உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

வறட்டுத்தன மாய்இங்கே நாத்தி கத்தை

வளர்த்திட்டாய் என்றுசிலர் குற்றம் சொல்வார்

முரட்டுத்தன மாய்க்கடவுள் மறுத்தாய் என்றும்

முணுமுணுப்பார் உள்ளுக்குள்; ஆனால் நீயோ

திருட்டுத்தனம் மிக்க பார்ப்ப னீயத்

தீமைகளை, சாதியத்தை எதிர்த்தாய் என்றே

அருட்தந்தை போல்உன்னைத் தமிழகத்தின்

அடித்தட்டு மக்களெலாம் வணக்கம் செய்தார்.

‘புதிதாக நீஎதையும் சொல்ல வில்லை

புரட்சிகர செயல்எதுவும் செய்ய வில்லை

இதற்கு முன்பே இருந்தவைதாம்; உன்பங் கென்றே

எதுவுமில்லை’ என்பர்சிலர்! எல்லாம் இங்கே

விதிவசந்தான் எனக்கிடந்த மக்கள் நெஞ்சில்

விசையூட்டித் தன்மான வீரம் ஊட்டி

நதிப்பெருக்காய், கடல்ஆர்ப்பாய் ஓர் இயக்கம்

நடத்தியவன் வரலாற்றில் நீயே அன்றோ?

‘தமிழ்மொழியைச் சனியனென்றாய், தமிழைக் காட்டு

மிராண்டிமொழி எனச்சொன்னாய்’ என்றே உன்னைத்

தமிழ்மொழிக்குப் பகைவனெனக் குற்றம் சாட்டிச்

சலிக்காமல் பழிஉரைப்பார்; இந்தி யாலே

தமிழ்மொழிக்(கு) உற்றகேட்டைத் தடுத்த துண்டு

தமிழ்உணர்ச்சி உன்இயக்கம் வளர்த்த துண்டு

தமிழ்மொழிக்குள் ‘நன்றி’என்ற சொல்லும் உண்டு

தமிழர்அதன் ‘பொருள்’அறியும் பண்பும் உண்டு

‘ஆடுமாடா மேய்த்திருப்பான் தமிழன்? இல்லை

அழிந்தவனா போயிருப்பான்? பெரியார் தொண்டைக்

கூடுதலாய் மிகைப்படுத்த வேண்டாம்’ என்று

கூறிடுவார் சிலபேர்கள், பார்ப்பான் பண்ணைக்

காடாக இருந்தநிலம் மாற்றிக் காய்ந்த

கருப்பனுக்கும் முனியனுக்கும் உரிமை உள்ள

நாடாக மாற்றியவன் நீயே! ஏற்ற

நாற்காலி தந்தவனும் நீயே! நீயே!

– புரட்சிப் பெரியார் முழக்கம், பெரியார் ஜாதி ஒழிப்பு மலர்-2014

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...