தர்மம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆனால் அதற்குப் பொருள் பலர் பலவிதமாக சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் சாதாரணமாக தர்மம் என்பதற்குப் பொருள் கூறும்போது தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும், மனிதனின் இயற்கைத் தன்மைக்கும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்யவேண்டிய உதவிக்கும், மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்கு செய்ய வேண்டிய கடமை என்பதற்கும், பொதுவாக இயற்கையென்பதற்கும் உபயோகப்பட்டு வருவதோடு பெரும்பாலும் பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. எது எப்படியிருந்த போதிலும் நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப் படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்கிற உதவியை தர்மம் என்று கருதி அதையே உங்கள் கடமையாகவுங்கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப்பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம் கடமை என்பது காலதேச வர்த்தமானத்துக்கேற்றவாறு அவ்வப்போது மாறுதலடையக்கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல் மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்கவேண்டியது அல்ல வென்பதை உணர்ந்து கொண்டால் தான் நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்பதோடு நமது தர்மமும் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும். அப்படிக்கில்லாமல் நமது பெரியோர்கள் செய்து வந்தார்கள், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அவதாரங்களும் ஆச்சாரிகளும் எழுதிவைத்தார்கள், வெகு காலமாக நடந்து வருகிறது, அநேகம் பேர்களும் செய்து வருகிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக்கொண்டு கண்மூடித் தனமாக அதன் பலா பலன்களைக் கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும்.

ஏனெனில் ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப்படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து அவற்றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக்கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும் ஏமாந்த தனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக்கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக்கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை முட்டாள்தனமென்றும், தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கத்தக்கதான தேசத்துரோகமென்றும் தோன்றி அநேகர்களுக்கு பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவைகட்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றி விட்டது. ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு உத்திராட்சத்தையும் துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது திருடர்களுடையவும் சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடுகிறவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கள்ளையும் சாராயத்தையும் குடிக்கக்கூடியதாகவும், ஆட்டையும் எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதை கும்பிட்டுக்கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக்கொண்டு தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவைகள் காட்டுமிராண்டித்தன மென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும் பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது; பன்றி தின்பது அதர்மமாக இருக்கின்றது. வேறொரு கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையும் சாப்பிடுவது தருமமாக யிருக்கிறது. பிறிதொரு கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமாயிருக்கிறது.

ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைப்படி கள்ளு சாராயம் குடிப்பது தர்மமாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவைகளைத் தொடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்பந்தமுறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தை பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன் பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக்கிறார்கள். ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத் தனத்தை வெறுக்கிறார்கள். இன்னொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாகக் கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்கியமற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனம் என்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது. மேலும் இதுபோலவே சாஸ்திர விஷயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்கு கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்லுகிற மனுதர்ம சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அது சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர்களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்துக்கொளுத்தப்படுகிறது. இது போலவே காலத்திற்கும் தேசத்திற்கும் அறிவிற்கும் தகுந்தபடி தருமங்கள் மாறுவது சகஜமாகயிருக்கிறது.

ஆகையினால் தருமமென்கிற விஷயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தை யெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து மிக்க அவசியமென்றும் பயன் படத்தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தருமமாகும்.

– ஈ.வெ.ரா.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை நவம்பர் 1936

~front

You may also like...