பகிரங்கப் பேச்சு – கொறடா

 

“நம் ராஜாஜி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் அதில் தவறு இருக்குமா? தவறுதான் இருந்தாலும் அதைத் தவறு என்று தான் எண்ண முடியுமா? அப்படியே யாராவது எண்ணிவிட்டாலும் மகாத்மா காந்திதான் அப்படி எண்ணுவதற்கு இடங்கொடுத்து விடுவாரா? ஒருக்காலும் இடங்கொடுக்கமாட்டார் என்பதை, மகாத்மா காந்தி தாம் சமீபத்தில் எழுதிய “ஹரிஜன்” கட்டுரையின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டார். ஹிந்தி எதிர்ப்பாளர்கள் விஷயத்தில் ராஜாஜி நடந்து கொண்டதும், அதன் சம்பந்தமாக அவர் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்ததும் சரிதான் என்று மகாத்மா காந்தி அக்கட்டுரையில் கூறிவிட்டார். “மகாத்மா காந்தியே சரிதான் என்று கூறிவிட்ட பிறகு, ராஜாஜி செய்தது தவறு என்று கூற யாருக்கு வாயிருக்கிறது?” என்று சில பத்திரிகைகளும் கூறிவிட்டன.

~subhead

அனாவசியம்

~shend

வாஸ்தவந்தான். மகாத்மா காந்தி ஒருவர் செய்ததில் எது சரி. எது தவறு என்பதை யோசித்துப் பார்க்காமலா கூறுவார்? கூறமாட்டார் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனாவசியமாக மற்றோர் விஷயத்தையும் காந்தி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் என்று கூடக் கூறுவேன். ராஜாஜியைப் போன்ற சிறந்த அறிவாளி, வேறு எந்த மாகாணத்திலும் முதன் மந்திரியாயிருக்கவில்லை யென்பது மகாத்மாவின் கருத்து. இதைப் பற்றி மற்ற மாகாணங்களில் பிரதம மந்திரி ஸ்தாபனங்களிலிருப்பவர்கள் ஒருவேளை பொறாமைப்படலாம். சிலர் ராஜாஜியின் நுட்பபுத்தி தமக்கும் இல்லாமல் போய்விட்டதேயென்று வயிற்றில் குத்திக்கொள்ளலாம். அவர்கள் அப்படிக் குத்திக்கொண்டு செத்தாலும் சரிதான். நுட்பபுத்தியில் ராஜாஜியை விடச் சிறந்தவர்கள் வேறு யாருமே இல்லை யென்பதை நானும் தைரியமாகக் கூறித்தான் தீருவேன். தோழர் ராஜகோபாலாச்சாரியார் மகாபுத்திசாலி என்பதை நாமெல்லோரும் நன்றாய் அறிந்திருந்தும் அதை மகாத்மாவும் எடுத்துக் கூறியது அனாவசியம் என்றுதான் கூறவேண்டும்.

~subhead

எனக்குத் தெரியாது

~shend

மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந்திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார். கடைசியில் அச்சட்டத்தை சீக்கிரத்தில் ரத்துச் செய்யாவிட்டால் அது பெரியமுட்டாள் தனமென்கிறார். இதில்தான் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்தது சரியென்றால் அதை சீக்கிரத்தில் ரத்துச்செய்யாதது எப்படி முட்டாள்தனமாகும். ரத்துச் செய்யாதது முட்டாள்தனமாகில், அதை உபயோகித்தது எப்படி சரியானதாகும்? இந்த விஷயந்தான் எனக்கும் என்னைப்போன்ற இன்னும் அநேகருக்கும் புரியவில்லை. ஆனால் இதன் கூடார்த்தப் பொருள் ஒரு வேளை ராஜாஜிக்கும் மகாத்மாவுக்கும் மாத்திரம் புரிகிறதோ என்னமோ, அது எனக்குத் தெரியாது.

