ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்

 

ஏப்ரல் மாதத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்னும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளுக்கு தேர்தல் நடக்கப் போகின்றது. இத்தேர்தல்கள் சென்ற நவம்பர் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டியவைகளாகும். ஆனால் நவம்பரில் தேர்தல் நடத்துவதில் காங்கரஸ்காரர்களுக்கு சிறிது கஷ்டமிருந்தது. என்னவெனில் முனிசிபல் ஓட்டர்களாக அப்போது முனிசிபாலிட்டிக்கு வரி செலுத்துகின்றவர்கள் மாத்திரம் இருந்து வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாதாராய் இருந்ததோடு சிறிது விஷயமறிந்த ஞானவான்களாகவும் இருந்தார்கள். அந்த ஓட்டர்களைக் கொண்டு தேர்தல் நடந்தால் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களும் அதுவும் முன் இருந்தவர்களில் பலருமே வருவார்கள் என்றும் அதனால் பார்ப்பனர்களோ பார்ப்பனக் கூலிகளோ வர முடியாமல் போய்விடுமென்றும் கருதி அது சமயம் நவம்பரில் நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி விட்டு பெரிதும் பாமர மக்களைக் கொண்ட (அசம்பிளி) மஞ்சள் பெட்டி ஓட்டர்கள் அத்தனை பேரையும் முனிசிபல் ஓட்டர்களாக ஆக்க ஒரு சூò செய்தார்கள்.

~subhead

சகல பார்ப்பனரும் ஓட்டர்கள்

~shend

அப்படிச் செய்தும் பார்ப்பன மந்திரிகள் தங்கள் இனத்தாரும் தங்கள் கூலிகளும் கவுன்சிலுக்கு வரமுடியாது என்று கருதி சகல பார்ப்பனர்களும் ஓட்டர்களாகும்படியான மற்றோர் சூò செய்தார்கள். அதென்னவெனில் “எழுதப் படிக்கத் தெரிந்தவர் எல்லோரும் ஓட்டர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்” என்று ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இதனால் அந்த முறைப்படி பார்ப்பனர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் ஆண் பெண் அத்தனை பேரும் ஓட்டராக முடிந்தது. ஏனெனில் பார்ப்பனர்களில் இன்றைய சர்க்கார் கணக்குப்படி 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். அவர்களில் படியாதவர்கள் ஆணிலோ பெண்ணிலோ ஒருவர் கூட காண முடியாது. அதிலும் முனிசிபல் பட்டணங்களாகிய நகரங்களில் கண்டிப்பாய் பார்ப்பனர்களில் ஒருவர் கூட படியாதவர்கள் இருக்கமாட்டார்கள். கோவில்மணி, உண்டை கட்டி, காப்பிக் கடை, சந்து மாமா, அம்மங்கார் ஈராக சகலரும் படித்து இருக்கிறார்கள். “இந்த அக்கிரமமான அந்நிய ஆட்சியாகிய சைத்தான் ராஜாங்கத்தில்” பார்ப்பனரல்லாதார் தான் 100க்கு 5 பேர், 6 பேர், பெண்களில் 1000க்கு 5 பேர் 8 பேர் படித்திருக்கிறார்களே ஒழிய பார்ப்பனர்களைப் பொருத்தவரை இருபாலரும் 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் பார்ப்பனர்கள் தேசபக்தர்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் ராஜ பக்தர்கள் என்றும் அதனால் பார்ப்பனரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படவில்லை என்றும் இந்த அந்நிய ஆட்சியை ஒழித்து சக்கரவர்த்தியையும் அழித்து விட்டால் தான் பார்ப்பனரல்லாதாருக்கும் கல்வி வருமென்று சொல்லுகிறார்கள். உண்மையாகவே பார்ப்பனரல்லாதாருக்கு பிறந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்களில் அநேகர் இதை நம்பி பார்ப்பானுக்கு குனிந்து கொடுக்கிறார்கள். அந்நிய அக்கிரம ஆட்சியிலே பார்ப்பான் மாத்திரம் 100க்கு 100 பேர் படிக்க முடிந்த சூழ்ச்சி என்ன என்பது இந்த உண்மைச் “சூத்திரர்களுக்கு” தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்கட்டும் இன்று படித்தவர்களுக்கு எல்லாம் ஓட்டு என்பதால் பார்ப்பனர்கள் அத்தனை பேரும் ஓட்டர்களாகி சகல வார்டுகளிலும் கலகம் செய்யத்தக்க சக்தி அடைந்து விட்டார்கள். பார்ப்பனரல்லாதாரில் படிப்பு இருந்தவர்கள் எல்லாம் அதாவது மிக குறைந்த எண்ணிக்கையாய் இருந்தவர்கள் அவர்களுக்கு உள்ள வீடு சொத்து பூமி ஆகியவைகளைக் கொண்டு ஏற்கனவே ஓட்டராகி இருந்ததால் அவர்களில் அதிகம் பேர் புதிதாக ஓட்டராக முடியவில்லை.

