சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு பெரியார் அறிக்கை சிறைபுகு முன் கூறியது
சென்னை, டிச. 6
நான் இன்னும் சிறிது நேரத்துக்குள் சிறைக்குள் அனுப்பப்படுவேன். நமது இயக்க சம்பந்தமாக இனி நடக்கவேண்டியவைகளை தலைவர் செளந்திரபாண்டியனும், தோழர் கி. ஆ. பெ. விஸ்வநாதமும் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இயக்கத் தோழர்களும் தலைவர்களுடன் ஒத்துழைத்து நான் வெளிவரும் வரை செவ்வனே நடைபெற ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு நான் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும் பொப்பிலி அரசர் இருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார் என்கிற திட நம்பிக்கை எனக்கிருப்பதினாலும் அவருடைய தலைமைப் பொறுப்பு நீங்கி விட்டதாக மற்ற தோழர்களும் கருதமாட்டார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாலும் அதைப்பற்றி கவலையில்லாமலே செல்லுகிறேன்.
இந்தி எதிர்ப்பு இயக்கம் பொது ஜன இயக்கமானதினாலே, தமிழ் மக்கள் எல்லோரும் அந்த இயக்கத்தைப் பற்றி கவலை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கையுண்டு. இதைப்பற்றி யாருக்கும் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால் பலாத்காரமில்லாமலும், துவேஷ உணர்ச்சி இல்லாமலும் பலாத்காரத்துக்கும் துவேஷத்துக்கும் இடமேற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது தான் எனது மனப்பூர்வமான வேண்டுகோள்.
குடி அரசு – அறிக்கை – 11.12.1938