சமதர்மமும் முதலியாரும்
தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 131136ந் தேதி “நவ சக்தி”யில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம்.
தோழர் முதலியார் அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடும், சர். மகம்மது உஸ்மானும், குமாரராஜா முத்தைய செட்டியாரும் செட்டிநாட்டில் சமதர்மத்தைத் தாக்கிப் பேசி இருக்கிறார்கள் என்றும் இம்மூவர் பேச்சைப் பார்த்த பின்பு ராமசாமியாரே நீர் ஜஸ்டிஸ் கட்சியிலேயே இருக்கப்போகிறீரா? அப்படியானால் உம்மை நம்பிய இளைஞர் நிலை என்ன? என்றும் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த மூன்று விஷயம் பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.
அதற்கு நாம் மகிழ்ச்சியோடு விடை பகருகிறோம். இக்கேள்விகள் கேட்டதை நல்லதொரு சமயத்தில் நமக்கு செய்யாமல் செய்த உதவி போல் கருதி விடை பகருகிறோம்.
இந்த இடத்தில் தோழர் முதலியார் அவர்கள் பிரயோகித்திருக்கும் சமதர்மம் என்பதற்கு பொருளென்ன? கடவுள், மோட்சம், ஆத்மா என்கின்ற விஞ்ஞானத்துக்கு அதீதப்பட்ட வார்த்தைகள் போன்ற வார்த்தையாய் சமதர்மம் என்ற வார்த்தையையும் கருதி பிரயோகித்திருக்கிறாரா? அல்லது நம் போன்ற எளிய அறிவுள்ளவர்களுக்கும் புரியும்படியான வார்த்தை என்று கருதி பிரயோகித்திருக்கிறாரா? என்பது எனது முதல் விடையாகும். இதை முதலியார் கருணை இருந்தால் அதை அடுத்த முதல் சந்தர்ப்பத்தில் விளக்கித் தர விழைகின்றோம். அது நிற்க.
~subhead
விவகார முறையில் விடை பகருகிறோம்.
~shend
சமதர்மம் வேண்டாம் என்கின்ற ரெட்டியாரும், செட்டியாரும், சாயபும் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதால் உண்மை சமதர்மிகள் என்பவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லாமல் போகவேண்டியதுதான் என்பது முதலியார் அவர்களின் முடிந்த முடிவானால் காங்கிரசில் தோழர்கள் காந்தியார், படேல், ராஜேந்திரர், சத்தியமூர்த்தியார், ஆச்சாரியார், ஜார்ஜ் ஜோசப், ஜமால் மகம்மது, தாவுத்ஷா முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப் பேசுவதும் தோழர் நேரு சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதும், தோழர்கள் மாசானி, ரங்கா, பிரகாஸ் முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப் பேசுவதும் ஆன கருத்துக்களின்படி இவர்கள் எல்லோரும் காங்கிரசில் இருக்க இடமுண்டா என்று அறிய ஆசைப்படுகிறோம். அதையும் முதல் அவசர சந்தர்ப்பத்தில் முதலியார் அவர்கள் விளக்குவார் என்று நம்புகிறோம்.
~subhead
சத்தியமூர்த்தியார்
~shend
சத்தியமூர்த்தியார் என்றால் திருமயம் பஞ்சாங்க புரோகிதப் பார்ப்பனர் வம்ச சத்தியமூர்த்தியார் என்று நாம் இப்பொழுது பிரஸ்தாபிக்க வில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களும் பிரமுகர்களும் கைகட்டி வாய்பொத்தி தலை குனிந்து வணங்கும் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலையில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் வெள்ளைக்கார முதலாளிமார்கள் முன் சமதர்மத்தைப் பற்றியும், காங்கிரஸ்கொள்கையைப்பற்றியும், பேசின பேச்சுக்களை நமது மதிப்பிற்குரிய தோழர் முதலியார் அவர்கள் கண்டும் கேட்டும் காய்ந்தும் தீய்ந்தும் உள்ளாரே, அங்ஙனமிருக்க, அந்த முதலியாருக்கு இன்னமும் காங்கிரசில் இருக்க இடம் இருந்தால் எப்படி இருந்தது என்பதை உகந்தருளினால் தோழர் ராமசாமியாரைக் கடாவும் கடாவுக்கு விடை கிடைக்கலாம் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
அன்றியும், முதலியார்வாள் தமது எந்தக் கொள்கையை சிறிதாவது விட்டுக்கொடுக்காமல் காங்கிரசில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை ஆதரித்து வருகிறார் என்பதை அறிய விழைகின்றோம்.
