கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை
– சித்திரபுத்தி�ரன்
கருப்பு காங்கிரஸ்வாதி: என்னப்பா முதலியார் பட்டத்தை விட வில்லையாமே?
வெள்ளை காங்கிரஸ்வாதி: விடாவிட்டால் உனக்கென்ன இத்தனை ஆத்திரம்?
க.கா.வா: இல்லை தேசாபிமானம் வேண்டாமா?
வெ.கா.வா: என்ன தேசாபிமானம்? பட்டத்தைவிட்டால்தானா தேசாபிமானம்? பட்டத்தை விடவேண்டியது தேசாபிமான சின்னமா? இன்று காங்கிரசில் பட்டதாரிகள் யாருமில்லையா? சென்னைபட்டணத்தில் ராவ்பகதூர் பட்டம்விட்ட தோழர் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கிறாரே அது போதாதா? C.I.E. பட்டம் விட்ட தோழர் கு. சீனிவாசய்யங்கார் இருக்கிறாரே அது போதாதா? இவர்கள் தேசாபிமானத்துக்கு இன்று எவ்வளவு மதிப்பு இருக்கிறது பார்! இது உனக்கு தெரியாதா?
க.கா.வா: சரி, பழய கதை பேசாதே, முதலியார் டைடிலை விட்டுவிடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது விடவில்லையே அதற்காகத்தான் சொன்னேன்.
வெ.கா.வா: எதற்காக முதலியார் டைடில் விடுகிறேன் என்று சொன்னார்? தேசாபிமானத்துக்காகவா? 4 அணா மெம்பர் பிளெஜ்ஜில் டைடிலை விடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?
க.கா.வா: 4 அணா பாரத்தில் இல்லாவிட்டால் என்ன? சட்ட சபைக்கு நிற்கிறவர்கள் டைடிலை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருக்கிறதல்லவா?
வெ.கா.வா: ஆம், சட்டசபைக்கு நின்றால்தானே! அதுவும் காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நின்றால் தானே!! “நான் சேற்றில் இறங்கவுமில்லை செருப்பைக் கழட்டவும் இல்லை” என்று ஒருவன் சொன்னால் அவன் தேசத்துரோகியா? முதலியார் காங்கிரஸ் சார்பாய் சட்டசபைக்கு நிற்கா விட்டால் பட்டம் எதற்காக விடவேண்டும்? அவர்தான் “என்னை காங்கிரஸ் சார்பாய் நிறுத்தாதீர்கள்” என்று காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் எழுதி விட்டாரே? பிறகு ஏன் அதைப்பற்றி பேசுகிறாய்?
க.கா.வா: இல்லையப்பா, அவர் பட்டம் விட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எவ்வளவு கௌரவம் ஏற்படும் பார்.
வெ.கா.வா: உங்கள் கௌரவம் போதுமே, ஒ. கந்தசாமி செட்டியார் விட்டதில் எவ்வளவு கௌரவம் வந்தது? இப்பொழுது அவர் எங்கிருக்கிறார், அவர் விலாசம் என்ன உனக்கு தெரியுமா? அப்படிமீறி வருகிற கௌரவம் ராமலிங்கம் செட்டியாரால் கமிட்டிக்கு வரட்டுமே. ஒரு ஜில்லாவில் இரண்டு பேர் பட்டம் விட்டு விட்டு ஒரு மந்திரி வேலைக்கு சண்டை பிடித்துக் கொள்ளுவானேன்?
க.கா.வா: மந்திரி வேலைக்கா பட்டம் விடுவது?
வெ.கா.வா: பின்னை எதற்கப்பா? சட்டசபை மெம்பர் வேலைக்கென்றே வைத்துக்கொள்ளேன்.
க.கா.வா: என்னப்பா அப்படி சொல்லரே?
வெ.கா.வா: பின்னை எதற்கு அப்பா? தேசாபிமானத்துக்கு பட்டம் விட வேண்டும் என்று இருந்தால் 4 அணா பாரத்திலேயே அந்த நிபந்தனை இருக்கும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தீர்மானத்திலாவது இருக்கும், அப்படி இல்லாமல் சட்டசபை அபேட்சகர்கள் பாரத்தில் மாத்திரம் அதுவும் நுழை வரியாய் எழுதி வாங்குகிறார்களே அது ஏன் உனக்குத் தெரியாதா?
க.கா.வா: என்ன இருந்தாலும்…
வெ.கா.வா: என்ன இருந்தாலும் என்கின்றது ஏனப்பா? ஒருத்தர் ஏமாறமாட்டேன் என்றால் அதற்குஆக கோபமா? இத்தனை ஆத்திரமா? காங்கிரஸ்காரர்கள் முதலியாருக்கு தொகுதி இன்னது என்றும் சொல்ல முடியாது; நேமிக்கிறார்களா இல்லையா என்றும் சொல்ல முடியாது. இந்த நிலையில் முதலியார் அனாவசியமாய் பட்டத்தை மாத்திரம் விட்டுப்போட்டு வாலறுந்த நரிமாதிரி நிரந்தரமான மூளி சின்னத்தோடு இருக்க வேணுமாக்கும். அதைப்பார்த்து நீங்கள் சிரிக்கவேணுமாக்கும். வேண்டாம் வேண்டாம். உங்களையே பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை யானால் அழுது கொள்ளுங்கள். அவர் தலையில் கை வைக்காதீர்கள்.
