வினா-விடை!
சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியி லிருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறுகிறார்கள். – மோடி
ஆகவே, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிய இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி மோடி தனது சுயமரி யாதையைக் காப்பாற்ற உறுதி ஏற்பாராக!
உச்சநீதிமன்றம் ‘ஜல்லிக் கட்டு’ தடை செய் துள்ளது குறித்து – கருத்து கூற விரும்பவில்லை. – கி.வீரமணி
நியாயமான பேச்சு. அது குறித்து காளைகள் தானே கருத்து கூற வேண்டும். அவைகளின் கருத்துரிமையை நாம் பறிப்பது நியாயம் அல்ல. உடுப்பி கிருஷ்ண மடத்தில் ‘பிராமணர்’களுக்கு தனி இடத்தில் சாப்பாடும் போடும் ‘பங்கி பேதா’ முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம். – செய்தி
‘ஓசி’ சாப்பாடுன்னாலும் ‘ஆச்சாரத்தை’ விட்டுடப்படாது, ஓய்! புகாரி, அஞ்சப்பர், பொன்னுசாமி ஓட்டல்களிலும் ‘பிராமணர்’ களுக்கு தனி இடம் கேட்டு ‘குல தர்மத்தை’க் காப்பாத்துங்கோ!
அண்ணா உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த மூன்று புலிக் குட்டிகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார். – செய்தி
அய்யய்யோ, புலி குட்டிகளா? சுப்ரமணியசாமி இதை சும்மா விடமாட்டாரு! ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி உச்சநீதிமன்றம் வரை போவாரு, பாருங்க!
மோடி பேசிய மேடையில், ‘ராமன்’ படம்; தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ். – செய்தி
அது ‘ராமன்’ படம் இல்லைங்க; என்.டி.ராமாராவ் படம். ‘ராhமன்’ காலத்துல கேமிராவே கிடையாதுங்க! சொன்னா கேளுங்க!
பூரி ஜெகநாதன் ரதயாத்திரைக்கு தேர்களை தயாரிக்க ஆண்டுதோறும் 862 வகையான 1000 மரங்கள் வெட்டப்படுகின்றன. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு. – ‘தினமணி’ செய்தி
கைவசம் ஒரு யோசனை இருக்கு! தேர் மரம் தீட்டுப்படாமல் இருக்க தேரில் வரும் புரோகிதர்களே – இனி மரங்களை வெட்ட வேண்டும் என்று ஒரே ஒரு சட்டம் போட்டால் போதும்! முடிஞ்சுது பிரச்சினை!
‘முல்லைப் பெரியாறு’ அணையில் தமிழ் நாட்டுக்கு சாதகமாக தீர்ப்பு வர எந்த ஆட்சி காரணம்? கலைஞர்-ஜெயலலிதா, போட்டா போட்டி அறிக்கை! – செய்தி
போதும் நிறுத்துங்க! உங்க வழக்கை எல்லாம் உச்சநீதிமன்றம் கொண்டு போக முடியாது. இதைக் காட்டி, கேரளாக்காரன் மீண்டும் தடை வாங்கிடப் போறான்!
செவ்வாய் கிரகத்துக்குப் போக 44 இந்தியர்கள் தேர்வு; அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப மாட்டார்கள். -செய்தி
இந்தியர்களாக இருப்பதைவிட கிரகவாசிகளாக இருப்பதையே பெருமையாகக் கருதும் இந்த நல்ல மனிதர்களை வாழ்த்தி வழியனுப்புவோம்!
தமிழக காங்கிரசின் ரூ.10,000 கோடி மதிப்பு சொத்துக்களை அகில இந்திய காங்கிரஸ் அறக்கட்டளையில் சேர்க்க மேலிடம் முயற்சி; தமிழக காங்கிரசார் கடும் எதிர்ப்பு. – ‘தினமலர்’ செய்தி
விடக்கூடாது. எப்படி எடுக்கலாம்? தமிழர்களின் உரிமைப் பிரச்சினைன்னா, தொலைந்து போகட்டும்னு விட்டுவிடலாம்; சொத்துப் பிரச்சினைங்க… விட முடியாது!
இந்தப் போராட்டத்தில் நான் தோற்றுப் போனால், எனது ‘கூஜா’ தயாராக இருக்கிறது. டீ விற்கக் கிளம்பிடுவேன். – மோடி
ஆத்திரத்துல வாய்க்கு வந்தபடி பேசிடாதீங்க மோடி. ஹெலிகாப்டரில் போய் டீ விற்றா, யார் வாங்குவா? சொல்லுங்க!
தமிழர்களின் பாரம்பர்ய பெருமை கொண்ட விளையாட்டான ஜல்லிக்கட்டை – உச்சநீதி மன்றம் தடை செய்ததை ஏற்க முடியாது. – தமிழக கட்சித் தலைவர்கள்
போட்டிக்கோ, சண்டைக்கோ வராத ‘கால்நடை’களை அச்சுறுத்தி ஓட வைப்பதும், அதை – உடல் வலிமையைக் காட்டி மனிதர்கள் அடக்கி, ஒடுக்கி வைப்பதும்தான் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய பாரம்பர்யமோ?
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்புக்காக தனியாக குழு எதையும் நியமிக்கத் தேவை இல்லை. – உச்சநீதிமன்றம்
அணுஉலைகளே பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளும்போல!
பெரியார் முழக்கம் 15052014 இதழ்