சமதர்மம்

 

சமதர்மிகளுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமுண்டா? என்பது தோன்ற தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் தமது “நவசக்தி” தலையங்கத்தில் குறிந்திருந்ததற்கு விடையாய் சென்றவாரக் “குடி அரசி”ல் “சமதர்மமும் முதலியாரும்” என்னும் தலைப்பில் சில குறிப்புகள் எழுதி இருந்ததை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இவ்வார “நவசக்தி”யில் தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் “சமதர்மிகளுக்கு ஒரு விண்ணப்பம்” என்னும் தலைப்பில் நீண்ட குறிப்புகள் பல தலையங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை வாசகர்களின் தெளிவுக்காக மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

அவற்றில் பல விஷயம் சமதர்மக்காரர்கள் என்பவர்கள் ஞாபகத்திலிருத்த வேண்டியவை உள்ளன எனினும் அவற்றில் தலையாயவை :

“சமதர்மிகள் என்று தங்களைக் கருதிக்கொள்ளுவோர் சிலர் கனவு உலகில் வசிப்பவராகக் காணப்படுகிறார். பல்வேறு காலங்களில் பலவேறு காரணம் பற்றி பலவாறு எழுதிய நூலை மட்டும் படித்து இந்தியாவின் இயற்கை நிலை, மக்கள் நிலை முதலியவற்றை யோராது மனம் போனவாறு சிலர் பேசுவதாலும், எழுதுவதாலும் இந்தியாவுக்கு எவ்வழியிலும் நல்ல பயன் விளையாது. இவர்கள் எழுத்தும் பேச்சும் உண்மை சமதர்மிகளுக்கு இடருஞ் செய்யும். புத்தக உலகம் வேறு; இயற்கை உலகம் வேறு. இவ்வுண்மையை இளஞ் சமதர்மிகள் உணர்ந்து நடப்பது ஒழுங்கு”.

“நமது நாட்டுக்குரிய சமதர்மம்……………….. ஜாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய வேற்றுமைகளைக் களைவது. பொருளாதார சமதர்மத்தை அறிவுறுத்துவது……”

“இளஞ் சமதர்மிகள் கால தேச வர்த்தமான நிலையைக் கருதிச் சேவை செய்வார்களாக”

என்பவைகளாகும். மற்றும் பலவும் கவனிக்கத் தக்கவைகளே.

இந்தியாவில் உழைப்பாளி சுக போகி என்கின்ற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. அவையே பெரிதும் ஏழை பணக்காரன் என்பதாகப் பரிணமிக்கச் செய்கின்றன.

உண்மையான சமதர்மத்துக்கு ஒருவன் உழைப்பதானால் அவன் முதலில் உழைக்கும் வகுப்பு ஒன்று, (உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு) சுக போகியாய் இருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டியதேயாகும். அடியோடு கல்லி எறிய வேண்டியதேயாகும். இதைச் செய்யும் வரையில் எவ்வித பொருளாதார சமதர்மத் திட்டமும் அரை வினாடி அளவும் நிலைக்காது என்பதை சமதர்மம் பேசுவோர் நினைப்போர் ஆசைப்படுவோர் மனதிலிருத்த வேண்டும்.

பணக்காரனை மாத்திரம் குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறோம் என்றால் இந்திய சமூக அமைப்பானது பிறவியின் காரணமாகவே ஏழையையும் பணக்காரனையும் அல்லது உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கி இருக்கிறது.

உதாரணமாக இன்றைய சுகபோகிகள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்களாகவும் பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் எல்லாம் கீழ் ஜாதிக் காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

அதுபோலவே பணக்காரர்களும் பெரிதும் மேல் ஜாதிக்காரர்களாகவும், ஏழைகள் பெரிதும் கீழ் ஜாதிக்காரர்களாகவும் ஜன சங்கைப் பொதுவில் இருப்பதைக் காணலாம்.

