ஆச்சாரியாரும் கதரும் – கதர் கட்டி அலுத்தவன்

 

தோழர் கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை பட்ஜட் விவாதத்தின்போது கதர் சம்மந்தமாய் எழுந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கையில் ” எனக்கு அதிகாரமிருந்தால் கதர் கட்டாததற்கு ஆக சர்க்கார் தொழில் இலாக்கா டைரக்டரை டிஸ்மிஸ் செய்து விடுவேன்” என்று பேசியிருக்கிறார். இது தினசரி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதுவரை அந்த சேதிக்கு எவ்வித மறுப்பும் வரவில்லை. ஆனதால் கனம் ஆச்சாரியார் அந்தப்படி பேசியிருக்கிறார் என்பது உண்மையேயாகும்.

இதிலிருந்து காங்கரஸ்காரர்கள் உத்தியோகம் பார்ப்பதின் கருத்தும் அவர்களது நிர்வாக யோக்கியதையும் எப்படிப்பட்டது. என்பது நன்றாய் விளங்கும்.

அது ஒரு புறமிருக்க அரசாங்க சிப்பந்திகள் கனம் ஆச்சாரியார் பேச்சிலிருந்து என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்போம். கதர்கட்டாத ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய அளவுக்கு அயோக்கியராக பாவிக்கப்படவேண்டியவராகிறார். கனம் ஆச்சாரியாரால் அதிகாரமில்லாத காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட முடியாத உத்தியோகஸ்தர்கள் போக மற்றபடி டிஸ்மிஸ் செய்யவோ அல்லது வேறுவிதமாய் தொலைக்கவோ தொல்லை கொடுக்கவோ செய்யப்படக்கூடிய உத்தியோகஸ்தர்கள் கதி அதோகதி தான் என்பது பளிங்குபோல் விளங்குகிறது.

சர்க்கார் சிப்பந்திகள் கடமை

பொது ஜனங்கள் வரிப்பணத்தில் பொது ஜனத்தொண்டு செய்வதற்காக நியமனம் பெற்ற சிப்பந்திகள் கதர் கட்டாததற்கு ஆக டிஸ்மிஸ் செய்யப்படுவது என்றால் காங்கரஸ் ஆட்சியின் – நீதியின் யோக்கியதையை என்னவென்று சொல்லுவது! சர்க்கார் அதிகாரிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் சில குறிப்பிட்ட கடமை உண்டு. அக்கடமைகளில் அவர்கள் சரியாய் நடந்துகொள்கிறார்களா என்பதே நிர்வாகப் பொறுப்புடையவர்கள் கவனிக்க வேண்டிய கடமையாகும். கதர் ஒரு கட்சியாருடைய திட்டம். அது மூவர்ணக்கொடி போல் அக்கட்சிக்கு உரிய அடையாளமாகவுமிருக்கலாம். ஆனால் அதை அந்தக்கட்சி அங்கத்தினரல்லாதார் மீது திணிப்பது என்பது எப்படி நீதியாகும்; மூவர்ணக் கொடி தேசியக்கொடி அல்ல என்று சொல்ல எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ-அதை தேசியக்கொடி என்று ஏற்றுக்கொள்ளாமல் இருக்க எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ அப்படிப்போலவே கதரை ஒரு தேசாபிமானக் குறி அல்லவென்றும் அது ஒரு நீதிக்குறியோ அல்லது ராஜாங்க பக்தி குறியோ அல்லவென்றும் சொல்ல எந்த யோக்கியமான சுயமரியாதை உள்ள அதிகாரிக்கும் சிப்பந்திகளுக்கும் உரிமை உண்டு. அதை மறுத்து கனம் ஆச்சாரியார் கதர் கட்டாதவர் டிஸ்மிஸ் செய்யத்தக்கவர் என்று சொல்வதில் உண்மையிலேயே ஆச்சாரியாருக்கு கதர் அவ்வளவு பிரதானமானதும் அவசியப்படுத்தத் தக்கதுமான காரியம் என்று கருதுவாரானால் கதர் தவிர வேறு துணி நெய்யக்கூடாது என்று சட்டமூலம் தடுத்திருக்கலாம். கதரைத் தவிர வேறு துணி விற்பனை இல்லாமல் தடுத்திருக்கலாம். அப்படியெல்லாம் செய்யாமல் கதர் கட்டாதவனை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சொல்வதானால் யோக்கியனுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் இடமில்லை என்று தானே அர்த்தமாகிறது.

