கார்ப்பரேஷன் தேர்தலில்
பார்ப்பனர் வெற்றி
சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல் நடந்து முடிவும் வெளியாகிவிட்டது. காங்கிரசுக்கு 27 ஸ்தானமாம். அப்படியானால் மீதி எல்லாம் ஜஸ்டிஸ்கட்சிக்கே என்று வைத்துக்கொண்டாலும் ஜஸ்டிஸ் கட்சி கார்ப்பரேஷன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸின் வெற்றி உண்மையான வெற்றியா அல்லது மற்ற வெற்றிகளைப் போல் வெறும்கொட்டை எழுத்துச்சேதி வெற்றியா என்பது ஒரு புறமிருந்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல வெற்றி என்பதை யாரும் மறுக்கமுடியாது.
எழவானாலும் கல்யாணமானாலும் புரோகிதனுக்கு பலன் (வரும்படி) ஒரே மாதிரிதான் என்பது போல் பொய் வெற்றியானாலும் மெய் வெற்றி யானாலும் பார்ப்பனர்களுக்கு 11 ஸ்தானம் கிடைத்து விட்டது. ஆதலால் அவர்களுக்கு தேர்தலின் அரசியல் பின் விளைவு எப்படியானாலும் கவலைப்படத்தக்க காரியம் ஒன்றுமில்லை.
பார்ப்பன சமூகம் 100க்கு 3 பேர் வீதம் ஜனத்தொகை கொண்டது. ஆதலால் அவர்கள் 40 ஸ்தானங்களில் 1லீ ஒண்ணரை ஸ்தானத்துக்கே அருகதையுடையவர்கள். ஆனால் காங்கிரசு, தேசீயம், சுயராஜ்யம் என்ற கூப்பாடுகளின் பயனாய் 11 ஸ்தானங்களுக்கு குறையாமல் பெற்றுவிட்டார்கள். இந்த எண்ணிக்கை 100க்கு 25 வீதத்துக்குமேல் ஆகின்றது. இனி நடக்கப்போகும் ஆல்டர் மென் தேர்தலிலும் 5க்கு 3 வந்தே தீருவார்கள். எனவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரஸ், தேசியம், சுயராஜ்யம் என்று கத்துகிறார்கள் என்றால் பலனில்லாமல் வீணாகக் கத்தவில்லை. நல்ல அதுவும் அவர்களுடைய சமூக லாபத்தையே எதிர்பார்த்துத் தான் கத்துகிறார்கள் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
ஆகையால் அவர்களை நாம் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனரல்லாதார் அவர்களுடன் சேர்ந்துபின் தாளம் போடு கின்றார்களே அந்த முட்டாள்தனத்தைப் பார்த்துதான் நாம் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். பார்ப்பனரல்லாதார்களில் பார்ப்பனர்களுக்கு ஓட்டுச் செய்பவர்கள் ஒரு சமயம் மூடர்களாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்கள் வெற்றிபெற பிரசாரம் செய்தவர்களிலும் பத்திரிகையில் எழுதினவர்களிலும் பார்ப்பனரல்லாதாராக இருந்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.
அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனக் கூலிகளாகவும் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்த்துத் தீரவேண்டிய ஈன நிலையில் இருந்தவர்களாகவும்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய மூடர்கள் அல்ல. மற்றபடி இவர்கள் கூலிகள் அல்லாமல் சுதந்திரவாதிகளாகவோ உண்மையான தேசீய வாதிகளாகவே இருந்திருப்பார்களேயானால் தேர்தலுக்கு அபேட்சகர்களை தெரிந்தெடுத்து ஆட்களை நிறுத்தும்போதே இவர்கள் “ஏன் இத்தனை பார்ப்பனரல்லாதாரைப் போடவில்லை?” என்றோ, “ஏன் இத்தனை பார்ப்பனர்களைப் போடுகிறீர்கள்?” என்றோ ஏன் கேட்டிருக்கக் கூடாது?
இந்த பிரசாரப் பார்ப்பனரல்லாதாருக்கும் பத்திரிகைப் பார்ப்பன ரல்லாதாருக்கும் பார்ப்பனர்பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி என்பதே இல்லாத அவ்வளவு பெரிய “தேசீயவாதிகள்” என்று யாராவது சொல்ல முடியுமா? அவரவர்கள் இஷ்டம் போல் ஏதாவது ஒரு காரியம் ஆகாத காலங்களில் அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஸ்தானங்கள் மரியாதைகள் கிடையாமல் போன காலங்களில் இவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி கொண்டும் உணர்ச்சியைக் கிளப்பி விட்டும் எழுதி கிளர்ச்சி செய்யவில்லையா? என்று கேட்கின்றோம்.
ஆகவே கூழுக்கு கவி பாடுகிற முறையில் தங்கள் சமூக உணர்ச்சியை விற்று இருக்கிறார்கள் என்பதல்லாமல் வேறு தகுந்த பார்ப்பனரல்லாதார் கிடைக்கவில்லை என்கின்ற காரணமா என்று வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
இதைப்பற்றி நாம் அதிகமாக கவலைப்பட இடமில்லை.
ஏனெனில் நம் நாட்டின் வாழ்க்கை நிலை இவ்வளவு தூரம் எட்டிவிட்டது. வாழ்க்கையின் சூத்திரக்கயிறு பார்ப்பனர்களிடம் சிக்கிவிட்டது.
