காங்கிரசும் வரி குறைப்பும்
காங்கிரஸ்காரர்கள் சமீப தேர்தலில் வெற்றி பெற்ற உடன் சர்க்காரார் தங்களைக் கண்டு நடுங்குவதாக பித்தலாட்டப் பிரசாரம் செய்து வருகிறார்கள். எதில் நடுங்குகிறார்கள் என்று பார்ப்போம். சட்டசபையில் “ஏராளமான வெற்றி” “வெற்றிமேல் வெற்றி” “எதிர்பாராத வெற்றி” என்பதெல்லாம் பெற்ற பிறகே டில்லி சட்டசபையில் சர்க்காரார் 3 வித வரிகளை அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். அதாவது வெள்ளிக்கு வரி, சர்க்கரைக்கு வரி, தபாலுக்கு வரி. இந்த மூன்றில் காங்கிரஸ்காரர்கள் வெள்ளி வரியைப் பற்றி கவலைப்படவில்லை. சக்கரை, தபால் வரியைப்பற்றி கூப்பாடு போட்டார்கள். ஒன்றும் ஜபம் சாயவில்லை. பட்ஜட்டில் கைவைக்கவிட மாட்டேன்” என்று சர்க்கார் மெம்பர் சொன்னார். வைசிராய் பிரபு மேலொப்பம் போட்டுவிட்டார். உளி முறிந்த ஷுமேக்கர் மாதிரி காங்கிரஸ் மெம்பர்கள் தலை குனிந்து கொண்டு வாய்ச் சவடால் அடிக்கிறார்கள்.
ஆகவே காங்கிரஸ்காரர்களால் வரி குறைக்கப்படும் என்பதற்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று கேட்கிறோம். அசம்பிளியில் காங்கிரஸ் கò தலைவர் தோழர் தேசாய் காங்கிரஸ் தீர்மானத்தை வைசிராய் குப்பைத் தொட்டியில் போட்டபோது உடனே கோபித்து எழுந்து,
“அசம்பளி – நடவடிக்கை என்ற மோசடியை இனி நடத்தாதீர்கள்; எங்கள் தீர்மானங்களுக்கு மதிப்பில்லையானால் அசம்பளியை கலைத்துவிடுவதே மேல்; இதுவரை சட்டசபை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தையாவது ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து இதுவரை இந்த மூன்று வருஷ காலமாய் டில்லி அசம்பிளி சட்டசபை செய்த தீர்மானங்கள் ஒன்றாவது மதிக்கப்படவில்லை; அமுலுக்கு வரவில்லை என்பது விளங்குகிறது. ஆகவே காங்கிரஸ்காரர்களுக்கு சிறிதாவது மானம், வெட்கம், சுயமரியாதை, தேசிய வீரம் இருக்குமானால் அவர்கள் செய்திருக்கவேண்டிய தென்ன?
மறுபடியும், மறுபடியும் அங்கு போய் உட்கார்ந்து வாய்வலிக்க கத்திவிட்டு தினம் 20 ரூபாய் படியும் முதல் வகுப்பு ரயில் படியும் வாங்கிக் கொண்டு தங்கள் பெயருடன் எம்.எல்.ஏ. என்று போட்டு மானங்கெட்ட பெருமையும், பிழைப்பும் பெறுவதா, அல்லது பண்டித மோதிலால் நேரு அவர்கள் சொன்னது போல் “இப்பொழுது எங்களுக்கு புத்தி வந்தது” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிடுவதா என்று கேட்கின்றோம்.
சர்க்காருக்கு இந்த காங்கரஸ் வீரர்கள் யோக்கியதை தெரியாதா? இவர்கள் மானமரியாதை, சொந்த நடத்தை, யோக்கியதை, பொதுவாழ்வில் உள்ள நாணையம் ஆகியவைகள் தெரியாதா என்று கேட்கின்றோம்.