~subhead

அதிகாரிகள் கொடுமை ஒருபுறம்

~shend

அதோடு கூடவே காங்கரஸ் ஆட்சிக்குப் பயந்த ரிவினியூ அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும் ஓட்டர்களை பதிவு செய்வதிலும் காங்கரஸ் காலிகளுக்கே அதிக இடம் கொடுத்து வந்தார்களே தவிர அவர்களால் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனாலும் பார்ப்பனரல்லாதார்கள் ஓட்டுரிமை அவர்களது ஜன சங்கைக்கு தகுந்தபடி ஏற்பட வழி இல்லாமல் போய்விட்டது.

~subhead

மந்திரிகள் தலையீடு

~shend

இவ்வளவு மாத்திரமல்லாமல் இப்போது இருந்து வரும் முனிசிபல் நிர்வாகத்திலும் பார்ப்பன மந்திரி ஆதிக்கம் அனாவசியமாய் பிரவேசித்து எந்தெந்த வழிகளில் நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட முடியுமோ அவற்றிற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

இவ்வளவும் செய்து இப்போது தங்களுக்கு ஆங்காங்கு சிறிது செளக்கியம் ஏற்பட்டிருக்கிறது என்கின்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகே 4 மாதம் கழித்து தேர்தல் நடக்க உத்திரவு போட்டிருப்பதோடு பழய வர்ணப் பெட்டி (மஞ்சள்) புரட்டில் உள்ள அளவுக்கு மீறிய நம்பிக்கையில் முனிசிபல் தேர்தலுக்கும் வர்ணப் பெட்டி முறைவைத்து நடத்த உத்திரவு போட்டிருக்கிறார்கள்.

~subhead

காங்கரஸ் காலித்தனம்

~shend

இவ்வளவும் செய்ததோடு அவர்கள் திருப்தியடையாமல் இனியும் அவர்களாலான காரியங்கள் அதாவது தேர்தல் காலங்களில் அவர்கள் வழக்கமாக நடத்தி வரும் காலித்தனம் முதலியவைகளும் செய்வார்கள். அதாவது கொடி ஊர்வலம் என்னும் பேரால் வசவு பஜனை, எதிரிகள் வீட்டின் மீது கல், மண் வாரி வீசுவது, கூட்டங்கள் போட்டு அயோக்கியத்தனமாய் போக்கிரித்தனமாய் வேண்டுமென்றே பொய்யும் புளுகும் ஆபாசப் பேச்சுகளும் கொட்டி அளப்பது, காங்கரஸ் அல்லாதார்கள் கூட்டம் போட்டால் அங்கு போய் கேள்வி கேட்பது என்னும் பேரால் கலகம் செய்வது கல் மண் வாரி இறைப்பது, பாம்பு விடுவது, காந்திக்கு ஜே! சத்தியமூர்த்திக்கு ஜே! உபயதுல்லா குப்புசாமிக்கு ஜே! போட்டு தொல்லை விளைவிப்பது, பக்கத்தில் தப்பட்டை அடிப்பது, கள்ளு வாங்கிக் கொடுத்து போதையேற்றி கலகம் செய்யும்படி அனுப்புவது முதலான பல காரியங்கள் செய்வதோடு காங்கரஸ் கட்சி மந்திரிகள் பெயரைச் சொல்லி போலீசார்களை மிரட்டி அவர்களை தங்கள் கடமைகளைச் செய்ய ஒட்டாமல் செய்து கூட்டங்களை கலைப்பது, இவைகளோடு மாத்திரமல்லாமல் இது சம்பந்தமான அதிகாரிகள் பார்ப்பனர்களாய் இருந்து விட்டால் அவர்களது வகுப்புணர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு பச்சையாக அடி தடிக்குப் புறப்படுவது முதலிய காரியங்களை செய்துதான் தீருவார்கள்.

