முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் முஸ்லீம்கள் சுமார் 9 கோடி ஜனசங்கை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் மத விஷயங்களிலும் சமூக வாழ்க்கை விஷயங்களிலும் இந்துக்களுடன் மாறுபட்டவர்கள். இந்துக்களும் முஸ்லீம்களை சமூக மதவிஷயங்களில் மாறுபட்டவர்களாகவே கருதி வந்திருக்கிறார்கள். இந்துக்கள் மெஜாரிட்டியாகவும் முஸ்லீம்கள் மைனாரிட்டியாகவும் இருந்து வருவதாலும் இந்து மத சம்பிரதாயங்கள் மத ஆதாரங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் சமூகத்தையும் மதத்தையும் இழித்துக் கூறப்பட்டிருப்பதாலும் இந்துக்களால் முஸ்லீம்கள் தாழ்மையாய்க் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் உத்யோக கிளர்ச்சி ஏற்பட்டு உத்தியோகங்களை இந்திய மக்களுக்கு அரசாங்கத்தார் அளிக்க ஏற்பட்ட காலமுதல் ஒவ்வொரு மதமும் ஜாதியும் வகுப்பும் உத்தியோகங்களுக்கு போட்டி போட முன்வந்ததின் மூலம் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்பட்டு வந்த பெரும்பான்மையான மதங்களும் ஜாதிகளும் ஒருவாறு கண்விழிக்கத் தொடங்கி தங்களது இழிவுகளையும் பின்நிலையையும் நிவர்த்தித்துக் கொள்ள முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றிபெற்றும் வருகின்றன. இந்த முறையினால்தான், இந்திய முஸ்லீம் சமூகமானது குறிப்பாக தென் இந்திய முஸ்லீம் சமூகமானது இந்த 10, 20 வருஷத்துக்குள் 100-க்கு 100 வீதம் என்று சொல்லும்படியான அளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுவோம்.

இந்திய தேசிய காங்கிரசு என்பது 1885ல் ஏற்பட்டதானாலும் 1890-ஆம் வருஷத்திலேயே காங்கிரசின் பயனாய் முஸ்லீம் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய கெடுதியை தீர்க்க தரிசனம்போல் அறிந்து அக்காலத்திய முஸ்லீம் தலைவர்கள் அரசாங்கத்தோடு போராடி தங்கள் உரிமைக்கு பங்கம் வராதபடி காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். 1890 முதலே முஸ்லீம்களுக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்கின்ற கூச்சல் இருந்து கொண்டே வந்திருக்கின்றது. ஏதோ ஒன்று இரண்டு சுயநல முஸ்லீம்களை காங்கிரஸ் பல சூழ்ச்சிகளால் தம் கைவசப்படுத்தி “முஸ்லீம்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்” என்று வேஷம் காட்டி வந்திருந்த போதிலும் 1900-வருஷ முதலே காங்கிரசுக்கு விரோதமாய் முஸ்லீம்கள் முஸ்லீம் சமூக சங்கங்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றின் மூலமே தங்கள் சமூக அரசியல் உரிமைகளைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். முஸ்லீம்களின் சங்கங்களின் மூலமாக வேண்டிக் கொள்ளப்பட்ட வேண்டுகோள்களின் மீதிலேதான் சர்க்கார் இதுவரை முஸ்லீம்களுக்கு என்று அளித்து வந்த உரிமைகள் எல்லாம் அளிக்கப் பட்டிருக்கின்றனவே ஒழிய ஒரு காரியமும் காங்கிரசால் முஸ்லீம்களுக்கு ஏற்படவே இல்லை.

