திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்

 

திருவாங்கூரில் ஸர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன.

~subhead

சர்வம் பார்ப்பனமயம்

~shend

இந்நிலைமையில் திருவாங்கூர் பிரஜைகள் வதைக்கப்படுகிறது ஒருபுறம் இருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம் மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற்கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக்கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப்படுகிறது. மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனுபவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ய பாரத்தை தனக்கு வாங்கிக் கொடுத்தவர் ஸர்.சி.பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஸர்.சி.பி. திருவாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.

~subhead

வர்த்தகத் துறையிலும் பூணூல்

~shend

அதாவது 5 லட்ச ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத்திய ரப்பர் தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்.

மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனியை ஒரு ஐரோப்பிய கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து பஸ் சர்வீசை சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிர்வாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லக்ஷ ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கி கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். ஸர்.ஸி.பி. மகன் சம்மந்தப்பட்ட கம்பெனிகளுக்கு பெரிய கண்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

~subhead

உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள்

~shend

உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூ. சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூ சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர், இவர் மெட்ரிகுலேஷன் பரீøை கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45 -க்கு மேலான பிறகு உத்தியோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்மந்தமுள்ளவர். இவருக்கு சம்பளம் ரூ.1500. இரண்டு சட்ட கலாசாலை பிரின்சிபால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள். சர்க்கார், பொட்டகிராபர் கூட பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூ சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வொகேட் ஜனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும், புரோசேன்ஸல்லர், வைஸ்சேன்ஸலர் என்றும், லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 ரூ சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவாங்கூர் பொக்கிஷம் காலியாகி கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூ. கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.

~subhead

சென்னை மாதிரி திருவிதாங்கூரும்

~shend

சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வருஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருஷம் காங்கரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல், ஸர்.சி.பி. திவானாவதற்கு முன் தங்கப்பாளங்களும், வைரம், சிவப்பு, பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக்கிஷம் அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் லீ கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு 3லீ கோடி வருஷ வருமானமுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவாங்கூர் பிரஜைகளான, வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லண்ாத மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து ஆத்திரப்பட்டு, மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது ஸர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும்.

தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந்தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.

~subhead

நாராயணபிள்ளை கதி

~shend

இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட்டு வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் என்பதற்காக அவர் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையைவிட குற்றவாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும் நீதி வழங்கப்பட்ட முறையும் தான் நாம் மிகுதியும் கவனிக்கத்தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து, ஊன்றி கவனித்தால் திருவாங்கூரில் இன்று நீதி, நிர்வாக ஆட்சி நடக்கின்றதா அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கின்றதா என்று சந்தேகம் கொள்ள வேண்டி இருக்கும்.

~subhead

எதிரி பட்ட கஷ்டங்கள்

~shend

ஏனெனில் தோழர் நாராயணபிள்ளை குற்றம் சாட்டப்பட்டவுடன் ரிமாண்ட் செய்யப்பட்டார். இது விஷயத்தில் பொதுக் கூட்டங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க கூட்டம் கூட்டப்படாது என்று தடைப்படுத்தப்பட்டு விட்டது. தோழர் நாராயணபிள்ளைக்கு கீழ்க் கோர்ட்டில் கிடைத்த ஜாமீன் உத்தரவு மேல்கோர்ட்டில் சர்க்கார் கட்சி அப்பீலின்மீது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தக்க வக்கீல் வைத்து வாதாட பொது ஜன ஆதரவுக்கு தடை செய்யப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தில் உள்ள திறமையுடைய வக்கீல்கள் நாராயணபிள்ளைக்காக ஆஜராகி கேசை நடத்த பயப்பட்டு விட்டார்கள். எதிரிக்காக கேசை நடத்த வெளி மாகாணத்தில் இருந்து தோழர் நாரிமன் வரவழைக்கப்பட்டார். அவர் ஆஜராகக் கூடாதென்று தடுத்ததுடன் அவர் திருவாங்கூரில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடைப்படுத்தப்பட்டு வந்த வழியே திருப்பி அனுப்பப் பட்டுவிட்டார். இந்தக் காரணங்களால் எதிரி நிர்க்கதியாகி விசாரணையில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சர்க்காருக்கு செளகரியமாகப் போய்விட்டது போலும். தோழர் நாராயணபிள்ளைக்கு ஒன்றரை வருஷம் வெறுங் காவலும் 200 ரூ அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

