தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்

தோழர் சத்தியமூர்த்திக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது பாமர மக்களுக்குத் தெரியாது. பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிக்கைகளும் சத்தியமூர்த்தி அவர்களை வேண்டுமென்றே தூக்கி வைத்து அவரது இழிகுணங்களை மறைத்து விளம்பரம் செய்கின்றதினால் அவர் அரசியல் உலகில் லக்ஷியம் செய்ய வேண்டியவராய் இருக்கிறார். சத்தியமூர்த்தியாருக்கு வடநாட்டில் எங்கும் செல்வாக்குக் கிடையாது. ஆந்திராவிலும் மலையாளத்திலும் இவரை லக்ஷியம் செய்கிறவர்களே கிடையாது. அரசாங்கத்தாரும் இவர் விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயத்துக்கு உதாரணம் வேண்டுமானால் அசம்பளி நடிவடிக்கையின் போது அரசாங்க மெம்பருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் நடந்த ஒரு விவாதத்தில் “என்னைப்பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா?” என்று அரசாங்க மெம்பரை மூர்த்தியார் கேட்டபோது “உம்மைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவ்வளவு முக்கியமான மனிதர் நீர் என்று நான் கருதவில்லை” என்று அரசாங்க மெம்பர் பதில் சொன்னார். இதை அப்போதே “குடி அரசி”லும் குறிப்பிட்டிருந்தோம். மற்றபடி தமிழ்நாட்டில் மூர்த்தியாருக்கு எவ்வளவு மரியாதையும் செல்வாக்கும் இருந்து வந்தது என்பதற்கு அவர் சென்ற இடங்களில் எல்லாம் நடந்த மரியாதையைக் கொண்டே தெரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட மரியாதை, கவுரவம் “உள்ள” ஒருவர்தான் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராயிருந்தார். அதுவும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் பட்டம் சூட்டப்பட்டு ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்.

காங்கிரசின் எதிர்க்கட்சியாருக்கெல்லாம் தோழர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் கமிட்டி தலைவராய் இருப்பதே ஒரு தைரியமாயும் ஆறுதலாயும் தங்களுடைய வெற்றிக் குறிப்பாயும் இருந்தது. ஏனெனில் அவர் தைரியமாக உண்மையை வெளியிட்டு விடுவார். காங்கிரசின் பித்தலாட்டத்தையும் போலித்தனத்தையும் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டு விடுவார். அன்றியும் காங்கிரசு ஒரு கூட்ட சுயநலக்காரர்களுடைய ஸ்தாபனம் என்பதையும் அதற்கு ஆதாரமெல்லாம் முட்டாள்களுடைய பணமும் முரடர்களுடைய காலித்தனமும்தான் என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்தி விடுவார். இந்தக் காரணங்களால் காங்கிரசின் எதிரிகளுக்கும் காங்கிரசை வெளியாக்க வேண்டியவர்களுக்கும் இவரால் அதிக சவுகரியம் ஏற்பட்டு இருந்தது.

உதாரணமாக அவர் ஆனைமலை ஐரோப்பியர்களிடம் பேசின பேச்சு எவ்வளவோ உண்மைகளைக் கக்கி விட்டது. அதாவது, “பூரண சுயராஜ்யம் என்பது வெள்ளைக்காரர்களோடு ராஜி செய்துகொண்டு வாழ்வது” என்றும், “சீர்திருத்தத்தை ஏற்று நடத்திக்கொடுப்பதே தங்கள் கொள்கை” என்றும், “தோழர் ஜவஹர்லால் அபிப்பிராயத்துக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை” என்றும், “அவரது தகப்பனார் பெருமைக்கும் தியாகத்துக்கும் ஆகவே அவர் தலைவராக்கப்பட்டார்” என்றும் விளக்கமாகச் சொல்லிவிட்டார். இந்தப்படி மற்றும் பல சந்தர்ப்பங்களிலும் உண்மை பேசிவிடுகிறார். இந்தக் காரணங்களால் அவர் பல காங்கிரஸ் வாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பது ஒரு புறமும் மற்றும் அவர் பல சமயங்களில் அற்பத்தனமாய் நடந்துகொள்ளுவதும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு இரகசியமாகக்கூட இல்லாமல் வெளிப்படையாய் பலம் சேர்ப்பதும் இவைகளை யெல்லாம் விட அவர் பணம் சம்பாதித்துக்கொண்ட முறையைப் பார்த்து வெறுப்பும் பொறாமையும் கொண்டதுமான பல காரியங்கள் அவரை கவிழ்த்துவிட்டன.