அன்றியும் காங்கிரசானது முஸ்லீம்களுக்கு என்று தானாக இதுவரை ஒரு நலனையும் அளிக்கவில்லை என்பதோடு ஒரு நலனைப்பற்றியும் கவனிக்கவில்லை என்பதுமல்லாமல் கூடுமானவரை அவ்வப்போது முஸ்லீம் கோரிக்கைகளுக்கும் நலன்களுக்கும் அரசாங்கத்தாரால் அளிக்கப்படும் செளகரியங்களுக்கெல்லாம் கூட முட்டுக்கட்டையாய் இருந்தே வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அப்படி யாராவது மறுப்பதாய் இருந்தாலும் அனேக ஆதாரங்களை அதற்கு மாறாக எடுத்துக்காட்ட நம்மால் கூடும். அப்படி இருக்க இப்போது காங்கிரஸ்காரர்கள் சில முஸ்லீம்களை தம் வசப்படுத்திக்கொண்டு அவர்கள் மூலம் முஸ்லீம் சமூகத்தையே காங்கிரசில் இழுக்க முயற்சி செய்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் முஸ்லீம் ஸ்தாபனங்களையும் ஒழிக்கப் பார்க்கிறார்கள். அன்றியும் முஸ்லீம்களின் தலைவர்களையும் குறைகூறி பழிசுமத்தி அவர்கள் மீது முஸ்லீம் பாமர மக்களுக்கு வெறுப்பு ஏற்பட சூழ்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக தோழர் மகம்மதலி ஜின்னா அவர்களையும் மெளலானா ஷவுக்கதலி அவர்களையுமே “நீங்கள் எப்படி முஸ்லீம்களின் தலைவர்களாவீர்கள்” என்று கேட்கிறார்கள். ஒத்துழையாமை காலத்தில் இவர்களையும் இன்னும் பல சாதாரண நபர்களையும் முஸ்லீம்களின் தலைவர்கள் என்று காங்கிரஸ்காரர்களே விளம்பரம் செய்து கொண்டு அவர்களது நிழலிலேயே மறைந்துகொண்டு அவர்களைக் காட்டி மக்களை ஏமாற்றி மரியாதை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர்களும் சர்வாதிகாரிகளும் “இப்போது உங்களுக்கு யார் முஸ்லீம் சார்பாய்ப் பேச அதிகாரம் கொடுத்தது” என்று கேட்க தைரியம் பெற்றுவிட்டார்கள்.

தோழர் மகம்மதலி ஜின்னா அவர்கள் இதுவரை அரசாங்கத்தினிடமிருந்து ஒரு உதவியும் அடைந்தவரல்ல. எதிர் பார்த்தவருமல்ல. எந்தச் சமயத்திலும் அரசாங்கத்துக்கு அடிமையாய் இருந்தவருமல்ல. ஒரு விஷயத்திலாவது முஸ்லீம்களின் நலனை அலòயம் செய்தவருமல்ல. அப்படிப்பட்ட ஒரு வீரரை இன்று காங்கிரஸ் பத்திரிக்கைகளும் அவர்களது கூலிப்பத்திரிகைகளும் சர்க்கார் தாசர் என்று குறை கூறி உள் எண்ணம் கற்பிக்க முயற்சிக்கின்றன. இதற்கு ஏற்றாற்போல் இரண்டொரு கூலி ஆசாமிகளும் முஸ்லீம் பத்திரிக்கைகளும் தங்கள் சுயநலங்களை உத்தேசித்து கூடவே கோவிந்தாப் போடுகின்றன. இதை முஸ்லீம் பொதுஜனங்கள் உணர்ந்து அப்படிப்பட்ட கூலி முஸ்லீம்களுக்கு தக்க புத்தி கற்பிப்பார்களாக.

முஸ்லீம் தலைவர்களுக்கும் காங்கிரசுக்கும் இன்று உள்ள பிணக்குகள் அரசியலில் விகிதாச்சார பிரதிநிதித்துவமும் தங்கள் மத மேம்பாடுகள் மற்ற மதங்களுக்கு அடிமைப்படக் கூடாது – தலைசாயக் கூடாது என்பதுமேயாகும்.

இந்த இரண்டு காரியத்துக்கு காங்கிரஸ் இணங்குகிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. முஸ்லீம்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் விகிதாச்சாரம் கேட்பதை காங்கிரஸ் வகுப்புவாதம் என்கின்றது. காங்கிரஸ் தலைவரான தோழர் ஜவஹர்லாலோ “வகுப்பு உரிமை விகிதாச்சாரம் கொடுப்பதைவிட சுயராஜ்யம் இல்லாமலிருப்பதே மேல்” என்கிறார். காங்கிரஸ் திட்டத்திலும் வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பது என்பது முதல் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே காங்கிரசானது அத்திட்டத்தை அடியோடு எடுத்துவிட்டால் ஒழிய இன்றைய நிலையில் எந்த உண்மை முஸ்லீமுக்காவது காங்கிரசில் வேலை இருக்குமா என்று கேட்கிறோம்.

