பொப்பிலியும் நேருவும்
தோழர் நேரு அவர்கள் பொப்பிலிக்குச் சென்றபோது, பொப்பிலியில் வரவேற்பு இல்லையென்றும், பொப்பிலி ராஜாவின் இடத்தில் நேருவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை என்றும் இவர் யாருடைய தனி வீட்டிலேயோ இருந்து பேசும் போது பொப்பிலி ராஜாவின் சின்னங்கள் அப்பேச்சுகள் மற்றவர்கள் காதில் விழாமல் செய்து விட்டன என்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் ஓலமிடுகின்றன. அதற்கு ஆக பொப்பிலி ராஜாவைக் குறைகூறுகின்றன. இச்சம்பவங்கள் மிகைபடுத்திக் கூறப்பட்டவை என்று தக்க இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்றாலும் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.
பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிகளும் கூறுவது அவ்வளவும் உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம். காங்கிரஸ் நடத்தைக்கும் ஜவஹர்லால் யோக்கியதைக்கும் இச்சம்பவங்களில் எது தகுதி அற்றது என்று உசாவுகிறோம்.
காங்கிரசுக்காரர்கள் இதற்கும் தகுதி ஆனவர்கள், இன்னும் அதிகமான காரியத்துக்கும் தகுதியானவர்கள் என்று “நெருப்பின் மீது” நின்று மெய்ப்பிப்போம். மாட்டுச்சாமிக்கு புல்லும், பருத்திக்கொட்டையும் வைத்து ஆராதனை செய்வார்கள். நாய்ச்சாமிக்கு மலமும், கசுமலமும் வைத்து ஆராதிப்பார்கள். நல்ல குதிரையை சவுக்கு வீசி ஓட்டுவார்கள். எருமைக் கடாவை லத்தி தடி கொண்டு மொத்தி ஓட்டுவார்கள். இவற்றில் காங்கிரசுக்காரர்கள் எதற்குத் தகுதி என்று தங்கள் மனதில் கைவைத்துப் பார்க்கட்டும். கார்ப்பரேஷன் கவுன்சில் மீட்டிங்கில் ஒரு காங்கிரஸ்காரர் அதுவும் காந்தி குல்லாய் போட்ட காங்கிரஸ்காரர் ஒரு ஜஸ்டிஸ் கட்சி மாது (அலமேலு மங்கைத் தாயாரம்மாள் அவர்கள்) மீது பழய செருப்பையும், அழுகல் முட்டையையும் வீசி எறிந்தார். சேலத்தில் சித்தையன் முதலிய சுயமரியாதைக்காரர்களை சத்தியமூர்த்தியார் முன்னிலையில் காங்கிரஸ்காரர் நன்றாய் உயிர்போகும்படி அடித்தார்கள். தோழர் ஈ.வெ. ராமசாமி பொள்ளாச்சியில் பேசும்போது காங்கிரசுக்காரர்கள் முட்டைவீசினார்கள். செருப்பாலடிப்பதாயும் கத்தியால் குத்துவதாயும் கடிதம் எழுதினார்கள்.
மற்ற இடங்களிலும் அவர்கள் செய்த அயோக்கியத்தனங்களும், இன்னமும் ஜஸ்டிஸ் சுயமரியாதைக் கூட்டங்களில் காங்கிரசுக்காரர் செய்யும், அற்பத்தனமும் இழி பிறப்புத்தனமும் ஏட்டிலடங்காது. நேற்று விருதுநகரில் தோழர் ஈ.வெ. ராமசாமி பேசும்போது சிறு பையன்கள் வசம் கொடிகள் கொடுத்து கூட்டத்தை சுற்றிச் சுற்றி கூப்பாடு போடச் சொன்னார்கள்; பக்கத்தில் ஒரு கூட்டத்தை போட்டுக்கொண்டு தங்கள் கூட்டத்தில் கூட்டமில்லா விட்டாலுங் காலிப்பசங்களை அதிகமாய்ச் சேர்த்து கைதட்டும்படி செய்தார்கள். மறுநாள் காங்கிரஸ் கூட்டத்திற்கு தோழர் ஜோசப் அவர்கள் வருகிறார் என்று தெரிந்ததால் அவர்கள் கூட்டத்துக்கு இடையூறு சிறிது கூட இருக்கக்கூடாது என்று அன்று ஜஸ்டிஸ்காரர்கள் கூட்டம் போடவே இல்லை. அடுத்த நாள் தோழர் ஈ.வெ. ராமசாமிக்காக ஜஸ்டிஸ்காரர்கள் கூட்டம் போட்டிருக்க, அன்று திடீரென்று பக்கத்தில் ஒரு கூட்டம் போட்டு ஒரு 10, 15 பேர்கள் மாத்திரம் அவர்கள் கூட்டத்தில் இருந்தும் சதா கைத்தட்டி தொல்லை விளைவித்தார்கள். சில்லறைப் பசங்கள் கொடிபிடித்து வி.வி. ராமசாமி வீழ்க, ஜஸ்டிஸ் கட்சி வீழ்க என்று கத்தினார்கள். அந்த சமயத்தில் உதைபிடித்திருந்தால் அந்த பசங்கள் பஜ்ஜி ஆகி இருப்பார்கள். ஏனென்றால், ஜஸ்டிஸ் கூட்டத்தில் அவ்வளவு பிரமாண்டமான கூட்டம் இருந்தது. ஆனால் தோழர் ஈ.வெ. ராமசாமி அந்தக் காலிப்பசங்கள் கூட்டம் பக்கத்தில் வந்தபோதெல்லாம் தன் பிரசங்கத்தை நிறுத்தி நிறுத்தி அவர்கள் போன பின்பே அவர் பேசி வந்தார். மக்களையும் சமாதானப்படுத்தி வந்தார். சாதாரண நிலையில் இச்செய்கை அடிதடி கலகத்தை உண்டாக்காமல் இருக்காது. இவை போலீசுக்கும் தெரியும். அவர்களும் வேடிக்கை பார்த்தார்கள். இவைகளுக்கு பதில் கொடுக்க ஜஸ்டிஸ்கட்சிக்கு சக்தி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? பணமும், காலிகளும் அவர்களுக்கு கிடைக்கமாட்டாவா? இப்படிப்பட்ட யோக்கியர்களுக்கும் அவர்கள் தலைவர்களுக்கும் பொப்பிலியில் இவ்வளவுடன் போனதற்கு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
பண்டிதர் யோக்கியதையையே எடுத்துக்கொள்ளுவோம். அவர் தமிழ் நாட்டில் எப்படி நடந்துகொண்டார்? சுயமரியாதைக்காரர்கள் பொய்யர்கள் என்று சொன்னார். இதைப் பார்ப்பனக் கூலிகள் கொட்டை எழுத்தில் போட்டு மகிழ்ந்தார்கள். ஏன் என்றால் திரும்பச் சொல்லுவதால் அவர்களுக்கு அவமானமில்லாத அவ்வளவு கீழ்ஜாதிகளாக, கீழ் மக்களாக அமைந்து விட்டார்கள்.