பல காரணங்களால் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் இம்மாதிரி காரியங்கள் நடக்காதிருக்கலாம் என்றாலும் இந்த முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்களில் 100க்கு 90 இடங்களில் காங்கரஸ் தோழர்கள் இந்த முறையில் தான் எலக்ஷன் காரியங்கள் நடத்தப் போகிறார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. காஞ்சீபுரம் போன்ற இடங்களில் இப்போது காங்கரஸ்காரர்கள் நடந்து வரும் மாதிரியும், அதற்கு சில காலிகள் ஆதீனத்தில் உள்ள பத்திரிகையின் தூண்டுதலும் இதற்கு போதிய உதாரணமாகும்.

~subhead

ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கரசுக்கு என்ன வேலை?

~shend

இவை ஒரு புறமிருக்க ஸ்தல ஸ்தாபனங்களை காங்கரஸ்காரர்கள் கைப்பற்ற வேண்டும் என்கிற ஆத்திரம் ஏன் என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். சுமார் 18 வருஷ காலமாகவே “ஒத்துழையாமை” காங்கரஸ் ஏற்பட்டு பதவிகளை வேட்டையாட சூழ்ச்சி செய்த காலமாகிய 1920ம் வருஷம் முதல் கொண்டே ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் கட்சிப் பிரதிகட்சி பேரால் காங்கரஸ் பிரவேசம் கூடாது என்றும் தனிப்பட்ட நபர் போட்டி போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறி வந்திருப்பதோடு ஸ்தல ஸ்தாபனங்களைப் பொருத்தவரை கட்சிக் கொள்கைகளில் வித்தியாசம் இல்லை என்றும், இருந்தாலும் மேலே உள்ள இலாக்காவால் செய்யப்பட்ட சட்டப்படி தான் நடக்க வேண்டுமென்றும் சொல்லி வந்திருக்கிறோம். இதை இப்போதைய முதன் மந்திரியும் அப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கு விரோதமாக எவ்வித சமாதானமும் இதுவரை யாரும் கூறவுமில்லை அல்லது செய்கையாலாவது எவ்வித மாறுதலும் காட்டப்படவில்லை.

ஆகையால் ஸ்தல ஸ்தாபனங்களில் கòப் பெயரை உபயோகிப்பதானது உபயோகித்துப் போட்டி போடுகிறவர்களுக்கு சொந்தத்தில் கவுன்சிலராகவோ போர்டு மெம்பராகவோ ஆவதற்கு தகுதியும் யோக்கியதையும் இல்லை என்றோ தான் அர்த்தமாகுமே தவிர வேறு பொருள் அதிலிருப்பதாக யாராலும் கூறமுடியாது.

