தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?
தோழர் சத்தியமூர்த்திக்கு தலை கிறு கிறுத்து விட்டது. இடுப்பில் வேஷ்டி இருக்கிறதா இல்லையா மகளா மனைவியா என்பவைகளை உணரக் கூடாத அளவு போதை ஏறிவிட்டது. இது தண்ணி போதையா? அல்லது சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் 10, 15 பார்ப்பனர்கள் வெற்றிபெற்று விட்ட ஆணவ போதையா என்பது நமக்கு விளங்கவில்லை. அசம்பிளி தேர்தலில் பல பார்ப்பனர்கள் வெற்றி பெற்றவுடன் இதுபோன்ற போதை வெறி ஒரு 2, 3 மாத காலம் தலைவிரி கோலமாய் பீச்சாண்டி மாதிரி திரியும்படி செய்தது. பிறகு ஜில்லா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் நல்ல பாடம் கற்பித்து வெறியை இறக்கிவிட்டன. இப்போதும் அதுபோலவே தலைகால் தெரியவில்லை. தெரியவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப்போட்டு அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஏமாற்றுவதற்கு ஆக அதிக போதை ஏற்றிக்கொண்டு கண்டபடி உளறுகிறார்.
அவரது ஜாதிப்புத்தி போகவில்லை; போக்கிரித்தனமாக ராக்ஷதன், சூரன், அசுரன் என்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்துக்கூறும் அற்பத்தனம் ஓய்ந்தபாடில்லை. அதாவது இவர் சேலத்தில் 6ந்தேதி ஒரு கூட்டத்தில் பேசும்போது “தென்னாற்காடு கும்பகர்ணனையும் திரு நெல்வேலி ராவணனையும் ஒழித்துவிட்டோம், இனி சேலம் நரகாசூரனை ஒழிக்கப்போகிறோம். ஜஸ்டிஸ் கட்சி தலையில் கல்லைப்போடவேண்டும். அதை ஒழிக்காவிட்டால் நான் உயிர் வாழ மாட்டேன், எனது ஜன்மம் சாபல்யமாகாது” என்று பேசி இருக்கிறார். இந்தமாதிரியாக பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை இழிவு படுத்தும் அயோக்கியத்தனத்தை அடியோடு ஒழிக்கவே ஜஸ்டிஸ்கட்சி போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தின் நடுவில் பதவியோ அதிகாரமோ கிடைத்தால் அதையும் பெற்று இந்த பார்ப்பன அயோக்கியத்தனத்தை ஒழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஆகத்தான் பதவிகளைப் பற்றி கவலை கொள்வதே ஒழிய மற்றபடி மந்திரி பதவியோ அரசாங்க அதிகாரமோ பெறுவதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கக்ஷி இன்று இருந்து வரவில்லை என்பதை யாவரும் அறிவார்கள்.
ஒரு சமயம் அதற்கும் ஆசைப்பட்டது என்று சொல்லுவதானாலும் அதையும் மறுக்க நாம் வரவில்லை. ஆசைப்படுவதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் கெடுதிஎன்ன? தேசத்துக்குத்தான் என்ன கெடுதி? சமூகத்துக்குத்தான் என்ன கெடுதி? பதவிகளையும் அதிகாரங்களையும் ஆசைப்படாமலும் லக்ஷியம் செய்யாமலும் பார்ப்பனரல்லாதார் சமூகம் ஏமாந்த சோணகிரிகளாய் இதுவரை இருந்ததாலேயே மதத்தில் பார்ப்பனன் சங்கராச்சாரியாகி குருவாகி பார்ப்பனரல்லாதார் தோளில் சவாரி செய்வதுபோல் அரசியலில் சத்தியமூர்த்திபோன்றவர்கள் குருவாகி இன்று பார்ப்பனரல்லாதார் தோளிலேயே சவாரி செய்து “திக்கு விஜயம்” செய்கிறேன் என்கிறார்.
செல்லுமிடங்களில் எல்லாம் “ஜஸ்டிஸ்கக்ஷி செத்து விட்டது, நிஜமாகவும் செத்து விட்டது” என்கிறார்.
