பதவியும் “நிபந்தனை”யும்

 

கவர்னர்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக அ.இ. காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்துவிட்டது.

ஆனால் எந்த மாதிரி வாக்குறுதி பெறுவது என்பதும் அத்தீர்மானத்திலேயே இருக்கிறது. அதாவது “காங்கிரஸ்காரர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்தக்கூடாது” என்கின்ற வாக்குத்தத்த ஒப்பந்தம் பெற்று அரசியலை நடத்திக் கொடுப்பது.

இதில் இரண்டு விஷயம் யோசிக்க வேண்யடிதாகும்.

  1. சட்டத்துக்கு கீழ்பட்டு அரசியல் சட்டப்படி நடந்து அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சா (விசேஷா) திகாரத்தை ஏன் உபயோகிப்பார் என்பது.
  2. ஒருசமயம் உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லப்படுமானால் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கவர்னருக்கு சொந்த அதிகாரம் ஏதாவது உண்டா? பொதுஜன நன்மைக்கோ பிரிட்டிஷ் அரசியல் தத்துவத்துக்கோ விரோதமில்லாமல் நடத்தவே அரசியல் சீர்திருத்தம் கட்டுப்பட்டதாகும். அம்மாதிரி காரியம் மந்திரிகள் செய்யாமல் இருக்கும் வரை கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்த ஏன் முற்படுவார்?

மந்திரிகள் செய்யும் எந்தக் காரியமாவது பொதுஜன நன்மைக்கு ஏற்றதல்ல என்று கருதி அக்காரியம் அரசியல் சட்ட நிபந்தனைக்கு மீறியதல்ல என்றும் கருதுவாரானால் அப்போது கவர்னரால் எதேச்சாதிகாரம் செலுத்தாமல் இருக்க முடியுமா? அவர் இஷ்டப்பட்டாலும் எதேச்சாதிகாரம் செலுத்தாமல் இருக்க முடியுமா?

அப்படி எதேச்சாதிகாரம் செலுத்தாவிட்டால் பார்லிமெண்டு கவர்னரை சும்மா விட்டுவிடுமா? கவர்னருக்கு அந்த உரிமை அதாவது எதேச்சாதிகாரம் செலுத்துவதோ செலுத்தாமல் இருப்பதோ என்ற உரிமை பார்லிமெண்டால் கொடுக்கப்பட்டிருக்கிறதா?

என்பவைகளை யோசித்தால் காங்கிரஸ் கவர்னர்களை வாக்குறுதி கேட்பதே சட்ட விரோதமும் முட்டாள் தனமானதுமான காரியமாகும்.

ஒவ்வொரு கவர்னரும் காங்கிரஸ் தலைவர்களிடம் “நீங்கள் யோக்கியமாய் நடந்தால் நானும் ஒழுங்காய் நடக்கிறேன்” என்றுதான் சொல்லுவார்களே தவிர, “வாக்குறுதி கொடுப்பார்களே” தவிர சட்டத்துக்கு கட்டுப்பட்டு என்று நீங்கள் என்ன செய்தாலும் நான் சும்மா இருக்கிறேன் என்று சொல்லமாட்டார்.

இது ஒருபுறமிருக்க

அந்த அதாவது காங்கிரஸ் மந்திரிகள் செய்யும் செய்யப்போகும் ஒரு காரியத்தை ஒழுங்கானது என்றோ, யோக்கியமானது என்றோ முடிவு செய்யும் அதிகாரம் இன்று சட்டப்படி அல்லது கவர்னர் வாக்குறுதிப்படி யாரிடம் இருக்கிறது என்பது மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.

உதாரணமாக காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது யாவருக்கும் ஞாபகமிருக்கும். அதில் காங்கிரசுக்காரர்கள் தாங்கள் இனிமேல் சட்டம் மீறுவதில்லை, சட்ட மறுப்பு செய்வதில்லை, மறியல் செய்வதில்லை, உப்புக் காய்ச்சுவதில்லை என்று ஒப்புக்கொண்டார்கள்.

சர்க்காரார் அப்படியானால் கைதி செய்வதில்லை, போலீஸ்காரர்களை விட்டு அடிப்பதில்லை, ஜெயிலில் இருப்பவர்களை விடுதலை செய்து விடுகிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்; இந்தப்படி ஒரு ஆதாரம் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

பிறகு உடனே ஜவஹர்லால் பண்டிதர் தனது ஐரோப்பிய தோழர்கள் கேலி செய்வார்கள் என்று பயந்து ஒரு குட்டிக்கரணம் போட்டு இது ஒப்பந்தமல்ல இளைப்பாறும் முறை என்று சொன்னார். காந்திஜி அந்த அபிப்பிராயத்தை மாற்றி ஜவஹரைக் கூப்பிட்டனுப்பி வைசிராயிடம் தெரிவித்தார். (இதற்கு ஆக ஜவஹர்லாலையும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சங்க உபதலைவர் பதவியில் இருந்து விலக்கினார்கள். அப்படியெல்லாம் இருந்தும்) காங்கிரஸ்காரர் ஒப்பந்தத்திற்கு விரோதமாய் நடந்து விட்டதாக சர்க்கார் சொன்னார்கள். சர்க்காரார் ஒப்பந்தத்துக்கு விரோதமாய் நடந்து விட்டதாக காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். மறுபடியும் “போர்” தொடக்கமாயிற்று. காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் மூலமே ஒரு சரணாகதி தீர்மானம் செய்தனுப்பிவிட்டு அதாவது இனிமேல் சட்டம் மீறுவதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டு சட்டசபைக்குள் நுழைந்தார்கள். அதுபோலவே இப்போது “ஒப்பந்தத்தில்” தகராறு ஏற்பட்டால் யார் தீர்ப்புக் கூறுவது என்று கேட்கின்றோம்.

ஆகவே பொது ஜனங்களை ஏமாற்றவே இப்படிப்பட்ட தந்திரங்களை காங்கிரசுக்காரர்கள் செய்து வருகிறார்களே அல்லாமல் கவர்னர் வாக்குறுதி என்பதில் எவ்வித அருத்தமும் இல்லை. அதற்கு ஏதாவது அருத்தம் இருக்குமானால் அது எப்படியாவது மந்திரி பதவி ஏற்பது என்பதுதான்.

குடி அரசு – கட்டுரை – 28.03.1937

You may also like...