* சுப்பிரமணியய்யர் புராணம்
புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட படலம்
கல்விக் கமிட்டி அங்கத்தினரைக் காக்காய் பிடித்த அத்தியாயம்
M.S. SUBRAHMANIA AIYER 160, THAMBU CHETTY ST.,
Author – Journalist
Councillor, Corporation of Madras Madras, 23.4.1937
சோதரர் ஸ்ரீமான் இலட்சுமண சுவாமி முதலியாரவர்கள் சமூகம். சுபம். ஆசி பல எல்லாம் வல்ல இறைவனருளால் தங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகுமாக. நேற்றும் இன்று காலையும் தங்களைக் காண முயன்றேன், ஆனால் முடியவில்லை.
தங்கள் கல்வி கமிட்டியில் பாட புத்தகங்களை மாற்றும் யோசனை இருப்பதாகக் கேள்வி. ஸ்ரீமதி அம்முவையும் பார்த்தேன். புதிதாகப் புத்தகங்கள் வைப்பதானால், எனக்கும் ஒரு சிறிது பங்கு தருதல் வேண்டும். மங்கள வாசகங்கள் ஐந்தும் என்னுடையன. வேறு புத்தகங்களில் எனக்குப் பங்கு கிடையாது.
எல்லாம் எனக்கே கொடுக்கும்படி கேட்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். தங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். மற்றவை நேரில். தங்கள் உதவியை மறக்க மாட்டேன்.
அநேக ஆசீர்வாதம்
தங்கள்
M.S. சுப்பிரமணிய ஐயர்.
~cstart
திருவிதாங்கூர் அலங்கோல தர்பார்
~cmatter
திருவிதாங்கூர் இந்தியாவின் தெற்குக் கோடியிலுள்ள ஒரு சிறுநாடு. எல்லா சுதேச சமஸ்தானங்களையும் போல் வைதீகப் பற்றுடைய நாடு. திருவிதாங்கூர் அரசர்கள் வைதீகப் பற்றுடையவர்களாக இருந்தாலும் பொதுவாக நல்ல அரசர்கள் என்றே சொல்லவேண்டும். வடநாட்டு மன்னர்களின் ஆடம்பர வாழ்வு அவர்களிடம் கிடையாது. ்உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற ஐதீகப்படி வாழ்க்கை நடத்துகிறவர்கள். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி முறைகளைப் பின்பற்றி சமஸ்தானத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை அவ்வக்காலத்து செய்து வந்தார்கள். ஆகவே கல்வித்துறையில் திருவிதாங்கூர் வெகுதூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆண் கல்வியும் பெண் கல்வியும் வெகுதூரம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது. தேசபாஷைப் பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமங்களே அங்கு இல்லையென்று சொல்லிவிடலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 100-க்கு 10-பேர்கூட இருக்கமாட்டார்கள். ஆங்கிலப் பயிற்சியுடையவர்கள் 100-க்கு 50 விகிதம் இருக்கலாம். உயர்தர கலாசாலை பட்டங்கள் பெற்ற திருவிதாங்கூர் சுதேசிகள் – ஆண்களும் – பெண்களும் – இந்தியாவின் நாலாபாகங்களிலுமன்றி உலகத்தின் பலபாகங்களிலும் உயர்வான பதவி வகித்து வருகிறார்கள். அரசியல் துறையிலும் திருவிதாங்கூர் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றபடி சீர்திருத்தமடைந்தே வந்திருக்கிறது.
