பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது.

பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்!

மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. 29 கவுரவ பதவிகளை உதறிவிட்டு காங்கிரசில் சேர்ந்த பெரியார், அனைவருக்கும் சமவாய்ப்புக் கொள்கையை ஏற்காத காங்கிரசி லிருந்தும் பதவிகளை உதறி வெளியேறவே செய்தார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் சரி, காங்கிரசில் இருந்த போதே தொடங்கிய ‘குடிஅரசு’ பத்திரிகையும் சரி, கடும் எதிர்ப்புகளின் ஊடாகவே பயணித்தது.

தனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, வேறு எவரும் செய்ய முன் வராத தொண்டினை, தானே மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு, தொண்டாற்றக் கிளம்பியிருக்கிறேன் என்று கூறிய பெரியார், தமிழர் சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார். அவர் உரு வாக்கிய சுயமரியாதை இயக்கமும், வலியுறுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் தமிழர்களின் ‘மானம்-அறிவு’ மீட்டுருப்புக்கான கோட்பாடுகளே யாகும்.

உலகில் எங்குமே இல்லாத ஜாதியமைப்பு இந்த சமுதாயத்தில்தான் நிலவியது. இந்தக் கொடூரமான அமைப்பு மனிதர்களை பிறவியின்  அடிப்படையில் அடிமைப்படுத்தியது. 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை இவ்வாறு கூறியது:

“ஒரு மனிதனின் வாழ்க்கையை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை, பெயரை, உடையை, ஜாதியே தீர்மானிக்கிறது.”

அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கங்களின் எழுச்சி ஒரு பக்கம். காங்கிரஸ் இந்து மகாசபை மறுபக்கம். காங்கிரஸ் கட்சி மாநாடு களிலேயே “பிராமணர்களுக்கு தனி சாப்பாடு, தனி இடம் உண்டு” என்ற விளம்பரங்கள் வெளி வந்தன. 1901 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள், வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையை பின்பற்றியதை காந்தியே, தனது சுயசரிதையில் வேதனையோடு குறிப்பிடுகிறார்:

“தமிழர்களின் சமையல் கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்துக்குத் தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால் தோஷம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். இது வர்ண தர்மத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று”.

பார்ப்பனர்களிடமிருந்து இந்த ‘ஒதுக்கி வைத்தல்’ பிற சமூகங்களிடமும் பரவியது.

“பிராமணிய தாக்கமானது பிராமணரல்லாதாரின் சமூக, மத மற்றும் கலாச்சார வாழ்வில் பெருமளவு உணரப்பட்டது. இதர ‘பிராமணரல்லாத’ சமூகங்களும் சமஸ்கிருத மயமாக்கும் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டன. இதன் விளைவாக அவர்கள் கலப்புத் திருமணங்களையும் சமபந்தி போஜனத்தையும் கடைபிடிக்க வில்லை. அது அவர்கள் அந்தஸ்தை சமூகத்தில் தாழ்த்திவிடும் என்று அவர்கள் கருதினர்” என்கிறார், சுயமரியாதை இயக்கம் குறித்து ஆய்வு செய்த முனைவர் பி.எஸ். சந்திரபாபு!

இந்த சமூகப் பின்னணியில், எந்த மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க பெரியார் குரல் கொடுத்தாரோ, அவர்களிடமிருந்தே கடும் எதிர்ப்புகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது பணி, இமயமலை வெய்யிலில் காய்கிறதே என்று குடைபிடிப்பவன் பணி போல ஆகிவிட்டது  என்றே பெரியாரே எழுதுகிறார்.

பெரியார் எதிர்ப்பாளர்கள், கடுமையாக விமர்சிக்கும் அவரது கடவுள் மறுப்பு கொள்கை, கடவுள் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ‘மனித சமத்துவம்’ என்பதிலிருந்து உருவானது.

ஜாதியும், ஆச்சாரமும், மதம், கடவுள் எனும் மரத்தை சுற்றிக் கொண்டிருப்ப தால், ஜாதியை மரத்திலிருந்து பிரித்தெடுக்க முயலுகிறேன். அது முடியாதபோது சேர்த்தே எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்று கூறும் பெரியார், இப்படி எல்லாவற்றையும் நாம் சேர்த்து எதிர்க்கும்போது, “உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அழியாது” என்று கூறுகிறார். உண்மையில் பெரியார், கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மை சமூகத்துக்காகவே இறுதி வரை உழைத்தார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையானாலும், ஜாதி, தீண்டாமைக்கு எதிரான போராட்டமானாலும், பெண்களின் உரிமை களானாலும், கடவுள் நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை மக்களுக்காகவே அவர் குரல் ஒலித்தது. அதேபோல், இந்து மதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காக, போராடி, இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார். ஆனாலும் பெரியார், எந்த மக்களின் உரிமைக்காகப் பேசினாரோ, போராடினாரோ, அவர்களி டமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நோக்கி, பல்வேறு சூழ்நிலைகளில் பல் வேறு நிலைப்பாடுகளை பெரியார் எடுத்துள்ளார். அவர் முன் வைத்த கருத்துகளை வரிக்கு வரி அடிக்கோடிட்டு அப்படியே ‘பிரதியாக’ எடுத்துப் பேசி பெரியாரை விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகவே இருக்கும். ஒளிவு மறைவின்றி தொலைநோக்கோடு பல்வேறு சிந்தனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். காலம்காலமாக பழமையில் ஊறிப் போன மக்களை விழிப்படையச் செய்வதற்கு கடும் வைத்திய முறையே தேவைப்படுகிறது என்று கூறிய பெரியார், அதே நோக்கத்தில் பேசினார்; எழுதினார்.