ஆனால் இவற்றை உணர்ந்த சென்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களில் சிலரின் யோக்கியதை இதைவிட மோசமாய் இருந்ததே இந்தத் தேர்தலின் முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
சென்னை ஜஸ்டிஸ் கட்சித் தோழர்களுக்கு சகல உத்தியோகமும் வேண்டும், கட்சிக்காக பொதுவில் ஒரு காசும் செலவழிக்க மாட்டார்கள். அவ்வளவோடு அல்லாமல் முதல்தர கோழைகளாகவும் இருப்பார்கள். பிரசாரம் செய்வது என்றால் அவர்களுக்கு வேப்பங்காயைப்போல் தோன்றும். காந்தியைப்பற்றியோ காங்கிரசைப்பற்றியோ வேறு யாராவது குறைகூறிப் பேசினாலும் தங்களுக்கு ஓட்டு கிடைக்கமாட்டாதே, “பாவம்” வந்துவிடுமே என்று பயப்படும் வீரர்கள். இப்படிப்பட்ட கட்சி “பிரமுகர்கள்” வெற்றி பெறுவது என்றால் வெற்றி பெற்றால்தான் ஆச்சரியப்படவேண்டி யிருக்குமே ஒழிய தோல்வி பெறுவதில் ஆச்சரியமிருக்க இடமேது என்று கேட்கின்றோம்.
தமிழ்நாடு மத்திய பிரசாரக் கமிட்டியார் எவ்வளவோ அசௌகரியத்துடன் ஊர் ஊராய்ச் சுற்றி பிரசாரம் செய்துவிட்டு சென்னை நகர பிரசாரத்துக்கு வந்திருந்த காலத்தில் அவர்களை ஏன் என்று கேட்க சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் 500, 1000, 5000 சம்பளம் பெற்ற, பெற்று வருகிற “தியாகிகள்” ஒருவராவது தங்கள் தலையைக் காட்டிக் கொள்ளக் கூட இஷ்டப்படவில்லை. சென்னை பொது பாமர மக்களுக்கிருந்த கவலையும் ஆத்திரமும் இந்த பிரமுகர்களுக்கு சிறிது கூட இல்லாமல் போய்விட்டது.
இதை நாம் எழுதுவது பிரசாரக்கமிட்டியை மரியாதை செய்யவில்லை என்பதற்கு ஆக அல்ல. ஆனால் பிரசாரத்தில் சென்னை ஜஸ்டிஸ் பிரமுகர்களுக்கு அதாவது சட்ட சபை மெம்பராகவும் கார்ப்பரேஷன் மெம்பராகவும் மந்திரிகள் காரியதரிசிகள் ஆகவும் இருந்து பயன் அனுபவித்தும் அனுபவிக்கவேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டும் இருக்கும் பெரியார்களின் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் இப்படிப்பட்டவர்கள் எப்படி வெற்றி பெறக் கூடும் என்பதையும் இவர்கள் சம்மந்தம் வைத்துக் கொண்டு இருக்கும்கட்சி எப்படி உறுப்படி ஆகும் என்பதையும் பொது ஜனங்கள் அறியும் பொருட்டே எழுதுகிறோம். கட்சி தலைவர் மீது குற்றம் இல்லை தான். அவர் எலக்ஷன் செலவுக்கும் சுமார் (10000) பத்து ஆயிரம் ரூபாய்வரை செலவுக்கு கொடுத்தும் இருக்கலாம். ஆனால் எலக்ஷன் சமயத்தில் பணத்தை செலவு செய்து கொண்டு ஏதோ 2, 4 கூட்டம் போட்டு பேசுவதால் பணத்துக்கு கணக்கு காட்டுவதால் எலக்ஷன் காரியம் நடந்து விடுமா என்று கேட்கின்றோம். வீடு நெருப்புப் பிடித்துக்கொண்டு எரியும் போது கிணறு வெட்ட ஆரம்பித்தால் என்ன பயன் ஏற்படுமோ அதுபோல் தான் எலக்ஷன்போது பிரசாரம் செய்ய ஆரம்பிக்கும் காரியமாகும். சட்டசபை எலக்ஷன் தினத்து அன்றுதான் தினசரியும் வெளிவரலாம் போல் இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்று உள்ள பலம், செல்வாக்கு, அதன் பலன் அறியும் தன்மையுள்ள மக்கள் முதலியவை எல்லாம் சென்னை தவிர மற்ற வெளியிடங்களில் உள்ள நிலையை அனுசரித்துத்தானே ஒழிய மற்றப்படி சென்னையைப் பொறுத்த வரை அங்குள்ள ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் பார்ப்பனர்களை யோக்கியர்களாக்கிவிடக் கூடியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் சகலத்தையும் விற்று தங்கள் ஜாதிக்குப் பாடுபடுகிறார்கள் என்றால் சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் பலர் சகலத்தையும் விற்று தங்கள் குடும்பங்களுக்கு மாத்திரம் பாடுபடுபவர்கள் என்று சொல்ல வெட்கப்படுகிறோம்.
இவைகளையெல்லாம் யோசிக்கும்போது சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தது என்கின்ற முடிவு அனுபவத்தில் உண்மையாய் இருக்குமானால் நாம் சந்தோஷப்பட வேண்டியதே தவிர துக்கப்பட இடமில்லை. ஏனெனில் சென்னைத் தோழர்களுக்கு சட்டசபை தேர்தலுக்காவது இது ஒரு நல்ல பாடம் ஆகலாம் என்கிற ஆசை காரணமாகவேதான்.
குடி அரசு துணைத் தலையங்கம் 01.11.1936