உஷார்! உஷார்!! சுபாஷ் போஸ் வருகிறார்!!! ஏன் வருகிறார்?

 

காங்கரஸ் தலைவர் என்னும் பேரால் சுபாஷ் பாபு சமீபத்தில் நம் நாட்டுக்கு வரவழைக்கப்படப் போகிறார். அதாவது இம்மாதம் 9- ந் தேதி சென்னை மாகாணத்துக்கு வரப்போகிறாராம். இரண்டு வாரம் சுற்றுப் பிரயாணம் செய்வாராம்.

அவர் ஏன் வருகிறார்?

அவரை யார் வரவழைக்கிறார்கள்?

அவர் எதற்காக வரவழைக்கப்படுகிறார்?

அவர் எப்படிப்பட்டவர்?

அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்?

என்கின்ற விஷயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான காரியமாகும். எனவே அதைப் பற்றி விளக்குவோம்.

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கரஸ் சர்க்காரால் (பார்ப்பனர்களால்) சமாளிக்க முடியாத நிலைமையில் நடைபெறுகின்றது. இந்த இந்தி எதிர்ப்பைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன மந்திரிகளும், பார்ப்பன பத்திரிகைகளும், மற்றும் அவர்கள் தம் நிபந்தனை இல்லாத கூலிகளும் எவ்வளவுதான் விஷமத்தனமாகவும், இழிதன்மையாகவும் பழித்தும், பொய்க் கூற்றுகள் கற்பித்தும், வீணான குற்றச்சாட்டுகள் கூறியும், தப்புப் பிரசாரம் செய்து அலட்சியமாகப் பேசியும் எழுதியும் வந்த போதிலும் இந்தி எதிர்ப்பானது கிரிமினல் லா அமெண்டுமெண்டு ஆக்டுப்படி நடவடிக்கை எடுத்து அடக்க முயற்சிக்க வேண்டியதாய் விட்டது என்பதை எந்த மானமுள்ள உண்மை இந்தியனும் மறுக்கமாட்டான்.

~subhead

ஆச்சாரியார் திகைப்பு

~shend

மற்றும் இந்தி எதிர்ப்பானது ்வீரமும்” ்தீரமும்” ்மகாபுத்தி கூர்மையும்” ்சகல வித ராஜ தந்திரம்” உடையவர் என்று விளம்பரப் படுத்தப்பட்டிருக்கும் தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கே என்ன செய்வது என்று தோன்றாமல் பொறுமையும் முன் யோசனையும் இல்லாமல் “கைக்குக் கிடைத்ததை எடுத்து இடம் சந்தர்ப்பம் பாராமல் அடித்து ஒழிக்க வேண்டிய அவ்வளவு ஆபத்தான காரியம்” ஆகப் போய்விட்டது.

பின்னும் இந்தி எதிர்ப்பானது, தமிழ்நாடோ, சென்னை மாகாணமோ மாத்திரமல்லாமல் இந்தியா பூராவும், தென் ஆப்பிரிக்கா, மலாயா, பர்மா, சிலோன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களும் வெள்ளையர்களும் காங்கரசை கண்டித்து பழித்து இகழும்படியான நிலைமையை ஏற்படுத்திவிட்டது.

மேலும் இந்தி எதிர்ப்பானது தோழர் கனம் ஆச்சாரியார் வாயினாலேயே ்ஏராளமாக பணம் சேர்த்துக் கொண்டு கட்டுப்பாடாக இருந்து கொண்டு ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் தொண்டர்கள் வந்து அரசாங்கமே நடக்க ஒட்டாதபடி தொந்திரவு கொடுத்து வருகிறது” என்று ்50000” பேர் கொண்ட கூட்டத்திலும், சட்டசபையிலுமே சொல்லி நெஞ்சு இடிந்து கண் கலங்கப் பேச வேண்டிய நிலைமையை உண்டாக்கி விட்டது.