அசம்பளி சட்டசபை சட்டத்திலேயே “சட்டசபை மெம்பர்கள் தீர்மானித்த தீர்மானங்களை சர்க்கார் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அவைகளை குப்பைத்தொட்டியில் போடவே வைஸ்ராய் பிரபுவிடம் அதிகாரமிருக்கிறது” என்று தெளிவாக அங்கு எழுதி இருக்கும்போதும் இதற்கு முன்னும் அநேக வருஷமாக சட்டசபை தீர்மானங்களை அவமதித்து வந்திருக்கிறபோதும் அதை மறைத்து முன்பு சட்டசபையில் இருந்தவர்கள் மீது குறை கூறி வைது பொது ஜனங்களை ஏமாற்றி சுமை சுமையாகச் சாதித்து விடுகிறேன் என்று சொல்லி ஓட்டு வாங்கி சட்ட சபைக்கு போனது அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் இழிதனமும் ஆன காரியமா அல்லது சர்க்கார் செய்வது தப்பான காரியமா என்று கேட்கின்றேன்.
இந்திய அரசியல் முயற்சி உருப்படாமல் போனதுக்கு காரணமே யோக்கியர்களும் நாணய முள்ளவர்களும் அதிகமாய் அரசியலுக்கு வரமுடியாத நிலையில் அரசியல் இருப்பதும் கூலிக்கு மாரடிக்கும் ஆட்களையும் கூலிக்கும் வயிற்றுப்பிழைப்புக்கும் பிரசாரம் செய்யும் பத்திரிக்கைகளையும் ஆயுதமாய் கொண்டு வேலை செய்வதேயாகும். மற்றும் அரசியலில் கலந்துள்ளவர்களில் சத்தியவான் – நாணயவான் என்று கூறும்படியானவர்கள் எத்தனை பேர்? அரசியல் பிரசார பத்திரிக்கைகளில் யோக்கியமானது – நாணயமானது – மானமுள்ளது என்று சொல்லும்படியானவை எத்தனை என்று கேட்டால் என்ன பதில் சொல்லக்கூடும்? இந்த யோக்கியதையில் காங்கிரசு இருந்து கொண்டு மக்களை முட்டாள்களாக்கி வைத்துக்கொண்டு அரசியலை நடத்தினால் எந்த சர்க்கார் தான் மதிக்கும் என்று கேட்கின்றோம்.
உண்மையைக் கூறவேண்டுமானால் டில்லி அசெம்பிளியில் காங்கரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இல்லாமல் வேறு யோக்கியர்களும் நாணயஸ்தர்களும் இருந்திருப்பார்களானால் மனித சமூக நன்மைக்கு ஆக அனேக காரியம் செய்யப்பட்டிருக்கலாம்; பல வரிகளும் குறைக்கப்பட்டிருக்கலாம்; பல தீர்மானங்களும் மதிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு ஆதாரம் முந்திய 10, 20 Mத்திய அசம்பிளி நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பார்த்தாலே தெரியவரும்.
நிற்க, மாகாண சட்டசபைகளான அசம்பளிக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் சென்று இருக்கிறார்களே அங்குதான் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி நலங்களுக்கு அனுகூலமான சில காரியங்களை அவசர அவசரமாகச் செய்துகொண்டு “நாங்கள் முன்னேயே சொல்லவில்லையா இந்த சட்டசபையில் ஒன்றும் செய்ய முடியாது என்று”
என்பதாகச் சொல்லி விடப் போகிறார்கள்.
வரி குறைப்பது என்பது வரவு செலவை சரிக்கட்டுவதாகும். அதில் செலவைக் குறைத்தால் தான் வரியைக் குறைக்க முடியும். எந்தச் செலவை குறைக்க முடியும்? கள்ளுக்கடை எடுப்பதற்கு தகுந்த அளவு செலவு குறைப்பதே லேசான காரியமல்ல என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் ஐ.சி.எஸ். சம்பளத்தில் கைவைக்க முடியாது என்பதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்.
இப்பொழுதே சர்க்காரார் (ஜஸ்டிஸ் கòயார்) 3-அணா பூமி வரி குறைத்து விட்டார்கள்.
ஆகவே காங்கிரஸ்காரர்கள் இனி எந்த மாதிரியான காரியத்தால் ஜனங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியப்போகிறது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.03.1937