மத விஷயத்தில் இந்து மகாசபை என்றும் வர்ணாச்சிரமசபை என்றும் இந்துமத ஆதாரங்களைக் காப்பாற்றி அவற்றின் கட்டளைகளை அமுலுக்கு கொண்டு வருகிற சபை என்றும் இந்தி பாஷையை இந்தியாவின் பொது பாஷையாக ஆக்கும் சபை என்றும் முஸ்லீம்களை இந்து மதத்திற்கு இழுக்கும் சபை என்றும் இந்துக்கள் பல சபைகளை வைத்துக்கொண்டு அவைகளின் பிரசார செலவிற்கு ஆக 10 லக்ஷக்கணக்கான ரூபாய்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவைகளின் மூலம் தங்கள் மதத்திற்கு ஆதிக்கம் தேடிக்கொள்ளக் கருதிக்கொண்டிருக்கிறவரை முஸ்லீம்கள் மதசம்பந்தமான கவலை எடுத்துக்கொள்ளுவதிலும் ஆக்ஷேபமிருப்பதாக காங்கிரஸ்காரர்கள் சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம்.

எல்லைப்புற காந்தி என்று காங்கிரஸ்காரர்களால் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் தோழர் கான் அப்துல் கபூர் கான் சாயபு அவர்கள் இன்று காங்கிரசுக்கு வக்காலத்து பேச வந்துவிட்டார். அவ்வக்காலத்தில் காங்கிரஸ்தான் “முஸ்லீம்களுக்கு நன்மை செய்திருக்கிறதே ஒழிய அரசாங்கம் இதுவரை யாதொரு நன்மையும் செய்யவில்லை” என்று சொல்லுகிற அளவுக்கு துணிந்து விட்டார். அரசாங்கம் முஸ்லீம்களுக்கு நன்மை செய்ததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. முஸ்லீம்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ அடிமையாகவோ இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரஸ் இதுவரை முஸ்லீம் சமூகத்துக்கு கல்வி, அரசியல், பொருளாதாரம், சமுதாய இயல் ஆகிய துறைகளில் ஏதாவது ஒரு சிறு கடுகளவாவது நன்மையாகிலும் உதவியாகிலும் செய்திருக்கிறதா என்று கேட்கின்றோம். அல்லது எதிரிடையாகவாவது இல்லாமல் இருந்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றோம். வடநாட்டைப் பற்றிய ழுமு விபரமும் நமக்கு தெரியாது என்று சொல்லப்படுமானாலும் தென்னாட்டைப்பற்றி 50 வருஷ அனுபவம் நமக்கு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது. காங்கிரசின் சிபார்சால் அநேக பார்ப்பனர்கள் ஹைகோர்ட் ஜட்ஜி நிர்வாகசபை மெம்பர் முதலிய பெரும் பதவிகள் பெற்றார்கள். அந்தப்படி இதுவரை ஒரு முஸ்லீமாவது காங்கிரசால் சிபார்சு செய்யப்பட்டோ காங்கிரஸ் செல்வாக்கினாலோ ஏதாவது பதவி, உத்தியோகம், பட்டம் முதலியவைகள் பெற்றதாகச் சொல்லமுடியுமா என்று கேட்பதோடு அவர்களது கல்விக்கு ஆகவும் மதத்துக்கு ஆகவும் சமூக சமத்துவத்துக்கு ஆகவும் ஏதாவது ஒரு சிறு தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டதுண்டா வென்று கேட்கின்றோம். சென்னை கார்ப்பரேஷனில் சென்ற மாதம் நடந்த விவாதத்தின்போது முஸ்லீம்கள் பெண் கல்வி விஷயத்திலும் ஆண் கல்வி விஷயத்திலும் காங்கிரஸ் மெம்பர்கள் நடந்து கொண்ட யோக்கியதையை நினைத்துப் பார்க்கவேண்டுகிறோம்.

“காங்கிரசுடன் எல்லைப்புற முஸ்லீம்கள் சேர்ந்திருக்காவிடில் மாகாண சுதந்திரம் கூட கிடைத்திருக்காது” என்று எல்லைப்புற காந்தியார் முஸ்லீம்களுக்கு கூறுகிறார். இதன் கூற்றை முஸ்லீம்கள் தான் உணர வேண்டும்.

எல்லைப்புறத்தை ஒரு மாகாணமாய் பிரித்ததையே இன்னமும் காங்கிரஸ்காரர்கள் ஆக்ஷேபித்து வருவதை தோழர் கான்கபூர்கான் அறியாரா என்று கேட்கின்றோம். எங்கு பார்த்தாலும் முஸ்லீம்களுக்கு 3, 4 மாகாணத்தில் மெஜாரிட்டி கிடைத்துவிட்டதே என்கின்ற பொறாமைப் பேச்சே காங்கிரஸ் கூட்டங்களில் பேசப்படுவதை முஸ்லீம் தோழர்கள் அறியமாட்டார்களா என்று கேட்கின்றோம்.