~subhead
ஸ்ரீ மூலம் திருநாள்
~shend
தற்கால மகாராஜாவுக்கு முன் திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீ மூலம் திருநாள் ஒரு வைதீகராயிருந்தாலும் சமஸ்தான மக்களுக்குப் பல சீர்திருத்தங்கள் வழங்கினார். சட்டசபை ஸ்தாபிக்கப்பட்டதும் குடிகளின் குறைகளை சமஸ்தான நிருவாகம் நேரில் அறிய ஸ்ரீ மூலம் பிரஜா சபை ஸ்தாபிக்கப்பட்டதும் அவரது காலத்திற்றான். நாட்டு முன்னேற்றத்திற்கான பல புது இலாகாக்களும் அவரது காலத்திலே தோற்றுவிக்கப்பட்டன. எனவே அவரது ஆட்சியில் திருவிதாங்கூர் ஒரு ்மாடல் ராஜ்யம்” என்ற புனை பெயரும் பெற்றது. அவர் நாடு நீங்கியபோது பட்டத்துக்குரிய தற்கால மகாராஜா மைனராக இருந்ததினால் அவரது பெரிய தாயாரான ராணி லôமிபாய் மைனர் மகாராஜாவின் ரீஜண்டாக பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதிப்படி அரசாட்சி புரிந்து வந்தார். தற்கால மகாராஜாவின் பெரிய தாயாரும், தாயாரும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தில் ஸ்வீகாரமானவர்கள்; அவ்விரு இராணிமாரும் மிக இளவயதில் திருவிதாங்கூர் மகாராஜாவால் ஸ்வீகாரம் செய்யப்பட்டார்கள். ஸ்வீகாரம் செய்யப்பெற்ற அந்த ராணிமாரின் கார்டியனாக பிரசித்திபெற்ற காலஞ் சென்ற கேரள வர்ம கோயில் தம்பிரான் நியமிக்கப்பட்டார். அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் மலையாளம் ஆகிய பாஷைகளில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருத மலையாள கவியும் கூட. வேட்டை ஆடல், சதுரங்கம் முதலிய விநோத கலைகளிலும் நிபுணர். பெரிய சீர்திருத்தவாதி. சுகாதாரப் பிரியர். ஆகவே அவரது மேற்பார்வையில் வளர்ந்து வந்த இராணிமாரும் சீர்திருத்தவாதிகளாகவே வளர்ந்து வந்தனர்.
~subhead
லôமிபாய் மகாராணி
~shend
லôமிபாய் மகாராணியார் ரீஜண்டான போது அரசியல் துறையில் ஒரு சமஸ்தானத்தில் அக்காலத்து இயல்பாகச் செய்யக்கூடிய சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் சமூகச் சீர்திருத்தத் துறையில் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருந்தன. ஸ்ரீ மூலம் திருநாள் வைதீகராயிருந்ததினால் சமூகச் சீர்திருத்த விஷயமாக பாராட்டக்கூடிய சீர்திருத்தங்கள் எதையும் அவர் செய்யவில்லை. அவர் அறைகுறையாக விட்டுப்போன வேலையை ரீஜண்டு மகாராணி லôமிபாய் செய்யத் தொடங்கினார். முதன்முதலில் “சேர்த்தலைப் புரங்களி” என்ற ஆபாசத் திருநாள் நிறுத்தப்பட்டது. அந்தத் திருநாள் பத்து நாட்களிலும் சேர்த்தலையிலே (ஆலப்புழைக்கு வடக்கே ஒரு தாலூகாத் தலைநகரம்) பல ஆபாசப் பாட்டுகள் பாடப்படுவது வழக்கம். அந்த ஆபாசப் பாட்டுகள்தான் சேர்த்தலை பகவதிக்கு மிகப் பிரியமாம். அந்த அனாசாரத்தை ரீஜண்டு மகாராணியார் எதிர்த்தார். அப்பால் ஆலயங்களுக்குத் தேவதாசிகளைப் பொட்டுக்கட்டி விபசார முத்திரைபோடும் கெட்ட வழக்கத்தையும் நிறுத்தினார். சர்க்கார் ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கும் முற்றுப் புள்ளி போட்டார். இவையாவும் திருவிதாங்கூர் நிலைமைக்குப் புரட்சிகரமான சீர்திருத்தங்களாயினும் பொது ஜனங்கள் ஆட்சேபிக்கவில்லை. மாறாக வரவேற்றார்கள் என்று கூடச் சொல்லலாம். இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் செய்து முடித்த காலத்து தற்கால மகாராஜா மேஜர் ஆனார்; அவருக்குப் பட்டமும் சூட்டப்பட்டது.