~subhead

தெருப் பிரசாரம்

~shend

இவ்வளவும் அல்லாமல் தோழர்கள் கனம் ஆச்சாரியார் அவர்கள் காலையும் மாலையும் சென்னையில் தெருத்தெருவாய் அலைந்து பெரிய மனிதர்கள் வீடுதோறும் புகுந்து ்இந்தி எதிர்ப்பானது வகுப்பு துவேஷம் உண்டாக்குகிறது. ்பூணூல்” உச்சிக் குடிமி ஒழிக-, பார்ப்பன ஆட்சி ஒழிக– என்று மக்களை கூப்பாடு போடச் செய்கின்றதுமல்லாமல் மற்றும் மிகக் கேவலமான அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நேரில் தனிப்பட்ட முறையில் வையச் செய்கிறது” என்று சொல்லியாவது இந்தி எதிர்ப்பை நிறுத்த சிபார்சு செய்யும்படியோ அல்லது அடக்க உதவி செய்யும்படியோ முறையிடச் செய்துவிட்டது.

கடைசியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தி எதிர்ப்பை அடக்க இது வரை ்வன்னெஞ்ச வெள்ளையர்கள்” செய்துவைத்து இருக்கிற கொடிய சாத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் போதவில்லை என்றும் புதியதொரு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கனம் ஆச்சாரியார் வாயினாலேயே சொல்லும்படியும் செய்துவிட்டது.

கடைசி ஆயுதமாக இந்தி எதிர்ப்புக்கு பட்டினி இருந்தவனையும் இந்தி எதிர்ப்பில் கலந்துள்ளவர்களையும் ஒவ்வொருவராக விலைக்கு வாங்கியும் இயக்கத்தை கெடுக்கும்படியும், அதற்கு கெட்ட பேர் உண்டாக்கும்படியும், இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் தலைமை வகித்து யாரையும் சிறைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சி உபதேசம் செய்யும்படியும், இந்தி எதிர்ப்புத் தலைவர்களை இழிதன்மையாய் வையும்படி ஏவிவிட்டுப் பார்த்தாய் விட்டதுடன்,

பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்தம் கூலிகளும் சிறிதும் மான ஈனமில்லாமல் ்இந்தி எதிர்ப்பு செத்துப்போய்விட்டது” என்றும் அது ்துராக்கிரகம்” என்றும் ்துவேசப் பிரசாரம்” என்றும் தங்களால் ஆனவரையில் விஷமப் பிரசாரம் செய்து பார்த்தும் தோல்வி அடைந்து இன்று தோழர் சுபாஷ் பாபுவைத் தருவித்து பிரசாரம் செய்யச் செய்விக்க வேண்டிய நிலைமையும், நிர்பந்தமும் ஏற்பட்டுவிட்டது.

~subhead

காங்கரஸ் வஜ்ராயுதம்

~shend

இவை ஒரு புறமிருக்க சுபாஷ் பாபுவை தருவிக்க வேறு ஒரு அவசரமும் வந்துவிட்டது. அதாவது சென்னையிலும் மற்றும் சில வெளி ஜில்லாக்களிலும் கார்ப்பரேஷன் கவுன்சிலர்கள் எலக்ஷனும், ஜில்லாபோர்டு மெம்பர்கள் எலக்ஷனும் அடுத்தாப்போல் வரப்போகிறது என்கின்ற விபரம் நாம் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. நாமறிந்த வரையில் ஏறக்குறைய இந்த சுமார் 20, 25 வருஷ காலமாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு நெருக்கடியும், ஆபத்தும் வந்துவிட்டதாகவோ, வரப்போவதாகவோ, வரக்கூடுமென்றோ கருதும்படியான காலங்களிலெல்லாம் வெளி மாகாணங்களில் இருந்து யாராவது ஒருவரைப் பிடித்து வந்து அவரை இந்திரன், சந்திரன், மகான், தியாகி என்பது போன்ற விளம்பரங்கள் கொடுத்து குரங்காட்டி வித்தை காட்டுவது போல் அவரை ஆட வைத்து அதன் மூலம் மக்களை ஏமாற்றி சமாளித்துக் கொள்வதையே முக்கிய வஜ்ராயுதமாக கையாண்டு வந்திருக்கிறார்கள்.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் கூட இப்படியேதான் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல்கள் வந்தபோதெல்லாம் கூட இப்படியேதான் நடந்து வந்திருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் இந்தி எதிர்ப்பு நெருக்கடியும் அதன் மூலம் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி ஏற்படுகிறதே என்கின்ற பயமும், கார்ப்பரேஷன் ஜில்லா போர்டு தேர்தல்களும் வருவதை உத்தேசித்து வழக்கம்போல் தோழர் சுபாஷ் போஸ் தருவிக்கப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.