மேலும் தோழர் கான் கபூர் கான் அவர்கள் “இந்தியர் நன்மையும் பிரிட்டிஷார் நன்மையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாதலால் முஸ்லீம்கள் காங்கிரசோடுதான் சேரவேண்டு” மென்கிறார்.

அதுபற்றி பின்னால் யோசிக்கலாம். ஆனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள சம்மந்தமானது இன்றும் இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் இந்து முஸ்லீம் கலகங்களும் அடிதடிகளும் அடிக்கடி நடந்து பல உயிர்கள் இருதரப்பிலும் மாய்ந்துகொண்டு வருகின்றதைப்பற்றி கான் கபூர்கான் சாயபு அவர்கள் கவனித்தாரா என்று கேட்கின்றோம்.

இந்த கலகத்துக்கு ஆஸ்பதமென்ன என்பதையாவது இந்துக்களின் லட்சியமும் முஸ்லீம்களின் க்ஷேம லாபங்களும் ஒன்றாய் இருக்குமானால் மதக் கலகமும் சமூகக் கலகமும் அடிக்கடி ஏன் ஏற்பட வேண்டும் என்பதையாவது கான் கபூர்கான் சாயபு கவனித்தாரா என்று கேட்கின்றோம்.

இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்க மென்பதாகவோ அல்லது வேறு அரசாங்கம் என்பதாகவோ அதாவது இந்து முஸ்லீம் அல்லாத ஒரு அரசாங்கம் என்பதாக ஒரு அரசாங்க ஆட்சி இல்லா விட்டால் முஸ்லீம் சமூகம் என்ன கதிக்காளாவது என்பதை கான் கபூர்கான் சாயபு யோசித்தாரா என்றும் கேட்கின்றோம். அல்லது இந்த மாதிரி கலகங்களுக்கு அந்நிய அரசாங்கம் தான் காரணம் என்று ஏதாவது ஆதாரத்தோடு கூற முடியுமா என்றும் கேட்கின்றோம். காங்கிரசையும் காங்கிரசு தலைவர்களையும் புகழ்ந்து பேசி பெரிய பட்டமும் மரியாதையும் பெறுவது சுலபம்; ஆனால் சமூகத்தை காட்டிக் கொடுக்காமல் இருப்பது லேசான காரியமல்ல.

“காங்கிரசில் சமதர்மிகள் என்று ஒரு கூட்டம் இருப்பது போல் காங்கிரசில் முஸ்லீம்லீக் முஸ்லீம்கள் என்று ஒரு கூட்டம் தனியாக இருந்து கொண்டு முஸ்லீம் நன்மைகளை கவனித்து வரலாம்” என்கிறார் மற்றொரு முஸ்லீம் காங்கிரஸ்வாதியான தோழர் ஆசிப் அலி என்பவர். இதில் சிறிதாவது பொருள் இருப்பதாக நம்மால் கருதமுடியவில்லை. காங்கிரசில் உள்ள சமதர்மிகளை அவர்கள் உண்மையான சமதர்மிகள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் காங்கிரஸ்காரர்களால் “வகுப்புவாதிகள்” என்று சொல்லப்படுவதில்லை. அவர்கள் தீவிரவாதிகள் என்கின்ற பெயரால் காங்கிரசில் இருந்து கொண்டு காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு தங்களையும் சர்க்கார் தொல்லையில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவருபவர்கள். அவர்களுக்கு செயல் இல்லை; திட்டமும் இல்லை. காங்கிரசை சார்ந்திருப்பதையே கவுரவமாய் நினைப்பவர்கள். ஆனால் முஸ்லீம்கள் நிலை அப்படியா என்று கேட்கின்றோம். முஸ்லீம் சமூகம் காங்கிரசை விட்டு வெளியில் இருந்து வந்ததாலேயே இன்றைய மேல் நிலைமையை அடைந்திருக்கிறது. இனியும் அச்சமூகம் கல்வியிலும் அரசியலிலும் முன்னேற வேண்டிய பாகம் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் காங்கிரசானது “ஜாதிமத வகுப்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாய் இருப்பவர்கள் காங்கிரசில் அங்கத்தினராயிருக்கக் கூடாது” என்று உத்திரவு போடப்போகிறது. இப்போதே வகுப்புவாதம் பேசக்கூடாது என்று அடிக்கடி ஆக்கினை பிறப்புவிக்கப்படுகிறது. தங்கள் மத சமூக விஷயத்தைப்பற்றி கவலையோ உணர்ச்சியோ உண்மையில் இருப்பவர்களுக்கு (பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்களுக்கு) காங்கிரசில் இடமே இல்லை. சகல துறைகளிலும் மேம்பட்டவர்களே காங்கிரசில் இருக்க அருகதையுடையவர்கள் ஆவார்கள். குறை இருக்கிறவர்கள் தனித்து காங்கிரசுக்கு வெளியில் இருந்தே முற்போக்கடைய வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் எவன் ஜாதி மதத்தை பார்ப்பனர்களுக்கு காட்டிக்கொடுக்கிறானோ அவனே பெரியவனாகவும் தேசபக்தனாகவும் பார்ப்பனர்களால் – காங்கிரசால் ஒப்புக்கொள்ளப்படுகிறான். அப்படியிருக்க கல்வியிலும் அரசியல் பங்கிலும், மிகவும் பின் அணியில் இருக்கிற சமூகம் காங்கிரசில் சேருவது என்பது மிகவும் முட்டாள்தனமானதும் தற்கொலைக் கொப்பானதுமான காரியம் என்றே சொல்லுவோம்.