~subhead

முட்டாள் காரணங்கள்

~shend

அப்படிக் கூறுவதானால் தோழர் சத்தியமூர்த்தியாரவர்கள் மானாமதுரையிலும் மற்ற இடங்களிலும் சொன்னதுபோல் அசட்டுத்தனமான முட்டாள்தனமான அரசியல் ஞானமில்லாத காரியங்களைத்தான் சொல்லக்கூடும். அதாவது “காங்கரசுக்கு ஓட்டு போட்டுவிட்டால் மழை பெய்யும், போலீஸ்காரன் குனிந்து சலாம் போடுவான், வரி இருக்காது, வரி குறைக்கப்படும்” என்றெல்லாம் முட்டாள்தனமாகவோ அல்லது மக்களை ஏமாற்ற வேண்டுமென்ற அயோக்கியத்தனமாகவோ பேசலாம். ஆனால் அவை உண்மையா? அந்தப்படி நடக்குமா என்று பார்த்தால் அப்படிச் சொல்லி ஓட்டு வாங்கிய டில்லி அசம்பிளி மெம்பர், சட்டசபை மெம்பர் ஆகியவர்கள் எங்கு மழை பெய்யச் செய்தார்கள்? எங்கே போலீஸ்காரன் குனிந்து சலாம் போட்டான்? எந்த வரி எடுபட்டது என்று பார்த்தால் விளங்கிவிடும். அவ்வளவு தூரம் கூட போக வேண்டியதில்லை. அப்படிச் சொன்ன தோழர் சத்தியமூர்த்தி இன்று எங்கே? என்ன சொல்லுகிறார் என்று பார்த்தாலே போதும். விலாசம் தெரியாமல் இருந்து கொண்டு 2 மாதம் 3 மாதத்துக்கு ஒரு முறை மந்திரிகள் பேரில் சூசனையாய் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

~subhead

சட்டசபை மெம்பரான பிரசாரகர்கள்

~shend

மற்ற பிரசாரகர் கதி என்னவென்று பார்த்தால் அவர்கள் சட்டசபை மெம்பர்களான பிறகு நமது வரிப்பணத்தில் மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு பார்ப்பன மந்திரி, மலத்தை ஆகாரம் என்று சொன்னால் “ஆம், நானும் ஆராய்ச்சி செய்தேன், அதில் வைட்டமின் அ.ஆ.இ.ஈ., கூட இருக்கிறது” என்று கூறிக்கொண்டு வயிறு வளர்க்கிறார்கள். இவை தவிர மஞ்சள் பெட்டியால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்று கேட்கிறோம்.

ஆகவே கட்சி முறையில் தேர்தல் கடந்த சட்ட சபையிலேயே ஒரு நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் முனிசிபாலிட்டியில் தாலூகா போர்டில் கட்சிப் பிரதி கட்சியால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் என்று கேட்கின்றோம். கட்சி புகுந்தால் கலகம் குழப்பம் காலித்தனம் ஏற்பட்டு நிர்வாகம் குட்டிச் சுவராகலாம்.

~subhead

முன்பு கூறியது

~shend

கொஞ்ச காலத்துக்கு முன் இதே தேர்தல்கள் நடந்த காலத்தில் காங்கரஸ்காரர்கள் தாங்கள் போட்டி இடுவதற்கு வேறு பல காரணங்கள் சொன்னார்கள். என்றாலும் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்ற பல ஸ்தல ஸ்தாபனங்களில் அவைகள் பரீòக்கப்பட்டாய் விட்டது.

அதாவது காங்கரசுக்காரர்களல்லாதார் மெஜாரிட்டியாய் இருக்கும் ஸ்தல ஸ்தாபனங்களில் கட்சி இருப்பதாகவும் கட்டுப்பாடு இல்லையென்றும் கண்ட்ராக்ட் ராஜ்ஜியமாயிருக்கிற தென்றும், லஞ்சம் தாண்டவமாடுகிறதென்றும், வகுப்பு உணர்ச்சியில் நிர்வாகம் நடத்தப்படுகிறதென்றும் தேசீய உணர்ச்சி இல்லை என்றும், பலவாராக குறைகூறி மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்றார்கள். அந்தப்படி ஓட்டுப்பெற்று மெஜாரிட்டி அடைந்து கைப்பற்றிய முனிசிபாலிட்டியையும் ஜில்லா போர்டையும் எந்த விதத்தில் மேலே சொன்ன குற்றங்களில் இருந்து விலக்கி தப்பித்துக் கொண்டனர் என்று கேட்கின்றோம்.

இன்று காங்கரஸ் மெஜாரிட்டி பெற்ற எந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டில் கட்சி இல்லை என்று கூற முடியும். எதில் கட்டுப்பாடு இருக்கிறது என்று சொல்ல முடியும். காங்கரஸ் கைப்பற்றிய பல ஜில்லா போர்டுகளில் தங்களுக்குள்ளாகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் வந்தன. சில தோற்றும் விட்டன.