சென்றவாரம் வேலூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சபையில் முதலாவதாக அவரது தலைமைப் பட்டத்தை பிடுங்கிக்கொண்டார்கள். அதுவும் எதிர் அபேக்ஷகருக்கு இரண்டு பங்கு ஓட்டும் இவருக்கு ஒரு பங்கு ஓட்டும்தான் கிடைத்திருக்கின்றன. பெரிதும் பார்ப்பனர்கள் எல்லாம் மூர்த்தியாருக்கும் பார்ப்பனரல்லாதார் எல்லாம் முத்துரங்கனாருக்கும் ஓட்டுப் போட்டிருப்பதாய் தெரிகிறது.

அடுத்தாற்போல் காரியதரிசி பதவிக்கும் போட்டி பலமாக ஏற்பட்டதால் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற கருதி பயந்து ஓடும்போது அங்குள்ளவர்கள் ஏதோ தயவுக்காக பரிதாபப்பட்டு அவருக்கு ஒரு ஸ்தானம் போட்டியில்லாமல் அதுவும் சென்னை விஷயத்தைப் பொறுத்தமட்டில் என்று கூட்டுக் காரியதரிசி ஆக்கினார்கள். இதை கீழ் நோக்கிய பதவி என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு ஸ்தாபனத்திற்கு தலைவராய் இருந்தவர் அதே ஸ்தாபனத்திற்கு பெருமித ஓட்டுகளால் தோல்வி அடைந்து அதற்குக் கீழ்ப்பட்ட காரியதரிசியாய் வரவே பாடுபட்டு தயவில் பெறுவது என்றால் அது கீழ் நோக்கிய பதவி என்று அல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது?

நிற்க, தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் இருந்திருந்தால் தோழர் சத்தியமூர்த்திக்கு இந்த மாதிரியான பரிதாபகரமான நிலை வந்தேயிராமல் தடுத்து ஆட்கொண்டிருப்பார். இவரை ஆதரிக்கப்போக அவர் நிலையும் மிக்க மோசமாய் போய்விட்டதால் அவர் விலாசம் தெரிவிக்காமல் மறைந்து கொண்டார்.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்

இது ஒரு புறமிருக்க, காங்கிரஸ் நிர்வாகசபை தேர்தலிலும் தமிழ்நாடு காரியக் கமிட்டியில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வாதம் தலைசிறந்து கடசியாக 20 ஸ்தானத்திற்கு பார்ப்பனர்கள் 4, 5 பேரே தெரிந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

மற்றும் பல ஸ்தானங்களின் தேர்தல்களிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி தாண்டவம் ஆடிக்கொண்டே இருந்திருக்கிறது.

அவ்வளவு ஸ்தானங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு கொடுக்கப்பட்டும் பெரிதும் எப்படிபட்ட ஆட்கள்தான் அவர்களுக்கு கிடைக்க முடிந்தது என்பது அந்தப் பெயர்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

இந்த நாட்டில் காங்கிரசுக்கு உள்ள செல்வாக்கை அதை ஆதரிக்கும் மக்களின் தரத்தை அறிய ஒரு அளவு கருவி வேண்டுமானால் இந்த பெயர்களையும் நபர்களையும் கவனித்து தெரிந்துகொள்வதன் மூலம் நன்றாய் தெரிந்துகொள்ளலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் வேலூரில் மகாநாடு நடந்து மாகாண நிர்வாக சபை முதலிய ஸ்தாபனங் களுக்கு தேர்தல் நடந்தும் வேலூர் ஜில்லா சர்வாதிகாரிகளான தோழர்கள் குப்புசாமி உபயதுல்லா முதலிய பண பக்தர்கள் எந்த ஸ்தானத்துக்கும் தெரிந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சமயம் இப்பொழுதுதான் இவர் போன்றவர்களின் யோக்கியதையை காங்கிரஸ் பக்தர்கள் தெரிந்து கொண்டதாய் காட்டிக்கொள்ள சமயம் ஏற்பட்டதோ என சந்தேகிக்கின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்று காங்கிரசிலுள்ள சில பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு விபரம் விளங்க வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்திருக்குமானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் போனால் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சபையிலும் மற்றும் பல ஸ்தானங்களிலும் இந்த பேர்வழிகள் அங்கம் பெற்றிருக்க முடியுமா என்பதையும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாத காலத்தில் இவர்களது நிலை எப்படி இருந்தது என்பதையும் கொண்டு உணர்ந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 13.12.1936

You may also like...