ஆகவே காங்கரஸ் ராஜியத்தில் உத்தியோகங்களில் நேர்மையும் பந்தோபஸ்தும் இல்லாமல் போய் விட்டது என்பதே நமது முடிவு.

~subhead

கதர்க் கதை

~shend

அடுத்தாப்போல் கதரைப்பற்றி சற்று யோசிப்போம். கதர் தோழர் காந்தியாரால் உபதேசிக்கப்பட்டதாகும். இந்த உணர்ச்சி காந்தியாருக்கு வரக் காரணம் என்னவெனில் வங்காள சுதேசிக் கிளர்ச்சி-பாய்க்காட் கிளர்ச்சி ஆகியவைகளைப் பார்த்து அவற்றிற்கு சிறிது முற்போக்கு கொடுத்து மக்களுக்கு பழமையில் உணர்ச்சி ஏற்படுவதற்கு ஆக தனது சொந்த புதிய கண்டுபிடிப்பு போல் வெளியிடப்பட்டதாகும்.

அந்தக்காலத்தில் திலகருக்கு சுதேசி உணர்ச்சி இருந்தது. அவர் பாய்காட்டை உபதேசித்து வந்தார். அதை பீட் செய்வதற்கு அதைவிட சுதேசீயம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமும் காந்தியாருக்கு இருந்தது.

ஆனால் சுதேசியப் பொருள் பிரசாரம் என்பது இங்கிலீஷ் பொருள் பாய்க்காட் (பஹிஷ்காரத்தில் இருந்து சிறிது முற்போக்கடைந்ததாகும்) வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதை எதிர்த்து பார்த்து முடியாமல் போய்விட்டவுடன் சர்க்காருக்கு தொல்லைகொடுக்க ஆரம்பித்ததில் இங்கிலீஷ் சாமான் பாய்காட் பிரசாரம் ஏற்பட்டதை சில மிதவாத உணர்ச்சி உள்ளவர்கள் பாய்க்காட் பஹிஷ்காரம் என்று சொல்லுவது இங்கிலீஷ் மீது விரோத உணர்ச்சியைக் காட்டுவதாகும் என்று கருதி சுதேச சாமான்களை ஆதரிப்பது என்னும் பேரால் பாய்க்காட் பிரசாரம் செய்தார்கள். காந்தியார் இரண்டையும் விட்டு விட்டு ” பாய்காட்டும் வேண்டாம் சுதேசியமும் வேண்டாம். அதில் விரோத உணர்ச்சி இருக்கிறது” என்று சொல்லி கதர் என்பது பொருளாதார திட்டமும் அவனவன் அவனவனையே நம்பி வாழும் தன் நம்பிக்கை திட்டமும் கொண்டது என்று அவனவன் ராட்டினத்தில் நூற்ற நூலை அவனவனே நெய்து கட்ட வேண்டும் என்பதாகச் சொல்லி அதற்கு மத உணர்ச்சியையும் தெய்வீக உணர்ச்சியையும் கற்பித்து பிரசாரம் செய்யத் துடங்கினார். ஆரம்பத்தில் பாமர மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். படித்தவர்கள் 100க்கு 99 பேர்கள் அதை எதிர்த்தார்கள்.திலகரையும் பெசண்டையும் ஒழிக்கவேண்டும் என்று கருதின கூட்டம் மாத்திரம் இதை ஆதரித்து பிரசாரம் செய்ய முன் வந்தது. திலகர் செத்தார். காந்தியாருக்கு செல்வாக்கு அதிகமாயிற்று. பெசண்டு ஒடுங்கினார். பிறகு கதரை எதிர்த்த அரசியல் வாதிகள் பெரும்பாலோர் காந்தீயத்தில் ஐக்கியமாகிவிட்டார்கள். அப்புரம் கதர் தலைவிரித்தாடத் துடங்கி விட்டது. காங்கரஸ் சந்தாவே கதர் நூலாக ஆகிவிட்டது. திலகர் நிதியில் முக்கால் வாசி பணம் கதர் பிரசாரத்துக்கே பயன்படுத்தப் பட்டதும் அல்லாமல் கதருக்கு ஆக ஒரு நிதியும் சுமார் 3000000 முப்பது லக்ஷம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கதருக்கு ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு அரசியல் வாதியும் தனித்தனி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார்கள். என்ன பண்ணியும் திருட்டுத் தொழில் குடி சூதாட்டம் விபசாரம் கொலை கொள்ளை ஆகிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைவிட கதரில் ஈடுபட்ட மக்கள் – கதர் தரிக்கிறவர்கள் மிகச் சுருக்கமாகவே குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களாகவே இருக்க முடிந்தது. அவைகளுக்கு உள்ள செல்வாக்கைவிட கதர் செல்வாக்கு குறைவாகவேதான் இருக்கக் கூடியதாக ஆகிவிட்டது.