~subhead

டொக்லக் ஆட்சி

~shend

ஆகவே இன்று திருவாங்கூர் ராஜ்யம், செல்வம், நிர்வாகம், அதிகாரம், நீதி முதலியவைகளில் பழங்கால காட்டுராஜா ஆட்சி என்றும், நவாப் தர்பார் என்றும், அதிலும் மகமத் டொக்லக் ஆட்சி என்றும் சொல்லப்படும் ஆட்சி போல் நடக்கின்றது என்பதோடு வரவுக்கு மிஞ்சின செலவும், பொக்கிஷம் காலியும் ஏற்படுகிற நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்.

~subhead

பூணூல் மகிமை

~shend

இவை தவிர இனியும் எவ்வளவோ ஆபாசங்கள் நடப்பதாயும் கூறப்படுகின்றன. இவ்வளவு சங்கதிகளும் இன்று பொது ஜனங்களுக்கு புலப்படாமல் இருக்கவும், மேலும் மேலும் ஸர். சி.பி. அய்யருக்கு தைரியம் ஏற்படவும் காரணமாய் இருப்பது பூணூலே ஆகும். அதாவது திவான் ஒரு பார்ப்பனராய் இருப்பதேயாகும். கொச்சி திவான் தோழர் ஸர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி சென்றவுடன் “கொச்சியில் திவான் வேலை பார்க்க கொச்சியில் ஒரு ஆள் கிடைக்கவில்லையா?” என்ற எடுப்பை பல்லவியாக வைத்து ஒரு வருஷகாலம் அவருக்கு சென்னை பார்ப்பன பத்திரிகைகள் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கொச்சிக்குச் சென்று அங்குள்ள காலாடிகளைப் பிடித்து கலகத்தை மூட்டி தொல்லை கொடுத்தார்கள்.

~subhead

ஆர். கே. கொச்சிக்குச் செய்த நன்மைகள்

~shend

இவ்வளவையும் சமாளித்து தோழர் ஷண்முகம் கொச்சி சமஸ்தானத்துக்கு வருஷத்துக்கு பத்து லக்ஷக்கணக்கான ரூபாய் வரும்படி கிடைக்கும்படியான கொச்சித் துறைமுக திட்டத்தை ஏற்படுத்தி மகாராஜாவுடையவும் பிரஜைகளினுடையவும் ஆதரவையும், அன்பையும் பெற்று இந்திய சமஸ்தானங்களில் வேறு எங்குமில்லாத முறையில் பிரஜைகளுக்கு முதல்படியாக பொறுப்பாட்சியும் வழங்கினார். இதைக் கண்டாவது பார்ப்பனப் பத்திரிகைகள் புகழாவிட்டாலும் சும்மாவாவது இருக்காமல் இதென்ன கண்ணைத் துடைக்கிற வித்தை என்றும், இதில் என்ன பிரயோஜனம் என்றும், அயோக்கியத்தனமாகவும் அற்பத்தனமாகவும் எழுதிப் பரிகாசம் செய்தன.

~subhead

ஸி.பி. சமாதானம்

~shend

இதையாவது ஏன் திருவாங்கூர் ஸர். சி.பி.யும் பரோடா திவான் ஸர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரியும், காஷ்மீர் திவான் திவான்பகதூர் என். கோபாலசாமி அய்யங்காரும் ஆகிய பார்ப்பனர்கள் செய்யவில்லையே என்று பொது ஜனங்கள் கேட்க ஆரம்பித்தபோது “சுதேச சமஸ்தானங்களுக்கு சீர்திருத்தம் வழங்க பிரிட்டிஷ் சர்க்கார் சம்மதிக்க மாட்டார்கள்” என்று ஒரு பொறுப்பற்ற யோக்கியமற்ற சமாதானத்தை ஸர்.சி.பி. சொன்னார்.