உடனே அதே நிமிஷத்தில் “ஜஸ்டிஸ்கட்சியை கொல்லாமல், ஒழிக்காமல் இருக்க மாட்டேன்; ஜஸ்டிஸ்கட்சியை ஒழிக்காவிட்டால் நான் செத்துப் போவேன்” “எனது ஜன்மம் சாபல்யமடையாது” என்கிறார். இவருடைய போதைவெறிக்கு இதுவே ஒரு பெரிய உதாரணமாகும். செத்துப்போன ஜஸ்டிஸ்கட்சியை கொல்லுவதற்கு இத்தனை பார்ப்பனர்களும் இத்தனை விபீஷணர்களும் இத்தனை அனுமார்களும் எதற்காக தோழர் சத்தியமூர்த்திக்குத் துணை வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றோம்.
அவர் சொல்லுவதில் ஒரு விஷயம் மாத்திரம் உண்மையும் நிச்சயமுமான காரியமாகும்.
அதென்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சி கொல்லப்படாவிட்டால் சத்தியமூர்த்தியார் சாக வேண்டியதுதான். தோழர் ராஜகோபாலாச்சாரியும் ஸ்ரீனிவாச சாஸ்திரியும் சொல்லுவது போல் ஜஸ்டிஸ் கட்சி ஒழிக்கப்படா விட்டால் அவர்கள் வங்காளக்குடாக் கடலில் விழுந்து சாகவேண்டியதுதான். அதனாலேயேதான் அவர்கள் (பார்ப்பனர்கள்) போராடுகிறார்கள். ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது மந்திரி பதவிக்கும் அதிகாரத்துக்கும் சம்பளத்துக்கு மாத்திரமானால் பார்ப்பனர்கள் சந்தோஷமாக ஒவ்வொரு அதிகாரத்துடனும் ஒவ்வொரு பதவியுடனும் ஒவ்வொரு மங்கைப் பருவமுள்ள பெண்ணையும் வைத்து கன்னிகாதானமாக தாரை வார்த்து கொடுத்து விடுவார்கள்.
அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி “அரசாங்கத்தை தாங்குகின்றதே” என்ற கவலையும் அவர்களுக்கில்லை. ஏனெனில் அரசாங்கத்தை தாங்குவதற்கு எவரும் வேண்டியதில்லை என்பதும் ஜஸ்டிஸ் கட்சி தாங்குவதன் மூலமாகத்தான் அரசாங்கம் நிலைக்கக்கூடிய அவ்வளவு பலமற்ற அரசாங்கமல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதும் சத்தியமூர்த்திகளுக்கும் ராஜகோபால ஆச்சாரிகளுக்கும் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளுக்கும் நன்றாய்த் தெரியும்.
பிரிட்டிஷ் அரசாங்கமானது இன்று இந்த பார்ப்பனர்களையும் மற்றும் இவர்கள் போன்ற எத்தனையோ பேர்களையும் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கூட்டத்தார் அறியாததல்ல. மற்றபடி ஏன் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கவேண்டும் இல்லாவிட்டால் சாகவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால் ஜஸ்டிஸ் கட்சி இந்த பார்ப்பனர்களை சித்திரத்தில் எழுத ஒரு மாதிரி ஆசாமி கூட கிடைப்பதற்கு இடமில்லாமல் போன பின்பு தான் ஓய்வெடுப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. அதனாலேயே பார்ப்பனர்கள் தங்களை ஒழிக்க எண்ணினவர்களையும் தங்கள் பெண்டு பிள்ளைகளை சிறை வைத்தவர்களையும் அழைக்கும் அழைப்பு முறையில் ராக்ஷதன், சூரன் அசுரன் என்கின்ற வாக்கியங்களால் அழைக்கிறார்கள்.
தோழர் சத்தியமூர்த்தியார் ராவணன் என்று நம்மை அழைப்பதில் நமக்கு கோபம் இல்லை; மகிழ்ச்சி தான். ஆனால் ராவணன் பார்ப்பனர்களை கருவறுக்கும் வேலையில் முனைந்திருந்தான் என்பதோடு மாத்திரம் கதை இருந்தால் நாம் அந்தப் பெயரை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம். ஆனால் ராவணன் மீது வேறு ஒருவிதமான பழி சுமத்தப்பட்டிருக்கிறது. அது உண்மையானாலும் பொய்யானாலும் இப்பொழுது பார்ப்பனர்களை கருவறுக்க வேண்டுமென்று எண்ணங் கொள்ளுகிற யாரும் அம்மாதிரி யாருடைய மனைவியையும் கவர்ந்து செல்லவில்லையே? கவர்ந்து செல்லக் கருதவு மில்லையே? இப்படி இருக்கும் போது அப்படிச் சொல்லுவது அயோக்கியத்தனம் அல்லவா என்றுதான் கேட்கின்றோம்.
