நீடாமங்கலத்தில் நடந்ததென்ன? “தினமணி”யில் வந்த மனமறிந்த வஞ்சகப் பித்தலாட்டப் புரட்டு
நீடாமங்கலம் அரசியல் மகாநாட்டில் ஆதிதிராவிடர்கள் பலர் தேசபக்தர்களின் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணித்தீர்த்தம் கொடுத்து அபிஷேகம் செய்த விஷயத்தை முன் தெரிவித்திருக்கிறோம்.
அதற்கு 15 நாள் பொறுத்து ஒரு பொய் அறிக்கை தயாரித்து உதைபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஒருவரிடமும் மற்ற சம்பந்தமில்லாத இருவரிடமும் பொய் சொல்லி மிரட்டி பணம் கொடுத்து உட்கார வைத்து போட்டோ எடுத்து வெறும் காகிதத்தில் கையெழுத்து வாங்கி தங்கள் இஷ்டப்படி எழுதிக்கொண்டதை “தினமணி” பிளாக் செய்து அச்சேதியையும் படத்தையும் “சுயமரியாதைக் காரர்களின் புளுகு” என்று தலைப்பிட்டு “தினமணி” பிரசுரித்திருக்கிறது.
அதில் ஒரு விசேஷமென்னவென்றால் காங்கரஸ்காரர்களால் மொட்டை அடிக்கப்பட்டு சாணி அபிஷேகம் செய்யப்பட்ட தோழர் தேவசகாயம் என்பவரை மொட்டைத்தலையுடன் அதாவது காங்கரஸ் பக்தர்களான மிராசுதார், பெரிய ஜாதிக்காரர் ஆகியவர்கள் அடித்த மொட்டைத் தலையுடனேயே போட்டோ எடுத்து இருப்பது விளங்குகிறது.
இந்தப்படத்தையும் சேதியையும் கண்டவுடன் அதே தோழர் தேவசகாயம் என்பவர் நமக்கு தனது போட்டோவையும் தன்னிடம் காங்கரஸ் மிராசுதார் பண்ணையவர்கள் எப்படி நடந்து தனது போட்டோ எடுத்துக்கொண்டதுடன் எப்படி வெறுங் காகிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள் என்பதையும் விளக்கி ஒரு விண்ணப்பத்தை ஆதிதிராவிட மந்திரி கனம் முனிசாமிக்கும் ஆ.தி.மேயர் தோழர் சிவஷண்முகத்துக்கும் அனுப்பிய நகல் நமக்கு கிடைத்திருக்கிறது.
இச்சேதி விவரங்களை வாசகர்களுக்கு விருந்தாக நாளைப் பிரசுரிப்போம்.
அந்த அறிக்கையில் மிராசுதார்கள் அடிக்கும்போது போலீசார் தலையிட்டு தடுத்ததையும், அடி தாங்கமாட்டாமல் எச்சில் கையுடன் ஆற்றில் விழுந்து ஓடினதையும், மறு நாள் பிடித்து வந்தவர் பெயரையும் , கட்டி வைத்து அடித்ததையும், அடித்தவர் பெயரையும் தலை மொட்டையடித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் பல ருசிகரமான சேதியும் வரும்.
குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 30.01.1938