காங்கிரசும் கல்வியும்
தாவர வர்க்கத்திலே காணப்படும் புல்லுருவிகளைப் போல் மனித வர்க்கத்திலும் புல்லுருவிக்கொப்பான ஒரு கூட்டத்தார் இருந்து வருகின்றனர். அவர்கள்தான் பிறர் உழைப்பினால், பிறர் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி நெற்றி வேர்வை நிலத்தில் விழாமல் நகங்களில் அழுக்கு படாமல், சோம்பேறி வாழ்க்கை நடத்தும் புரோகிதக் கூட்டத்தார். இத்தகையோர் தமது இந்திய நாட்டிலுமல்ல உலகமெங்கும் எல்லா நாட்டிலும் பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் மட்டும் இவர்கள் ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். இவர்கள் தங்கள் சோம்பேறி வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு உபயோகமாகயிருந்து வருவது கல்வியின்மை – அறியாமை – மூடத்தனம் என்பதேயாகும். மக்கள் அறியாமையைப் போக்கிக்கொண்டால் – அறிவு பெற்றுக்கொண்டால் தங்களது சோம்பேறி வாழ்க்கைக்கு கேடு வந்துவிடுமே என்று எண்ணி அக்கூட்டத்தார் மக்கள் கல்வியறிவை பெற முடியாமல் செய்து வந்திருக்கின்றனர். நம் நாட்டிலே வேதங்கள், நீதி நூல்கள் என்று சொல்லுகிற மனுநீதி சாஸ்திரம் போன்றவைகளிலிருந்து இதற்கு வண்டி வண்டியாய் ஆதாரங்கள் கோட்பாடுகள் எடுத்துக் காட்டலாம். அதே மாதிரி மேல்நாடுகளின் பூர்வீக சாஸ்திரங்களையும் ஒவ்வொரு நாட்டின் மத சம்பந்தமான பழைய நூல்களையும் அரசியல் சரித்திரங்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்கள் கையாண்ட கொடுமைகளை இன்றும் காணலாம். பெரிய பாதிரிமார்கள் சிறிய பாதிரிமார்கள் மக்களுக்குக் கல்வி, இலக்கணம் முதலியவைகளைக் கற்றுக்கொடுத்ததால் அவர்களை எவ்வாறு தண்டித்திருக்கின்றனர் என்பதை சரித்திரங்களே கூறும். ஆகவே இந்நிலைமை மாறுவதைக் கண்டு சோம்பேறி வாழ்க்கை வாழ்ந்து வந்த கூட்டம் வாளாவிருக்குமா? அல்லது இருக்கத்தான் முடியுமா? அதன் மனந்தான் இடம் கொடுக்குமா? கொடுக்காதல்லவா? ஆதலால் தன்னால் ஆன சாமார்த்தியங்களை சூழ்ச்சிகளையெல்லாம் செய்து தனது வாழ்க்கையை நிலைநிறுத்தச் செய்யும், செய்துதான் தீரும். அதைக் கண்டு நாம் ஒன்றும் ஆச்சரியப்படுவற்கில்லை.
