நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்
கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்.
இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள் வரை நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். தோழர் க.கு.எ. கங்கா நாயக்கர் முதலிய மில் முதலாளிகள் பலர் காங்கிரசில் வெகு காலமாய் இருந்து கொண்டு காங்கிரசுக்கு தாராளமாய் மற்றவர்களுக்கு அதாவது தோழர்கள் ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர், அவனாசிலிங்கம் செட்டியார் ஆகியவர்களுக்குச் சிறிதும் குறையாமலும் பின் வாங்காமலும் பணம், ஆள் முதலிய உதவி செய்து வந்தவர்கள். தோழர் வேலப்ப நாயக்கர் முதலியவர்கள் தங்கள் தொழிலை (மணியத்தை) பண்ணையத்தை விட்டு வந்து ஜெயிலுக்கு பல தடவை சென்றவர்கள். நாயக்கர்மார் சமூகத்தில் காங்கிரசை ஆதரிப்பவர்கள் அத்தனை பேரும் பெரிதும் இவர்களுக்காகவே காங்கிரசை ஆதரிப்பவர்களாவார்கள். இப்படி இருக்க, கோவை ஜில்லாவில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஒரு இந்திய M.L.A., தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு மாகாண M.L.A., தோழர் வெள்ளியங்கிரி கவுண்டருக்கு ஒரு அப்பர் சேம்பர் M.L.C., அவர் தம்பி தோழர் பழனிச்சாமி கவுண்டருக்கு ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, மற்றும் அவருக்கே ஒரு மாகாண M.L.A., என்று இப்படி இரண்டு குடும்பமே உள்ளதையெல்லாம் பங்கிட்டுக் கொள்வதென்றால் இவர்கள் தேசாபிமானமும், தியாகமும் சமதர்ம தீவிரமும் இந்த ஜில்லாவில் அவ்வளவு பெரியதா என்று கேட்கின்றோம். போன தடவை ஜில்லாபோர்டு பிரசிடெண்டு அண்ணன் என்றால் இந்தத் தடவை தம்பிதான் பிரசிடெண்டாக இருக்கவேண்டுமா? ஜில்லா போர்டு மெம்பர் வேலைக்கும் அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று மாப்பிள்ளைக்கு ஒன்று மருமகனுக்கு ஒன்று என்று நான்கைந்தும் ஒரு வீட்டுக்கே போகவேண்டுமா? மற்ற வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப் போய்விடுமா? என்று கேட்கின்றோம்.
கொங்கு வேளாளர் ஜில்லா ஆனதால் இந்த ஜில்லாவில் கிடைக்கக் கூடிய ஸ்தானம் எல்லாம் வேளாளருக்கே வரவேண்டும் என்றாலும் அந்த ஒரு குடும்பம் தான் வேளாளக் குடும்பமா? மற்ற குடும்பங்கள் ஏதாவது குற்றம்பட்ட வேளாள குடும்பமா என்று கேட்கின்றோம்.
வகுப்பு உணர்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட வகுப்பு உணர்ச்சியில்தான் ஒவ்வொரு வகுப்பும் முன்னுக்கு வரமுடியும் என்பது தான் நமது அபிப்பிராயம்.
ஆனால் வகுப்பு உணர்ச்சி கூடாது என்று காங்கிரசில் பார்ப்பனர்களுக்கு ஆயுதங்களாய் இருந்து கூப்பாடு போட்டுக் கொண்டு இரகசியத்தில் வகுப்புவாதம் பேசி கிடைப்பதையெல்லாம் தங்கள் இரு குடும்பத்துக்கே பங்கு போட்டுக்கொள்வது என்றால் இது என்ன தேசீயம்? இது என்ன காங்கிரசு என்று தான் கேட்கின்றோம். இவர்கள் இருவரும் அதாவது தோழர்கள் வெள்ளியங்கிரி கவுண்டரும் ராமலிங்கம் செட்டியாரும் மற்றவர்களை எப்படி வகுப்பு வாதம் கூடாது என்று சொல்லலாம் என்று கேட்கின்றோம்.
இந்த ஜில்லாவில் வேளாளர்கள் பெருந்தொகையாளர்கள் என்றும் அவர்கள் இந்த ஸ்தானங்களைப் பெற வேண்டும் என்றும் முதல் முதல் கிளர்ச்சி செய்து சிறிது கூட நினைத்தே இராத கனம் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்களை சட்டசபை மெம்பராக ஆகச்செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்களில் நாம் முதன்மையாக நின்றது யாரும் அறியாததல்ல. அதற்குப் பிறகே சட்டசபை ஸ்தானங்களை வேளாள கவுண்டர்மார்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக்கூடிய நிலையை அடைந்தார்கள் என்றுசொல்லலாம். அதாவது அந்தஉணர்ச்சி ஏற்பட அவ்வளவு பாடுபட்டோம். ஆனால் அதற்குப் பலன் இதுதானா? எல்லாம் ஒரே குடும்பம், அதுவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும் மாத்திரம் தானா? மற்ற வேளாளர்களுக்குப் பங்கு இல்லையா? என்று கேட்க வேண்டியிருக்கிறது.
பங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது மற்ற வேளாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
ஆனால் நாயக்கர்மார்கள் “தலைஎழுத்து” இவ்வளவுதானா என்று கேட்கின்றோம்.
அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்.
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா? அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக் கவுண்டர் திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம்.
காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுதான் இந்த விஷயத்தில் என்ன யோக்கியமாக நடந்துவிட்டது என்று கேட்கின்றோம்.
வகுப்பு உரிமை கூச்சல் இவ்வளவு பலமாகக் கூப்பாடு போடுகின்ற காலத்திலேயே இப்படி ஏமாந்தவன் தொடையில் கயிறு திரித்துக்கொண்டு அதுவும் ஜனத்தொகையும் பிரபலமும் செல்வமும் அரசியல் ஞானமும் ஊக்கமும் கொண்ட நாயக்கர்மார்களுக்கே பட்டை நாமம் சாத்திவிட்டுப் போவதென்றால் மற்றபடி இந்தப் பார்ப்பனர்களுக்கு பயந்தோ அவர் வலையில் சிக்கியோ நாம் இந்த வகுப்பு உணர்ச்சியை மறக்க விட்டுவிட்டால் பின்னால் என்ன கதி ஆவது என்பதைப் பொது ஜனங்களே நினைத்துப் பார்க்கட்டும்.
ஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான். காங்கிரஸ் என்று மனதறிந்து பொய் வேஷம் போட்டுக் கொண்ட தோழர் வரதராஜுலு, நாயக்கருக்கு மோசம் செய்து விட்டு ஒரு செட்டியார் அதுவும் நேற்று வந்து காங்கிரஸ்வேஷம் போட்ட அரசியலில் பல்லுமுளைக்காத தவரத் தெரியாத ஒரு குழந்தைக்கு ஓட்டுப் போட்டு அவமானப்படுத்தி வேடிக்கை பார்த்த கூட்டம், தங்கள் சமூகம் பூராவுமே அவமானமேற்படும்படி செய்து கொண்டதில் அதிசயமொன்றுமில்லை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றாலும் இனியாவது புத்தி வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 15.11.1936