அவர் இளைஞராக இருந்ததினால் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் மகாராஜாவின் அரசியல் உபதேசகராக நியமிக்கப்பட்டார். தற்கால மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜாவாக இருந்தாலும் அவரது தாயார் இளைய ராணியார் யோசனைப்படியே தேச காரியங்கள் நடைபெற்று வந்தன. அரசியல் உபதேசகர் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யருக்கும் அரண்மனையில் வெகு செல்வாக்குக் கிடைத்தது. திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தார் இயல்பாகவே ்பிராமண பக்தி” உடையவர்களாகையினால் ஸர்.ஸி.பிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் அதிகச் செல்வாக்கு கிடைத்தது அதிசயமல்ல. ஆகவே இளைய ராணியார், ஸர்.ஸி.பி. ராமசாமியய்யர் கூட்டு யோசனைப்படியே சமஸ்தானக் காரியங்கள் நடத்தப்பட்டுவந்தன.
~subhead
அரசியல் உபதேசகர் நியமனம்
~shend
இளைய ராணியாருக்கு தமது சகோதரியான மூத்த ராணியார் செய்த சீர்திருத்தங்களைவிட அதிகப்படியான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கலாம். ஆகவே சுளுவாக புகழ்தரக்கூடிய சீர்திருத்தம் எது என இளையராணியார் அரசியல் உபதேசகரான ஸர்.ஸி.பி.யிடம் யோசித்திருக்க வேண்டும். ஸர்.ஸி. பி. பெரிய சாணக்கியரல்லவா! பிரிட்டிஷ் இந்தியாவிலே காந்தியாருக்கு பெரிய செல்வாக்கு இருந்து வருவதும் அவர் பார்ப்பன தாசராக விளங்கி வருவதும் அவருக்கு தீண்டாதார் ஆலயப் பிரவேச விஷயத்தில் பெரிய கிறுக்கு இருந்து வருவதும், ஸர்.ஸி.பி. அறிந்திருந்ததனால் திருவிதாங்கூர் ஆலயங்களில் தீண்டாதாருக்கு பிரவேசனமளித்துவிட்டால் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் இளைய ராணியார் பெயரும் உலகப் பிரசித்தமாகிவிடுமென்று ஸர்.ஸி.பி. இளைய ராணியாருக்கு யோசனை கூறினாராம்.
~subhead
ஸர். ஹபிபுல்லா இணங்கவில்லை
~shend
ஆகவே ஸர்.ஹபிபுல்லா திவானாயிருந்த போதே ஆலயப் பிரவேச ஸ்ரீமுகம் வெளியிட முயற்சி நடந்ததாம். ஆனால் ஸர் ஹபிபுல்லா அதற்கு சம்மதிக்கவில்லையாம். ஒரு ஹிந்து சமஸ்தானத்திலே ஒரு முஸ்லிம் திவான் காலத்திலே அவ்வளவு தோசைப் புரட்டான மதாசாரச் சீர்திருத்தம் செய்து ஹிந்துக்கள் வெறுப்புக்கு ஆளாக அவர் இணங்கவில்லையாம். ஆகவே அவருக்கு பிறகு ஸர்.ஸி.பி.திவானாக வந்தபோது ஆலயப் பிரவேச ஸ்ரீமுகம் வெளியிடுமாறு மகாராஜா தூண்டப்பட்டாராம். வெகுநாள் அந்த யோசனைக்கு மகாராஜா இணங்காமலே இருந்தாராம். தாயாரான ராணியாரும் திவான் ஸர்.ஸி.பி.