சென்னைக் “கலவரங்கள்”
கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து உண்டாகுமெனத் தமிழர்கள் நம்புகிறார்கள். கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கு ஏற்படும் தீமைகளை மறைமலையடிகளும் தோழர் சோமசுந்தர பாரதியாரும், சிறு சுவடி மூலமும், பகிரங்கக் கடிதம் மூலமும் காங்கரஸ் மந்திரி சபையாருக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார்கள். திருச்சி, காஞ்சீவரம், சோழவந்தான் முதலிய இடங்களில் கூடிய தமிழர் மகாநாட்டிலும் கட்டாய இந்தியால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இடையூறுகள் விளக்கப்பட்டு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பொதுக்கூட்டங் கூட்டி கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. சென்னைக் கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறெல்லாம் தமிழர்கள் கட்டாய இந்தியை பகிரங்கமாக எதிர்த்தும் கனம் ஆச்சாரியார்கள் மனமிளகாததினால் ஆவேசங்கொண்ட தமிழர்கள் நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். உடனே அவர்கள் மீது கிரிமினல் திருத்தச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டு இன்றுவரை 446 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். ஆண்கள் சிறை புகுந்தும் பலன் ஏற்படாததினால் இப்பொழுது பெண்களும் சிறைபுக முன்வந்திருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்குப் பிறகு சென்னைப் பெண்ணுலகம் விழித்தெழுந்திருக்கிறது. திங்கள் கிழமை தோறும் கட்டாய இந்தியை எதிர்த்து மறியல் செய்து சிறை புகுவதென சென்னை மாதர்கள் முடிவு செய்திருப்பதாயும் தெரியவருகிறது. இவ்வண்ணம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் இந்தி எதிர்ப்புச் செத்துவிட்டதென தேசியப் பத்திரிகைகள் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தி எதிர்ப்புக் கூட்ட நடவடிக்கைகளை தேசியப் பத்திரிகைகள் பிரசுரம் செய்வதே இல்லை. ஒருகால் பிரசுரம் செய்தாலும் திருத்திச் சுருக்கி மழுக்கிப் பிரசுரிப்பதே வாடிக்கையாகவும் இருந்து வருகிறது. இந்தத் திருப்பணியில் முன்னணியில் நிற்பது ்தமிழர் நன்மைக்காக தமிழரால் நடத்தப்படும் தமிழ் தினசரியான ்தினமணியே.” இந்தி எதிர்ப்பாளரைக் கேலி செய்வதிலும் விகடப் படங்கள் பிரசுரித்து இழிவுபடுத்துவதிலும் தலைசிறந்து விளங்குவது ்ஆனந்த விகடன்”. காங்கிரஸ் பத்திரிகைகளும் தேசியப் பத்திரிகைகளும் இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி வந்தாலும் ்தினமணி”யையும் ்ஆனந்த விகடனையும்” போல் விஷமத்தனமாகவும் இழிவாகவும் எந்தப் பத்திரிகையும் தாக்குவதில்லை. ்தினமணி” ஆசிரியர் சட்டசபை மெம்பர். கனம் ஆச்சாரியார் தயவினால் மாதம் தோறும் 75 ரூபாய் சம்பளம் பெறுபவர். ிஆனந்த விகடன்ீ ஆசிரியர் கனம் ஆச்சாரியாரின் பிரதம அரசியல் சிஷ்யர். கனம் ஆச்சாரியாரின் கட்டுரைகள் மூலமும் ஆதரவு மூலமும் ிஆனந்த விகடனைீ விளம்பரப்படுத்துவதில் மிக்க ஆர்வமுடையவர். ஆகவே இவ்விரு