ஏனெனில் இன்று இப்பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் பொதுவாக மக்கள் எவ்வளவு சுதந்தரமும் கல்வி அறிவும் பெற்றிருக்கின்றனர் என்பதை நடுநிலைமையோடு ஒரு மனிதன் சிறிது யோசித்துப் பார்த்தால் உண்மை பளிங்கு போல் விளங்காமல் போகாது. ்பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு அளிக்கப்பட்ட கல்விதான் நமக்கு மனித உணர்ச்சியை கொடுத்தது” என்று தாதாபாய் நெளரோஜியும் ்பிரிட்டிஷ் சர்க்கார் நமக்கு அளித்த கல்விமுறை இந்தியர்களுக்கு கிடைத்த மகத்தான ஒரு பாக்கியமேயாகும்” என்று பண்டிட் கிருஷ்ண நாராயண தாஸúம் ்இந்தியாவுக்குப் பிரிட்டனால் மிகச் சிறந்த ஒரு பெரிய நன்மை ஏற்பட்டிருந்தால் அந்த நன்மை அவர்கள் நமக்கு அளித்து வந்த உயர்தர கல்வியேயாகும்” என்று சுரேந்திரநாத் பானர்ஜியும் ்நமது க்ஷேம அபிவிருத்திக்கான வழிகளைத் திறந்துவிட்டிருப்பது இங்கிலீஷ் கல்வியேதான்” என்று சர்.சங்கர நாயரும், ்பிரிட்டிஷ் சர்க்கார் கல்வி சம்மந்தமாக இந்தியாவுக்குச் செய்திருக்கும் நன்மைகளுக்கு நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று பண்டித மாளவியாவும் மற்றும் காங்கரஸ் தலைவர்களும் மற்றவர்களும் கூறும் அளவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டபின் மக்கள் கல்வியறிவு பெற்று விழித்துக் கொண்டு, இதுவரை ஒரு கூட்டத்தார் சகல உரிமைகளையும் ஏகபோகமாக அனுபவித்து வந்ததுபோல் அனுபவிக்க இடங்கொடுக்காமல், எல்லா வகுப்பாரும் சரி பங்கு கேட்க வந்துவிட்டதால், இக்கல்வியை ஒழிக்க நீண்ட நாட்களாக சுயநலக்கூட்டத்தார் காத்துக் கொண்டிருந்தனர். இதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்க எப்படி ஆடு கசாப்புக்காரனை நம்புகிறதோ அதேபோல் தனது செல்வாக்குக்கே – வாழ்க்கைக்கே உலை வைக்கக் காத்துக் கொண்டிருந்த கூட்டத்தாரை பாமர மக்கள் நம்பி தெரிந்தெடுத்து தன்னை யாளும் ஆட்சியினராக அமர்த்திவிட்டனர். அவர்கள் ஆட்சி ஆளத் தொடங்கியதிலிருந்து பாமர மக்களின் கல்வியைக் கெடுக்கவே சகல துறைகளிலும் தங்களது கருத்தை செலுத்தி வருகிறார்கள். கல்வி மான்யத்தைக் குறைத்து தாங்களாகவே பள்ளிக் கூடங்களை மூடும்படிச் செய்துவருகின்றனர். உபகாரச் சம்பளம் கொடுத்து கல்வி கற்பித்து வந்ததை ஒரு வகுப்பாருக்குத்தான் உண்டென்று சொல்லி இதுகாலம் வரை அனுபவித்து வந்தவர்கள் வாயில் மண்ணைப் போட்டும் வருகிறார்கள். ஆசிரியர்களும் சம்பளமில்லாமலும் பிள்ளைகளும் புஸ்தகம், கற்பலகை முதலிய உபகரணங்கள் இல்லாமலும் கல்வி கற்கும் நூதன முறையையும் புகுத்தி வருகிறார்கள். இந்தத் தத்துகளுக்கும் கண்டங்களுக்கும் மீறி கற்றுவிட்டால் என்ன செய்வதென்பதற்காக தோழர் காந்தியாரைக் கொண்டு ஒரு புதிய கல்வித் திட்டத்தைச் சிருஷ்டித்திருக்கின்றனர். இத்திட்டத்தைக் குறித்து ஆராயப் புகுவதற்கு முன் ஏதாவது ஒரு திட்டம் போட வேண்டுமானால் உலகிலே அந்தத் துறையில் விளங்கும் நிபுணர்களைக் கொண்டுதான் ஒரு திட்டம் வகுக்கப்படுகின்றது. ஆனால் இத்திட்டம் இப் பொது விதிக்குட்படவேயில்லை என்பதை நாம் முதலில் கூற ஆசைப்படுகிறோம். அடுத்தப்படியாக தோழர் காந்தியார் வகுத்திருக்கும் கல்வித் திட்டம்.
- பிள்ளைகளுக்கு 7 வயது முதல், 14 வயதுவரை இலவச கட்டாயப் படிப்பு படிப்பித்தல்.
- இந்த 7 வருஷமும் தாய் பாஷையிலேயே பாடங்கள் கற்பித்தல்.
- ஒரு நாளியில் பெரும்பாகம் கைத்தொழிலே கற்றல்.
- அந்தக் கைத்தொழிலைக் கற்றல் மூலமே வரும்படி ஏற்படும்படி செய்து அந்த வரும்படியிலே பள்ளிக் கூடம் நடைபெறச் செய்தல்.
- இம்மாதிரி பள்ளிக் கூடங்களை சர்க்காரே நடத்தல்.