யும் கட்டுப்பாடாக நிர்ப்பந்தம் செய்து வந்ததினால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற நியாயப்படி மகாராஜா இணங்கி கடைசியாக ஆலயப்பிரவேச ஸ்ரீமுகம் வெளியிட்டாராம். அந்த ஸ்ரீமுகத்தினால் தீண்டாதாருக்கு ஏற்பட்ட நன்மை என்ன என நாம் இப்பொழுது ஆராயப் புகவில்லை. தீண்டாதாருக்கு பாராட்டத்தக்க நன்மை ஏற்படாவிட்டாலும் மகாராஜாவுக்கும் அவரது தாயாருக்கும் திவான் ஸர்.ஸி.பி.க்கும் அது பெரிய விளம்பரமாக முடிந்தது. மகாராஜாவையும் அம்மையாரையும் திவானையும் பாராட்டி இந்தியா முழுதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தியாரே திருவனந்தபுரம் சென்று ராஜ குடும்பத்தாரையும் திவானையும் வாழ்த்தினார். மகராஜாவுக்குச் சிலை நாட்ட திருவிதாங்கூரில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
கொஞ்சகாலம் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் ஸர்.ஸி.பி. பெயருமே இந்தியப் பத்திரிகைகளில் தாராளமாக அடிபட்டன. ஸர்.ஸி.பி.யின் ராஜ்ய தந்திரமும் பெரிதும் பாராட்டப்பட்டது. திருவிதாங்கூரில் இவ்வண்ணம் சீர்திருத்தம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து கொச்சி சமஸ்தான மக்கள் ஒரு சாராருக்கும் சீர்திருத்த மோகம் ஏற்பட்டது. கொச்சி ஆலயங்களிலும் தீண்டாதாருக்கு அனுமதியளிக்கவேண்டுமென சிறிது கிளர்ச்சியும் நடந்தது. ஆனால் கொச்சி மகாராஜா முதியவர், பகட்டான சீர்திருத்தங்கள் செய்து புகழ் நாட்ட விருப்பமில்லாதவர். ஆகவே ஆலயப் பிரவேசக் கிளர்ச்சிக்கு செவி சாய்க்கவில்லை.
~subhead
கொச்சியில் இரட்டை ஆட்சி
~shend
அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கொச்சி திவான் ஸர்.ஷண்முகம் செட்டியாரை சென்னை பார்ப்பனப் பத்திரிகைகள் திட்டத் தொடங்கின. சுயமரியாதைக்காரரான ஸர்.ஷண்முகம் ஆலயப்பிரவேச உரிமையளிக்க கொச்சி மகாராஜாவை ஏன் வற்புறுத்தவில்லை யெனவும் சென்னைப் பத்திரிகைகள் கிண்டலாகக் கேட்டன. அதற்கு ஸர். ஷண்முகம் ஆணித்தரமாகப் பதிலளித்தார். ்அரசியல் வேலைகளில் யோசனை கூறுவதே என் வேலை; மதவிஷயங்களில் யோசனை கூறுவது என் வேலையல்ல” என ஸர் ஷண்முகம் தெரிவித்தபோது சென்னைப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூச்சல் அடங்கிற்று. ஆனால் ஆலயப்பிரவேச உரிமையினால் ஒடுக்கப்பட்டவர்களின் கலி தீராதென்றும், அவர்கள் விரும்புவது முக்கியமாக பொருளாதார முன்னேற்றமே என்றும், அரசியல் துறையில் முற்போக்கான சீர்திருத்தங்கள் வழங்குவதே அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரான வழியென்றும் கொச்சி மகாராஜா அவர்களும் அவரது திவானான ஸர். ஷண்முகமும் உணர்ந்து பொறுப்பாட்சிக்கு முதற்படியான இரட்டையாட்சியை கொச்சி மக்களுக்கு அளித்துவிட்டனர்.