~subhead

சுபாஷ் செய்யப் போவது

~shend

அவர் வந்த உடன் இந்தி பிரசாரம் செய்வார் என்பதிலும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தையும் அது செய்யும் வேலைகளையும் குறை கூறுவார் என்பதிலும் தேசீயப்புரட்டு புராண காலக்ஷேமம் செய்து காங்கரசுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று மக்களுக்கு சொல்லுவார் என்பதிலும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றோம். ஆகவே அவர் இந்த காரியங்களுக்காகத்தான் வரவழைக்கப்படுகிறார். இதைத்தான் செய்யப்போகிறார். ஆதலால் தான் தமிழ் மக்கள் உஷாராய் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

தோழர்களே! தோழர் சுபாஷ் போஸ் யார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா?

~subhead

போஸ் சாதகம்

~shend

தோழர் போஸ் அவர்கள் காலம்சென்ற சென்குப்தா உயிருள்ளவரை காங்கரசுக்கும் காந்தியாருக்கும் எதிரியாய் இருந்தவர் – பெரிதும் சமதர்மமும் பொது உடமையும் பேசினவர். அது மாத்திரமல்லாமல் காங்கரசினால் நாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் கண்டிப்பாய் ஏற்படாதென்றும் காங்கரஸ் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனமென்றும் காங்கரஸ் தலைவர்கள் மக்களை ஏமாற்றி எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் நடந்து நாட்டைக் கெடுக்கிறவர்கள், ஏழை மக்களை காட்டிக் கொடுக்கிறவர்கள் என்றும் நாடு நலம்பெற வேண்டுமானால் காங்கரஸ் அழிக்கப்பட்டு வேறு ஒரு நாணையமும் யோக்கியமுமான ஸ்தாபனம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னவர்.

இர்வின்-காந்தி ஒப்பந்தம் பயங்காளிகள் செய்கை என்றும் முதலாளிகள் புரட்டென்றும் பச்சையாக எடுத்துச் சொன்னவர். மற்றும் காங்கரசை விட்டு விட்டு தான் வேறொரு ஸ்தாபனம் ஆரம்பிக்க போவதாகவும் சொல்லி அதே சமயத்தில் தனது திட்டத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

~subhead

புது ஸ்தாபன நோக்கங்கள்

~shend

அதாவது சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அரசியலிலும் மக்கள் சுதந்திரம் பெறவேண்டும் என்பது அந்த ஸ்தாபனத்தின் கொள்கையாகும்.

~subhead

அதற்காக

~shend

  1. ஜாதி வேற்றுமைகளை அறவே ஒழிக்க வேண்டும்.
  2. சமூகம் மதம் என்கின்றதான மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
  3. பெண்களுக்கு புதிய தர்மத்தை புகட்டி வேலை வாங்க வேண்டும்.
  4. இளைஞர் படை ஒன்று திரட்டி இதற்காக வேலை செய்ய வேண்டும்.
  5. பிரிட்டிஷ் சாமான்கள் அடியோடு பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.
  6. சமதர்ம கொள்கையின் படி விவசாயிகளும் தொழிலாளிகளும் ஒன்றாக்கப்பட வேண்டும்.