காங்கரஸ் மெஜாரிட்டியாய் வந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவற்றில் காங்கரசின் பேரால் நிருத்தப்பட்ட தலைவர்கள் தோற்றார்கள். வெளிப்படையாகவே காங்கரஸ் மெம்பர்கள் எதிர்கட்சித் தலைவருக்கு ஓட்டு செய்தார்கள். சிலரதில் பணம் வாங்கிக் கொண்டு எதிரிகளுக்கு ஓட்டு செய்தவர்கள் என்று சந்தேகப்பட்டு அடியோடு ராஜினாமாச் செய்யச் செய்தார்கள்.

சிலரதில் எதிரிக்கு ஓட்டு போட்டவர்களை காங்கரசிலிருந்து தள்ளி வைத்து மெம்பர் பதவியை ராஜினாமா கொடுக்கும்படி செய்து பிறகு அதே நபருக்கு மந்திரி வேலை கொடுத்தார்கள். காங்கரசின் பேரால் வந்தவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்தவர் காங்கரசுக்காரராக்கப் பட்டிருக்கிறார். பல ஸ்தாபனங்களில் கட்சி கலகம் மாகாண கமிட்டி விசாரணை சப்கமிட்டி விசாரணை ஆகியவைகளில் இருக்கின்றன. கண்டிறாக்ட் ராஜ்யம் என்பதும் மெம்பர் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதும் காங்கரஸ்காரர்கள் 100க்கு 75 பேர்களாக உள்ள ஸ்தல ஸ்தாபனங்களில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னை கார்ப்பரேஷனில் கவுன்சிலர்கள் கண்ட்ராக்ட் சம்பந்தமிருப்பதும் கண்ட்றாக்டர்கள் இடம் லஞ்சம் வாங்குவதும் உத்தியோக நியமனத்துக்கு லஞ்சம் வாங்குவதும் காங்கரஸ் பத்திரிகைகளிலேயே வெளியாகி அதை ஆதாரமாய் வைத்து காங்கரஸ் கமிட்டியும் விசாரித்து சில காங்கரஸ் கவுன்சிலர்களை அக்கமிட்டி தண்டித்து அதை ஆதாரமாய் வைத்து காங்கரஸ் மந்திரியையும் காரியங்கள் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த குற்றச் சாட்டை ஒரு காங்கரஸ் தினசரி, பார்ப்பனரல்லாத காங்கரஸ் மெம்பர்கள் மீது சுமத்தி பார்ப்பன காங்கரஸ் மெம்பர்களை தப்பித்து வைக்க பாடுபட்டது என்றாலும் பிறகு காங்கரஸ் பார்ப்பன கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக வெளியாக்கப்பட்டு விட்டது. இந்த மாதிரியான இழிவான காரியம் சுமார் 15, 20, 25 வருஷங்களுக்கு முன்னால் ஈரோடு முனிசிபாலிட்டியில் திருட்டு, போர்ஜரி, லஞ்சம், கண்ட்றாக்ட்டு பித்தலாட்டம் நடக்காத சங்கதி நடந்ததாக தீர்மான புத்தகத்தில் நுழைய வைத்தல் போகாத ஊருக்கு போனதாக பொய் பில் கொடுத்து படிவாங்குதல் சொந்தக்காரனுக்கு வாரண்டுக்கு முனிசிபல் பணத்தில் செக் எழுதிக் கொடுத்து தப்பித்துக் கொள்ளுதல் முதலிய பல காரியங்கள் நடந்திருக்கலாம். ஆனாலும் ஜஸ்டிஸ் கட்சியின் 17 வருஷத்திய ஆட்சியில் காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களாகிய சென்னை கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் நடந்தது போல வேறு எங்காவது காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.

கண்ட்ராக்ட் ராஜ்யம் என்று பேசப்படுகிறது. ஆனால் சேலத்தைப் பாருங்கள் மந்திரிசபையே கண்ட்ராக்ட் ராஜ்யமாக ஆகிவிட்டதென்று சேர்மென் முதல் 11 கவுன்சிலர்கள் ராஜிநாமா கொடுத்து மந்திரி சபை வண்டவாளத்தை வெளியாக்கி வருகிறார்கள். இவற்றிற்கு எந்த தேசபக்தர் தேசீய வீரர் பதில் சொன்னார்.

