்த ஆவணத்தை உருவாக்கிய தோழர்களின் உழைப்பு வீண் போய்விடக் கூடாது; அதற்கான வலிமையான இயக்கங்கள் நடத்தப்பட்டாக வேண்டும்!
பெரியார் முழக்கம் 28112013 இதழ்