* சைமன் ராமசாமி மறுப்பு
காங்கரஸ் பத்திரிகைகளின் புரட்டும் யோக்கியதையும்
திருச்சி. செப். 21.
பிரபல தினசரிகளாகிய “ஹிந்து” “சுதேசமித்திரன்” “தினமணி” “ஜெயபாரதி” முதலியவைகளில் தமிழ் படையினர் தவிப்பு, காங்கரஸ் கட்சியின் உதவி, தமிழ் படைத்தலைவர் குட்டு வெளியாகியது, வசூல் ரூ.1000 எங்கே? ஈ.வெ.ரா.வின் யோக்கியதை, படையினர் சந்தியில் விடப்பட்டனர், ஊர்போகப் பணங்கிடையாது என்று 17-9-38ந் தேதி “ஜெயபாரதி”யிலும், ஜெயிலுக்குப் போகிறாயா? பட்டினி கிடக்கிறாயா? என்றும் இன்னும் அயோக்கியத்தனமாகவும் 17-9-38 “தினமணி”யிலும், தெருவில் தவிக்கவிடப்பட்டனர் என்று 16-9-38 “சுதேசமித்திர”னிலும் தலைப்புகள் கொடுத்தும் அறிக்கை கொடுத்தவர்கள் நால்வர்களில் என் பெயரை முதலில் பிரசுரித்தும் இருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப் போனேன். பத்திரிகா உலகு இவ்வளவு கட்டுப்பாடாயும் கேவலமாயும் நடப்பதையறிந்து மனமுடைந்து போனேன். அவ்வறிக்கையில் கண்டது அத்தனையும் சுத்தக் கட்டுக்கதை என்றும் புராணப் புரட்டு என்றும் அதற்கும் எனக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது என்றும் இவ்வறிக்கையின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.
இத்துடனில்லாது, சென்னை சட்டசபை காங்கரஸ் கட்சியினர், எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு போட்டு, டிக்கட் வாங்கிக்கொடுத்து, தமிழர் படையினர்களை அனுப்பியதாக “ஜெயபாரதி”யில் வந்திருக்கும் செய்தி பெரும் பொறுப்பற்ற பொய்களில் ஒன்றாகும். அத்தகைய காரியங்கள் யாதும் நடைபெற வில்லையென்பதையும் இதனால் பொது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க சோம்பேறிக் கூட்டத்தார் கையாளும் பல சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதவும். நம் செந்தமிழ் மக்கள் இனிமேலாவது இம்மாதிரியான கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்தை நம்பாதிருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
சைமன் ராமசாமி என்கின்ற
எஸ். ராமசாமி,
துறையூர்.
(குடி அரசு – 25.09.1938, பக். 8)