காங்கிரசில் காந்தியார் கொள்கைகளில் எது இன்று காங்கிரஸ் கொள்கையாக இருந்துவருகிறது என்பதையும் காந்தியார் காங்கிரசில் தாம் இருப்பது தகுதி அல்ல என்று கருதி நாலணா மெம்பராகக்கூட இல்லாமல் வெளிப் போந்திருக்க, காந்தியடிகளை வழிகாட்டியாக உபதேசமூர்த்தியாகக் கொண்ட முதலியார்வாள் எந்த விதமான ஆதாரத்தின் மீது காங்கிரசில் இருந்து கொண்டு காந்தியைப் புகழ்ந்து ஏற்றிப்போற்றி ஆதரித்துக்கொண்டு இருக்கிறார் என்பது விளக்கப்பட்டால் ராமசாமியார் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதற்கு இடம் உண்டா இல்லையா என்பது விளங்காதா? என்று கருதுகிறோம்.
காந்தியார் அவர்களை சத்தியமூர்த்தி அவர்களும் போற்றுகிறார், நேரு அவர்களும் போற்றுகிறார், இர்வின் பிரபும் போற்றினார் மற்றும் சிலரும் போற்றுகிறார்கள். அவர்களைப் பற்றி வேண்டியதில்லை. ஆனால் முதல் மூவர் போற்றுவது போல்தான் முதலியார் அவர்களும் காந்தியாரைப் போற்றுகிறாரா அல்லது வேறு காரணங்களுக்காகவா, அல்லது ஒவ்வொருவர் போற்றுதல் காரணங்களிலும் சிறிது சிறிது எடுத்துச் சேர்த்தா என்பதை முதலியார் அவர்கள் உண்மையாய் நினைவிருத்திக்கொண்டால் ராமசாமியாருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடம் உண்டா இல்லையா என்பது தெளியலாம் என்று கருதுகிறோம்.
இப்படி இன்னம் அனேக விஷயங்கள் முதலியாரின் தெளிவுக்கு உதவியாக எடுத்துக் காட்டலாம்.
எனினும் விவகார முறையை விடுத்து அதாவது கனல் வாதம் புனல் வாதம் விடுத்து உண்மை விளக்கம் முறையில் சிறிது தெளிவிக்க விரும்புகிறோம்.
ராமசாமியார் சமதர்மத்தில் கருத்துக் கொண்டவர். ஆர்வங் கொண்டவர். அதுவே இன்று காணும் மனித சமூகக் குறைகள் பெரும்பாலான வற்றிற்கும் மருந்து என்பதை முடிந்த முடிவாகக் கொண்டவர். ஆனால் சமதர்மம் பொருளாதார சமதர்மம் என்றாலும், அரசியல் சமதர்மம் என்றாலும், சமுதாய சமதர்மம் என்றாலும், தேசீய சமதர்மம் என்றாலும் வார்த்தை வேறுபாடுகள், திட்ட வேறுபாடுகள், செய்முறை வரிசைக் கிரம வேறுபாடுகள் ஆகிய பல சமதர்மம் என்பதோடு சதா போரிட்டுவருகின்றன என்பதை முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்வார் என்றே கருதுகிறோம். அதை “நவ சக்தி” தலையங்க குறிப்புகளிலும் காண்கிறோம்.