யார் பொய்யர்கள்? பண்டிதர் ஜவஹர்லால், அவங்கப்பன் மற்றும் பலர் பொய்யர்கள் என்று சொல்ல ஆதாரம் கிடைக்காது என்று யாரும் கருதிவிடக் கூடாது. மரியாதைக்கு ஆக திருப்பிச் சொல்லவில்லை. மற்றும் பண்டிதர் ஜஸ்டிஸ்கட்சியைப்பற்றி என்ன சொன்னார்? தமிழ்நாட்டு கீழ் ஜாதி காலிப் பசங்கள் கூலிக்கு குலைக்கும் வார்த்தைகளை அதாவது ஜஸ்டிஸ்கட்சி தேசத்துரோகக் கட்சி, சர்க்கார் தாசர் கட்சி, நக்கிப்பொறுக்கும் கட்சி, காட்டிக் கொடுக்கும்கட்சி என்பது போல் பண்டிதரும் கேவலமாகப் பேசினார். எந்த யோக்கியதை கொண்டு பண்டிதர் எதிர்க்கட்சியாரிடம் மரியாதை எதிர்பார்க்கிறார் என்பதும் எந்த யோக்கியதை கொண்டு பார்ப்பனப் பத்திரிகையும், அவர்களது கூலி பத்திரிகையும், பண்டிதருக்கு மரியாதை செய்யவில்லை என்று சொல்லுகின்றன என்பதும் நமக்கு விளங்கவில்லை.
திண்டுக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி பொப்பிலி என்று எழுதின யோக்கியர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் பொப்பிலியில் ஜவஹருக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை சத்தியமூர்த்தியாரையும் அவரது கூலிகளையும், கூலிப் பத்திரிகைகளையும் வினவுகிறோம்.
ஜவஹர்லால் அவர்களை பொப்பிலியில் பேசவிட்டிருந்தால் என்ன பேசியிருப்பார்?
பொப்பிலியை அயோக்கியத்தனமாக வைது இருப்பார். அவர் தலைமை வகித்து நடத்தும் கட்சியை கேவலமாகப் பேசியிருப்பார். இப்படிப்பட்ட யோக்கியருக்கு பொப்பிலியில் பண்டிதருக்கு ஆலாத்தி எடுக்கவில்லை என்று எதிர்பார்க்கவும் எழுதவும் வெட்கமில்லையா? என்று கேட்கிறோம்.
“மூக்கரையா மூக்கரையா ஒரு கரும்பு கொடு” என்று ஒரு கரும்புக் கடைக்காரனைக் கேட்டால் அவன் கரும்புக் கட்டோடு கொடுப்பானா அல்லது ஒரு கரும்பை உருவி ஓட ஓட, ஒடிய ஒடிய இருத்துவானா என்று யோசித்துப்பாருங்கள். புதுக்கோட்டையில் பண்டிதரை உள்ளே கால் வைக்கக் கூடாது என்றார்களே அவர்களை இந்த வீரர்கள் என்னசெய்து விட்டார்கள்?
பாண்டிச்சேரியில் பண்டிதரைப் பார்க்க முடியாது என்று சொல்லி விட்டார்களே இந்த சூரர்கள் என்ன செய்துவிட்டார்?
உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு சங்கத்தில் சங்கக் கொள்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பண்டிதரை அச்சங்கத்தார் சங்கத்திலிருந்தே நீக்கி விட்டார்களே அதற்கு இந்த வீராதி வீரர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரியாதவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவமரியாதை அடையவேண்டியது விஞ்ஞான விதியாகும்.
அதற்கு ஆக பொப்பிலி ஊரைப்பற்றியோ பொப்பிலி ராஜாவைப் பற்றியோ குறை கூறுவது கோழைத்தனமே ஒழிய வேறில்லை.
உண்மையில் அப்படி ஒன்றும் அவமரியாதையாக பொப்பிலியில் நடக்கவும் இல்லையாம்.
குடி அரசு கட்டுரை 22.11.1936