ஆகிய இந்தக் கொள்கைகளைக் கொண்டு புதிய ஸ்தாபனம் ஏற்படுத்தப் போவதாகச் சொன்னவர்.

எனவே இன்று தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்படும் சுபாஷ் போஸ் அந்த சுபாஷ் போசா அல்லது பார்ப்பன அடிமை சுபாஷ் போசா மற்றும் பட்டம் பதவிக்காக தனது கொள்கைகளைப் பறிகொடுத்து விட்டு காந்தியார் ஆச்சாரியார் என்கின்றதான கிராமபோன் பிளேட்டுக்கு சவுண்ட் பாக்ஸாய் இருக்கிற சுபாஷ் போசா என்று கேட்கிறோம்.

~subhead

பல்டிக்குக் காரணமென்ன?

~shend

அன்று அதாவது கராச்சி காங்கரசன்று அந்தப்படி சொன்னவர் இன்று காங்கரசுக்கு வர காரணமென்ன? இன்று காங்கரஸ் யோக்கியமான ஸ்தாபனமாகி விட்டதா?

அல்லது பாபுவின் அன்றைய கொள்கைகளை இன்றைய காங்கரஸ் நடத்துகிறதா? ஏற்றுக்கொண்டதா? ஒன்றும் இல்லையே. பின் ஏன் காங்கரசுக்கு வந்தார் என்றால் தோழர் போசைப் பொறுத்தவரை இவருக்கு என்றும் சொந்த அபிப்பிராய மென்பதாக ஒரு அபிப்பிராயம் இருந்ததாக நம்மால் காணவே முடியவில்லை. அவர் காலம் சென்ற சி.ஆர். தாஸ் காலத்தில் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர். அவர் உள்ளவரை அவருக்கு அடப்பக்காரனாய் இருந்து வந்தார். அவர் இறந்தபிறகு தோழர் எஸ். சீனிவாசய்யங்காருக்கு முன்னோடும் பிள்ளையாய் இருந்தவர். காலம் சென்ற சென்குப்தா உள்ளவரை தின தினத்திற்கு ஒரு கொள்கை பேசி சதா அவரோடு போட்டி போட்டுக்கொண்டு இருந்தவர். காந்தியாருக்கோ அவரது 12 சிஷ்யர்களுக்கோ இவரிடம் என்றும் மதிப்பு இருந்ததில்லை. அப்படிப்பட்டவர் இன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு காங்கரசில் இப்போது வேறு தகுதியான ஆள் ஒன்று இல்லாததால் இவருக்கு சலங்கைக் கட்டிவிட்டு காங்கரஸ் தலைவர்கள் என்பவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

~subhead

வேறு காரணமுண்டானால் சொல்லட்டும்

~shend

ஆகவே இப்போது இவர் வரவை பிரமாதப்படுத்தி தமிழ்நாட்டில் இழுத்தடித்து கூட்டம் சேர்த்து கொடுத்து இந்தியை ஆதரிக்கும்படியும் காங்கரசுக்கு ஓட்டு செய்யும்படியும் சொல்லச் செய்யப் போகிறார்கள். இதைத் தவிர வேறு என்ன காரியத்துக்காக வரவழைக்கப்படுகிறார் என்று யாராவதுதான் சொல்லட்டுமே பார்ப்போம்.