ராமசாமியின் சமதர்மம், காந்தியாரின் சமதர்மம், நேருவின் சமதர்மம், ரஷ்யாவின் சமதர்மம், ஜர்மனியின் சமதர்மம், ஸ்பெயினின் சமதர்மம், இந்தியாவின் பழய சமதர்மம் என்பன போன்ற பல சமதர்மம் நபர், இடம், காலம் ஆகியவைகளையும் கொண்டு சமதர்மம் விவாதப் போரிட்டு வருகின்றது என்பதும் முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகிறோம்.
இவைகள் தவிர எந்த இயல் சமதர்மமானாலும் எந்த நபர் சமதர்மமானாலும் எந்த தேச எந்த கால சமதர்மமானாலும் இடம், பொருள், ஏவல் ஆகியவைகளை பொறுத்துத்தான் கையாட வேண்டியதாகுமே தவிர எல்லா விடத்தும் எந்நேரமும், எந்நிலையிலும் ஒரே மாதிரி கையாளுவதென்பது அறிஞர் கடன் அல்ல என்பதையும் முதலியார் அவர்கள் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறோம்.
ஆகவே தயவு செய்து முதலியார் அவர்கள் ராமசாமியார் சமதர்மத்தை விட்டுவிட்டார் என்றோ, ராமசாமியார் சமதர்மத்துக்கு ஜஸ்டிஸ் கக்ஷியில் இடமில்லை என்றோ கருதாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
ராமசாமியார் சமதர்மக்காரர்தான். ஆனால் அவரது சமதர்மம் காரல் மார்க்சைப் பார்த்தோ, ஏஞ்சல்ஸைப் பார்த்தோ, ரஷியாவைப் பார்த்தோ, லெனினைப் பார்த்தோ ஏற்பட்டதல்ல என்பதையும் அல்லது அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அன்றியும் ராமசாமியின் சமதர்மம் வயிற்றுப்பிழைப்புக்கோ மேடைப் பிரசாரத்துக்கோ, தலைமைப் பதவிக்கோ ஊர்மெப்புதலுக்கோ ஏற்பட்டதல்ல என்பதையும் முதலியார் அவர்கள் உணர வேண்டுகிறோம்.
அன்றியும் ராமசாமியாரின் சமதர்மமானது ஜஸ்டிஸ் கக்ஷியையோ காங்கிரசையோ இளைஞர்களையோ முதியோர்களையோ செல்வ ராஜாக்களையோ காவடிகளையோ லட்சியம் செய்தோ நம்பியோ பிரசாரம் செய்யவோ அமுலுக்குக் கொண்டுவரச் செய்யவோ வேண்டியதுமல்ல.
அன்றியும் இன்று ராமசாமியார் தனது சமதர்மத்தை நடத்துவது சமதர்ம பூமியில் இருந்தோ பொதுஉடைமை ஆக்ஷியிலிருந்தோ நடத்துவதாகக் கருதிக் கொண்டிருக்கும் நபரும் அல்ல. மற்றும் ராமசாமி தனது சமதர்மத்துக்கு எந்த நபருடைய நற்சாக்ஷி பத்திரத்தையோ ஆமோதிப்பையோ எதிர்பார்த்து நடத்தவேண்டியவரும் அல்ல.
அதற்கு ஆக சங்கமோ ஸ்தாபனமோ குறிப்பிட வேண்டும் என்கின்ற கவலை கொண்டவரும் அல்ல.
மற்றென்னவென்றால் தன் புத்தியையே தன் வலிமையையே தன் பொறுப்பையே நம்பி தன் காலில் நிற்கக்கூடிய தன்மையிலேயே நடக்கிறவர்.
