பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எ°.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது.
மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல. இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படுகிறது. ஆகையால் இதற்கு ஏற்பு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 05122013