கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கரியாம்பட்டி – நடுப்பட்டி. இக்கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 200 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கொடிய வன்முறையில் 8 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, 27 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, பீரோ, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பெருமாள் (36), நாகராஜ் (34), சுப்பிரமணி (28) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 தலித்துகளும், 51 சாதி இந்துக்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை மற்றும் திண்டுக்கல் கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எவிடன்° அமைப்பின் உண்மையறியும் குழுவினர் கடந்த 25.11.2013 மற்றும் 30.11.2013 ஆகிய தேதிகளில் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
கரியாம்பட்டி – நடுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தலித் இளைஞர்கள் நாகராஜன் (19), சக்திவேல் (23) ஆகியோர் சாதி இந்து பெண்ணை கிண்டல் செய்ததாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் தலித் குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தலித் மக்களை மிரட்டியுள்ளனர். சாதிய ரீதியாக இழிவாகப்பேசி கொண்டே அங்கிருந்தவர்களை தாக்கியும் உள்ளனர். இக்கொடிய தாக்குதலைக் கண்டு அச்சமடைந்த தலித்துகள் அப்பகுதியிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச்சென்றுள்ளனர். தலித் வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
இக்கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணம்மாள் (60), பார்வதி (39), அங்காள°வரி உள்ளிட்ட தலித் பெண்கள் எமது குழுவினரிடம், கடந்த 24.11.2013 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் எங்கள் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்தினை எடுக்கக்கோரி ஒரு இளைஞன் விசில் மூலம் சைகை செய்தான். அதற்காக சாதி இந்து பெண்ணை கிண்டல் செய்ததாக எங்கள் இளைஞர்கள் மீது பொய்ப் புகார் கொடுத்தனர். இதைவிட கொடுமை என்னவென்றால் கொஞ்சம்கூட உண்மையை விசாரிக்காமல் பாலகாதேவி என்கிற பெண் போலீசார் எங்கள் பகுதி இளைஞர்களை பூட்° காலால் எட்டி உதைத்து கன்னத்தில் அறைந்தார், கடுமையாக தாக்கினார் என்று கூறினார்கள்.
தலித் தரப்பில் 3 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 தலித் பெண்களான அங்காள°வரி, பெரு மாளக்கா, திருமுல் ஆகிய மூவரும் விதவைகள். அழகுபாண்டி (13), மாரிபாண்டி (13), கண்ணன் (16) ஆகிய சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு சிறுவர்கள் மீது சாதி இந்துக்கள் பெண்களை கிண்டல் செய்ததாக புகார் கொடுத்தால் அவற்றை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைவிட்டுவிட்டு பொய்ப் புகார் சுமத்தப்பட்ட சிறுவர்களை பலர் முன்னிலையில் போலீசார் அடித்து காயப்படுத்தியதனால் சாதி இந்துக்களுக்கு மறைமுகமாக போலீசின் ஆதரவு இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை சாதி இந்துக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 27.11.2013 அன்று எரிந்து போன 6 வீடுகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது. சேதமடைந்த 31 வீடுகளுக்கு தலா ரூ.500 கொடுத்துள்ளனர். இதுதான் அரசின் அதிகபட்ச நிவாரணமாக உள்ளது. இப்பகுதியில் தலித் குடியிருப்பு பகுதிக்குள் யார் உள்ளே வருகிறார்கள்? செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவை அரசு பொருத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள தலித்துகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குனர் வெங்கடேசன், கடந்த 15.10.2013 அன்று கரியாம்பட்டி – நடுப்பட்டி கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணை நடத்தினார். வெங்கடேசன் நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும், அடிப்படை வசதிகளும் அரசு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையும் முன்வைத்தார். அந்த பரிந்துரை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் அரசிற்கு எவ்வித அழுத்தமும் கொடுத்ததாக தெரியவில்லை.
கடந்த ஒரு வருடமாக கரியாம்பட்டி – நடுப்பட்டியில் நடந்து வரும் வன்கொடுமைகளில் சில…
கடந்த 26.02.2012 அன்று தலித்துகளான பெத்தன் (27), கணேசன் ஆகியோரை சாதி இந்துக்கள் செருப்பால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்ததற்காக பெத்தன் மீது மறுபடியும் தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
கடந்த 19.04.2012 அன்று தலித் பெண் காளியம்மாள் மீது சாதி வெறியர்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
கடந்த 21.07.2013 அன்று தலித் இளைஞர்கள் கண்ணன், பிரசாந்த், பாலு ஆகிய மூவரும் ஒண்டிவீரன் படம் போட்ட டிசர்ட் அணிந்து சென்றதற்காக 5 பேர் கொண்ட சாதி வன்கொடுமை கும்பல், டிசர்ட்டை கழட்ட சொல்லி கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை காவல்நிலை யத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, புகார் கொடுத்தனால் ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள் கடந்த 22.07.2013 அன்று இரவு 9.00 மணியளவில் தலித் குடியிருப்புக்குள் உள்ளே புகுந்து 4 வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தலித் பெண்களையும் ஆபாசமாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து 23.07.2013 அன்று நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 140/2013 பிரிவுகள் 147, 148, 336, 324, 307 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சாதி இந்துவான சின்னதுரை, வீராச்சாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது சாதி இந்துக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலித்துகள் மீது நிலக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றஎண்.141/2013 பிரிவுகள் 147, 148, 294(b), 336, 323, 307 இ.த.ச. மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமடைதல் கீழ் சுமார் 83 தலித்துகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதனால் அதிர்ச்சியடைந்த 500க்கும் மேற்பட்ட தலித்துகள் கடந்த 02.10.2013 முதல் 07.10.2013 வரை கரியாம்பட்டி – நடுப்பட்டி கிராமத்திலிருந்து வெளியேறி சங்கால்பட்டி கிராமத்திற்குள் குடிபுகுந்தனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தலித் மக்கள் அரசு அலுவலர்களிடம் இப்பகுதியில் தனி காவல்நிலையம் அமைக்க வேண்டும், தங்களுக்கென்று தனி பள்ளிக்கூடம் வேண்டும், குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இவற்றை நடைமுறைப்படுத்துவதாக அரசு தரப்பில் உறுதியளித்தனர் என்று எவிடென்சு நடத்திய ஆய்வு கூறுகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 12122013