அதற்கு அவருக்கு துணைவர்கள் யாராவது உண்டு அல்லது வேண்டும் என்று ஏற்பட்டால் “குணம் குடி கொடி கொண்டால் உயிருக்கு உயிர்தான், இல்லாவிட்டால் என்னமோ” என்கின்ற மாதிரி தன்னை நம்பி தன்னை அடைந்து தனது கொள்கையை கமா, புள்ளி மாறுதல் இல்லாமல் ஒப்புக் கொள்ளுகிறவர் எவரோ அவரே துணைவர், அவரே நண்பர், அவரே தோழர். மற்றவர் யாரானாலும் உலக சுபாவத்துக்கு நண்பனே கூட்டாளியே அல்லாமல் உண்மைக்கோ சமதர்ம முயற்சிக்கோ அல்ல என்பது அவர் கருத்து.
வாலிபர் தேவையானால் ஈசல் புற்றில் இருந்து வருவது போல் வேண்டும்போது உண்டாக்கிக் கொள்ள அவருக்குத் தெரியும். அவர் எந்த வாலிபருக்கும் எவ்வித வாக்குத்தத்தமும் கொள்கை உறுதியும் கொடுத்து எப்போதும் யாரையும் அழைத்ததில்லை. சேர்த்ததுமில்லை. வாலிபர் வருவதும் போவதும் சர்வ சாதாரணமான காரியமே தவிர ஒரு “ஆத்ம” சக்தியாலோ “மகாத்மா” சக்தியாலோ என்று அவர் கருதுவதில்லை.
வாலிபர்கள் என்றால் யார்? அவர்கள் பொறுப்பு என்ன? எதுவரை வாலிபப் பருவமோ வாலிபப் புத்தியோ நிற்கும்? அவர்களால் எந்த நிலையில் காரியம் செய்து கொள்ளலாம்? எந்த நிலையில் வாலிபர்களால் காரியம் கெட்டுவிடும்? என்பது ராமசாமி தனது வாலிப பருவத்தில் இருந்தே தனது வாலிப அனுபவத்திலிருந்தே அறிந்ததேயாகும்.
ராமசாமி செல்வப்பிள்ளை காலிப் பிள்ளை பிரபுப்பிள்ளை பொது நல சேவைப்பிள்ளை தேசபக்த வீரப்பிள்ளை, தேசத் துரோகப்பிள்ளை வாலிபர்கள் துரோகப்பிள்ளை என்பதான பல நிலைகளிலும் இன்று இருக்கிற தன்மையில் பதவியில் நிலையில் இருந்துதான் வந்திருக்கிறாரே ஒழிய நிலைமாறிய போது பதவி மாறியோ பதவி மாறிய போது நிலைமை மாறியோ போவதான நிலையை அவர் ஒரு போதும் அடைந்ததேயில்øல்.
ஆகையால் ராமசாமியாருக்கு கட்சியோ உலகோர் என்ன சொல்வார்கள் என்கிற கவலையோ வாலிபர்கள் என்ன நினைப்பார்கள் என்கின்ற லட்சியமோ சிறிதும் இல்லை.
தலைமை ஸ்தானம் வேண்டுமானால் தான் உண்டாக்கிக் கொள்வாரே தவிர தன்னை இன்னொருவன் தலைவனாக்கும்படி ஒரு நாளும் செய்து கொள்ளமாட்டார். அத்தலைமையின் கீழ் அரை நிமிஷமும் இருக்கவு மாட்டார். உலகோர் என்ன சொல்வார்கள் என்பதில் உலகோர் இன்ன விதம் சொல்லவேண்டும் என்று உலக அபிப்பிராயத்தை தான் உண்டாக்க முயற்சிப்பாரே ஒழிய உலக அபிப்பிராயம் இப்படி இருக்கிறதே என்று சிறிதும் கருத மாட்டார்.