பத்திரிகாசிரியர்களும் இந்தி எதிர்ப்பாளரை எப்பொழுதும் கட்டுப்பாடாகத் தாக்கி எழுதி வருவது ஆச்சரியமல்ல. கட்சிப் பிரதி கட்சி ஏற்பட்டுவிட்டால் ஒரு கட்சியார் மற்ற கட்சியாரைத் தாக்குவதும் தூற்றுவதும் இயல்பே. எனினும் அதற்கும் ஒரு எல்லையுண்டு. இந்தி எதிர்ப்பாளரை அடக்கும் பொறுப்பை சுயமாகவே மேற்போட்டுக் கொண்ட ிதினமணிீ இந்தி எதிர்ப்பு ஆரம்பமானது முதற்கொண்டே இந்தி எதிர்ப்பாளரை ஒடுக்க சர்க்காரைத் தூண்டிக்கொண்டே வந்திருக்கிறது. சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் உண்டான கலவரங்களுக்கு இந்தி எதிர்ப்பாளரே காரணம் என்று ஒரு கதை கட்டிவிட்டு தற்காப்புக்காக எவரையும் கொல்லலாமென்றும் அவ்வாறு கொலை புரிவது குற்றமாகாதென யாரோ ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதாகவும் ்தினமணி” எடுத்துக்காட்டி இந்தி எதிர்ப்பாளரை கொல்லவும் பாமர மக்களுக்கு மறைமுகமாக உபதேசம் செய்தது. மற்றும் ஒருமுறை, யாரோ காங்கரஸ் தலைவர்களுக்கு பயமுறுத்தல் கடிதங்கள் அனுப்பியிருப்பதாயும் அவர்கள் இந்தி எதிர்ப்பாளராகத்தான் இருக்க வேண்டுமென்றும் இந்தி எதிர்ப்பாளரை அடக்க சர்க்கார் தீவிரமான முறைகளைக் கையாள வேண்டுமென்றும் ்தினமணி” எழுதியது. ்தினமணி” யின் சொக்காரப் பத்திரிகையான ்இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டாய இந்தியை ஆதரித்தாலும் இந்தி எதிர்ப்பாளர்மீது அநாவசியமாக கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகஞ் செய்வதைக் கண்டித்திருக்கையில் ்தினமணி” கிரிமினல் திருத்தச் சட்டப் பிரயோகம் ஞாயமானதென்றும் எழுதியிருக்கிறது. ்தினமணி” என்ன எழுதியும், சர்க்கார் எவ்வளவு கொடிய அடக்குமுறைகளைக் கையாண்டும் இந்தி எதிர்ப்பு ஒழியவில்லை. மாறாக நாளுக்கு நாள் வளர்ந்தோங்கியே வருகிறது. போதாக்குறைக்கு சென்னைப் பெண்களும் இந்திப் போரில் இறங்கிவிட்டார்கள். இந்நிலைமையை ்தினமணி”யும் ஏனைய காங்கரஸ் பத்திரிகைகளும் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருக்கும்? ஆகவே இந்தி எதிர்ப்பை அடக்க காங்கரஸ் பத்திரிகைகள் இப்பொழுது ஒரு புதிய முறையைக் கையாளத் தொடங்கியிருப்பதாய் தோன்றுகிறது. இம்மாதம் 21ந் தேதி இந்தி எதிர்ப்பாளர் திரளாகச் சேர்ந்து ்தினமணி” ்ஆனந்த விகடன்” காரியாலங்களைத் தாக்கி மிகுந்த சேதம் உண்டாக்கி விட்டதாக சென்னை தினசரிகளில் செய்திகள் வெளிவந்திருப்பதை அன்பர்கள் படித்திருக்கலாம். இந்தச் செய்திகளை மிகைப்படுத்திக் கூறி இந்தி எதிர்ப்பாளர் தலைகளை வாங்க தீவிரப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பது ்தினமணி”யே. பிரஸ்தாப கலவரத்தைப் பற்றி சென்னை காங்கரஸ் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும் செய்திகள் பரஸ்பரம் முரணாக இருப்பதினால் வெளியூரிலிருக்கும் நம்மால் எது சரி எது தப்பு எனக் கூற முடியவில்லை. கலவரம் நடந்தது உண்மையெனவே வைத்துக் கொண்டாலும் கலவரத்துக்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் இந்தி