பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?

சாப்ராவில் சாரான் அரசியல் தொண்டர்கள் மகாநாடு கூடியது. அதில் தோழர் அனுக்கிரகநாராயண் சின்னா தலைமை வகித்தார். ஆனால் அம்மகாநாட்டிற்கு தலைமை வகிக்க தோழர் ஜகத்நாராயணலால் ஒத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத அசெளகரியத்தால் அவர் வரமுடியவில்லை. அவர் அம்மகாநாட்டிற்கு ஒரு சேதியனுப்பியிருந்தார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும் என்றும் அவர்களது சேவை தேவையான போதெல்லாம் உடனே முன்வரவேண்டுமென்றும் ஏமாற்றிவிடக்கூடாது. டிமிக்கி கொடுத்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதனால் காங்கிரசில் இதுவரை கலந்து வேலை செய்து வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது விளங்கவில்லையா?

இம்மகாநாட்டிற்கு தலைமைவகித்த தோழர் அனுக்கிரக நாராயண் சின்னா தனது தலைமைப் பிரசாங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இச்சிறிய – அற்ப காரியத்தைக் குறித்து மனம் பூரித்து விடக்கூடாது! கர்வங்கொண்டு தலைகால் தெரியாமல் மதுவுண்டவனைப்போல இருந்து விடக்கூடாது என்றும், சுதந்திரப்போராட்டத்தின் முதற்படியாகிய எ.பி.சி. என்ற அட்சரத்தைக்கூட இன்னும் சரிவர அவர்கள் அறியவில்லை என்றும் ரஷ்யாவில் சுதந்திரத்திற்காக அந்நாட்டு வீரர்கள் எத்தகைய வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதையும் டச்சு தேச மக்களின் சரித்திரத்தையும் நன்கு வாசித்து அறியவேண்டும் என்றும் அவைகளைப் படித்தபின் இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்களே யாவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ரஷ்யாவைப்பற்றி இவர் சொல்லுவதால் ரஷ்யாவில் எம்முறை கையாளப்பட்டதோ அதே முறையை இவர்களும் கையாளவேண்டும் என்றல்ல எனவும் குறிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில் இந்தியாவின் கல்வி நிலைமைக்கும் பழக்க வழக்கத்திற்கும் அம்முறைகள் ஏற்றதல்ல, அஹிம்சா முறையே நமது நாட்டிற்கு ஏற்ற முறை என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் தோழர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வேலை செய்து வந்த தொண்டர்கள் பல பாகத்திலிருந்தும் அவர்கள் காங்கிரசில் சேர்ந்து செய்த தியாகங்களைக் குறித்தும், பட்ட கஷ்டங்களைக் குறித்தும் இன்னும் மற்ற காரியங்களைக் குறித்தும் நீண்டதோர் அட்டவணை – கேட்லாக் தயார் செய்யப்பட்டு தனக்கு வந்து குவிந்து கொண்டிருந்ததாகவும் அவ்வாறு எழுதிவிட்டு தங்களுக்கு கெளன்சில்களில் ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய மனப்பான்மையோடு கூடிய காங்கிரஸ்காரர்களின் யோக்கியதையை எந்த வார்த்தையால் விளக்குவதென்று தனக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இரண்டாவதாக அவர்களுக்கு ஆஸ்தியில் உள்ள ஆசை அவர்களை விட்டு ஒழிந்தபாடில்லை என்றும், பணம் சேர்ப்பதில் அவர்களுக்கு ஆசையிருந்து வருவதாகவும், சென்ற சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பித்த காலையில் அநேகர் சர்க்கார் அவர்களுடைய சொத்துக்களின் மேல் நாட்டத்தை செலுத்த ஆரம்பித்த உடன் காங்கிரசைவிட்டும் தாங்கள் செய்து வந்த சேவையினின்றும் விலகிக்கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, பதவியாசைக்காரர்களும் ஆஸ்தியாசைக்காரர் களும் காங்கிரஸ்காரர்களா? அல்லது காங்கிரஸ் அல்லாதவர்களா? என்பதும், சுயநலத்திற்காக வேலை செய்கிறவர்களும், கர்வம் சம்பாதிப்பதற்காக பொது சேவை புரிவர்களும் யார் என்பதும் இப்பொழுதாவது புரிகிறதா?

குடி அரசு – கட்டுரை – 13.06.1937

You may also like...