மனிதன் கொஞ்சநாள் வாழ்வதானாலும் தன்னை நம்பி தன் காலில் நின்று தன் இஷ்டம் போல் இருந்து சாவதே சுயமரியாதை என்று கருதி இருக்கும் அவர் “உமக்கு கட்சியில் இடம் எங்கே?” “உம்மை நம்பினவர்கள் கதி என்ன?” என்பதற்காக கவலைப்படுவாரா? ஏங்குவாரா? என்பதை முதலியார் அவர்கள் சாவதானமாய் இருந்து சிந்திக்க கெஞ்சுகிறோம்.
இன்று உண்மையிலேயே ஜஸ்டிஸ் கட்சியில் சமதர்மத்துக்கு இடம் இல்லாமல் போய் விட்டதினால் ராமசாமியின் சமதர்மத்துக்கோ பொது சமதர்மத்துக்கோ என்ன கெடுதி என்பது விளங்கவில்லை.
இனி ஒரு 2, 3 மாதத்தில் ஜஸ்டிஸ் கட்சி நிலை இன்னது என்று தெரிந்துவிடப் போகிறது. அதுபதவிக்கு வரும். வராவிட்டாலும் சரி, அதற்குப்பிறகு சமதர்மத்தை பிரசாரம் செய்வதில் தடை என்ன இருக்கிறது? என்றும், அப்புறம் வாலிபர்கள் உண்டாகமாட்டார்களா என்றும் கேட்கின்றோம்.
எந்த வாலிபனிடமும் எந்த கூட்டு வேலைக்காரனிடமும் ராமசாமி தனது சமதர்மத்துக்கு ஒப்பந்தம் பேசி ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் பெற்றுக் கொள்ளவில்லை. ராமசாமி எத்தனையோ பல சமதர்ம வாலிபருக்கு சோறு, உடை, செலவுக்கு காசு அவர்கள் குடும்பச் செலவுக்கு 25, 50, 100, 500, 1000 பணம் கொடுத்து மாதக்கணக்காய் வருடக்கணக்காய் சாப்பாடு போட்டு வளர்த்தி இருக்கலாமே தவிர ஒரு வாலிபரிடமாவது கூட்டுத் தோழர்களிடமாவது ராமசாமிக்கு என்று ஒரு சிறு உதவியும் பெற்று இருக்கமாட்டார். ஆதலால் ஒரு வாலிபரையும் அவர் மோசம் செய்யவில்லை.
இரண்டு காரியம் இல்லாதவன் உலகில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதை முதலியாருக்கு சமர்ப்பிக்கிறோம்.
- தன் வாழ்வுக்கு எந்த நிலையிலும் மற்றொருவனை எதிர்பார்க்கக் கூடாது.
- தன் சுயநலத்துக்காக என்று எந்தக் காரியத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது எதிர்பார்க்கக் கூடாது.
இப்படிப்பட்டவன் எந்த கொள்கைக்கும் எந்த கட்சிக்கும் எந்த வாலிபனுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
இப்படிப்பட்டவன் நிமிஷத்துக்கு ஒரு கொள்கை சொல்லலாம், நிமிஷத்துக்கு ஒரு கட்சியையும் ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், யாரையும் வெளியே போ, உள்ளே வா என்று கூப்பிடலாம். ஆனதால் ராமசாமி சமதர்மம் யாரை எதிர்பார்த்தும் இருக்காது; அவர் உள்ளவரை மறையாது.
உண்மையாகவே உள் சிரத்தையுடன் மனம் கனிந்து முதலியாரை ஒன்று கேட்கிறோம். அதாவது தமிழ் நாட்டில் உண்மையான சமதர்மவாதி யார்? சமதர்ம வாலிபர் யார்? அவர்களின் சொந்த அந்தஸ்து, நடவடிக்கை, நாணையம், உறுதி ஆகியவைகள் என்ன? அனுபவம் என்ன? அவற்றில் எதில் ராமசாமியார் குறைந்திருக்கிறார் என்பதுதான்.