~subhead

அதற்கும் தயார்

~shend

அது போகட்டும். இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் ராஜாஜி வீட்டிற்கு முன்பு நின்றுகொண்டு அவரை வாயில் வந்தபடி யெல்லாம் தூஷிப்பது உண்மையானால், அது அக்கிரமந்தான். அதை ஞானமோ மரியாதையோ உள்ளவர்கள் யாரும் சகித்துக்கொண்டு மிருக்க முடியாது. இவ்விதம் திட்டும் விஷமங்களை அடக்க அதிகாரத்திலிருக்கும் ஒரு பிரதம மந்திரி தக்க முறைகளைக் கையாளுவாராகில் அதைக் கண்டு நியாய புத்தியுள்ளவர்கள் யாரும் வருத்தப்பட இடமில்லை. தொண்டர்கள் தூஷிப்பது வாஸ்தவமென்றால் அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென்றுதான் நானும் பிடிவாதமாகக் கூறுவேன். ஆனால் இதற்கு சாதாரண சட்டங்கள் போதாதா? நாம் வெறுத்த – நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத்தானா நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மாஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமே யென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு “தேசத்துரோகி”ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

~subhead

கையில் கிடைத்த ஆயுதம்

~shend

“நடுநிசியில் திடீரென்று திருடன் வந்துவிட்டான். அவனை அடித்து விரட்ட கையில் கிடைத்த தடியைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, அதைத் தொடலாமா இதைத் தொடலாமா என்று எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என்று ராஜாஜி கேட்கிறார். அவ்வளவு பெரிய ஆபத்தான திருடன் வந்துவிட்டானென்ற எண்ணம் ராஜாஜிக்கு எந்த காரணத்தினால் உதயமாகிறதோ வென்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் நிதானத்தை இழந்து, இந்தி தொண்டர்களை அடக்க கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்ட இக்காரியம், எவ்விதம் காங்கரசிற்கே வெட்கக் கேடானதாகப் போய்விட்டதென்பதை ராஜாஜி கொஞ்சம் பெரிய மனது வைத்து யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

~subhead

வாயிருக்கா?

~shend

கிரிமினல் திருத்தச் சட்டம் கொடியது என்றே மத்திய மாகாணத்தில் அதை ரத்துச் செய்திருக்கிறார்கள். சென்னை காங்கரஸ் சர்க்கார் அதை ரத்துச் செய்யாதது மாத்திரமல்ல. அதை உபயோகித்துவிட்டு, உபயோகித்தது சரிதான் என்றும் கூறுகிறது. எல்லைப்புற மாகாணத்தில் சட்டசபை, அச்சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று தீர்மானஞ் செய்தது. கவர்னர் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். சட்டசபைத் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டு கவர்னர் நடக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்த என்ன செய்வதென்பதைக் குறித்து எல்லைப்புற காங்கரஸ் மந்திரிகள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். ராஜாஜி அச்சட்டப் பிரயோகம் சரிதான் என்று கூறிய பிறகு எல்லை மந்திரிகள் கவர்னரிடம் கொஞ்சம் முரண்டிப் பேச இப்பொழுது வாயிருக்கிறதா?

~subhead

வெட்கக் கேடல்லவா?

~shend

அது போகட்டும் மற்றோர் தமாஷையும் கூறுகிறேன். டில்லியில் கிரிமினல் திருத்தச்சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. இதைக் கண்டிக்க ஜனாப் அஸாப் அலி இந்திய சட்டசபையில் ஒரு அவசரத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸúம் கொடுத்துவிட்டார். டில்லி பிரதம கமிஷனர் உடனே என்ன செய்தார் தெரியுமா? டில்லியில் அச்சட்டத்தை நான் உபயோகிப்பது சரிதான் என்பதற்கு, ராஜாஜி சென்னையில் அச்சட்டத்தைப் பற்றிக் கூறிய சப்பைக் கட்டுகளையே ஆதாரமாக எடுத்துக் கூறிவிடுவதாகக் கூறினார். இது என்ன வெட்கக் கேடாகி விடுமேயென்று இந்திய சட்டசபை காங்கரஸ் கட்சியினர் அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில்லையென்று தீர்மானித்து விட்டார்களென்பது பகிரங்க ரகசியம். இதே கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் போன்றதோர் கொடிய சட்டத்தை சர்.சி.பி. ராமசாமி ஐயர் திருவாங்கூரில் பிரயோகித்திருக்கிறார். அவரும் இதற்கு ராஜாஜியை ஆதாரமாகக் காட்டுகிறார். இது காங்கரசிற்கும் ராஜாஜியைப் போன்ற அதி நுட்ப புத்திசாலிகளுக்கும் வெட்கக்கேடானதல்லவா?”

குடி அரசு – கட்டுரை – 02.10.1938

You may also like...