பார்ப்பன விஷமம்

சென்னை அரசாங்கத்தின் தற்கால மந்திரிகள் நிலவரியில் 100க்கு 25 வீதம் குறைத்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்து பொறாமைப்பட்ட காங்கிரஸ் – பார்ப்பனப் பத்திரிக்கைகள் சிறப்பாக “சுதேசமித்திரன்” “இந்த வருஷத்துக்கு இல்லையாம்” என்று தலைப்புக் கொடுத்து பரிகாசம் செய்திருந்தது பற்றி அப்பொழுதே கண்டித்து எழுதினோம்.

இந்த வருஷத்துக்கு குறைத்திருந்தாலும் “சென்ற வருஷத்துக்கு இல்லையாம்” என்று விஷமத்தனமாக குறை கூறித்தான் இருக்குமே ஒழிய குறைத்தது பற்றி ஒரு நாளும் திருப்தி அடையவோ நன்றி காட்டவோ முன்வராது. ஏனெனில் அது அந்த வகுப்பின் சுபாவமேயாகும். எப்படியாவது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை தடுப்பதையே நோக்கமாகக்கொண்டு குறை கூறி விஷமப் பிரசாரம் செய்யும் கூட்டம் ஒரு நாளும் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாதல்லவா?

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பம்பாய் மந்திரிகளைப் பற்றியும் இதே மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய “சுதேசமித்திரன்” முன்வந்து விட்டது. அதாவது 14-5-37ந் தேதி மித்திரன் பத்திரிக்கையில் “மது விலக்கேனும் உண்டா” என்று தலைப்புக்கொடுத்து பம்பாய் மந்திரியை மது விலக்கு கூடச் செய்யவில்லை என்று குறை கூறுகிறது. பம்பாய் மந்திரிசபை மதுவிலக்குக்கு ஒரு திட்டம் போட்டு பரீக்ஷார்த்தமாக சில கடைகளை மூடுவதாகத் தெரிவித்திருக்கிறது. அதைப் பார்த்து மேலால் என்ன செய்யப் போகிறது என்று பார்க்காமலும் அல்லது வேறு முறைகள் சொல்லாமலும் “மதுவிலக்கேனும் உண்டா” என்று பழிகூற ஆரம்பித்திருப்பது எப்படி யோக்கியமான காரியம் ஆகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

1927ம் வருஷத்தில் சென்னை அரசாங்கத்தில் காங்கிரஸ் மந்திரியாக இருந்தவர் மது விலக்கைப்பற்றி ஜஸ்டிஸ் கட்சியார் கேட்ட கேள்விக்கு “மதுபானம் கெட்டதா நல்லதா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னார்.

மற்றும் காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்களை உங்களது மதுவிலக்குத் திட்டம் என்ன என்று ஜஸ்டிஸ் கòயார் கேட்ட போது “பூரண சுயராஜ்யம் கிடைத்தாலல்லாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை” என்று பதில் சொன்னார். காங்கிரசும் மதுவிலக்கின் பேரால் எவ்வளவோ லக்ஷக்கணக்கான பணங்களைப் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து அரசியல் காரணங்களை மனதில் வைத்து மறியல் செய்யச் செய்தபோது தண்டனையும் அடக்கு முறையும் அதிகமானவுடன் “இனிமேல் மறியல் செய்வதில்லை” என்று அரசாங்கத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு ஓடிவிட்டு இப்போது மந்திரிகளைப் பார்த்து மதுவிலக்கேனும் உண்டா என்றால் இதில் சிறிதாவது நாணயம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

இம்மாதிரியே பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் எந்த விதத்திலும் தங்களையும் தங்கள் அடிமைகளையும் தவிர வேறு எப்படிப்பட்டவர்களும் தலையெடுக்க வொட்டாமல் அழுத்துவதையே ஜன்மக் குணமாகக்கொண்டு தொல்லை விளைவித்து வருகிறார்கள். இவ் விஷமங்களை நமது பாமர மக்கள் நம்பிக்கொண்டு கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.

இப்படிப்பட்ட இழி நிலை மாறினால் ஒழிய நாட்டிற்கு நலம் உண்டாவது மிகமிக அருமை என்றே சொல்லுவோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1937

You may also like...