~subhead

காங்கரஸ்காரர் கதர் அபிமானம்

~shend

பல உற்பத்தி ஸ்தாபனங்களும் பல விற்பனை ஸ்தாபனங்களும் அதற்கனுகூலமான பலவித நிர்ப்பந்தங்களும் இருந்தும் கதர் போலீஸ் உடை தரித்திருப்பது போல் காங்கரஸ் சேவகர்கள், பிரசாரகர்கள் காங்கரசால் பதவி ஏற்றவர்கள், வயிறு வளர்ப்பு உடையவன் ஆகியவர்கள் மாத்திரம் பெரிதும் அந்த சமயங்களில் கதர் தரித்திருக்க வேண்டியதாயும் இருந்து வருகிறது. இக்கூட்டங்களிலும் அவரவர்கள் பராமரிப்பிலுள்ள பெண்டுபிள்ளைகளை சிப்பந்திகள் கதர் கட்டுவது மிகமிக ஆச்சரியப்படத்தக்க தாகவே இருக்கும்.

கதருக்கு சொல்லப்படும் பெருமைகளில் ஒரு பெருமை காங்கரஸ்காரர்களாக இல்லாவிட்டாலும் கதர் உடுத்துவது தேசாபிமானம் ஏழை அபிமானமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் உடுத்த வேண்டியது என்று சொல்லப்படுகிறது. ஆனால் காங்கரஸ்காரர்களில் 100-க்கு 5 – பேர் வீதமாவது கதர்கட்டி இருப்பதாக அந்தந்த மாகாண ஜில்லா காங்கரஸ் மெம்பர்கள் லிஸ்டை பார்த்து கணக்கு சொல்ல முடியுமா என்றால் எப்படிப்பட்ட காங்கரஸ் தொண்டரும் விழிக்க வேண்டியதைத் தவிர சமாதானம் சொல்ல முடியாது.

சுருக்க வழியில் உண்மை உணர வேண்டுமானால் 10 மந்திரி 10 காரியதரிசி 4 தலைவர்கள் ஆகிய 24 பதவிகளில் இருந்து காங்கரசின் பயனாய் பணம் பெற்று வாழுகிறவர்களின் குடும்பங்களின் எத்தனை பேர் மனைவி மக்கள் விவரமறியாக் குழந்தைகள் கதர் கட்டி இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் விளங்கிவிடும். அல்லது காங்கரஸ் பிரதம தலைவர்களில் தொண்டர்களில் எத்தனைபேர் ராட்டினம் நூற்கிறார்கள் என்று பார்த்தாலும் கதர் தத்துவத்தின் உயர் வாழ்வும் ஆதரிப்பும் எவ்வளவு என்பது விளங்கிவிடும்.

இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கதரின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம். சுமார் 20 வருஷகாலமாக ஒரு கோடி ரூபாய்க்கு குறையாத அளவு செலவு செய்து மீதம் 100, 200, 300 ரூபாய் சம்பள செலவில் பி.ஏ.பி.எல்., எம்.ஏ. முதலிய பட்டம் பெற்ற நபர்களை பெரிய படிப்பாளிகளை சிப்பந்திகளாய் வைத்து மாகாண மாகாணமாய் ஜில்லா ஜில்லாவாய் கதர் ஆச்சிரமங்கள் மூலம் பிரசாரம் செய்து வருஷம் பல லக்ஷம் கெஜம் கதர் உற்பத்தி செய்து கெஜம் 0-2-6 அணாவுக்கு வாங்குவதற்கு பதிலாக கதர் என்பதற்கு ஆக கெஜம் 8 அணா 10 அணா 12 அணா கொடுத்து சில மக்களாவது வாங்கத் துணிந்தும் இன்று கதரின் நிலைமை பிரதம மந்திரியார் என்பவர் தனது சிப்பந்திகளைப் பார்த்தே நீங்கள் கதர் கட்டாவிட்டால் நான் உங்களை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று கட்டாயப்படுத்தி மிரட்டி தண்டித்து கதர் கட்டச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது என்றால் கதரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கிறோம்.