நமது தென்னாட்டு காங்கிரஸ் கிளர்ச்சியானது உண்மையிலேயே பச்சையாய் பார்ப்பனர்களுக்கும் சர்க்கார் உத்தியோகத்துக்கும் ஏற்பட்ட சண்டிப் போரேயாகும். இதில் கடுகளவு அறிவும் சுயமரியாதையும் உள்ள பார்ப்பனரல்லாதார் எவரும் (காங்கிரசில்) இருக்க முடியாதென்றே சொல்லுவோம்.

தோழர் மாஜி மேயர் ஹமீத்கான் சாயபு போன்றவர்கள் அதுவும் 15, 17 வருஷம் காங்கிரசில் இருந்து உள் துறையிலும் வெளித்துறையிலும் உள்ள காங்கிரஸ்காரர்கள் மனப்பான்மையை நன்றாய் உணர்ந்தவர்கள் மற்றும் தோழர் ஜின்னா சாஹேப் போன்ற அறிஞர்கள் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து விட்டு காங்கிரசைப்பற்றி முஸ்லீம்கள் பேசுவதென்றால் அது புத்திசாலித்தனமான காரியமாகுமா என்று கேட்கின்றோம்.

தென்னாட்டில் முஸ்லீம் சமூகத்தில் பெரும் செல்வவான்களின் தோழர்கள் நவாப் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்களும், M. ஜமால் முகம்மது சாயபு அவர்களும் முதன்மையானவர்கள் ஆவார்கள். அவர்களில் நவாப் ஹக்கீம் சாஹிப் அவர்கள் காங்கிரசிலிருந்து விலகி விட்டார்கள். தோழர் ஜமால் மகமது சாஹிப் அவர்கள் சமீப எலக்ஷனில் ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டு விட்டார். தோழர் ஜமால் மைதீன் சாயபு அவர்கள் வகுப்புவாதம் கூடாது என்றும் தனித்தொகுதி கூடாது என்றும் கூறி வருவதோடு அந்தக் காரணத்தாலேயே முஸ்லீம் தனித் தொகுதியில் எந்த தேர்தலுக்கும் நிற்காமல் பொது தொகுதியில் நின்று நின்று தோல்வி அடைந்து வருபவர். அப்படி இருக்க இனியும் சுயமரியாதை உள்ள முஸ்லீம்களுக்கு காங்கிரசில் இருக்கவோ சேரவோ இடமுண்டா என்று கேட்கின்றோம்.

இப்போதும் மந்திரியான கனம் கலிபுல்லா சாயபு அவர்களை வைவதற்கு காங்கிரஸ்காரர்கள் சில முஸ்லீம்கள் என்பவர்களை கூலிக்குப் பிடிக்க அலைகிறார்கள். கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தான் ஏன் காங்கிரசில் சேரவில்லை என்பதைப் பற்றியும் முஸ்லீம்கள் காங்கிரசில் ஏன் சேரக்கூடாது என்பது பற்றியும் விளக்கமாக பல இடங்களில் பேசி இருக்கிறார். அப்பேச்சுக்கள் முஸ்லீம்களால் மிகவும் கவனிக்கப்படத்தக்கவையாகும். அவற்றுள் இந்தி பாஷை பிரசாரம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரமாகும் என்பது மிகவும் கவனமாய் கவனிக்கவேண்டியதாகும்.

ஆகையால் முஸ்லீம்கள் காங்கிரஸ் கங்காணிகளுக்கு ஏமாந்து போகாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 23.05.1937

You may also like...