இந்தப்படியாக இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கும் பிறவி ஜாதிப் பாகுப்பாட்டை உடைத்து நொறுக்காமல் எப்படி சமதர்மத்தை பொருளாதார சமதர்மத்தைத்தான் ஆகட்டும் ஏற்படுத்தவோ நிலைக்கச் செய்யவோ முடியும் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

இன்றைய தினம் ஏதோ ஒரு அரசன் மூலமோ அல்லது ஒரு சர்வாதிகாரியின் மூலமோ இந்தியாவில் பொருளாதார சமதர்மப் பிரகடனம் ஏற்பட்டு விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அந்தப்படியே கணக்குப் பார்த்து இந்திய மக்கள் எல்லோருக்கும் இந்தியப் பொருள்களை பங்கிட்டுக் கொடுத்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம்.

பிறகு நடப்பதென்ன? என்பதை யோசித்தால் என்ன விளங்கும்? மறுபடியும் பழய நிலையே ஏற்படுவதற்கு ஆன காரியங்கள் நிகழ்ந்து கொண்டே போய் ஒரு சில வருடங்களுக்குள் பொருளாதார உயர்வு தாழ்வுகள் தானாகவே பழயபடி ஏற்பட்டு விடும் என்பதில் சிறிதும் ஆக்ஷேபணை இருக்காது.

ஏனெனில் பிரகடனத்தால் பொருளாதார சமதர்மம் தான் செய்யப்படுமே ஒழிய அதுவும் தற்கால சாந்தியாய் அல்லாமல் சமூக சமுதாய சமதர்மம் ஏற்பட இடமில்லை. அது பிறவியின் பேராலேயே தளுங்கிவிடும். அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டுதான் இருக்கும்.

அதுவும் மதத்துக்கும் ஜாதிக்கும் பெயர்போன இந்திய மக்களுக்குள் கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய பாமர மக்களுக்குள் பிறவி பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கிவிடாது.

உதாரணமாக நாட்டுக் கோட்டையார்கள் 10 லக்ஷக்கணக்கான பணம் சேகரித்தும் அவர்களது சேகரம் பெரிதும் கோவில் கட்டவும் சடங்கு செய்யவும் “மேல்” ஜாதியாகக் காட்டிக் கொள்வதிலுமே பெரும் பாகம் பாழாகி கூடிய சீக்கிரம் சாதாரண நிலைக்கு வரத்தக்க வண்ணம் சரிந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கிறோம்.

மற்றும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடியபோதிலும் ஜாதிமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சருக்கி விழுந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். செல்வவான்களாய் கோடீஸ்வரர்களாய் இருந்தும் கீழ்ஜாதிக்காரர்களாய்தான் இருந்து வருகிறார்கள்.

சமதர்ம வாசனையே சிறிது கூட இல்லாதவர்களும் சமதர்மத்துக்கு பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும், எவ்வளவு பாப்பர்களாகவும், எவ்வளவு சோம்பேறிகளாகவும், உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையை விட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இதனாலேயே பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரரைக் கண்டால் காய்ந்து விழுவதும் சமுதாய சமதர்ம இயக்கங்களை ஒழிக்க சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும் பொருளாதார சமதர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்ளுகிறார்கள்.

ஏனெனில் வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனனை ஒன்றும் செய்து விடாது; மேலும் பார்ப்பானுக்கு பொருளாதார சமதர்மம் அனுகூல மானதேயாகும். எப்படியெனில் இப்போது அவனால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பானுக்கு பிச்சை கொடுக்கும் நபர்கள் 10 பங்காக ஆகிவிடுவார்கள். அப்போது அவனுக்கு (பார்ப்பானுக்கு) சமதர்மத்தில் பிரித்துக் கொடுக்கும் சொத்துக்கள் தவிர மற்றும் ஜாதி மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து ஒவ்வொரு பார்ப்பனனும் ஒவ்வொரு சங்கராச்சாரி, மடாதிபதி ஆக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டு விடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கி விடும்.