இவருக்கு (சுபாஷ் பாபுவுக்கு) சுதந்திரத் தன்மை கிடையாது என்பதற்கு மற்றொரு உதாரணமும் கூறுவோம். அதாவது சென்னை மாகாண இந்தி எதிர்ப்பைப் பற்றி காரியக்கமிட்டியில் பிரஸ்தாபம் வந்தபோது காரியக்கமிட்டியார் யோக்கியப் பொறுப்புடன் ஒரு முடிவுக்கு வர தைரியம் இல்லாமல் “தென்னாட்டில் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போரானது தப்பபிப்பிராயத்தின் மீது துவக்கப்பட்டிருப்பதால் அதை விளக்கி அந்த தப்பு அபிப்பிராயம் நீங்கும்படி ஒரு அறிக்கை வெளியிடும்படி காங்கரஸ் தலைவர் சுபாஷ் போசை கேட்டுக் கொள்ளுகிறது” என்று ஒரு தீர்மானம் செய்து மழுப்பி விட்டு தங்கள் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டார்கள். அதுமுதல் இதுவரை தோழர் போஸ் என்ன செய்தார். சுதந்திரப் புத்தியோ, வீரமோ, நியாயமோ அவரிடத்தில் கடுகளவாவது இருந்திருக்குமானால் அவர் செய்திருக்க வேண்டிய வேலை என்ன?

~subhead

சுதந்தரம் பறிகொடுத்த ஜீவன்

~shend

அபிப்பிராய பேதத்தின் மீது நடைபெறும் கிளர்ச்சிக்கு கிரிமினல் அமெண்மெண்ட் ஆக்ட் என்னும் பிரிட்டிஷாரின் கடைசியான அடக்குமுறை ஆயுதம் பயன்படுத்துவதை இவர் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? இந்த சட்டம் பயன்படுத்துவதால் இந்தி எதிர்ப்பு எழுச்சிக்கு ஏற்படும் கெடுதியை விட காங்கரசின் யோக்கியதைக்கு இழிவு உண்டாகி வருவது இவருக்கு உண்மையிலேயே தெரியாதா? அப்படியிருந்தும் தோழர் சுபாஷ் வாயை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு இருப்பதின் காரணம் என்ன என்றால் சுதந்திரமும், வீரமும் பறிகொடுத்து தலைவர் பட்டத்தை தாங்கித் திரியும் தகுதியற்ற ஜீவன் என்பதைத் தவிர வேறு என்ன என்று சொல்லக்கூடும்?

~subhead

இந்தி எதிர்ப்புக் காரணங்கள்

~shend

தென்னாட்டில் இந்தியைப் பற்றி குறைகூறுகிறவர்கள் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.

(1) ஏற்கனவே 100-க்கு 10 வீதம்கூட தாய்பாஷையில் கல்வி இல்லாத மக்களுக்கு அந்நிய பாஷை (இந்தி) கட்டாயமேன்?

(2) இந்தி, தமிழ் மக்களுக்குள் ஆரிய கலை, நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி அறிவற்ற மிருகமாக ஆக்கும் என்பதாகும். மற்றும் பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டு காரணங்களையும் நன்றாய் அறிந்த காரியக் கமிட்டியும் சுபாஷ் பாபுவும் என்ன சமாதானம் சொன்னார்கள் என்று கேட்கின்றோம்.

~subhead

இங்கிலீஷுக்குப் பதில் இந்தியா?

~shend

இங்கிலீஷúக்குப் பதிலாக இந்தி வைக்கப்படுகிறது என்று சுபாஷ் பாபு ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னார். அது பொருத்தமான சமாதானம் என்று யாராவது சொல்லக்கூடுமா? இங்கிலீஷúக்குப் பதில் இந்தி என்றால் இங்கிலீஷ் எடுக்கப்பட வேண்டாமா? இங்கிலீஷ் எடுக்கப்படக்கூடுமா? பிரிட்டிஷ் ஆட்சி உள்ளவரை இங்கிலீஷைத் தொடுவதற்கு யாராலாவது முடியுமா? இங்கிலீஷ் ஆட்சியை விரட்டவோ, அது கூடாது என்று சொல்லவோ இன்று காங்கரசில் எந்த ஆண்மகனாவது இருக்கிறானா? காங்கரசிலாவது திட்டம் உண்டா?

