கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச பிரகடனம் தோழர் சி. ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பரீட்சை பார்க்கப்பட்டாய் விட்டது. அதாவது தோழர் ஆச்சாரியார் சுமார் 40 புலையர்களுடன் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி ஆலயம் என்பதற்குள் பிரவேசித்து உள் பிரகாரம் முதலியவற்றிற்குள் நுழைந்து விக்கிரகத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு வந்துவிட்டதாகவும் யாரும் எவ்வித தடையும் செய்யவில்லை என்றும் பத்திரிகைகளுக்கு சேதி விடுத்திருக்கிறார்.

இது இவ்வளவும் உண்மையாய் இருக்குமா என்பது சுலபத்தில் ஒப்புக் கொள்ளக் கூடிய காரியமல்ல என்றாலும் தோழர் ஆச்சாரியார் கூறுவதினால் அவை உண்மையாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

அப்படியே உண்மையாய் இருக்குமானால் தோழர் ஆச்சாரியார் கூறுகிறபடி இது ஒரு புரட்சியான மாறுதல் என்பதில் ஆட்சேபணை இல்லை.

இதனால் தோழர் ஆச்சாரியார் கூறுவது போல் ரத்தக்களரி இல்லாமல் பெரும் புரட்சிகரமான காரியங்கள் நடைபெறலாம் என்பதற்கும் அதிக நம்பிக்கை வைக்க இடமுண்டாய்விட்டது.

ஆனால் இந்தக் கோவில் பிரவேசத்தால் ஆதிதிராவிட மக்களுக்கு கீழ்ப்படுத்தி வைத்திருந்த மக்களுக்கு ஏற்பட்ட காரியமான லாபம் என்ன என்பதை யோசித்தால் அவர்களது முன்னேற்றத்துக்கு ஆன முயற்சிகள் அடைக்கப்பட்டு போய்விட்டன என்பது தான். எப்படி எனில் இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சமுதாயத்துறையில் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கி கொடுமையாய் வைக்கப்பட்டிருந்த காரணம் பொருளாதாரத் துறையில் தாங்கள் கீழ் நிலையில் இருப்பதால்தான் என்று கருதி பொருளாதார விடுதலைக்கு நேரே பாடுபட்டு வந்தார்கள். ஆனால் இந்த காரியத்தால் அவர்களது சமூகக் கொடுமை ஒரு அளவுக்கு நீங்கி விட்டதாக அவர்கள் உணர நேரும் போது தங்களது பொருளாதாரக் கொடுமைக்கு காரணம் இன்னது என்பதை உணரமுடியாமல் கடவுள் பேரிலும் தலைவிதி பேரிலும் பழியைப் போட்டு விட்டு உறங்கிக் கிடக்க நேரிட்டு விடுமே என்பதுதான்.

குடி அரசு கட்டுரை 06.12.1936

You may also like...