~subhead

பிரிட்டிஷார் பதில்

~shend

பிரிட்டிஷார் இதைக்கேட்டு நகைத்துவிட்டு, நாங்கள் தடையாயில்லை. எவ்வளவு சீர்திருத்தம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இதன் மேலாவது சர்.சி.பி. வாயை மூடிக்கொண்டிருக்காமல் அதைவிட போக்கிரித்தனமானதும் யோக்கியப் பொறுப்பற்றதுமான பதில் சொன்னார். என்னவென்றால் கொச்சி முதலிய சாதாரண சமஸ்தானங்கள் தவிர “தர்மராஜ்யமான திருவாங்கூருக்கு சீர்திருத்தம் வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு சொன்ன எட்டு நாளிலேயே இந்த திருக்கூத்தை நடத்தி இருக்கிறார்.

~subhead

நாணயமற்ற சாக்குப் போக்கு

~shend

தவிரவும் திருவாங்கூர் பார்ப்பனரல்லாதார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டதிலும் இது மாதிரியே நாணையமற்ற சாக்கு போக்கு சொல்லி அடக்கிவிட்டு, பெரிய உத்தியோகங்களை பார்ப்பனர்களுக்கே ஏராளமாக கொடுத்து வருவதோடு பொக்கிஷம் பாப்பராகும்படி புது உத்தியோகங்களையும் சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்போகிறார். ஸர். ஷண்முகம் அவர்கள் தனது திவான் ஆதிக்கத்தில் 2-வருஷத்துக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கே 100க்கு கிட்டத்தட்ட 40 உத்தியோகங்கள் போல் கிடைக்கும்படி செய்து விட்டார்.

~subhead

ஆர்.கே.யும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

~shend

ஆகவே தோழர் ஷண்முகம் அவர்கள் துறைமுக வரும்படியில் பொக்கிஷத்தை நிரப்பினார். அரசியல் சுதந்திரத்தால் பொறுப்பாட்சி அளித்தார். வகுப்புவாரி உத்தரவால் சமுதாயத்தை மேன்மைப்படுத்தினார். அதாவது ஸர். ஷண்முகம் ஆட்சியானது அரசியல் சமுதாய இயல் பொருளாதார இயல் ஆகிய மூன்று துறையையும் இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லாத அளவுக்கு மேன்மைப் படுத்தியும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால், அவரை பார்ப்பனர்களும் பத்திரிகைகளும் வைகின்றன, குறை கூறுகின்றன. “பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட்டார்?” என்று போக்கிரித்தனமாய் எழுதி விஷமப் பிரசாரம் செய்கின்றன.

~subhead

ஹிட்லர் சி.பி.க்கு புகழ்மாலை

~shend

ஆனால் திருவாங்கூரில் இவ்வளவு திருக்கூத்தும் இன்னும் எழுத முடியாத பல திருக்கூத்தும் நடத்தி டயராட்சி நடத்தும் ஸர்.சி.பி. ராமசாமி அய்யர் பார்ப்பனராய் இருப்பதால் சென்னை மாகாண முதன் மந்திரி தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் பூமாலை போட்டு புகழ்கிறார். காந்தியாரைக் கொண்டும் புகழச் சொல்லுகிறார். திருவாங்கூர் மகாராஜா ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை அளித்ததற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஸர்.சி.பி.யை பார்ப்பனர்கள் புகழ அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டாலும் அதுவும் இன்று ஒரு வேஷமாகவும், நாடகமாகவும் தான் முடிந்துவிட்டது. அதாவது திருவாங்கூர் சமஸ்தான கோவில்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலாக செய்யப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது. இவை எப்படியோ இருக்கட்டும். ஆனால் நமது நாட்டில் பார்ப்பனர்கள் பார்ப்பன அரசியல் பார்ப்பனப் பத்திரிகைகள் முதலியவைகளின் ஆட்சி ஆதிக்கம் எவ்வளவில் இருக்கிறது என்பதை விளக்கவே இதை எழுதுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 10.04.1938

You may also like...