க.கா.வா: அதே நிபந்தனையில் ராமலிங்கம் செட்டியார் பட்டங்கள் விடவில்லையா?
வெ.கா.வா: ராமலிங்கம் செட்டியார் சங்கதி நமக்குத்தெரியாதா? அவர் எதையும் விடுவார் சந்தையும் அவருடையது, கொள்ளையும் அவருடையது. கேட்கிறவர்கள் யார்?
க.கா.வா: அப்படி சொன்னால் எனக்கு விளங்கவில்லையே!
வெ.கா.வா: காங்கிரஸ் என்றால் என்ன? யார்? அவனாசிலிங்கம் செட்டியார் தான் கோயமுத்தூருக்கு காங்கிரசு தலைவர்; அவர் ராமலிங்கம் செட்டியாருக்கு தம்பி. இருவரும் முதலியாருக்கு ஜென்மவிரோதிகள்; முதலியாரை “முண்டச்சி” ஆக்கவே பட்டம் சங்கதி உற்பத்தி பண்ணப்பட்டது; ஆதலால் செட்டியாருக்கு எப்படியும் ஒரு ஸ்தானம் ஒதுக்குவது உறுதி. அதுவும் அவர் எது கேட்கிறாறோ அது ஒதுக்கப்படும்; (ஆனால் கிடைக்குமோ இல்லையோ அது வேறு சங்கதி.)
முதலியார் விஷயத்தில் அப்படி இல்லையே? எதுகொடுத்தாலும் முதலியாருக்கு கிடைத்துவிடலாம். அதனாலே காங்கிரசில் ஒதுக்குவதையே அல்லவா நாமம் போடப்பார்த்தார்கள். நல்ல வேளையாய் தப்பித்துக் கொண்டார். அவர் சட்டசபை மெம்பர் ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி, சாகும் வரைக்கும் சொட்டு இருக்கும்படியான ஏமாற்றத்தில் இருந்து தப்பி கொண்டார்.
க.கா.வா: அப்படியா சங்கதி நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ தப்பித்துக்கொண்டார். போகட்டும் போ. எனக்கு இந்தச் சூது தெரியாது.
வெ.கா.வா: எந்த சாமி புண்ணியம், எல்லாம் நம்ப சாமி புண்ணியம் தான்.
மற்ற சங்கதி ஒன்றும் கேட்க வேண்டாம். எல்லாம் தானாக வெளி வரும்; கொஞ்சம்பொறு. முதலியார் தப்பித்துக்கொண்டாரே என்கின்ற ஆத்திரத்தில் கண்டபடி உளறப்போகிறார்கள். அதிலிருந்து அநேக சங்கதி தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் பிழைப்பில் நாணயம் பேச யாருக்கு உரிமை உண்டு? தோழர் சுப்பராயனை சேர்த்துக்கொள்ளவில்லையா? அரசியல்வாத நாணயம், வக்கீல் வாத நாணயம், வியாபாரி வாத நாணயம், தாசிவாத நாணயம் இவைகளுக்கு விலக்குவிதி உண்டு உனக்குத் தெரியாதா?
அப்படியும் முதலியார் விஷயத்தில் விலக்கு விதி ஒன்றும் வேண்டியதில்லை; அவர் பொது வாழ்வில் பொதுநல காரியம் பார்த்ததில் எவ்வளவோ பணம் நட்டப்பட்டு கடன்பட்டு தனது சொத்தை விற்று கடன் கட்டினார். ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலை போனபிறகே கடன் இல்லாமல் சாப்பிடுகிறார். ஏதோ லக்ஷம் ஐம்பது ஆயிரம் சம்பாதித்தார்.
காந்தியை கைது செய்யச் செய்த சீனிவாச சாஸ்திரி இன்னம் பெரிய மனிதராக இல்லையா? காந்தியை முட்டாள் என்ற சத்தியமூர்த்தி அதாவது ஆனைமலை பேச்சுக்காரர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இல்லையா? முதலியார் என்ன துரோகம் பண்ணினார்? டாக்டர் ராஜனாட்டவா? சாஸ்திரியாட்டவா வேலூர் காங்கிரஸ்காரராட்டவா தென் ஆற்காடு காங்கிரஸ்காரராட்டவா? அல்லது திருநெல்வேலிகாரராட்டவா? இன்னும் பேசப்போனால் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரையிலுமாட்டவா என்றுகூட கேட்பேன்.
காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் இருக்கிறார். நீ என்னை சட்ட சபைக்கு நியமிக்க வேண்டாம் நான் பட்டம் விடவில்லை என்றார். இதில் என்ன ஓட்டை சொல்லே பார்ப்போம்.
குடி அரசு உரையாடல் 15.11.1936