“ஹரிஜன” மந்திரிக்கும்  மேயருக்கும் சவால்

மராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப்படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் “ஹரிஜனங்”களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் மட்டும் மெளனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கரஸ் பத்திரிகையும் இந்த அக்கிரமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை.

காங்கரஸ் பேரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக்கும் “ஹரிஜன” மெம்பர்களோ, “ஹரிஜன” மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரியவில்லை. “ஹரிஜன” மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் “ஹரிஜன” மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம்பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை “ஹரிஜன” மந்திரியுடையவும் “ஹரிஜன” மேயருடையவும் சமூகத்துக்கில்லையா?” தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா? சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போதுமென்பதே அவர்களது கருத்தா? பார்ப்பனக் கூத்துக்குத் தாளம் போடுவதற்குக் கைக் கூலியாகத்தான் “ஹரிஜன” மந்திரிக்கும் “ஹரிஜன” மேயருக்கும் சமபந்தி போஜன மரியாதை காட்டப்படுகிறதா?

தென் தஞ்சை காங்கரஸ் மகாநாட்டு அநீதி ஆதிதிராவிட சமூக முழுமைக்கும் மனக் கொதிப்பை யுண்டு பண்ணியிருக்கும் போது கனம் முனுசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் சும்மாயிருப்பது சரியே அல்ல. இந்த மானக் கேட்டுக்கு பரிகாரம் தேட அவர்களால் முடியாவிட்டால் அவர்களது பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டியதே நியாயம். கனம் முனிசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் என்ன செய்யப் போகிறார்கள்?

– விடுதலை

குடி அரசு – கட்டுரை – 16.01.1938

You may also like...