பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர் விஜய சங்கர், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி, ஈரோடு சிவக்குமார், புதுச்சேரி பேராசிரியர் இராம. கிருட்டிணன் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான கழகத் தோழர்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
காலை 11 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கழகத்தைச் சார்ந்த பெண்களே உடலை சுமந்து இடுகாடு சென்றனர். எவ்வித மத மூடச் சடங்குமின்றி கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதரி சரோஜா தீ மூட்டினார். முன்னதாக இடுகாட்டில் கழக பெண் தோழியர் ஆத்மா, மறுஜென்மம் மறுப்பு முழக்கங்களைக் கூற, தோழர்கள் வழிமொழிந்து முழக்கமிட்டனர்.
கருமாந்திரம், கல்லெடுப்பு, காரியம், படத்திறப்பு முதலிய எந்த நிகழ்வுகளும் கிடையாது. இத்துடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்தன என்று கழகத் தோழர் அறிவிக்க, அனைவரும் கலைந்து சென்றனர். இறுதி மரியாதை செலுத்த வந்த அனைவருக்கும் காலை, பகல் உணவு வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 10102013 இதழ்