உலகில் பெரிய வெட்கக்கேடு
காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றார்கள். பெற்ற பிறகு போர்டு சென்ட் ஜார்ஜ் கோட்டை வாயில்படியில் நின்றுகொண்டு கூப்பாடு போடுகிறார்கள். திருட்டுத்தனமாக கவர்னர்கள் வீட்டுக்கு போய் ஓலமிடுகிறார்கள். கோட்டை வாசல் திறந்து கிடந்தும் உள்ளே இருக்கும் கவர்னர் பிரபு கோட்டைக்குள் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் போக முடியாமல் அழுகிறார்கள். வெற்றி பெற்ற “வீரர்கள்” எல்லோருக்கும் தலைவர் உள்பட உள்ளே போகவும் மந்திரி பதவி ஏற்கவும் சம்பளத்தை வாங்கி மூட்டை கட்டவும் அளவு கடந்த ஆசை இருந்தும் கவர்னர் பிரபுவுக்கும் எப்படியாவது இவர்கள் தலையில் மந்திரி பதவியை கட்டி அடித்து தனது காரியத்தை கஷ்டமில்லாமல் ஆக்கிக்கொள்ளலாம் என்கின்ற கருத்தில் தாராளமாய் இடம் கொடுத்தும் போலி வெட்கமும் ஜனங்களுக்குக் கொடுத்த இமயமலை போன்ற வாக்குறுதிகளும் பின்னே நின்று கொண்டு மின்சார சக்தி இழுப்பது போல் இழுக்கிறது. அதுவும் ஒரு அடி முன்னே போனால் இரண்டு அடி பின்னுக்கு இழுக்கிறது. இந்த விதமாக ஒரு காட்சி இதுவரை உலகத்தில் எங்குமே நடந்திருக்காது என்றே சொல்லலாம். இதுபோன்ற பெரியதொரு வெட்கக்கேடான சம்பவமும் இதுவரை உலகில் எங்குமே நடந்திருக்காது என்றும் சொல்லலாம். “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில்” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே மாதிரி ஒரு மாதத்தில் காங்கிரஸ்காரர்களின் புளுகு வெளியாகி காங்கிரஸ்காரர் நிலை பச்சவாதம் பிடித்த உடல் போல் அசைவின்றிக் கிடக்கும்படி செய்து விட்டது.
மந்திரிகளை வைவதோடு காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றதின் பயன் முடியப்போகிறது.
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது
“சாவி என்கிட்டதானே இருக்கிறது” என்பதாகும்.
இதன் கருத்து என்னவென்றால் ஒரு மலையாள நம்பூதிரி பார்ப்பான் குளத்தில் குளிக்கும்போது தன் கைப்பெட்டியை மேட்டில் வைத்து விட்டு குளித்தான். பார்ப்பான் முங்கி குளித்து உடல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது பெட்டியை ஒருவன் எடுத்துக்கொண்டு போய் விட்டான். பார்ப்பான் குளித்து விட்டு மேட்டுக்கு வந்து பெட்டியைப் பார்த்தான். காணக்கிடைக்கவில்லை. விசனத்தோடு சுற்றிச் சுற்றிப் பார்த்தான். இந்த சமயத்தில் பார்ப்பானுக்கு சந்தோஷகரமான விஷயம் ஒன்று தென்பட்டது. உடனே ஆனந்தம் கொண்டு பெட்டி காணாமல் போன விசனத்தை மாற்றிக்கொண்டான். என்ன தென்பட்டது என்றால் “பெட்டி போய் விட்டதால் என்ன கஷ்டம், சாவி நம்மிடம் தானே இருக்கிறது. எடுத்துக்கொண்டு போனவன் சாவி இல்லாமல் என்ன செய்துவிட முடியும்?” என்று நினைத்து மகிழ்ந்தானாம்! அதுபோல் காங்கிரஸ்காரர் மந்திரி பதவி இழந்து விட்டு தங்கள் ஏமாந்த தனத்துக்கு ஆக சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு “ஏற்பட்ட சந்தோஷக்குறி”க்கு ஆதாரமெல்லாம் வேறு யார் மந்திரி வேலைபார்த்தால் தான் அதில் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? மெஜாரிட்டியாய் வந்தவர்கள் நாம் தானே, வேறு மந்திரிகள் என்ன செய்து விடமுடியும் என்று கருதி திருப்தி அடைகிறார்கள்.
மந்திரி தன்மையினால் மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை யெல்லாம் இந்த “இடைக்கால” மந்திரிகள் செய்துவிட்டு வெறும் பெட்டியை எறிந்துவிட்டு வரப்போகிறார்கள். அப்போது மெஜாரிட்டிகாரர்கள் உள்ளே போய் “மந்திரி பதவியால் ஒன்றும் செய்ய முடியாது என்று நாங்கள் முன்னமே சொன்னதை இப்போது செய்கையில் செய்து காட்டிவிட்டோம்” என்று சொல்லிவிட்டு, மாதத்தையும் ரூபாயையும் மாத்திரம் எண்ணிக்கொண்டு காலம் கடத்தப்போகிறார்கள்.
ஆகவே அரசியலில் இம்மாதிரி வெட்கங்கெட்ட தன்மையும் முட்டாள் தனமான நடத்தையும் நமது காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்காதென்றே சொல்லுவோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1937