நமக்கு அனேக சமதர்மவாதிகள் தெரியும். நாடகத்தில் குச்சிக்காரிகள் சந்திரமதி, சீதை வேஷம் போட்டு நடிப்பது போலவும், நாடகத்தில் குடிகாரர்களும், காலிகளும், சாதுக்கள், முனிவர்கள், தர்மராஜாக்கள் முதலியோர் வேஷம் போட்டு நடிப்பது போலவும் மேடையில் ஒருவிதமாகவும் மற்றவர்களிடம் ஒருவிதமாகவும் தனி சொந்த நடத்தையில் ஒருவிதமாகவும் நடிப்பது சமதர்மம் என்றால் அதை ராமசாமியார் எவ்வளவு மதிப்பார் என்பதை முதலியாரே அறிந்து கொள்ள வேண்டும். மேடையில் பணக்காரனை ஜமீன்தாரனை வையலாம். மேடை விட்டிறங்கியவுடன் அவர்களுக்கு விரோதமான பணக்காரனை செலவுக்கு பணம் கேட்கலாம். சாப்பாட்டு நேரம் வரை அப்பணக்காரன் வாயிலில் காவல் காத்திருக்கலாம். இவர்கள் தான் சமதர்மவாதிகள் என்றால் அச்சமதர்மம் வாழ வேண்டுமா? அவர்கள் கூட்டுறவை ராமசாமியார் லட்சியம் செய்ய வேண்டுமா? என்று கேட்கின்றோம். இந்திய தேசம் இன்று தனி உடமை தேசம். உடமைக்கு இருக்கும் மதிப்பு ஓடிப்போகவில்லை. எந்த விதத்திலோ ஏதோ ஒரு பணக்காரனின் வெளிப்படையான தயவில்லாமல் பெரும்பான்மையான சமதர்மிகள் இன்று வாழ முடியவில்லை. சமதர்மிகளுக்குள் இன்று வரும் சண்டையும் சமதர்மிகள் மற்றவர்களை வையும் காரியமும் பெரிதும் பணம் காரணமாகவே என்பதை உள்ளூர்ந்து பார்த்தால் முதலியார் அவர்கள் நன்றாய் அறியலாம்.
ஆகையால் இன்று சமதர்மத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிவை ஒழிப்பதற்கு ஆகவாவது இன்று ராமசாமி போன்றார் கொஞ்ச நாளைக்கு அந்தப் பேச்சை விட்டு வைத்திருப்பதே மேல். நிற்க,
பொருளாதார விஷயமாய் இல்லாவிட்டாலும், சமுதாயத் துறையில் ஜஸ்டிஸ்கட்சி ஏதாவது சமதர்ம வேலை செய்யவில்லையா என்பதையும், அதுவும் காங்கிரஸ் 50 வருஷமாய் செய்யாத வேலையும் 35 வருஷமாய் நினைக்காத வேலையையும் செய்திருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றோம்.
ஜஸ்டிஸ்கட்சி என்றால் முதலியார் அவர்கள் தோழர் பொப்பிலி ராஜாவையும், முத்தைய செட்டியாரையும், ராஜனையும், உஸ்மானையும் பார்த்து காயக்கூடாது என்பதை முதலியார் உணரும் நாளே ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையையும் அதன் பயனையும் உணரும் நாளாகும்.
அவர்கள் வருவார்கள் போவார்கள், தோல்வி அடைவார்கள் வெற்றி பெறுவார்கள், மறிப்பார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதாவது அக்கொள்கை ஒருநாளும் மறையாது. அதன் அடிப்படை கொள்கை ராமசாமியின் சமதர்மத்தின் முக்கிய பாகமாகும்.
