குடு குடுப் பாண்டி

 

குடு குடு, குடு குடு குடு, குடுக் குடுக்.

சதியாலோசனை நடக்குது சதியாலோசனை நடக்குது நடக்குதூ. குடு குடு, குடு குடு, குடுக் குடுக்.

அந்த மூலையிலெ நடக்குது.

கடலோரத்திலே, காற்று வாக்கிலே, பத்து மந்திரி கூட்டத்திலே மாபாவிகள் நினைப்பிலே நடக்குது, நடக்குது, சதியாலோசனை நடக்குது.

குடு குடு குடு குடு குடுக்.

என்ன நடக்குது சொல்லடி கம்பளத்தாயி? குடு குடு குடு குடு குடக்.

பத்திரிகையை நிறுத்தலாமா? ஜாமீன் கேட்கலாமா?

பாண்டியனைப் பிடிக்கலாமா? விஸ்வநாதனைப் பிடிக்கலாமா வேண்டாம் – வேண்டாம், ராமசாமி ஒருவனைப் பிடித்தால் போதும். அப்புறம் பத்திரிக்கையைப் பிடிக்கலாம் என்று நடக்குது நடக்குது சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடக்.

ஒரு பழைய சொக்காய் நீங்கள் கட்டிக் கிழித்த பீத்தல் துணி கொடுங்க.

நடக்குது நடக்குது அந்த மூலையிலே நடக்குது. இந்தி எதிர்ப்பு படைக்கு 144 போடலாமா என்னு நடக்குது சதியாலோசனை.

வாண்டாம் – வாண்டாம் பெருசு பண்ணாதே பெரிசு பண்ணாதே பெரிசு பண்ணாதே எங்குது ஒரு மந்திரி. குடு குடு குடு குடு குடக்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் சட்ட விரோதம் எண்ணு உத்திரவு போடு எங்குது ஒரு மந்திரி. ஐயோ வாண்டாம் ஐயோ வாண்டாம் என்குது ஒரு அய்யங்கார் மந்திரி. குடு குடு குடு குடு குடக் குடக்.

இன்னம் நடக்குது இன்னம் நடக்குது சதியாலோசனை இன்னம் நடக்குது. பேப்பரை பிடிக்க.

குடி அரசு – கட்டுரை – 28.08.1938

You may also like...