மற்றவர்கள் பாராட்டுவதற்கோ, திருப்திப்படுத்துவதற்கோ, எந்த ஒரு கருத்தையும் முன் வைக்காத தலைவர் என்பதுதான், அவரது தனித்துவம்.

எவ்வளவோ உயர்ந்த மரபுகளை விட்டுச் சென்றிருக்கிறார் பெரியார். பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள், ஆடம்பரம், பகட்டுக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனக்குப் பரிசாக வழங்கப்பட்ட ‘பெட்ரோல் காரை’க் கூடப் பயன்படுத்த விரும்பாத பெரியார், ‘டீசல்’ என்ஜீனாக மாற்றி, அது பழுதாகி, பிறகு ஒரு ‘அம்பாசிடரில்’ பயணிக்க நேர்ந்ததுதான், அவரது மரணத்தையே விரைவுபடுத்தி விட்டது. குறித்த நேரத்தில் கூட்டத்துக்குப் போக வேண்டும்; எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை தள்ளி வைக்கக்கூடாது; பொது மக்கள் தரும் நிதியை நாணயமாக, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அவர் தனக்குத் தானே விதித்துக் கொண்ட நெறிகள்!

பெரியார்-மணியம்மை திருமணத்தில் அதற்கு ஆலோசனை வழங்கியதே ராஜாஜிதான் என்ற குற்றச்சாட்டு அவர்மீது வீசப்பட்டது. அதற்கெல்லாம் எந்த மறுப்பையும் அவர் வெளியிடவில்லை. பெரியார் மறைவுக்குப் பிறகு அவரது கடித ஆவணங்களைப் பார்த்தபோது  தான் ராஜாஜி இத் திருமண ஏற்பாடு வேண்டாம் என்று எழுதிய கடிதம் கிடைத்தது. தன்மீது எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலாக தனது நண்பர், தனிப்பட்ட முறையில் தனக்கு எழுதிய கடிதத்தைப் பயன்படுத்த இறுதி வரை அவர் தயாராக இல்லை.

பெரியாரின் திராவிடர் இயக்கம் வழி வந்ததாகக் கூறும் திராவிட அரசியல் கட்சிகள் பெரியார் அடிப்படை லட்சியத்திலிருந்து மாறுபட்டவையேயாகும். பெரியாரின் இடஒதுக்கீடு கொள்கையைத் தவிர அவரது பகுத்தறிவு, பெண்ணுரிமை, மத எதிர்ப்புக் கொள்கைகளிலிருந்து இந்தக் கட்சிகள் விலகியே நிற்கின்றன.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு இன்னும் எவ்வளவோ செய்திருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனாலும், இந்தியாவில் ஒப்பீட்டளவில், கல்வி, மருத்துவம், சமூக நலத் திட்டங்கள், நிர்வாகக் கட்டமைப்புப் போன்றவற்றில் தமிழகம் முன்னிலையிலேயே இருக்கிறது என்பதும் உண்மை.

இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் மக்களை சந்தித்துப் பேசிக்  கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். சுற்றுப் பயணம் செய்த நாள்கள் 8200. பயணம் செய்த தூரம் – 8,20,000 மைல்கள். பூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு. கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் 10,700. பெரியார் பேசிய நேரம் – 21,400 மணிகள். அத்தனைச் சொற்பொழிவையும் ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்திருந்தால், 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்.

பெரியாரின் தொண்டு சமுதாயத்தில் உருவாக்கிய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தில் மதப் பகையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது; பெண் கல்வியை மக்கள் ஏற்கச் செய்தது; நாடாளுமன்றம் போகாமலே முதல் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு வழி வகுத்து; இடஒதுக்கீட்டுக் கொள்கையை உறுதி செய்தது; பகுத்தறிவு இயக்கத்தை பரவலாக்கியது சுயமரியாதைத் திருமண முறையை, எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதுஎன்று பட்டியல் போட முடியும். ஆனால், பெரியார் எட்ட விரும்பிய இலக்கை அடைவதற்கு வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது.

‘உலகமயமாக்கல்’ சூழலில் அவரது சிந்தனைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஜாதி-தீண்டாமை ஒடுக்குமுறைகளும், பெண் களுக்கு மறுக்கப்படும் உரிமைகளும் பல்வேறு வடிவங்களில் சமூகத்தின் அவலங் களாக கண்முன் நிற்கின்றன. அவை பெரியாரின் போராட்டக் களங்களே ஆகும்!  பெரியார் முடிந்துவிட்ட சகாப்தம் அல்ல; தொடரப்பட வேண்டிய பயணம்!

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...