உதாரணமாக “திருநெல்வேலி ராவணனான” ஈஸ்வரம் பிள்ளை எந்தப் பார்ப்பனன் அல்லது ஆரியர் வீட்டில் ராவணன் வேலை செய்தார்? அதை ருஜுப்பித்தல்லவா பிறகு ஒருவரை ராவணன் என்று அழைக்க வேண்டும்?
பார்ப்பனர்களை கருவறுக்க வேண்டுமென்றால் பார்ப்பனர் என்று பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களே இல்லாமல் போகும்படி செய்வது அல்ல என்பதை நன்றாய் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப்படி செய்ய முடியாது. முடியுமானாலும் அப்படிச் செய்யும் உத்தேசம் ஜஸ்டிஸ் கட்சிக்கு இல்லை. மற்றென்னவென்றால் பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு அடையும் உயர்வையும் அதற்குரிய சின்னங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்பது தான்.
அந்தக்காரியத்தை ஜஸ்டிஸ்கட்சி விட்டுவிடும் என்றோ அப்படிச் செய்வதிலிருந்து ஜஸ்டிஸ்கட்சியை சத்தியமூர்த்திகளாலோ மற்றும் அவர்கள் கூட்டங்களாலோ தடுப்பது என்பதோ ஒருநாளும் முடியாத காரியம் என்பதை நாம் தூக்குமேடையில் இருந்து கூறுவோம்.
மற்றும் ஜஸ்டிஸ்கட்சி செய்யப்போகும் இந்தக் காரியத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. அதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சி பிரிட்டிஷ் அரசாங்கத்தை தாங்கவேண்டிய அவசியமும் இல்லை. இருப்பதாகச் சொல்லப்படுமானாலும் இந்த பார்ப்பனீயமும் ஒழிவதற்கு ஆகத்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கட்டும் என்று சொல்லக் கூடியதாக ஏற்படலாம். இந்த முயற்சிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்ப்பாய் இருந்தால் அது இருப்பதைவிட போவது மேல் என்று குஷாலாய் ஜஸ்டிஸ் கட்சி சொல்லும்.
ஆகவே ஜஸ்டிஸ்கட்சி சாகப்போவதில்லை; மந்திரி பதவி போய் விட்டாலும் கூட அது செத்துப்போகவும் போவதில்லை. இன்னமும் சொல்ல வேண்டுமானால் மந்திரிபதவி இக்கட்சிக்கு விலக்கமுடியாத சனியன் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறதே தவிர விலக்கக் கூடுமானால் ஜஸ்டிஸ் கட்சியின் உண்மைக் கொள்கை முயற்சிக்கு அனுகூலம் என்றே சொல்வோம். ஆனால் சுலபத்தில் ஜஸ்டிஸ் கட்சியை விட்டு மந்திரி பதவிகள் போய்விடும் என்று கருதி விடுவதற்கு ஒரு காரணமும் ஏற்பட்டு விடவில்லை.
அது எப்படி ஆனாலும் இன்று ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் இவ்வளவு கேவலமாகவும் இழி தன்மையாகவும் பேசுவது யோக்கியமா என்றும் இம்மாதிரி “ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, ஜஸ்டிஸ்கட்சியை ஒழிப்பது எனது முதல் வேலை, ஜஸ்டிஸ் கட்சி ஒழியாவிட்டால் செத்துப் போவேன், ஜஸ்டிஸ் கட்சியை விட வெள்ளைக்காரரே மேல்” என்பதாக வெல்லாம் குடிகாரன் வெறிகாரன் மாதிரி யுளரலாமா என்றும்தான் கேட்கின்றோம்.
குடி அரசு தலையங்கம் 15.11.1936