என்பவைகளே முக்கிய அம்சங்களாகும். இத்திட்டத்தைக் குறித்து நமது அபிப்பிராயத்தை இதற்குமுன் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதாவது மக்களை அறிவுக் கல்வி படிக்க வொட்டாமல் செய்து என்றென்றும் ஒரு வகுப்பார் அடிமையாக – உழைப்பாளியாக – தொழிலாளியாக இருந்து வரச் செய்வதேயாகும். இத்திட்டப்படி பிள்ளைகள் 7 வயது முதல் 14 வயது வரை கட்டாயமாக படிப்பிக்கப்படுவார்கள் அல்லவா? 7 வயது வரை பையன்கள் என்ன செய்வது? 14 வயதுக்கு மேல் இங்கிலீஷ் படிப்பில்லாததால் மேல் வகுப்புக்கு உயர்தரப் படிப்புக்கு எப்படி அனுப்புவது என்று நாம் அதாவது சென்ற டிசம்பர் 21-ம் தேதி குடியரசில் கேட்ட கேள்வியையே இன்று அதாவது 3.11.38 ந் தேதி கூடிய மைசூர் சமஸ்தானக் கல்விச் சங்கத்தில் தலைமை வகித்த சென்னை சர்வகலாசாலை உப அத்யக்ஷகரான திவான் பகதூர் எஸ். இரங்கனாதன் அவர்கள் பேசுகையில் ்குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அதாவது 7 வயதுக்கு முன்பு அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்கும் 14 வயதுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு மத்திய தரக் கல்வியை போதிக்கவும், மேற்படி திட்டத்தில் வகை காணப்படாமலிருப்பது மிகவும் துரதிஷ்டமாகுமென்று” கூறியிருக்கிறார். மேலும் இத்திட்டத்தை தோழர் காந்தியார் வாயிலிருந்து வந்துவிட்டதால் யாரும் குறை கூறக் கூடாது என்று ஒருவரும் பேசமாட்டார்கள் என்று நாம் அன்று கூறினோம். அதைத்தான் சேலத்தில் 2.11.38 ந் தேதி ஜி.எச்.எம். ஸ்கூலில் கல்வி வாரத்தை ஆரம்பித்து வைக்கையில் சேலம் காலேஜ் பிரின்சிபால் தோழர் எ.ராமசாமி கவுண்டர் அவர்கள் பேசுகையில் ்இத்திட்டம்” ்பெரிய மனிதரான” ்மகாத்மா” காந்தியாரால் வகுக்கப்பட்டதென்ற காரணத்தால் குற்றங்குறைகளை எடுத்துரைப்பது தவறு என்று கருதுகிறார்கள் போலும், இல்லையேல் வேறு யாராவது இம்மாதிரி ஒரு கல்வித் திட்டத்தை வகுத்திருந்தால் அதை உதறித் தள்ளியிருக்க மாட்டார்களா?” என்று ஆச்சரியப்பட்டார். திருச்சி நேஷனல் கல்லூரி பிரின்சிபால் தோழர் சாரனாத அய்யங்கார் அவர்கள் சென்ற ஜüலை மாதத்தில் டவுன் உபாத்திமைச் சங்கத்தின் 35-ம் வருட ஆண்டு விழாவில் ்ஆரம்பக் கல்வியும் அதன் புதிய போக்கும்” என்பது குறித்து பேசுகையில் வார்தாத் திட்டம் வெறும் விவகாரத் திட்டமேயொழிய காரியத்தில் வெற்றியாக நடக்காதென்றும் அத்திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் தமது பூணூலை துண்டித்து எறிவேன் என்றும் கூறினாராம். தவிர இத்திட்டம் பெரும்பாலும் கிராமாந்திரங்களுக்கே வகுக்கப்பட்டிருக்கிறது. இதில் கைத்தொழில் கற்பித்தல் தான் மிக முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. கிராமாந்திரங்களில் மக்கள் வறுமைப் பிணியால் வருந்துவதற்கு கைத்தொழில் தெரியாமலா அவர்கள் வருந்துகிறார்கள்? எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் நெசவுத் தொழில் செய்யத் தெரிந்தும் தொழில் கிடைக்காமல் ஊர் ஊராய் காவடி எடுத்துச் செல்லுகிறார்கள்? எத்தனை மக்கள் இன்னும் எத்தனையோ வகையான தொழில்கள் செய்யத் தெரிந்தும் தொழில் கிடைக்காமல் தவிக்கின்றனர். அப்படியே