சத்தியமூர்த்தி அய்யர் இங்கிலீஷ்காரருடன் ராஜி செய்து கொள்வது பூரண சுதந்திரம் என்றார். (பொள்ளாச்சி தோட்டக்காரர் சங்கப் பேச்சு) ஆச்சாரியார் பிரிட்டிஷாருடன் கண்ணியமான சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் காங்கரசின் வெற்றி என்றார். (29.9.34-ந் தேதி கோயமுத்தூர் மகாநாட்டுத் தலைமை பிரசங்கம்.)

காந்தியாரோ ்பிரிட்டிஷார் நம்மை சம அந்தஸ்தாக நடத்த வேண்டும். சம அந்தஸ்து பெற்ற குடியாக நாம் வாழ வேண்டும் என்பது தான் எனது சுயராஜ்யம்” என்றார். (வட்டமேஜையிலும் இந்தக் கருத்தைக் காண்பித்து இருக்கிறார்.)

~subhead

இன்று நாளை நடக்கக்கூடியதா?

~shend

இப்படிப்பட்ட இவர்கள் பிரிட்டிஷார் ஓட்டமெடுத்தபின்பு நமக்கு இந்தி அவசியம், இங்கிலீஷ் வேண்டி இருக்காது என்றால் அது இன்று நாளை நடக்கக்கூடிய காரியமா? அல்லது அதற்காக இந்தியை இன்றே கட்டாயமாகப் புகுத்த வேண்டுமா? என்பதற்கு தோழர் போஷ் என்ன சமாதானம் சொன்னார் அல்லது சொல்லுவார் என்று கேட்கின்றோம்.

எனவே மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இந்தி விஷயமாகவுள்ள அபிப்பிராய பேதத்துக்கு அறிக்கைவிட்டு விளக்குவது என்று கருதி அழைத்து வருகிறார்கள். அவரும் இந்தப் புரட்டுக்கும் மோசத்துக்கும் மனப்பூர்த்தியாய் ஒப்பியே ஏய்க்க வர சம்மதித்து இருக்கிறார்.

~subhead

சுபாஷை பகிஷ்கரியுங்கள்

~shend

எனவே அப்பேர்ப்பட்டவரை உண்மைத் தமிழன் சுத்த ரத்த ஓட்டமும் மனிதத்தன்மையும் உள்ள தமிழன் வரவேற்க முடியுமா? மற்றும் தனது அதிர்ப்தியை காட்டாமலாவது இருக்க முடியுமா? ஒரு சமயம் எப்படியேனும் நாம் போனால் போகட்டும் என்று சும்மா இருந்துவிட்டால் இந்தப் பார்ப்பனர்கள் நம்மை இன்னும் எவ்வளவு கேவலமாக்கி வட நாட்டாரைக் கொண்டு நமக்கு இன்னம் என்ன என்ன கொடுமையான காரியங்கள் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதை கூறவும் வேண்டுமா?

ஆகவே காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் இந்தி எதிர்ப்பை ஒழிக்கவும் ஓட்டு வேட்டை ஆடவும், தமிழ் மக்களின் பரம்பரை பிறவி எதிரிகளால் அழைத்து வரப்படுகிறார் என்கின்ற முறையில் அவர் (சுபாஷ் பாபு) தென்னாட்டின் உண்மை நிலையை அறிவதற்காக அவரது வரவில் அதிர்ப்தியைக் காட்டி பகிஷ்கரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமையாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சமாதான பங்கமோ சட்டவிரோதமோ ஏற்படாதபடி ஜாக்கிரதையாய் பார்த்துக் கொண்டு பகிஷ்கார நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்பதை முக்கியமாய் ஞாபகப்படுத்தி பகிஷ்காரத்தை வலியுறுத்துகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 04.09.1938

You may also like...