அக்கொள்கையை ராமசாமி ஒரு நாளும் விடமாட்டார். ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ராமசாமி விலகலாம், விலகக்கூடிய காலம் சீக்கிரம் அதுவும் வெகு சீக்கிரம் வரலாம், காங்கிரசில் புகுதலாம். இந்த காரியங்கள்வேறு, ராமசாமியின் கொள்கைவேறு. அதுதான் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தவர்களின் கொள்கை. அதை நடத்துவதே சமுதாய சமதர்மம். அதுவே பொருளாதார சமதர்மம் கொண்டுவந்து விடும். அதற்கு இந்த வாலிபர்கள் அதாவது முதலியார் கருதி இருக்கும் வாலிபர்கள் போதாது.
காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதே சமதர்மத்துக்கு அடையாளம் என்கிறார் முதலியார். இன்னம் யாராவது இப்படிச் சொல்லலாம். குப்புசாமி, உபயதுல்லா, கிருஷ்ணசாமி பாரதி கூட்டம் சொல்லலாம். முதலியார் அவர்கள் இன்னமும் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருப்பது விசனப்படக் கூடியதேயாகும். இனி நாடு பட்டம், பதவி, பணம் முதலியவற்றில் கவனம் செலுத்தாது என்கிறார். இதிலிருந்து முதலியார் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது.
தோழர் சத்தியமூர்த்தியார், டாக்டர் சுப்பராயன், தேவர் ஆகியவர்கள் முழங்காலுக்கு மேல் வேஷ்டி கட்டி ஆரஞ்சிப் பழரசமும் ஆட்டுப் பாலும் குடித்துக்கொண்டு ராட்டினம் சுற்றவா காங்கிரசில் இருக்கிறார்கள்? அல்லது சமதர்மம் கொண்டு வரவா காங்கிரசில் இருக்கிறார்கள்? என்று வணக்கமாய்க் கேட்கிறோம்.
இந்த நாட்டில் பார்ப்பனன் வாழ்வு குலையாமல் பணக்காரன் வாழ்வு குலைவது சுலபமல்ல. பணத்தினாலேயே அதுவும் பணத்தை லக்ஷம் பத்து லக்ஷம் கோடி என்று வசூலித்து கூலி கொடுப்பதாலேயே காங்கிரசு நடக்கிறது என்பதை முதலியார் உணராமல் இருப்பார் என்று எந்த மூடனும் நம்ப மாட்டான். முதலியார் ஒரு சமயம் அறியாமலிருப்பாரானால் பட்டேல் வருகிறார் பத்து லக்ஷம் வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கையைப் பார்க்கட்டும்.
பணம் காரணமாகவே தோழர்கள் குமாரசாமி முதலியார், டாக்டர் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை, ராமலிங்கம் செட்டியார் முதலியவர்கள் காங்கிரசில் இருக்கிறார்களே ஒழிய கொள்கையிலோ ஒழுக்கத்திலோ தேச பக்தியிலோ என்று அவர் உரை எழுதின திருவிளையாடல் புராணத்தின் மீது “ஆணை”யாக சொல்லுவாரா என்று கேட்கிறோம்.
ஆகையால் ராமசாமிக்கு சமதர்மம் தெரியும். எப்போது பிரசாரம் செய்வது, எப்படி செய்வது என்பதும் அவருக்குத் தெரியும்.
முதலியாரே பார்த்து பயந்து, தோழரே நாயக்கரே வேண்டாம், இவ்வளவு வேண்டாம் என்று அன்பால் கெஞ்சி கருணையால் தாடையை பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
சமதர்மத்தின் பிறவி எதிரிகளான பார்ப்பனர்க்கு கையாளாய் கூலியாய் இருந்து சமதர்ம சித்திக்கு அதிக தூரம் ஏற்படுத்துவதை விட கூடியவரை சமீபமாக நிலைமையை நாட்டை மக்களை செய்யலாம் என்பதே இன்றைய ராமசாமி தொண்டு. ஆகவே முதலியார் பொறுத்தருள்வாராக.
குடி அரசு கட்டுரை 22.11.1936