இவர் கூறுவதுபோல் இத்திட்டத்தில் சொல்லப்பட்டது போல் தொழிலிலே கற்று உதாரணமாக தையல் தொழிலே கற்று வருடா வருடம் வெளியேறும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் தையல் தொழில் எங்கிருந்து கிடைக்கும். அவர்கள் கற்ற கல்வியால் அடையும் பயன் அத்தொழிலாளிகள் உதாரணமாக 1 ரூ சம்பாதித்துக் கொண்டிருக்கிறவன் வருடா வருடம் கூலி அணாக்கணக்கில் வந்து சேருவதைத் தவிர பலன் வேறு என்ன? இம்மாதிரிதான் ஒவ்வொரு தொழிலின் நிலைமையும் வந்தடையும் என்பதற்கு என்ன சந்தேகம் என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் இத்திட்டத்தைக் குறித்து கண்டிக்காத ஒரு மகாநாடுகூட இருக்க முடியுமென்று நாம் நினைக்கவில்லை. ்அலஹாபாத் ஸ்டார்” என்ற ஆங்கிலப் பத்திரிகையில், இந்திய சட்டசபை மெம்பரும் பிரபல முஸ்லிம் தலைவருமான ஆலி ஜனாப் டாக்டர் சர்.ஜியாவுத்தீன் அகமது, ஸி.ஐ.ஈ., எம்.எல்.ஏ. அவர்கள் வார்தா கல்வித் திட்டத்தைப்பற்றி முஸ்லிம்களின் அபிப்பிராயத்தை குறித்து வெளியிடுகையில் “தோழர் காந்தியாரால் தயாரிக்கப்பட்டுள்ள கல்வி திட்டத்தில் முஸ்லீம்களின் மதக் கல்விக்கு வசதியளிக்கவில்லை. இது மறைமுகமாக முஸ்லிம்களின் கலை நாகரிகத்தைப் பறிமுதல் செய்வதாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம்கள் இவ்வாறு ஐக்கியமாக இருப்பதற்கு அவர்களது கலையும் நாகரிகமும் தான் காரணமென அறிந்தே அதை ஒழிப்பதற்கு கல்வியில் அவர்களது கலை, நாகரிகம் சம்பந்தமில்லாது செய்துவிட்டால் சுலபமாக தாங்கள் எண்ணிய காரியம் கைகூடும் என்று செய்த சூழ்ச்சியேயென்று எழுத வேண்டியிருக்கிறது.
ஆகவே இத்திட்டம் அவனவன் தான் தன் ஜாதித் தொழில் என்று ஒரு கூட்டத்தாரால் பிறப்பிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட தொழிலையே செய்து வர வேண்டும் என்பதும் மக்களை ஏய்த்து – ஏமாற்றி – உயிர் வாழ்பவன் என்றென்றும் அவ்வண்ணமே வாழ இடமளிப்பதும் என்பதுமேயொழிய காதறுந்த ஊசிகூட பாமர மக்கள் பயன் பெறப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. காட்டு மிராண்டித் தனத்துக்கு மக்களை கொண்டு செல்லும் இத்திட்டத்தை ஒழிக்க பொதுமக்கள் சிறப்பாக நமது தமிழ்மக்கள் உடனே தக்கவை செய்ய ஆங்காங்கு கண்டனங்கள் போட்டு அனுப்புவதோடு நின்றுவிடாமல் பாமர மக்களுக்கு இதனால் வரும் கேடுகளை விளக்கி தடுக்க வேண்டிய முறைகளையும் கைக்கொள்ளும்படி செய்வார்களாக.
தவிர இன்றைய ஆட்சி நமது மாகாணத்தை பொறுத்தவரையில் 4லீ கோடி மக்களில் 70 லக்ஷம் பேர்களால் அதாவது 15.5 சதவிகிதப் பேர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 215 பேர்கள் கையில் அதிலும் சிறப்பாக பிரதம மந்திரி கையில்தான் இருந்து வருகிறது. பொது மக்களது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலாகாக்களில் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆதலால் பொதுமக்களில் 85 சதவிகிதமுள்ள மீதியுள்ள ஓட்டுரிமையற்ற மக்கள் தங்களுக்கு அச்சிறுபான்மையினரால் வரும் கேடுகளை அறிந்து அதைத் தடுக்கத் தக்கவைகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமானதோடு இவர்களது கடமையுமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 06.11.1938