திருச்சி ஜில்லா போர்டில் சட்டசபை மெம்பர்கள்போல் மெம்பர்களுக்கு சம்பளம் ஏற்படுத்திக் கொண்டார்கள். காரணம் கேட்டால் மெம்பர்களுக்கு சாப்பாட்டிற்கு வழி என்ன என்கிறார்கள்.

~subhead

வகுப்பு உணர்ச்சி இல்லையா?

~shend

ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கரஸ்காரர்களிடம் வகுப்பு உணர்ச்சி இல்லையா என்பதற்குக் கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமனத்தையும், அதன் கதையையும், ஸ்கூல் எட்மாஸ்டர் 10 ஸ்தானம் காலிக்கு 10 பார்ப்பனர்களை நியமித்ததையும் மற்றும் இஞ்சிநியர் ரிவன்யூ அதிகாரி முதலிய பதவிகளுக்குக் கார்ப்பரேஷன் நடந்து கொள்ளும் யோக்கியதையையும் பாருங்கள்.

~subhead

காங்கரஸ்காரர்கள் பாப்பர்களா?

~shend

காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கòயாரை மனதில் வைத்து பணக்காரர்கள் ராஜ்ஜியம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இன்று காங்கரசின் பேரால் போட்டி போடுகிறவர்கள் எல்லோரும் பாப்பர்கள். இன்சால்வெண்டுகளா? அதில் பணக்காரர்கள் இல்லையா என்று பார்த்தால் அந்த வண்டவாளமும் விளங்கிவிடும். பணம் கொடுக்கிறவர்கள் கிடைத்த வரையில் பணக்காரர்களை போட்டுக் கொள்கிறார்கள். கிடைக்காவிட்டால் “ஏழைகளை” போடுகிறார்கள். ஏழைகளைப் போட்டால் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? கண்டிராக்டு எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் லஞ்சம் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் முனிசிபாலிட்டியில் சம்பளம் போட்டுக் கொள்ள வேண்டும், ஒன்றும் முடியாவிட்டால் மந்திரிகளிடமும் அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கு காரியங்கள் சாதித்துக் கொடுப்பதாக தரகுவேலை செய்யவேண்டும். இவற்றைத் தவிர வேறு எந்த வழியில் ஏழைகள் பிழைக்க முடியும் – முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு சட்டசபை மெம்பர்கள் பதவி வகிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

~subhead

பெரிய மானக்கேடு

~shend

இவைகளையெல்லாம் விட காங்கரஸ்காரர்களின் பெரிய மானக்கேடான காரியம் என்னவென்றால் காங்கரஸ் காரனல்லாதவராய் இருந்த காலத்தில் எவன் ஸ்தல ஸ்தாபனங்களில் திருடினானோ, கொள்ளையடித்தானோ, திருடினான், கொள்ளை அடித்தான், போர்ஜரி பண்ணினான், பொய் கணக்கு பொய் பில்லு போட்டு பணம் சம்பாதித்தான் கண்ட்றாக்டில் கொலை பாதகமாய் நடந்து கொண்டான் என்று கூப்பாடு போட்டார்களே அவனேயே காங்கரஸ் சார்பாய் காங்கரஸ் மெம்பர்கள் நிறுத்துகிறார்கள் என்றால் காங்கரசின் யோக்கியதைக்கு வேறு எதை உதாரணமாகச் சொல்லுவது என்பது நமக்கு புரியவில்லை.

