ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்

 

தலைவர் அவர்களே!

சகோதரர்களே!

நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே.ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்ட நீங்கள் என்னை பேசிவிட்டுத்தான் போகவேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகளிருக்கின்றன. என்னைப்பற்றி கூட்டத் தலைவர் நான் முஸ்லிம்களுக்கு அதிகம் வேலை செய்து வருவதாகவும், எனது பார்வையில் நடக்கும் பத்திரிகைகள் முஸ்லிம்களின் நன்மைக்கு தொண்டாற்றுவதாகவும் புகழ்ந்தார்கள். அப்படி அவர்கள் என்னைப் புகழ்ந்தது என்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் உற்சாக மூட்டுவதற்காகவும் சொல்லப்பட்டனவைகளாகவே கருதுகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் பிராமணரல்லாதாருடைய நன்மைக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர்கள் நன்மைக்குமே நான் முஸ்லிம்களுடைய உதவியை நாடியதாக இருக்குமே ஒழிய நான் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்திருக்க முடியாதென்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்றியும் முஸ்லிம்களுக்கு இன்று யாருடைய உதவியும் தேவையில்லை. இன்று இந்து மத சம்பிரதாயப்படி முஸ்லிம்களைப் பற்றி என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதையே ஆதிதிராவிடர்களுக்கும் எழுதப்பட்டிருக்கிறது.

பார்ப்பனர் தவிர மற்றெல்லாரும் ஒன்றே

மற்ற பிராமணரல்லாத ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களைப் பற்றியும் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுவாகப் பார்த்தால் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத பார்ப்பனர் தவிர மற்ற இந்துக்களும் ஆதிதிராவிடர்களும் மிலேச்சர்கள், தாழ்ந்த ஜாதி மக்கள் என்றுதான் இந்து சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருப்பதால் நாம் மூவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்தாலொழிய எந்தத் துறையிலும் நமது சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பெற்று முன்னேற முடியாது.

எனது நண்பர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “மெஜாரட்டி கட்சியாராகிய நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் கட்டாய இந்தியை மைனாரட்டியார் எப்படி தடுக்கலாம்” என்று கேட்கிறார். நமது சென்னை மாகாணத்தில் 100-க்கு 97-பேர்களாகிய பிராமணரல்லாதார் 100-க்கு 3-பேர் வீதமுள்ள மைனராட்டி பிராமணர்கள் நாட்டை விட்டு ஓடி விடச் சொன்னால் ஓடி விடுவார்களா? என்று கேட்கிறேன். நண்பர் கனம் ஆச்சாரியார் எப்படி மெஜாரட்டியடைந்தார் என்பதை பொது ஜனங்கள் கவனிக்க வேண்டும். இந்தியை கட்டாயப்படுத்தப் போவதாகச் சொல்லி மெஜாரட்டி பெற்றாரா? இந்த அரசியல் சட்டத்தை ஒழிப்பதாக சொல்லி ஓட்டுப் பெற்றாரா?

மெஜாரட்டிக்கு மைனாரட்டி கீழ்படிய வேண்டுமா?

மெஜாரட்டி பெற்று விட்டதாலேயே எல்லோரும் பூணூல் போட்டு உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டுமென்று சொன்னால் எல்லோரும் கீழ்ப்படிய வேண்டுமா? மாட்டேன் என்றால் “அடக்குமுறை செய்து ஆறு மாதம் ஒரு வருஷம் கடின காவல் தண்டிப்பது தான் மெஜாரட்டி நீதியா?” என்று சொன்னதோடு காங்கரஸ் சபையிலும் ஆச்சாரியார் ஆட்சியிலும் பிராமணரல்லாதார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் செய்யப்பட்டு வரும் அநீதங்களை அநுபவ பூர்வமாக ஆதாரத்துடன் 2மணி நேரம் பேசினார்கள்.

இந்தி எதிர்ப்புப்படையின் அவசியம்

முடிவாகப் பேசுகையில் இந்த ஜில்லாவிலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்படுவதின் அவசியத்தைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அப்படைக்கு முஸ்லிம்கள் வேண்டிய ஆதரவு கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இப்படையை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் சித்தக்காடு கே.ராமய்யாவைப்பற்றி குறிப்பிடுகையில் கூறியதாவது:- “தோழர் ராமய்யாவை எனக்கு 15 வருஷங்களுக்கு அதிகமாக பழக்கமுண்டு. நான் காங்கரசிலிருக்கும்போதும் அவர் காங்கரஸ்காரர். பிறகு இன்றுவரை சுயமரியாதைக்காரராகவு மிருந்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்புப் படைக்கு வேண்டிய ஆதரவைக் கொடுத்து உதவி செய்ய வேணுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்”.

குறிப்பு: 30.08.1938 இல் ஆம்பூர் மகமதலி சவுக்கில் “அஞ்சுமனெ முஹ்ஸினுல் இஸ்லாம்” சார்பில் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 04.09.1938

You may also like...