எதிர்ப்பாளரா இதரர்களா என்பதையே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். ஆனால் இந்தி எதிர்ப்பாளர் இதுவரை பலாத்காரச் செயலில் இறங்கியதாக நமக்குத் தெரியவில்லை. மறியல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர்களும் பலாத்காரம் செய்ததாகவோ கலவரம் செய்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. நாமறிந்த வரையில் பொதுக் கூட்டங்களில் கலவரம் செய்வதும் கல், மண், செருப்புகள் எறிவதும் காங்கரஸ்காரர் ிகாபிரைட்ீ ஆகவே இருந்து வருகிறது. இதரர்கள் கூட்டங்களில் காங்கரஸ்காரர் கலவரம் செய்தால் அதற்குப் பொது ஜனங்கள் கோபம் எனத் தலைப்புக் கொடுத்து காங்கரஸ் பத்திரிகைகள் கலவரம் செய்தவர்களைத் தட்டிக் கொடுப்பதும் மேலும் கலவரம் செய்யத் தூண்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. நமக்குக் கிடைத்த சில கடிதங்களினாலும் தோழர் பாசுதேவ் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையினாலும் ிஜனவாணிீ தெலுங்கு தினசரியில் வெளிவந்துள்ள செய்தியினாலும் தினமணி காரியாலயத்தாரும் ்தினமணி” காரியாலயத்தின் பக்கமுள்ள ஒரு வீட்டாரும் ஜனக் கூட்டத்தின் மீது முறையே ஈயத் துண்டுகளையும், கற்களையும், செருப்புகளையும் வீசியதினாலும் அழுக்குத் தண்ணீரை ஊற்றியதனாலுமே பொதுஜனங்கள் கோபங்கொண்டு பதிலுக்குப்பதில் கற்களை வீசியதாகவும் தெரிய வருகிறது. ஆகவே ்தினமணி” காரியாலயத்தாரே வேண்டுமென்று தெருவில் சென்ற பொது ஜனங்களை வலியச் சண்டைக்கு இழுத்து இந்தி எதிர்பபாளர் மீது வீண் பழி சுமத்த முயன்றிருப்பதாகத் தோற்றுகிறது. இந்தி எதிர்ப்பாளர் மீது ஆதி முதற்கொண்டே வன்மம் வைத்து எழுதி வரும் ்தினமணி” இந்த சம்பவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு கொடிய அடக்குமுறைகளைக் கையாளுமாறு சர்க்காரை வேண்டி வருவது வியப்பல்ல. இந்தி எதிர்ப்பாளரை காலாடி பாஷையில் திட்டுவதும் காலிகள் என்றழைப்பதும் ிதினமணிீயின் வாடிக்கையாகிவிட்டது. இந்தி எதிர்ப்பாளரான ஸர்.கே.வி. ரெட்டி, மறைமலையடிகள், ஸி.டி.நாயகம், மாஜி மந்திரி முத்தைய முதலியார், சிவராஜ தம்பதிகள், ஸர்.எ.டி.பன்னீர்செல்வம், உமாமகேசுவரம்பிள்ளை, ராவ்சாகேப், ஐ.குமாரசாமி பிள்ளை, எஸ்.சோமசுந்தரபாரதியார், கா. சுப்பிரமணியபிள்ளை, சர்.பி.டி.ராஜன், டபிள்யூ.பி.ஏ. செளந்தரபாண்டியன், கெ.எ.பி.விஸ்வநாதம், தளவாய் குமாரசாமி முதலியார், சாமி ஷண்முகானந்தா, ஈழத்து சிவானந்தா அடிகள், சாமி அருணகிரிநாதர், சி.என்.அண்ணாத்துரை, எம்.ஏ. போன்றவர்கள் காலிகளா என ்தினமணி” யைக் கேட்கிறோம். இவர்கள் எல்லாம் காலிகள் ஆனால் ஏனை யோக்கியர்கள் எல்லாம் ஒழிய வேண்டியதுதான். அந்த யோக்கியர்கள் ஒழிந்து போவதைப் பார்த்து எவரும் சங்கடப்படமாட்டார்கள். இந்த “கலவரத்தை” ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்பாளரை அடக்கிவிடலாமென ்தினமணி” எண்ணினால் அது ஏமாந்து போவது உறுதியென இப்பொழுதே ்தினமணி”க்கு எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.11.1938