இதனால் தான் தோழர் முதலியார் அவர்களும் “நமது நாட்டுக்குரிய சமதர்மம், ஜாதி மதம் வேற்றுமைகளைக் களைவது” என்று குறித்திருக்கிறார் என்று கருதுகிறோம்.

இந்தியாவில் ஜாதியும் மதமும் சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீத்தப்பட்டாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இரண்டையும் ஏககாலத்தில் ஏன் செய்யக் கூடாது? என்பது சிலருக்கு வினாவாய் இருக்கலாம். இரண்டையும் ஏககாலத்தில் செய்வது என்றால் நாடும் தகுதி இல்லை, அரசியலும் தகுதி இல்லை என்பதோடு அவை இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டால் எதிர்ப்புக்கு பலம் அதிகமாகிவிடும் என்பதோடு செய்பவர்களுக்கும் சக்தி குறைந்துவிடும் என்று கூறுவோம். நமது அரசியல் ஜாதி மதத்தையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. பொருள் இரண்டாவதேயாகும்.

மற்றும் சமுதாய சமதர்மத்துக்கு அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில் எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும் 100க்கு 99 பேர் “கீழ் ஜாதிக்காரர்”களாகவே இன்று இருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள். பணக்காரனை ஒழிக்க பார்ப்பான் சேர மாட்டான். சேருவதாய் இருந்தாலும் ஜாதி இருப்பதன் பலனாக மறுபடியும் பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான்.

ஆதலால் உண்மையான நாணையமான சமதர்மக்காரர்கள் இன்று பணக்காரனுடன் போராடிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பார்ப்பானை ஒழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு பார்ப்பனீயம் ஒழிக்கப்பட முயற்சிக்க வேண்டியது முதற் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.

மற்றபடி தோழர் ஜவஹர்லால் பேரால் நடைபெறும் சமதர்மமாகிய அதாவது “சமதர்மத்துக்கு ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும், அதற்கு இந்திய ஆட்சியில் இருந்து இங்கிலீஷ்காரர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்” என்று கூறுவதாகிய சமதர்மம் வெறும் வாய்ப்பேச்சு சமதர்மம் என்றுதான் கூறுவோம். ஏனெனில் இன்றைய நிலையில் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதிலும் இன்றைய காங்கிரஸ்காரர்களால் அந்நிய ஆட்சி இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படும் என்பது எப்போதும் முடியவே முடியாத காரியம். இதை ஸ்தம்பத்தில் எழுதி நாட்டி வைக்காலம்.

அந்நிய ஆட்சி ஒழிந்த நாடுகள் நிலையை அறிவதற்கு அபிசீனியா, ஸ்பெயின் முதலிய நாடுகளின் சம்பவங்களே போதுமானது. நமது நாடு 1008 ஜாதி கொண்டது. நமது சேனா பலத்துக்கோ 100 க்கணக்கான சமையல் அறைகள் வேண்டும். வீம்பு பேசலாம், போலி வீரம் பேசலாம், காரியத்தில் சாத்தியம் பேசுவதே அறிவுடைமையாகும். ஐரோப்பா நாடுகள் சுதந்திர நாடுகள், சுயராஜ்ய நாடுகள், குடி அரசு நாடுகள் ஆகியவைகளாய் இருந்தும் ஒவ்வொரு நிமிஷமும் திகீர் திகீர் என்று அந்நிய ராஜ்ய படையெடுப்புக்கு பயந்து நடுங்குகின்றன.