~subhead

“காலிகள் 100 – க்கு 90 காங்கரசில்”

~shend

பஞ்சாப் மந்திரியும் தோழர் கல்யாணசுந்தர முதலியாரும் கூறியது போல் “அயோக்கியர்கள், திருடர்கள் உழைத்துச் சாப்பிட முடியாத சாப்பாட்டுக்கு வேறு வழியில்லாத தத்தாரிகள், காலிகள் ஆகிய கூட்டங்களில் 100க்கு 90 பேர்கள் காங்கிரசை தஞ்சமடைகிறார்கள், காங்கரசில் புகுந்துவிட்டார்கள்” என்று சொன்னது போல்தான் இருக்கிறது. இன்றைய நிலைமை மற்றும் காங்கரஸ்காரர்கள் ஆள் பொறுக்கும் யோக்கியதையை என்னவென்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. இதைப் பற்றி காங்கரஸ்காரர்கள் அந்த மந்திரி மீது கூட கோபித்துக் கொண்டார்களாம். கோபித்து என்ன செய்வது தங்களுடைய ஸ்தாபனத்தை சுத்தப்படுத்திக் கொள்ள யோக்கியதை இல்லாத இவர்கள் மனதார தெரிந்து அயோக்கியர்களையும் காலிகளையும் சேர்த்துக்கொண்டு பதவிக்கு நிறுத்தி மெஜாரட்டி ஸ்தானம் பெறப்பார்க்கும் இவர்கள் நாட்டை, மனித சமூகத்தை, ஸ்தாபனங்களை பரிசுத்தப்படுத்தப் போகிறோம் என்று சொன்னால் அறிவாளி நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்? தோழர் கல்யாணசுந்தர முதலியார் 25.3.38ந் தேதி “நவசக்தி” தலையங்கத்தில் எழுதியுள்ள வாசகங்களை வாசகர்களுக்கு, ஓட்டர்களுக்கு எடுத்துக் காட்டிவிட்டு இதை முடிக்கிறோம்.

அதாவது

“புன்மை (அயோக்கிய) சிந்தையுடைய “அறிஞர்” (படித்த அயோக்கியர்)கள் வழியே பெரிய பெரிய அமைப்புகள் (ஸ்தாபனங்கள்) சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. அவைகளைக் கருவிகளாகக் கொண்டே தற்கால “அறிஞர்கள்” (அற்பர்கள்) தங்கள் சுயநலங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்”

என்றும்,

“நாளுக்கு நாள் ஜனநாயகம் (சுயராஜ்யம்) என்னும் பெயரால் அமைப்புகள் (ஸ்தாபனங்கள்) பலவும் குண்டர்கள் (காலிகள்) வசப்பட்டே வருகின்றன. ஸ்தல ஸ்தாபனங்கள் சட்டசபைகள் பத்திரிகாலயங்கள்… குண்டர்கள் (காலிகள்) வயப்பட்டு வருங்காலம் நேர்ந்திருக்கிறது”

என்றும்,

“காந்தீயத்தை” “அறிவுக்” குண்டர்கள் (படித்த சூட்சிக்கார அயோக்கியர்கள்) தங்கள் வழியே திருப்பிப் பாழ்படுத்துகிறார்கள்”

என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

(இது 25.3.38 “நவசக்தி” தலையங்கம் 8வது பக்கம் 2வது 3வது கலத்தில் உள்ள வாசகமேயாம்) இதில் பிராக்கட்டுக்குள் இருப்பவை “குடி அரசு” ஆசிரியரால் நவசக்தி ஆசிரியர் கருத்துப்படி விளக்கப்பட்டதாகும். ஏனெனில் குண்டர்கள் என்பது காலிகள் என்று முன்னமே காந்தியாராலும், விளக்கப்பட்டிருக்கிறது. நவசக்தியிலும் இதே பொருளை பல தடவை எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிஞர் என்பதற்கு அற்பர்கள் அயோக்கியர்கள் என்று போட்டதின் கருத்து அறிஞர் என்ற வார்த்தைக்கு ” இந்த குறிப்பு (இன்வெர்டட் கமா) நவசக்தி ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.

ஆகவே தற்கால காங்கரஸ், அதன் தலைவர்கள், அதனால் கிடைத்த ஸ்தாபனங்களை கையாளுகிறவர்கள், அவர்களது கருத்து அவர்கள் நடந்து கொண்டிருக்கும் முறை ஆகியவை எல்லாவற்றைப் பற்றியும் தோழர்கள் யாராயிருந்தாலும் எக்கட்சிக்காரராயிருந்தாலும் நன்றாய் யோசித்து ஸ்தல ஸ்தாபன தேர்தல் தொண்டில் இறங்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 27.03.1938

You may also like...