~subhead

கதரால் வரும் கேடுகள்

~shend

காங்கரஸ்காரர்கள் காங்கரஸ் வேலைக்காக அவர்களது அரசியல் திட்டத்துக்காக (அதாவது வருணாச்சிரமம் ராஜியம் ஸ்தாபிப்பதற்கு ஆக) அவர்கள் செய்யப்போகும் காலித்தனம் போக்கிரித்தனம் ஆகியவைகளுக்கு சைனியம் சேனை திரட்டி வைத்திருப்பதற்கு ஒரு ஏமாற்றுச் சாக்காக கதர் ஸ்தாபனமும் ஹரிஜன ஸ்தாபனம் என்னும் தீண்டாமை விலக்கு ஸ்தாபனமும் வைத்து அதற்கு பொது ஜனங்களிடம் வசூலித்த பணத்தையும் சர்க்கார் வரிப்பணத்தையும் பாழாக்கி வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.

  1. கதரினால் 4 வேஷ்டிகளுக்கு பயன்படும் பஞ்சு ஒரு வேஷ்டி சாப்பிட்டு விடுகிறது. இதனால் நம் நாட்டு மூலப்பொருள் 100-க்கு 75 பாகம் வீணாகிறது.
  2. கதர் நூற்பதால் ஒரு மனிதன் மூன்று, நாலு ராத்தல் நூற்கும்படியான நேரம் ஒரு ராத்தலுக்கே சரியாய் போய் விடுகிறது. இதனால் பாடுபடும் மக்களுடைய பாடு நேரம் 100-க்கு 75 பாகம் வீணாகிறது.
  3. கதர் நெய்வதால் 4 கெஜம் நெய்யக்கூடிய நேரம் ஒரு கெஜத்துக்கு பிடிக்கிறது. இதனால் நெசவாளிகளது நேரம், பாடு 100-க்கு 75 வீதம் பாழாகிறது.
  4. இவ்வளவு வீணாகியும் கதர் விலை மற்ற நூல் கைத்தறி நெசவுத்துணி கெஜம் 0-2-6 அணா 0-3-0 அணாவுக்கு கிடைத்தால் கதர் துணி கெஜம் 10 அணா 11 அணா 12 அணா போட்டு தான் வாங்கவேண்டி இருக்கிறது. இதனால் தேசத்தின் பொருளாதாரம் 100-க்கு 75 பாக பணம் நஷ்டமடைகின்றது.
  5. பொது மக்கள் இவ்வளவு நஷ்டமும் கஷ்டமும் நாசமும் அடைவதினால் யாருக்காவது லாபம் உண்டா என்று பார்த்தால் யந்திரம்போல் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேலாக 12 மணி வரை வேலை செய்தால் 1 அணா பெறக்கூடிய அளவு தான் கூலி கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது.
  6. இவ்வளவு காரியத்தையும் பொறுத்துக்கொள்ள கதர் துணியாவது அழகானதாகவோ கெட்டியானதாகவோ வனப்பானதாகவோ இருந்து வருகிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே இந்த நிலையில் உள்ள கதர் எப்படி ஒரு தொழில் திட்டமாகவோ பொருளாதாரத் திட்டமாகவோ ஒரு தேசிய அறிகுறியாகவோ இருக்கமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள கதரை கட்டாவிட்டால் டிஸ்மிஸ் செய்வேன் என்று ஆச்சாரியார் சொல்லுவது மனுதர்மக்கொடுமையை விட அதிகமான கொடுமையா அல்லவா என்று கேட்கிறோம்.

மனு 10 மூட்டை நெல்லை கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்றால் ஆச்சாரியார் 10 மூட்டை உமியைக் கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிகாரிகளே! சிப்பந்திகளே!! வரி கொடுக்கும் தமிழ் மக்களே!!! மஞ்சள் பெட்டிக்கு ஜே சொன்னப் பலன் அனுபவியுங்கள்! அனுபவியுங்கள்! புத்தி வரும்வரை அனுபவியுங்கள்!

குடி அரசு – கட்டுரை – 10.04.1938

You may also like...