உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்
‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன? இதை எழுதியவர்கள் சாமியைக் காப்பாற்றுவதற்காக இதை எழுதினார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. பின் ஏன் எழுதினார்கள் என்றால் அவர்களுடைய யோக்கியதையும் அவர்கள் கட்சியின் பித்தலாட்டங்களையும் அதன் பேரால் அவர்கள் நடந்து கொள்ளும் அயோக்கியத்தனங்களையும் நான் உங்களுக்கு எடுத்து விளக்கிக் காட்டிவிடுவேன் என்கின்ற பயமேயாகும். இது நான் போகும் இடங்களில் அநேகமாய் எங்கும் நடைபெறுகிற வேலையாகும். மற்றவர்களைப்பற்றி இப்படி எழுதுவதில்லை என்றாலும் நாங்கள் அதற்கு அஞ்சாமல் கிராமம் கிராமமாய்ச் சுற்றி விஷயங்களை ஒளிக்காமல் விளக்கிக் கொண்டுதான் வருகிறோம்.
எங்கள் இயக்கம் பெரிதும் அயோக்கியர்களையும் பித்தலாட்டங்களையும் வெளியாக்கும் இயக்கமாகும். எங்களுக்கு எதிரிகள் அதிகம். நாங்கள் இந்த வேலையைச் செய்கிறவர்கள் – மிக மிகக் கொஞ்சப் பேர்…
…. எனக்கு உங்கள் வரவேற்புத் தேவையில்லை. என் வீட்டு மாட்டுக் கொட்டகையில் 2000, 3000-க்கு மேற்பட்ட வரவேற்புப் பத்திரங்கள் குவியலாகக் கிடக்கின்றன. உங்கள் பணமோ, ஓட்டோ எனக்குத் தேவையில்லை. எனக்கு இனியும் இரண்டொருவருக்குக் கஞ்சி வார்க்கும்படி பண சவுகரியத்தை எங்கள் பெற்றவர்கள் செய்து வைத்து இருக்கிறார்கள். பதவியோ, எப்பொழுது வேண்டுமானாலும் என்னால் பெற முடியும். ஆகையால் உங்களிடம் நான் எதுவும் எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. நீங்கள் சுயமரியாதை உணர்ச்சியுடன் சிந்தித்துப் பாருங்கள்.
நான் நா°தினானாலும் தேசத் துரோகியானாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள்! நீங்கள் மனிதர்களாக ஆவதற்கும், சமஜாதியில், சம உரிமைக்காரராய் ஆவதற்கும் முயலுங்கள். இதற்கு இன்று திராவிடர் கழகம் ஒன்றுதான் பயன்படுகிறது.
(தந்தை பெரியார் ஈரோடு அருகில் ஒரு கிராமத்துப் பிரச்சாரத்தில்-25.1.1947)
பெரியார் முழக்கம் 21112013 இதழ்