பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்

அன்புள்ள தோழர்களே!

பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்கும் அதன் கொள்கைக்கும் நாட்டில் நல்ல ஆதரவும் செல்வாக்கும் இருப்பது தாங்கள் அறியாததல்ல.

ஆனால் அதற்கு கவலையும், நாணயமும், திறமையும் கொண்ட தலைவர்கள் இல்லை என்று சொன்னால் அதை அடியோடு நீங்கள் ஆக்ஷேபிக்க மாட்டீர்கள். இன்று அக்கக்ஷிக்கு தலைவர்களும், பாதுகாப் பாளர்களும் மந்திரிமார்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே கருதும்படி ஆகி விட்டது.

அக்கக்ஷியின் பேரில் இன்று சொல்லப்படும் தவறுதல்களுக்கும், பழிகளுக்கும் காரணம் போதிய பிரசாரமின்மையும் அதன் தலைவர்கள் என்போர்களுக்குள் இருந்து வரும் அசிரத்தையின் பயனுமேயாகும்.

மற்றும் அக்கக்ஷிக்குத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டு வருவதாய் கருதவேண்டி இருப்பதும், சொல்லப்பட்டு வருவதும், தலைவர்களாய் இருப்பவர்கள் என்பவர்களுள் இருக்கும் கட்டுப்பாடற்ற தன்மையும், ஒற்றுமை இன்மையும், அவநம்பிக்கையும், கவலையற்ற தன்மையும், சுயநல உணர்ச்சியும் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறதே தவிர மற்றபடி பொது ஜன ஆதரவில்லாததால் தோல்வி ஏற்பட்டது என்று சொல்லிவிடும்படியாக இல்லை.

என்றாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் உண்மையான பற்றுதலும் கவலையும் கொண்டு உழைத்துவந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒவ்வொருவராய் இக்கட்சியில் இருந்து விலகி நிற்பதும், எதிர்க்கட்சியாகிய காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதுமாய் இருந்து வருகிறார்கள்.

இன்னும் பலர் ஒவ்வொருவராய் காங்கிரசில் சேர ஏற்பாடுகள் செய்துகொண்டு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வியக்கத்துக்காக உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் செய்தும் செய்யத் துணிந்தும் உழைத்து வந்த ஆங்காங்குள்ள வாலிப தோழர்களின் மனம் உடைந்து சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு அவர்களது ஆதரவுகளும் குறைந்து வருகின்றன.

இந்தநிலை இப்படியே இருந்துவரும்படி அனுமதிப்பது அறிவுடமை ஆகாது.

ஆதலால் இதுவிஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் அதாவது அக்கக்ஷியில் உண்மையான பற்றுதலும், அபிமானமும், தீவிர கவலையும் உள்ளவர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதாவது ஒருவகை செய்து தக்கமுறையில் திருத்தி அமைத்துக் கட்டுப்பாடுடன் தீவிரமான பிரசாரம் செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்.

எனவே இவ்விஷயங்களைப்பற்றி அக்கரையுள்ள எல்லா தோழர்களும் திருச்சியிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு கூட்டம் கூடி யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து பயன்தரத்தக்க மார்க்கம் கண்டு வேண்டுவன செய்ய வேண்டும் என்று கருதி இவ்வேண்டுகோளை தங்களுக்கு அனுப்பியிருக்கிறோம்.

அதாவது: கக்ஷியையே பிரதானமாய் கருதிய மக்களில் “நாங்கள் எந்த தேர்தலுக்கும் எந்த பதவிக்கும் நிற்பதுமில்லை” ஆசைப்படுவது மில்லை என்கின்ற உறுதியுள்ளவர்கள் ஒன்று சேர வேண்டும்.

அவர்கள் இப்போதே எந்தப் பதவியில் இருந்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படி ராஜினாமா செய்தவர்களும் வேறு பதவி எதுவும் வகிக்க இஷ்டப்படாதவர்களுமானவர்களே தலைமை வகித்து நடத்தத்தக்க வண்ணம் ஒரு சாரணர் படை திரட்டவேண்டும்.

ஓரளவு நிதி திரட்டி பிரசாரம் வகுக்க வேண்டும்.

இவ்வளவுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும்.

“உலகம் உயர்ந்தோர் மாட்டு” என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல். உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல்.

இதற்கு ஆவன செய்யவும் இதைப்பற்றி பல தோழர்களது அபிப்பிராயம் அறியவும் சமீபத்தில் ஒரு கூட்டம் கூட்டவோ அல்லது சிலர் சுற்றுப் பிரயாணம் செய்யவோ அவசியமென்று கருதுகிறோம்.

ஏனெனில் பல வழிகளிலும் தலைவர்கள் என்பவர்களால் தக்கபடியான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கருதி ஏமாற்றமடையும் படியான நிலைமையே ஏற்பட்டு வருவதால் இம்மாதிரியான ஒரு காரியம் அவசியம் என்று படுகின்றது.

தங்கள் ஆதரவான பதில் கிடைத்த பின் இடம் காலம் முதலியவைகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தயவு செய்து உடனே 30ந் தேதிக்குள்ளாகவே தங்கள் பதிலை அனுப்பக் கோருகிறோம்.

தங்களன்புள்ள:

  1. P. A சௌந்திரபாண்டியன்,

ஈ.வெ. ராமசாமி.

ஈரோடு

25.1.36

குடி அரசு அறிக்கை 26.01.1936

You may also like...