கொச்சியிலே எவ்வளவு எளிய நிலைமையிலுள்ள ஒடுக்கப் பட்டவருக்கும் ஏனைய ஜாதியாருக்கும் சமமான சிவில் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலே உண்மையான தேசீய ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் மத்தியசர்க்காரின் உறுதியான சமஷ்டி அரசியல் ஏற்பட வேண்டும். மாகாண சுயாட்சி நடத்தும் மாகாணங்களும் யதேச்சாதிகாரம் நடத்தும் சமஸ்தானங்களும் அவ்வளவு ரம்மியமாக ஐக்கியப்பட முடியாது. ஆகவே சமஸ்தானங்களில் பொறுப்பாட்சி ஏற்பட வேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது. ஆகவே பொதுவான இந்திய க்ஷேமத்தை முன்னிட்டு கொச்சியில் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாட்சியைப் பின்பற்றி வடநாட்டிலே சில சுதேச சமஸ்தானங்களும் பொறுப்பாட்சி அளித்து விட்டன. ஒரு சின்ன சமஸ்தானமான காசியிலும்கூட சட்டசபை ஸ்தாபிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
~subhead
திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிக்கு கல்த்தா
~shend
ஆனால் பெரிய சீர்திருத்தக்காரரும், ராஜ்ய தந்திரியும், ஒரு காலத்திலே பெரிய ஹோம்ரூலர் ஆகவும் இருந்தவருமான ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குப் பொறுப்பாட்சி வழங்கவே முடியாது என்கிறார். ்சமஸ்தானாதிபதிகள் தமது குடிகளுக்கு பொறுப்பாட்சி வழங்கினால் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை என இந்திய மந்திரியும் உதவி மந்திரியும் தெளிவாகக் கூறியதற்கும் கண்டிப்பாகப் பொறுப்பாட்சி அளிக்க முடியாதென ஸர். ஸி.பி. பிடிவாதம் செய்கிறார். பொறுப்பாட்சி கிளர்ச்சி சட்ட விரோதமானது என்றும் கிரிமினல் திருத்தச் சட்டம் பிறப்பித்து விட்டார். திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூருக்கு செல்லுமுன்னமேயே பொறுப்பாட்சிக் கோரிக்கையை திருவிதாங்கூர் ஜனங்கள் வெளியிட்டே வந்திருக்கிறார்கள். பழைய சட்டசபையிலும் கூட அதுபற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஆகவே பொறுப்பாட்சிக்கு ஸர்.ஸி.பி. இப்பொழுது எதிரியாகத் தோன்றியிருப்பதற்கு அந்தரங்க காரணங்கள் வேறுண்டென பெரும்பாலார் கூறுவது அவ்வளவு ஆதாரமற்றதாயிராதென்றே நினைக்க வேண்டியதாக இருக்கிறது.
~subhead
சமஸ்தான காங்கரஸ் எதிர்ப்பு
~shend
சமஸ்தானப் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஸர்.ஸி.பி. வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் சமஸ்தானங்களுக்கு நன்மையளிப்பதைவிட ஸர்.ஸி.பி.க்கு வேண்டிய சிலருக்கே அதிக நன்மையளிக்குமென சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். மற்றும் ஸர்.ஸி.பி.யின் திருவிதாங்கூர் சர்வகலா சங்க ஸ்தாபனம் பார்ப்பனர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கும் சூழ்ச்சியேயென்றும் திருவிதாங்கூரின் தற்கால நிலைமைக்கு அவ்வளவு பெரும் பணச் செலவு பிடிக்கக்கூடிய ஒரு கல்வி ஸ்தாபனம் தேவையில்லையென்றும் அவர்கள் வாதிக்கிறார்கள். ஆடம்பரப் பெயர்கள் சூட்டி பெரிய பெரிய புது உத்தியோகங்களை ஸர்.ஸி.பி. சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதையும் அவர்கள் ஆதரிக்கவில்லை. மற்றும் 5000 ரூபாய் மாதச் சம்பளமும் மற்றும் விசேஷ சலுகைகளும் உடைய ஒரு திவான் திருவிதாங்கூர் நிலைமைக்கு இப்பொழுது தேவையில்லையென்பதும் அவர்கள் கட்சி. இவ்விஷயங்களை யெல்லாம் ஒரு மெம்மோரியல் மூலம் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் மகாராஜா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த மெமோரியலே ஸர்.ஸி.பி.யின் மூலைக் குழப்பத்துக்குக் காரணம்.