இந்தியாவோ பிறவி அடிமை நாடு; 100க்கு 97 மக்களை அடிமை யாகவும் கீழ் மக்களாகவும் பிறவியில் கொண்ட நாடு; இந்து முஸ்லீம் போருக்கு சதா சர்வகாலம் நெருப்பும் பஞ்சும் போல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய நாடு. ஐரோப்பியர்கள் இந்தியாவை விட்டு விலகுவதாய் இருந்தால் இந்தியா முஸ்லீம் நாடு ஆவதற்கோ இந்துக்கள் நாடு ஆவதற்கோ எல்லோரும் சம்மதிக்க வேண்டும். அப்படி இல்லையானால் இரண்டு சமூகத்திய பாமர மக்களும் அவர்களது பெண்களும் சின்னாபின்னப் படுவதற்கு தயாராய் இருக்கவேண்டும். பம்பாயைப் பார்க்கலாம், லாகூரைப் பார்க்கலாம், மலையாளத்தைப் பார்க்கலாம், இன்னம் பல ஊர்களைப் பார்க்கலாம். இதற்கு என்ன காப்பு காங்கிரஸ் செய்திருக்கிறது? ஒரு உபயத்துல்லா சாயபும், ஒரு ஷாபி முகமது சாயபும், ஒரு தாவுத்ஷா சாயபும் முஸ்லீம்களுக்கு பிரதிநிதியாய் உறுதி கொடுத்தால் போதுமா? ஒரு குப்புசாமியும், ஒரு கிருஷ்ணசாமி பாரதியும் ஒரு சுப்பையாவும் இந்துக்களுக்கு உறுதி கொடுத்தால் போதுமா? நமது அஹிம்சை “மகாத்மாக்கள்” காந்தியும் கபூர்கான் சாயபும் கத்தி முன்னிலையிலும் குண்டர்கள் முன்னிலையிலும் எவ்வளவு நேரம் இருப்பார்கள்? ரத்தம் சிந்துவதை காண சகிக்காமல் தபசுக்கு போய்விட மாட்டார்களா? போகவிட்டால்தான் என்ன? இவர்கள் பேச்சை எவ்வளவு பேர்கள் கேட்பார்கள்? சத்தியமூர்த்தியாரும், ஜவஹர்லாலும் எவ்வளவு செல்வாக் குடையவர்கள் என்பது நாம் அறியாததா? அல்லது எவ்வளவு வீரர்கள் என்பது நாம் அறியாததா? பண்டிதரின் தென்னாட்டு சுற்றுப்பிரயாண நிகழ்ச்சிக் குறிப்பை நேராக தைரியமாக வெளியிட முடியாமல் திருட்டுத்தனமாய் அதுவும் ஜாமம் ஜாமமாய் சுற்றிவிட்டு வந்தவர்கள் என்பது நாம் அறியாததா? கலவரம் ஏற்பட்டால் தாழ்ந்த ஜாதியார் என்பவர்களை மேல் ஜாதியார் என்பவர்கள் கள்ளு போதையேற்றி பலி கொடுத்துப் பார்ப்பார்கள்; காரியம் முடியாவிட்டால் காட்டிக்கொடுத்து விட்டு எதிரிகளின் காலுக்குள் நுழைந்து விடுவார்கள். இவைகள் தானே நமது இந்தியாவின் பண்டைப் பெருமையாய் விளங்குகின்றன.

இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு நன்மை வேண்டுமென்று கருதுகிறவன் இந்தியன் என்கின்ற நிலையில் இந்திய நிலை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்கவேண்டுமே ஒழிய மேல்நாட்டைப் பற்றி படித்து விட்டு புஸ்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையேயாகும். மேல்நாட்டு சமுதாய நிலைபோல் நம்நாட்டு சமுதாய நிலை ஆகும்போது மேல்நாட்டு முறைகளை கையாளுவது பொருத்தமுடையதாகும். அப்படிக்கில்லாமல் “குருடன் ராஜ விழி விழிக்கப் பார்ப்பது” என்பதுபோல நாம் இந்திய பறையன், சக்கிலி, பிராமணன் சூத்திரன் என்கின்றவர்கள் உள்ள ஊரில் பொருளாதார சமதர்மம், மார்க்கிசம், லெனினிசம் என்று பேசுவது வெறும் வேஷமும் நேரக்கேடுமேயாகும் என்று கூறுவோம்.

ஆதலால் இன்று சமதர்ம வாலிபர்கள் தயவுசெய்து கொஞ்ச நாளைக்காவது பணக்காரனை வைவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும் சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக. எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக.

குடி அரசு தலையங்கம் 29.11.1936

You may also like...