~subhead
சமரசத்திற்கு ஸர்.ஸி.பி. நிபந்தனை
~shend
சமீபத்தில் சில சர்க்கார் அதிகாரிகள் பிரேரணையின் பேரில் சமஸ்தான காங்கரசுக்கும் சர்க்காருக்கும் சமரசம் செய்ய முயற்சி நடந்தபோது அந்த மெமோரியலை சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் வாபீஸ் வாங்கி மன்னிப்பு கேட்கவேண்டுமென்று ஒரு முக்கியமான நிபந்தனையை ஸர்.ஸி.பி. ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூரில் கால்வைத்து இப்பொழுது 7-வருஷங்களுக்கு மேலாகிறது. மேலும் 10-வருஷம் திவானாக இருக்க மகாராஜா அவர்களிடமிருந்து முன்னாடியே ஒப்பந்தம் வாங்கிக்கொண்டிருக்கிறார். இது எந்த சமஸ்தானத்திலும் இதுவரை நடந்திராத ஒரு விநோத ஒப்பந்தம். 7-வருஷ திருவிதாங்கூர் வாழ்வினால் சமஸ்தான மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட இளைய மகாராஜாவிடமிருந்து இவ்வண்ணம் ஒரு ஒப்பந்தம் பெற்றுக்கொண்டது சாதாரண அரசியல் மரியாதைக்கே அடுத்ததல்ல.
~subhead
திருவிதாங்கூர் மக்கள் முடிவு
~shend
ஆகவே ஸர்.ஸி.பி. அலங்கோல ஆட்சி ஒழிய வேண்டுமானால் பொறுப்பாட்சி ஏற்படுத்தி தீரவேண்டுமென்று திருவிதாங்கூர் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பொறுப்பாட்சிப் போர் தொடங்கியும் ஆகிவிட்டது. ஆகஸ்டு 26-ந் தேதி ஆரம்பமான போர் நாளதுவரை முட்டின்றி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரத்தில் சமஸ்தான காங்கரஸை அடக்கி விடுவதாக உறுதிமொழி கூறி கிரிமினல் திருத்தச்சட்ட ஸ்ரீமுகம் வெளியிடுமாறு ஸர்.ஸி.பி., மகாராஜா அவர்களைக் கேட்டுக் கொண்டாராம். இப்பொழுது சட்டமறுப்புப் போர் ஆரம்பமாகி 4 வாரங்கள் முடியப் போகின்றன. சுமார் ஆயிரம் பேர் வரை சிறை புகுந்தாய்விட்டது. ஆறு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக்கின்றன. டஜன் கணக்கான பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையும் ஆயிருக்கின்றனர். எத்தனையோ இடங்களில் தடியடிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக் கின்றன. எனினும் சட்டமறுப்புப் போரின் வலிமை குறையவில்லை. சமீபத்தில் குறையு மென்றும் தோன்றவில்லை. பெண்களும்கூட துணிந்து போர்முனைக்கு வந்திருக்கிறார்கள். திருவிதாங்கூர் மாணவர் உலகம் திரண்டு எழுந்திருக்கிறது. ஒரு வருஷத்துக்கு பள்ளி பகிஷ்காரம் செய்ய வேண்டுமென கோட்டயம் மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழர், நாயர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள், ஈழவர், சில பார்ப்பனர் ஆகிய சகல ஜாதியாரும் மதத்தாரும் இப்போரில் மணப் பூர்த்தியாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும் ஸர்.ஸி.பி.யின் ஆணவம் அடங்கவில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுக்க வலுக்க கனம் ஆச்சாரியாரின் பிடிவாதமும், ஆணவமும் விருத்தியாகி வருவது போலவே சட்டமறுப்புப் போர் வலுக்க வலுக்க ஸர்.ஸி.பி.யின் திமிரும் பெருகி வருகிறது. திருவிதாங்கூரில் ஒரு அய்யரும், சென்னையில் ஒரு ஆச்சாரியாரும், காஷ்மீரத்தில் ஒரு அய்யங்காரும் மக்கள் சுதந்தரத்துக்கு யமனாய் முளைத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் ஏழைகளுக்கு ஏற்படும் சதியை திருவிதாங்கூரும் சென்னை மாகாணமும் காஷ்மீர் சமஸ்தானமும் விளக்கிக் காட்டுகின்றன. இந்த பார்ப்பனீயக் கொடுமை ஒழிவது எந்நாள்?
குடி அரசு – தலையங்கம் – 25.09.1938